சனி, 10 செப்டம்பர், 2011

டில்லி குண்டுவெடிப்பு: அப்சல்குரு கடும் கண்டனம்

டில்லி ஐகோர்ட் வளாகத்தில், கடந்த புதன் கிழமை குண்டுவெடித்தது. இந்த பயங்கர சம்பவத்தில், 13 பேர் பலியாகினர்; 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து,  பார்லிமெண்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவரது அறிக்கையில்,  ''டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. அது கோழைகளின் நடவடிக்கை. அப்பாவிகளை கொல்ல வேண்டும் என்று எந்த மதமும், யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. இந்த சம்பவத்தில், எனது பெயர் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மனதில் என்னைப் பற்றி தவறான எண்ணம் விதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது...' என்று கூறியுள்ளார்.

அப்சலின் அறிக்கையை படிக்கும் போது, தீவிரவாதத்தையோ, அப்பாவிகள் கொல்லப்படுவதையோ  அவர் விரும்பக்கூடியவர் அல்ல என்பதை உணர்த்துகிறது. ஆயினும் அவர் நாடாளுமன்றத் தாக்குதலில் சம்மந்தப்பட்ட குற்றவாளியாக கருதப்படுகிறார். அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு பற்றிய தனது தீர்ப்பின் போது உச்சநீதிமன்றம், ''மரணதண்டனை விதிக்கப்பட்டால் தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்'' என்று கூறித்தான் அப்சலுக்கான மரணதண்டனையை உறுதிப்படுத்தியதேயன்றி, அப்சலுக்கெதிரான  வலுவான சான்றுகளின் அடிப்படையில் அல்ல என்பதையும் உலகறியும். எனவே உண்மை எல்லா நேரமும் உறங்காது. உண்மை ஒருநாள் விழிக்கும்; அப்போது உண்மைக் குற்றவாளிகள் உலகின் பார்வையிலிருந்து மறையமுடியாது. 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அப்சல் குரு பற்றிய பேச்சு: என் மீது வழக்கு போட தயாரா? பா.ஜனதாவுக்கு உமர் அப்துல்லா சவால்

'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அடைந்த 3 பேரின் தண்டனையை குறைக்க தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல, நாங்களும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக, காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் ஏற்றுக்கொள்வீர்களா?' என்று காஷ்மீர் முதல்வர்  உமர் அப்துல்லா சமீபத்தில் பேசி இருந்தார்.
இதற்கு பாரதீய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில்  உமர்  அப்துல்லா நிருபர்களிடம் பேசுகையில், 'நான் ஒரு இந்திய பிரஜை. எனவே எனக்கு இந்தியாவில் நடக்கும் காரியங்கள் பற்றி கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. எனது கருத்து தவறு என்றால், என் மீது பா.ஜனதா கட்சியினர் கோர்ட்டில் வழக்கு போட தயாரா?என்று கேட்டார்.
 
நன்றி; தினத்தந்தி செப்.5 -2011

சிறை'யூரப்பாவாக மாறப்போகும் எடியூரப்பா...?

ர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் கடவுள் பக்தியும் அதையும் தான்டி ஜோதிடத்திலும் மூட நம்பிக்கைகளிலும் அவருக்குள்ள பற்று அலாதியானது. கோயில்களுக்கு இவர் ஆட்சியில் இருந்தபோது தாரளமாக அள்ளி வழங்கியிருக்கிறார். இருந்தாலும் அவரது பதவியை அவரால் வணங்கப்பட்ட எந்த கடவுளாலும்[?] காப்பாற்ற  முடியவில்லை. இப்போது 'முன்னாள்' ஆகியிருக்கிறார்  எடியூரப்பா.
 
சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
 
இந்நிலையில் காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலுக்கு, 6 மாதத்திற்கு முன்பு ரிஷபம் வாகனம் தங்கத்தில் செய்ய ரூபாய் 40 லட்சம் எடியூரப்பாவால் வழங்கப்பட்டது. இந்த பணம் சுரங்க ஊழலில் சம்பந்தப் பட்ட பணமா என சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று  செய்திகள் கூறுகின்றன.
 
சனிஸ்வரபகவான் கோவிலுக்கு மட்டுமன்றி, எடியூரப்பா கோயில்களுக்கு அள்ளி வழங்கிய  நன்கொடைகள் அனைத்தும் அவரது சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டதா? அல்லது அரசு மற்றும் ஊழல் நிதியிலிருந்து வழங்கப்பட்டதா என்பதை சட்டம் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். இப்போது எடியூரப்பா அள்ளி வழங்கிய பட்டியலை பார்ப்போம்;
  • பெங்களூர் அருகே இருக்கும் மாதா அமிர்தானந்தமாயி நிறுவனங்களுக்கு ரூ. 5 கோடி மற்றும் 15   ஏக்கர் நிலம்.
  • வொக்கலிக்கர்களின் அடிச்சுச்சங்கிரி என்ற தளத்திற்கு ரூ. 5 கோடி.
  • எடியூர் சித்த லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திற்கு ரூ. 10 கோடி.
  • ஆந்திராவில் திருப்பதியில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
  • கேராளவில் சபரிமலையில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
  • திபெத்தில் மானசேராவர் செல்லும் புனித பயணிகளுக்கு ரூ. 3 கோடி.
  • குல்பர்காவில் தத்தாத்ரேய பீடத்திற்கு ரூ. 2 கோடி.
  • சிக்மகளூர் ரம்பாபுரி ஸ்ரீ சோமேஸ்வர மடத்திற்கு ரூ. 3 கோடி.
  • சிக்மகளூர் ஹரிஹரபுரா மடத்திற்கு ரூ. 1 கோடி.
  • 15 ம் நூற்றாண்டு துறவி கவிஞர் கனகதாசாவின் பிறந்த ஊரான காகிலேனேவிற்கு ரூ. 10 கோடி.
  • சிரவனபெலகோலா பாஹுபலி கோவில் வளாகத்திற்கு ரூ. 5 கோடி.
  • சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா பிறந்த குடலசங்கமாவில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 5 கோடி.
  • மந்த்ராலயா விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
  • காசி விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
  • ஹரித்வார் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
மேற்கண்ட பட்டியல் மொத்த தொகை 59 .75 கோடியாகும்.
[புள்ளி விவரங்கள் நன்றி; இந்தியாடுடே டிசம்பர் 2010 ]
 
இவை அனைத்தும் எந்த பணத்திலிருந்து எடியூரப்பாவால் வழங்கப்பட்டது என்பதை மத்திய அரசும்- சி.பி.ஐயும் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தால் உண்மை வெளிவரும். மேலும் கோடிகளை கொட்டியும் 'எடி'யின் நாற்காலி தப்பவில்லையே? அதோடு போனாலும் பரவாயில்லை. நிலமோசடி வழக்கில் எடியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகியுள்ளதால் எப்போது சிறைக்கதவு உள் வாங்குமோ என்ற கவலையில் வேறு இருக்கிறார் பரிதாபமான நிலைதான் எடியூரப்பாவுக்கு. 

மாவோயிஸ்ட்'களின் ஆட்சியில் மனுநீதிச் சட்டமா?

லகில் ஒரே இந்து நாடான நேபாளம் மாவோயிஸ்டுகளின் புரட்சியால் கவிழ்ந்து போனது. இந்து ஆட்சியைக் கவிழ்த்து விட்டு மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்து விட்டார்களே! உருப்படியான வளர்ச்சிப் பாதைக்கு, மதச்சார்பற்ற பாட்டைக்கு நாட்டை அழைத்துச் செல்லுவார்கள் என்று பார்த்தால், இந்து மதத்தின் வாடகை மனிதர்களாகத்தான் அவர்களும் இருக்கிறார்கள். இப்போது அங்கே மதமாற்றத்தைத் தடை செய்வதற்கும், பசுக்களைக் கொல்வது குற்றம் என்று சொல்வதற்கும் நேபாள பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் மசோதா சட்டமாவதைத் தடுக்க அந்நாட்டு கிறிஸ்தவர்களும், மதசார்பற்ற அமைப்பினரும் முயன்று வருகின்றனர்.
 
ஜூன் 23ம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், மத சார்பற்ற அமைப்பினரும், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களும் இதை எதிர்த்தனர். இந்த மசோதா சட்டமானால், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் தங்கள் மதங்கள் பற்றி பேசுவதும், மதம் குறித்த அச்சுப்பதிப்புக்களை வழங்குவதும் குற்றமாகக் கருதப்படும். அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 700 டாலர் அபராதமும் வழங்கப்படும்.
இந்த மசோதாவுக்கு  பதிலாக, சிறுபான்மையினருக்கென தனியொரு துறை நேபாள அரசில் அமைக்கப்பட வேண்டுமென்று கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், புத்த மதத்தினர் அனைவரும் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
 
இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் (2001-2006) இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது - பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் கூட, இச்சட்டம் வெற்றிபெற முடியவில்லை என்பதால் இந்துத்துவாக்களே இக்கோரிக்கையை என்றாவது ஒருநாள் உச்சரிக்கும் 'ஸ்லோகமாக' மாறிவிட்ட நிலையில், சின்ன நாடான அதுவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆட்சி நடைபெற்று  வரும் நாடான நேபாளத்தில், அதுவும் மதசார்பற்ற கொள்கை என்று கூறப்படும் கம்யூசத்தின் மறுபதிப்பான
மாவோயிஸ்டுகள் ஆட்சியில் மனுநீதி சட்டமா? என்று சமூக ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள். நேபாள ஆட்சியர் இந்த விஷப் பரிட்சையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக வைக்கிறார்கள். நேபாளம் கவனிக்குமா?



புதன், 7 செப்டம்பர், 2011

இதஜ'வின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்!

இதஜ சார்பாக மதுரை மாவட்டத்தில் ஃபித்ரா விநியோகம்!

மரணதண்டனை மாய்க்கப்பட்ட வேண்டுமா?

1991  மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இறுதியாக  உச்ச நீதிமன்றம் நளினி,  முருகன், சாந்தன், பேரறிவாளன்  ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
 
மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். முதலில் இவர்களின் கருணை மனு ஆளுனரால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இதனடிப்படையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் நளினி நீங்கலாக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதையடுத்து இந்த மூவருக்கும் செப்டம்பர் 9 ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று செய்திகள் வெளியாயின.
 
இந்த நிலையில், ராமதாஸ்-வைகோ-திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் இந்த மூவரையும் தூக்கிடக் கூடாது என்ற கோஷத்துடன் களமிறங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த விஷயத்திற்காக தீக்குளித்து மாண்ட சம்பவங்களும் நடந்தேறின. இந்த தூக்குத் தண்டனை கைதிகள் விஷயத்தில் எனக்கு எந்த அதிகாரமுமில்லை என்று ஆரம்பத்தில் கூறிய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் 'நமக்கேன் வம்பு' என்ற பாணியில், இவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ் ஆர்வலர்களின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.
 
காஷ்மீர் மாநில முதல்மந்திரி உமர் அப்துல்லா இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
''ராஜீவ் கொலைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதேபோல், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அப்சல் குருவுக்கும் கருணை காட்டும்படி காஷ்மீர் சட்ட சபையில் தீர்மானம் போட்டால் அரசியல் கட்சியினரும் மற்றவர்களும் மவுனமாக இருப்பார்களா? இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்'' என்று அவர் டுவிட்டர் இணைய தளத்தில் கேட்டு உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றால், உமர்  அப்துல்லாஹ் கேள்வியும் நியாயம் தானே?
மற்றொருபுறம்  இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இவர்களின் தண்டனையை  எட்டு  வாரங்களுக்கு  தள்ளி வைத்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவர் தூக்குத் தண்டனை விஷயத்தில் மட்டுமல்லாது ஒட்டு மொத்தமாக தூக்குத்   தண்டனையே  கூடாது என்ற கருத்து இன்று வலுப்பெற்றுள்ளது.
 
முதலாவதாக தூக்குத் தண்டனை கூடாது என்று இன்று கோஷம் போடுபவர்கள் உண்மையில் தூக்குத் தண்டனைக்கு எதிரானவர்கள் என்பது உண்மையானால், அவர்களின் கோஷம் இவ்வளவு நாள் எங்கே மறைந்திருந்தது? ஏனெனில் இந்தியாவில் தூக்குத் தண்டனை முதன் முதலாக இந்த மூவருக்குத் தான் விதிக்கப்பட்டுள்ளதா? இதுவரை எவருக்குமே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வில்லையா? அந்த தண்டனைகள் நிறைவேற்றப் பட்டதில்லையா? சமீபத்தில் கூட குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதே! அப்போது இந்த மனித உரிமை போராளிகள்[?], '' தூக்குத் தண்டனையா? கூடாது. இந்த தீர்ப்பு செல்லாது. நீதிமன்றமே! தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று குதிக்கவில்லையே? காரணம் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலா? தகுந்த சான்றுகளின்றி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குரு கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதே! அந்த வகையில் அப்சலின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத்தண்டனை உறுதிப் படுத்தப்படும்போது இதே போன்று இந்த மனிதநேயர்கள்[?] அப்சலை தூக்கில் போடாதே என்று போராடுவார்களோ?
 
மேலும் ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்கள் அனைவருமே தூக்கு கயிறை எதிர்நோக்கியிருக்க, இவர்களோ இந்த மூவரை மட்டும் முன்னிலைப் படுத்தி போராடுவதன் மூலம் இவர்களின் நோக்கம் என்பது தூக்குத்தண்டனையை ஒழிப்பதல்ல; மாறாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான மூவரை காப்பதே என்று புலப்படுகிறது. மேலும் இந்த மூவரின் உயிர் பற்றி இரக்கம் காட்டும் இவர்கள், இந்த மூவரின் தலைவரான பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இலங்கையில் முஸ்லிம்களை கருவருத்தபோது, இன்று மனிதநேயம் பேசும் இந்த வைகோ சீமான் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வாய்திறந்ததுண்டா? ஏன் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லையா? அப்போது இவர்களுக்கு தமிழ் உணர்வு எங்கே போனது? ஒரு விசயத்தில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்படுவது தமிழனே என்றாலும் அவன் இந்துவாக இருக்க வேண்டும் அல்லது விடுதலைப் புலியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த தமிழ் ஆர்வலர்கள் ஆர்த்தெழுவார்கள். ஏனெனில் இவர்களில் ஒருவர், பால்தாக்கரேயை வைத்து 'இலங்கை இந்துத் தமிழர் பாதுகாப்பு மாநாடு' நடத்தியவர்தானே!
 
அடுத்து இந்த மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்கள் வைக்கும் வாதம் என்னவெனில், இந்த மூவரும்  ஏற்கனவே இருபது ஆண்டுகளை கடந்து சிறையில் தண்டனை அனுபவித்துள்ள நிலையில் தூக்குத் தண்டனை என்பது அவர்களுக்கு விதிக்கும் இரண்டாவது தண்டனையாகும் என்கிறார்கள். இது மேலோட்டமாக பார்க்கும் போது சரியானதாக இருந்தாலும், இந்த தாமதம் என்பது அவர்கள் சட்டத்தின் சலுகைகளை பயன்படுத்தி கருணை மனுக்கள்  அனுப்பியதால் ஏற்பட்டதே என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். சரி! குற்றவாளிகள் என்றும் அதிலும் தூக்குத்தண்டனை குற்றவாளிகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட இம்மூவரின் சிறை ஆண்டை கணக்கிடும் இவர்கள், வெறும் விசாரணைக் கைதிகளாக முஸ்லிம்கள் பல ஆண்டுகள் சிறையில் கழித்ததை என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? அவர்களுக்காக குரல் கொடுத்ததுண்டா? மேலும் இந்த மூவரின் தண்டனை நிறைவேற்றப்படும் விசயத்திலே ஏற்பட்ட தாமதம் குறித்து, ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த சி.பி.ஐ-யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன், ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,          
 
'ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு தண்டனை. தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை. இது எப்படி நியாயம்?

'1991 முதல் எட்டு வருடங்கள் விசாரணை நடந்தது. தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மாநில மத்திய அரசுகளிடம் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனுப் படலம் 12 வருடங்கள் நடந்தது. இவர்கள் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கருணை மனு போட்ட மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் கால தாமதம் ஏற்படவில்லை. கருணை மனு மீதான இறுதி முடிவு தெரியும் வரை தண்டனை பெற்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறையில் இருப்பதுதான் முறை. அதுதான் இங்கேயும் நடந்தது' என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஏதோ இந்த மூவர் விசயத்தில் தான் இரண்டு தண்டனை என்ற தோற்றம் உண்டாக்கப் படுவதை இந்த அதிகாரியின் கூற்று தவிடு பொடியாக்குகிறது.

அதே நேரத்தில் இன்னொன்றையும் இங்கே கவனிக்கவேண்டும். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விசயத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணைமனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தால், தாமதமின்றி உரிய தண்டனை நிறைவேற்றப் பட்டிருந்தால் அன்றைக்கு மக்களும் ஏற்றிருப்பார்கள். காலம் மனிதனை மறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால் ராஜீவ்காந்தி மட்டுமன்றி 15 பேர் படு கோரமாக ரத்தச் சகதியாக கொல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மனதிலிருந்து மறைந்து, இன்றைக்கு குற்றவாளிகள் மீது இரக்கப்படும் மனநிலையை உண்டாக்கி விட்டது. ஜனாதிபதியின் கூடுதல் தாமதம் சிலரை குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசவும்- போராடவும் வாய்ப்பை உண்டாக்கி தந்துள்ளது. மனிதர்களுக்கு இரக்கம் காட்டலாம் அது மனிதநேயம்; ஆனால் மனிதம் மறந்து மனிதனைக் கொல்லும் எவருக்கும் கடுகளவும் இரக்கம் காட்டக் கூடாது. அதனால்தான் இஸ்லாம் பாதிக்கப்படவன் இடத்திலிருந்து ஒரு செயலை அணுக சொல்கிறது. ஒரு உயிர் அநியாயமாக கொல்லப்பட்டால் அந்த உயிரைக் கொன்ற கொலைகாரனையும்  கொலை செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது இஸ்லாம். ராஜீவோடு கொல்லப்பட்ட 15 பேரின் குடும்பத்தாரிடம், உங்கள் குடும்ப நபரை கொன்றவர்களுக்கு என்ன தண்டனையளிக்க  வேண்டும் என்று அன்றைய தினம் கேட்கப்பட்டிருக்குமானால் அவர்கள் சொல்வார்கள்; இவ்வளவு கொடூரமாக கொன்ற அந்த பாவிகளை பொது இடத்தில்  கண்டம் துண்டமாக  வெட்ட வேண்டும் என்று. அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.

நல்லறிவாளர்களே!  கொலைக்குப் பழி  தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். [அல்-குர்'ஆன் 2:179 ]

அதே நேரத்தில் இன்னொரு வழிமுறையையும் இஸ்லாம் காட்டித்தருகிறது;

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.[அல்-குர்'ஆன் 2:178]

அதாவது கொல்லப்பட்டவரின் வாரிசுகள் உரிய நஷ்டஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு கொலையாளியை மன்னித்தால் அந்த கொலையாளியை தண்டிக்க வேண்டாம் என்றும் சொல்கிறது இஸ்லாம். இறைவேதத்தின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் ராஜீவ்காந்தி மற்றும் 15  பேரை கொன்ற கொலையாளிகளை மன்னிக்கும் தகுதி ராஜீவ் குடும்பத்திற்கும், கொலையுண்ட ஏனையவர்களின் குடும்பத்திற்கும் மட்டுமே உரித்தானது. ஆனால் இந்திய சட்டப்படி கொலையுண்டவருக்கு எந்தவகையிலும் சம்மந்தமில்லாத ஆளுநருக்கும்- ஜனாதிபதிக்கும் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் வழங்கியதுதான் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும், பிரச்சினைகள் உருவாவதற்கும் பிரதான காரணமாக உள்ளது.

எனவே என்ன  தான் மனிதன் மூளையை கசக்கி சட்டம் இயற்றினாலும், அது எல்லா நேரத்திலும் உரிய தீர்வைத் தராது. எல்லாம் வல்ல இறைவன் வகுத்த சட்டமே எல்லாநேரமும், எல்லா விசயத்திற்கும் முழுமயான தீர்வை தரும் என்பது  ராஜீவ் கொலை வழக்கு மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மேலும், மரணதண்டனை நடைமுறையில் இருக்கும்போதே பயமின்றி ஒரு பிரதமரை கொத்துக்கறியாக கொடூரமாக கொன்றவர்கள் இருக்கும் நாட்டில், மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டால் நாடு என்னாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே மரணதண்டனை விஷயத்தை அரசியலாக்கி குளிர்காயும் அரசியல் சூழ்ச்சியை இனங்கண்டு மக்கள் விழிப்படைவது  நல்லது.

சனி, 3 செப்டம்பர், 2011

முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு!

بسم الله الرحمن الرحيم
றிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன்  அவர்களின் மார்க்க முரண்பாடுகளை விளக்கும் 'அன்றும்-இன்றும்' தொடரை நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதற்கு சம்மந்தப்பட்ட பீஜே, இதுகுறித்து நேரடியாக பதிலளிக்க திராணியின்றி, தனதுஆசியுடன் இயங்கும் பினாமியின் பிளாக்கில் ஆபாச தொடரை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த  ஒன்றுதான். இந்நிலையில் எமது இந்த 'அன்றும்-இன்றும்' தொடர் பற்றி பீஜேயின் அபிமானிகளிடம் கேள்வி எழுப்பும் சகோதரர்களிடம்,
''பீஜே மட்டும் அல்ல மார்கத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் அத்தனை இமாம்களும் ஏன் முஹம்மது (ஸல்) அவர்களும் கூட முன்பு சொன்னதை பின்பு மாற்றி உள்ளார்கள்'. என்று திசைதிருப்பும் பதிலை சொல்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அதையொட்டியே இந்த விளக்கம்.
 
இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி 'பலம்' என்றும் 'பலவீனம்' என்றும் மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அதேபோல் இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி வேறு ஆதாரத்தை வைத்து மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அவைகளை நாம் பட்டியலிடவில்லை. நாம் கையில் எடுத்திருப்பது,
 
ஒரு சட்டத்தில்  ஒரே வசனத்தை ஆதாரமாக  வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
 
ஒரு சட்டத்தில் ஒரே ஹதீஸை ஆதாரமாக வைத்து இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
 
பிறரால் சுட்டிக்காட்டியபோது தனது தீர்ப்பை மாற்றாமல் வியாக்கியானம் செய்து விளக்கமளித்து, பின்னாளில்  சத்தமில்லாமல் மாற்றியது.
 
குர்'ஆனிலும் ஹதீஸிலும்  இல்லாமல் சொந்த வியாக்கியானங்களை ஃபத்வா'வாக வழங்கியது. இவைகளைத்தான் நமது தொடர் விளக்குறது.
 
இதற்கு விளக்கமளிக்க முடியாமல், பீஜே எனும் தனிமனிதன் மீதான பற்று அவரது முரண்பாட்டுக்கு நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் மாற்றிய விஷயங்களை ஆதாரமாக காட்ட வைக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இமாம்கள் மாற்றினார்களே  என்கிறார்கள்.  எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில்  மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட  சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்'ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை  சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் 'தூயவடிவில்' இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள்.  அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா?
எனவே அவுக மாத்தலையா? இவுக மாத்தலையா? என்று வழக்கம் போல திசை திருப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கிறோம். மேலும் பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் இரண்டில் எது சரி என்று சொல்லுமாறு சில சகோதர்கள் கேட்கிறார்கள். என்னிடம் கேட்பதை விட, இரு முரண்பட்ட ஃபத்வாக்களை வழங்கியவரிடத்தில்  சகோதரர்கள்  கேட்பதுதான் சரியானது. 
 
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அன்புடன் முகவைஅப்பாஸ். 
 

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!

بسم الله الرحمن الرحيم
 
பயணத்தில் 'கஸ்ர்' தொழுகை அதாவது சுருக்கித் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தொழுகை எத்தனை கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் தொழவேண்டும் என்று அறிஞர் பீஜேயிடம் அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலை படியுங்கள்;
 
கேள்வி : வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரக்அத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரக்அத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றாலும் இவ்வாறு சலுகை உண்டா? அல்லது நீண்ட தொலைவு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! "சிலர் 48 மைல்கள்" என்கிறார்களே! அது சரிதானா?

நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி அமைப்பாளர்.

பதில் : "48 மைல்கள்" என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே தருகிறோம்.

யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

தொழுகையைக் கஸர் செய்யும் தூரத்தைப்பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்ட போது "நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்" என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள "மைல்" என்பதும் "பர்ஸக்" என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு "பர்ஸக்" ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் "மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்" என்று சந்தேத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதொ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னுமன்ஸுர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது "தல்கீஸ்" என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அது வருமாறு:-

நபி(ஸல்) அவர்கள் ஒரு "பர்ஸக்" பயணம் செல்லும்போது கஸர் செய்வார்கள்". அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரி(ரழி)

இந்த ஹதீஸில் "ஒரு பர்ஸக்" என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் "மூன்று மைல்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குழைய ஒரே தூரத்தைக் கொண்டவைதாம்.

ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் "அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்ட அந்த ஹதீஸ்தான் கஸர் பற்றிய ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது" என்று குறிப்பிடுகின்றார்கள்.

எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.

அன்றைக்கு வழக்கில் இருந்த "அரபுநாட்டு மைல்" என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகின்றது.

தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். "48 மைல்கள்" என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டும். நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் "ஒருமைல் தூரத்துக்கே நபி(ஸல்) கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸைவிட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம்.

48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை.

தெளிவான ஹதீஸ் அடிப்படையில் ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.
அந்நஜாத்.1986 ஜூன் இதழ் பக்கம் 35
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வா சொல்வது என்ன? மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு என்று ஹதீஸில் வந்துள்ளது. இதில் மைல் என்பதுதான் சரியானது. எனவே மூன்று மைல் தூரம் தூரம் அதாவது ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று கூறுகிறது. இன்று அதே பீஜே மேற்கண்ட இதே ஹதீஸை ஆதாரமாக காட்டி,
 
''மூன்று மைலில் நபி[ஸல்]அவர்கள் கஸ்ர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
 
மேற்கண்ட பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்;
  • தனது இரு முரண்பட்ட ஃபத்வாக்களுக்கும் ஒரே ஹதீஸைத் தான் ஆதாரமாக வைக்கிறார். 
  • முதல் ஃபத்வாவின் 'மைல்' என்பதுதான் சரி. எனவே  ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளை கஸர் செய்யலாம் என்கிறார்.
  • இரண்டாம் ஃபத்வாவில் இல்லை 'மைல்' அளவு சரியல்ல; மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
  • முதல் ஃபத்வாவில் ஐந்தே கால் கிலோமீட்டர் தான் நபி வழி. நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது என்றவர், பின்பு இரண்டாம் ஃபத்வாவில் 25 கிலோ மீட்டர் என்று சொல்லி அவருக்கு அவரே இல்லை இல்லை. இவரின் கூற்றுப்படி நபிவழிக்கு முரண்படுகிறார்.

சிந்திக்கும் மக்களுக்கு இவரின் முரண்பாடும், மார்க்க சட்டங்களில் இவர் காட்டும் பொடுபோக்கும்  உள்ளங்கை நெல்லிகணியாக விளங்கும்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

தனி இட ஒதுக்கீட்டால் பலனில்லை; பீஜே ஒப்புதல் வாக்குமூலம்!

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக குடந்தையிலும், சென்னையிலும் அப்பாவி முஸ்லிம்களின் கோடிகளை கொட்டி மாநாடு நடத்திய பீஜே, ''இடஒதுக்கீடு நமக்கு கிடைத்து விட்டால் நமது சமுதாயம் எங்கோ போய்விடும் என்று அளந்து விட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இட ஒதுக்கீட்டால் எந்த பலனுமில்லை என்று அவரே சொல்லும் காட்சி. சில மாதங்களுக்கு முன்னால் மூன்டிவி'யில் பாஜகவின் தமிழக பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் உடன் நடந்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்;  

பீஜே; தலித் சமுதாயத்திற்கு தனி ரிசெர்வேஷன் இருப்பது போல் முஸ்லிம்களுக்கும் தந்துவிட்டால் அந்த  தொகுதியில் யார் வேட்பாளரை நிறுத்தினாலும் முஸ்லிமைத் தான் நிறுத்த முடியும். அதில் எந்த கட்சி ஜெயித்தாலும் ஒரு முஸ்லிம் வெற்றி பெற்றுவிடுவார்.

தொகுப்பாளர்; நீங்க சொல்ற மாதிரி யாராவது ஒரு கட்சி சார்பா வர்ற முஸ்லிம்கள் அந்த கட்சித் தலைமை சொல்றதைத் தானே கேட்பார். அப்புறம் எப்பிடி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நன்மை செய்வார்?

பீஜே; நன்மை செய்ய முடியாது. அரசியல பொருத்தவரைக்கும் கூட்டணில நிண்டு நம்மலே போட்டியிட்டாலும்...

தமிழிசை  குறுக்கிட்டு; அந்த கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்தாலும் கட்சி தலைமையை மீறி அவரால் தடுக்க முடியாதே?

பீஜே; தடுக்கமுடியாது. அதுல எந்த டவுட்டும் கெடையாது.  நாங்க என்ன சொல்றம்னு கேட்டா இப்ப நாங்களே தேர்தல்ல போட்டியிட்டு நாலு எடம் வாங்குனாலும் நாங்க கூட்டனிய அனுசரிச்சுதான் பேசுவோமே தவிர நாங்க வேற கருத்து சொல்ல இயலாது. அதுவும் அந்த அர்த்தத்துல தான் வரும்.

தமிழிசை; அப்ப அதுல பயன் என்ன?

பீஜே; முஸ்லிம்களுக்கு பங்கு இருக்குன்றதுதான். அதுல ஒரு திருப்தியே தவிர அவங்களால சமுதாயத்துக்கு ஒன்னும் இல்ல.

பார்க்க வீடியோ; http://www.youtube.com/watch?v=QxTu28tlJQU&NR=1

அன்பு சகோதர்களே! நமக்கு தனி இடஒதுக்கீடு கிடைத்துவிட்டால் நம்ம சமுதாயம் சார்பாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் சென்றால் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் குரல் கொடுப்பார்கள் என்று முழங்கிய பீஜே, இந்த விவாதத்தில் ரிசெர்வேஷனில் ஜெயிக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களால் சமுதாயத்திற்கு எந்த பயனும் ஏற்படாது என்கிறார். வெறும் திருப்திக்குத் தான் என்கிறார். வெறும் திருப்திக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஏன் மாநாடு நடத்தினார்?

அடுத்து மமக கட்சி, கலவரத் தடுப்பு மசோதா- இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதாவிடம் வாய் திறக்க முடியவில்லை என்று சாடும் பீஜே, இந்த வீடியோவில் 'இப்ப நாங்களே தேர்தல்ல போட்டியிட்டு நாலு எடம் வாங்குனாலும் நாங்க கூட்டனிய அனுசரிச்சுதான் பேசுவோமே தவிர நாங்க வேற கருத்து சொல்ல இயலாது என்கிறார் . அப்படியானால் இவர் ஜெயிச்சுப் போனாலும் இதுதான் நிலை எனும்போது மமகட்சியை மட்டும் ஏதோ ஜெயலலிதாவிடம் மண்டியிட்டது போன்று விமர்சிப்பது சரியல்ல என்பது இவரது வாதத்திலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். ஆக இவரது மாநாடுகள் இஸ்லாமிய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பயன்தரக் கூடியது அல்ல என்று அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இதற்கு பிறகாவது 'தீவுத்திடல் மாநாடு வெற்றி எதிரொலி; பிரதமருக்கு ஒரே வாந்தி பேதி; அண்ணனுக்கு உடன் அழைப்பு' என்ற அலட்டல் செய்திகளை அனுப்பும் அவரது அபிமானிகள் திருந்தட்டும்.