வெள்ளி, 7 அக்டோபர், 2011

கருணாநிதியின் உள்ளங்கை ரேகை'யான லீக்.

திமுகவின்  சிறுபான்மைப் பிரிவு என்று பலராலும் விமர்சிக்கப்படும் முஸ்லிம்லீக் இந்த முறை கொஞ்சம் சொரணை வந்து உள்ளாட்சியில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது. இதற்கு காரணம் நகமும் சதையுமாக இருந்த காங்கிரஸை உள்ளாட்சியில் கழற்றி விட்ட கருணாநிதி, திமுக தனித்துப் போட்டி என அறிவித்து விட்டதால், உள்ளாட்சியில் திமுகவிடம் ஒதுக்கீடு கேட்க இயலாது என்பதுதான் முஸ்லிம்லீக் தனித்து போட்டியிடும் நிர்பந்தத்திற்கு தள்ளியது. ஆனாலும் கருணாநிதியின் தயவு என்றைக்கும் தேவை என்பதால் திருச்சி இடைத்தேர்தலில் ஆதரவு என்று அறிவித்துக் கொண்டது.
 
இந்நிலையில், எந்தவித நிபந்தனையுமின்றி கருணாநிதியிடம் சரணடையை இதோ! இன்னொரு லீக் தயார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசிய தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமது,
''வெள்ளம் வந்தாலும், என்றும் தேசிய லீக் உங்கள் உள்ளங்கை ரேகை போல என்றும் வெளியேராமல், தங்களோடு இருக்க வேண்டும் என்ற உறுதி மொழியேற்று 2004, 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் 2011 சட்டப் பேரவை தேர்தலிலும் எந்தவிதமான முன்நிபந்தனைகளும் இன்றி தி.மு.க.வுக்கு தேசிய லீக் ஆதரவு அளித்து வருகிறது.
அதனைப் போலவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடும் சில தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திருச்சி மேற்கு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் முழுமனதான ஆதரவை வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.
 
லீக்குகள் என்னதான் கருணாநிதியின் உள்ளங்கை ரேகையாக இருக்க விரும்பினாலும், லீக்குகளை தனது இடது கை ரேகையாகத்தான் கருணாநிதி கருதுவாரே தவிர, வலது கை ரேகையாக கருத மாட்டார் என்பதை என்றைக்குத்தான்  இவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களோ?
 
 

வந்தது தீர்ப்பு வாச்சாத்தி'க்கு...! வருமா குஜராத்துக்கு?

ர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு புகார் சென்றதையடுத்து வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவினர் 1992 ம் ஆண்டு ஜூன் மாதம் 20 ந் தேதி வாச்சாத்தி கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
 
அப்போது வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவினர் பாலியல் பலாத்காரம் (கற்பழிப்பு) மற்றும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
 
பாதிக்கப்பட்டோர் தரப்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 1996 ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.  1996 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்பு இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
 
இதற்கிடையே, வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, வாச்சாத்தி வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் கடந்த ஜூலை முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 269 பேரில் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் 215 பேர் விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.
இந்த வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த வக்கீல்களின் கருத்தை கேட்டறிந்த மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, தண்டனை விவரத்தை அறிவித்தார். தண்டனை பெற்றவர்களில், 126 பேர் வனத்துறையையும், 84 பேர் போலீஸ் துறையையும், 5 பேர் வருவாய் துறையையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் 12 பேருக்கு கற்பழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ்மக்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராததொகையை கட்டத்தவறினால் கூடுதலாக 9 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
5 பேருக்கு வன்கொடுமை சட்டத்தின்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் தவிர இந்த வழக்கில் மற்ற 198 பேருக்கும் வன்கொடுமை, சாட்சியங்களை மறைத்தல், கலகம் விளைவித்தல், குற்றத்தின் சாட்சிகளை மறைத்தல், குற்றத்தை பற்றி தவறான தகவல் அளித்தல் உள்பட 10&க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தலா ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அபராதத் தொகையில் இருந்து தலா ரூ.15 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்றும், 15 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வந்த சி.பி.ஐ.க்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட வழக்கில் 19 ஆண்டுகள் கடந்த பின்னால் தீர்ப்பு வந்துள்ளது. காலம் கடந்தாலும்  நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு தந்தாலும், அளவு கடந்த தாமதம், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 54 பேர் தண்டனை பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். மேலும் இந்த தணடனைகள் நடந்து விட்ட பாலியல் பலாத்காரங்களுக்கு உரிய நிவாரணமாக இல்லை என்றாலும், அரசு அதிகாரிகளாகவே இருந்தாலும் தவறு செய்தவர் என்றாவது ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்ற கருத்து இந்த தீர்ப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நேரத்தில் அரசின் ஆதரவோடு குஜராத்தில் மற்றொரு வாச்சாத்தி சம்பவம் கடந்த 1992 ல் நடைபெற்றது. கோத்ரா ரயில் எரிப்பை காரணம்  காட்டி நரமோடியின் ஆசியுடன் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலையில் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டனர். மார்ச் மாதம்  3ந் தேதி, 2002- நடந்தேறிய இச்சம்பவத்தில் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் துரத்தப்பட்டு், பில்கிஸ் பானு நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவருக்கு மரணதண்டனை கோரி, சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் கூட செய்தது.
 
ஒரு பில்கிஸ் பானு மட்டுமல்ல; குஜராத்தில் இந்துத்துவாக்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னும் நீதி கிடைக்கவில்லை.  காரணம் முக்கிய குற்றவாளி மாநிலத்தின் முதல்வராக வீற்றிருப்பது தான். எனவே, வாச்சாத்தி சம்பவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடந்த குஜராத் கற்பழிப்பு சம்பவங்களுக்கும் நீதிமன்றம் விரைந்து நீதி வழங்கிட வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.

வியாழன், 6 அக்டோபர், 2011

நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா?

டந்த 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மோடியின் நல்லாசியுடன் நடைபெற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து, ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட் நரேந்திர மோடிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தார். அதில், கலவரத்தின்போது உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய நரேந்திர மோடி, இந்துத்துவாக்களின் கோபத்தை காட்ட அனுமதிக்கும்படியும், முஸ்லிம்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசியதாக சஞ்சீவ் பட் குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோடி கூட்டிய உயர் போலீஸ் அதிகாரிகள்  கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவில்லை என்றும், சஞ்சீவ் பட் பொய்யுரைப்பதாகவும் மோடி தரப்பு கூறிவந்த நிலையில், ''கலவரத்தின்போது நரேந்திரமோடி கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போடும்படி அரசு ஊழியர் ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்து மிரட்டியதாக, போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து அந்த அதிகாரி சஞ்சீவ் பட் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இதனை தொடர்ந்து பட் ஜாமீன் கேட்டு  மனு செய்துள்ளார். மோடி அரசின் எதிர்ப்பை மீறி சஞ்சீவ் பாட்டின் ஜாமீன் மனுவை கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது ஆறுதலான விசயமாகும். ஆனால் ஜாமீன் கிடைக்குமா? என்பதை சட்டம் தான் தீர்மானிக்க வேண்டும்.
 
இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. உடனே அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டு குஜராத் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
மத நல்லிணக்கம்- சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் உண்ணாவிரத  நாடகமாடிய மோடி, உண்மையில் மதநல்லிணக்கம் விரும்புபவறல்ல என்பதை, தனது உண்மை முகத்தை  உலகுக்கு காட்டிய அதிகாரியை பழிவாங்கும் வகையில் கைது செய்ததன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த லட்சணத்தில் இந்த நரமோடி பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்ற இந்துத்துவ மீடியாக்களின் ஒப்பாரிகளுக்கோ பஞ்சமில்லை.

கூட்டணி குறித்து குழப்பும் விஜயகாந்த்!

ரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை என்பது அரசியல் அரிச்சுவடி கற்ற அனைவருக்கும் தெரியும். அதே போல் 'நாங்கள் மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டவர்கள்' என்று காட்ட சில தேர்தல்களில் தனித்து களம் கண்டு விட்டு கூட்டம் சேர்ந்தவுடன் அந்த கூட்டத்தைக் காட்டி கூட்டணி பேசிய கட்சிகளும் உண்டு. இதில் இரண்டாமவர் நம்ம விஜயகாந்த். இந்த விஜயகாந்த், கடவுளோடும் மக்களோடும் தான் கூட்டணி என்று முழங்கியவர் கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கண்டு எதிர்கட்சித் தலைவரானார். விஜயகாந்தின் வளர்ச்சி தனக்கு வீழ்ச்சி என்று ஜெயலலிதா தாமதமாக உணர்ந்ததாலோ என்னவோ விஜயகாந்தை கூட்டணியிலிருந்து கழற்றி விட்டார். இதற்கிடையில், திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக போன்று இவர் தனித்து களம் காண்பாரோ என்று எண்ணியிருந்த வேளையிலே சட்டென தம்மைப் போல் ஜெயலலிதாவால் கழற்றி விடப்பட்டு முழித்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் கைகோர்த்துக் கொண்டு உள்ளாட்சியை சந்திக்கிறார்.
 
இவரது இந்த கூட்டணி பற்றி ஒரு நிருபர், ''தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்கிறீர்கள். கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்க, அதற்கு விஜயகாந்த், ''இப்போதும் சொல்கிறேன் மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டணி வைத்தேன்  என்று கூறியுள்ளார்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டது சேலம் மாநாட்டில் மக்கள் கருத்தை கேட்டுத்தான் என்றவர், இப்போது உள்ளாட்சியில் கம்யூனிஸ்டுகளிடம் கூட்டணி சேர்வதற்கு எந்த மாநாட்டை கூட்டி எந்த மக்களிடம்  கேட்டார்?  மேலும், விஜயகாந்த் கூற்றுப்படி மக்கள் தான் தெய்வம் என்றால் மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என்று சொல்ல வேண்டியது தானே?  தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி என்று சொல்ல வேண்டியதில்லையே? தெய்வம்- மக்கள் என்று பிரித்து சொல்வதன் மூலம் தெய்வம் வேறு; மக்கள் வேறு என்று தெரியவில்லையா?
 
எனவே அரசியல் கூட்டணி  என்பது அந்ததந்த  காலகட்டத்திற்கு ஏற்ப அமைவது என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டு செல்வதற்கு பதிலாக, மக்கள்- தெய்வம் என தானும் குழம்பி மக்களையும் மடையர்களாக்க விஜயகாந்த் நினைப்பது அவரது அரசியல் தெளிவின்மையை காட்டுகிறது. அது சரி! அவர் தெளிந்த நிலையில் இருந்தால் அல்லவா அரசியல் தெளிவு பெறுவதற்கு என்று எங்கோ பாமரன் கூறும் வார்த்தை காற்று வாக்கில் கேட்கிறது.
 
 

உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு; ஐ.நா.வில் பிரதமரின் அசத்தல் பேச்சு.

வ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கொள்கையை சட்டதிட்டத்தை கொண்ட ஒரு அரசு, மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது கொள்கையை திணிக்கும்  நோக்கில் அல்லது தனது கொள்கையை ஏற்பவர்களை ஆட்சியாளராக அமர்த்தும் நோக்கில் அன்னிய நாடுகள் தலையிடுவது என்பது அடுத்த நாட்டின் இறையாண்மையை கேள்விக்குரியதாக ஆக்குவதாகும். அந்த வகையில் அடுத்த நாட்டின் விவகாரங்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகும் ஒரே நாடு அமெரிக்கா என்பது அழும் குழந்தைக்கும் தெரியும். தான் கொண்டு வரும் தீர்மானங்களில் அனைத்து நாடுகளும் படித்து பார்க்காமல் கையெழுத்திட வேண்டும். எதிர்ப்பவர் எதிரி நாடாக கணிக்கப்பட்டு அவர்களின் நாள் எண்ணப்பட்டு கதை முடிக்கப்படும் என்ற அடிப்படையில் அமெரிக்கா நடந்து வருவதை இராக், ஆப்கானிஸ்தான், லிபியா உள்ளிட்ட பல நாடுகளில் காணமுடிகிறது. ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து அந்நாட்டின் இஸ்திரத்தன்மைக்கு வேட்டு வைக்கும் அமெரிக்காவை இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் மறைமுகமாக ஒரு பிடி பிடித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்,  "சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது' .

 "ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.

 ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம்; முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது'''! என்று பேசியுள்ளார்.
 
மன்மோகன்சிங்கின் பேச்சு, நாடு பிடிக்கும் கொள்கையைக் கொண்ட அமெரிக்கா  மற்றும் அதன் நாச[நேச] நாட்டுகளுக்கும் சம்மட்டி அடியாகும். தமது நாட்டின் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அந்த நாட்டு குடிமக்களுக்கே அன்றி, அமெரிக்காவின் ராணுவ டாங்கிகளுக்கு அல்ல என்பதையும், ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் கூறி அமெரிக்காவையும், அதன் அநியாயத்திற்கு  ஒத்து ஊதும் ஐ.நா.வையும் ஒரு சேர கண்டித்துள்ள பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வெல்டன் மிஸ்டர் மன்மோகன் சிங்!

''என்னையும் கொன்றிருப்பார்கள்;புறமுதுகிட்டு ஓடிய யோகா புலம்பும் அவலம்.

ழலுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் என்று சரடு விட்டு ஒரு போராட்டத்தை தொடங்கிய ராம்தேவ், நாட்டுக்காக  உயிரை துறக்கும் அளவுக்கு துணிந்தவரா? என்றால் இல்லை என்பதை அவரது வார்த்தையே அவரது உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டி  விட்டது.
 
 கடந்த ஜூன் 5ம் தேதி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதமிருந்த ராம்தேவ் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து, அவர்களை விரட்டியடித்தனர். அப்போது, போலீசார் நடவடிக்கை எடுத்த நேரத்தில், ராம்லீலா மைதானத்தில் இருந்து ராம்தேவ், கோழைத்தனமாக பெண் வேடத்தில் ஓடிவிட்டார்.
 
ராம்தேவ் சீடர்களில் ஒருவரான ராஜ்பாலா என்ற பெண், போலீசார் தடியடியில் காயமடைந்து, டில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சமீபத்தில் இறந்தார். இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய ராம்தேவ், ""ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, நான் தப்பி ஓடியது சரியே. அப்படி ஓடியிருக்காவிட்டால், ராஜ்பாலா போல என்னையும் போலீசார் கொன்றிருப்பர். அன்று ஓடியிருக்காவிட்டால், இன்று உங்கள் முன் நின்றிருக்க முடியாது,'' என்று கூறியுள்ளார்.
 
சாகும்வரை உண்ணாவிரதம் என்றவர், உயிரை துச்சமென மதித்தது உண்மையானால் என் உயிர் போனாலும் இந்த இடத்தை விட்டு அசையமாட்டேன் என்று  கூறியிருந்தால் கொஞ்சமேனும் இவரை தைரியசாலி என கருதலாம். ஆனால் போலீஸின் கையில் லத்தியை பார்த்தவுடன் பெண் வேடத்தில் ஓடியதோடு மட்டுமல்ல, அவ்வாறு நான் ஒடியிருக்காவிட்டால் என்னையும் போலீசார் கொன்றிருப்பார்கள் என்று கூறி தனது கோழைத்தனத்தை  மறைத்து அனுதாபம் தேடப்பார்க்கிறார். இந்த யோகா ராம்தேவ் யோகாவில் மட்டுமல்ல. வாயிலும் பல வித்தைகளை கற்றுள்ள வாய்ச்சொல் வீரர் என்பது தெளிவாக  தெரிகிறது. ஆனாலும் காவிக்கு மயங்கும் மக்களுக்கு விளங்கவா போகிறது?

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தபால் நிலையம் வழியாக பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை தபால் நிலையம் மூலம் கொடுப்பதற்காக சர்வதேச பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள மணி கிராம் பேமண்ட் சிஸ்ட்ம் என்ற நிறுவனத்துடன் இந்திய தபால் துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மணி கிராம் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மந்திரி கபில்சிபல் 29ந் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த முன்னோடித் திட்டம், தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம், படிப்படியாக அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பணத்தைப் பெறும் முறை...
ஒருவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப வேண்டுமானால், வெளிநாடுகளில் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டு பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினர் முகவரிக்கு அனுப்புவார். அப்போது அவரிடம் 8 இலக்க எண் ஒன்று தரப்படும். அவர் அந்த எண்ணை, இந்தியாவில் பணம் பெற இருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அந்த நேரம் தபால் நிலையத்தில் ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொல்வார்கள். அதை நிரப்பிக் கொடுத்ததும், ஒரு ரசீது தருவார்கள். அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்லலாம்.
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப பராமரிப்பு அல்லது வெளிநாட்டு சுற்றுலா தேவைக்காக மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியும். இந்தியாவில் சொத்துகளை வாங்குவதற்கோ, முதலீடு செய்வதற்காகவோ, நன்கொடை கொடுப்பதற்காகவோ இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியாது.
 
190 நாடுகளில் இருந்து அனுப்பலாம்
வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு அதிகபட்சமாக 2500 டாலர் (ரூ.1,22,500) வரை அனுப்பலாம். மாதத்திற்கு ஒரு தடவை வீதம் ஓராண்டில் 12 தடவைகள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இந்திய ரூபாய் கணக்கின்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகை காசோலையாகத்தான் கொடுக்கப்படும்.
மொத்தம் 190 வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு பணம் அனுப்பும்போது ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக பெறப்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஆயிரம் டாலர் (ரூ.49,000) அனுப்பினால், அதில் 13 டாலர் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதமுள்ள 987 டாலர் மட்டும் தரப்படும்.
 
சென்னை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், திருச்சி மண்டலத்தில் 14 தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில் 6 தபால் நிலையங்களிலும் ஆக மொத்தம் 40 தபால் நிலையங்களில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தில், சென்னை அண்ணா சாலை, புதுச்சேரி, வேலூர், தாம்பரம், தி.நகர், திருவண்ணாமலை, பரங்கிமலை, விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சி மண்டலத்தில், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், விருத்தாசலம், சீர்காழி, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில், காரைக்குடி, நாகர்கோவில், மதுரை, தக்கலை, ராமநாதபுரம், பரமக்குடி, பாளையங்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில், உதகமண்டலம், கோவை, திருப்பத்தூர், சேலம், குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.  
 
நன்றி; தினத்தந்தி 02 -10 -2011

மதுரையில் நடைபெற்ற இதஜ மாநில செயற்குழு தீர்மானங்கள்!

 

இதஜ'வின் பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை!

 

பரபரப்பான செய்திகளுடன் இப்போது விற்பனையில்...