செவ்வாய், 18 அக்டோபர், 2011

கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லிம் சமூகத்தினர்

கோவை, அக்.17: தங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகக் கூறி கோவை மாநகராட்சியின் 87 மற்றும் 95-வது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம் சமூகத்தினர் புறக்கணித்தனர்.

கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3-ம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. குறிச்சி நகராட்சியில் 1,2,6-வது வார்டுகள் மாநகராட்சியின் 95-வது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 மற்றும் 21 வார்டுகள் மாநகராட்சியின் 87-வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரு வார்டுகளையும் பொது வார்டாக மாற்ற வேண்டும் எனக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரி வந்தன.

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவுன்சிலர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது.

95-வது வார்டில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும், 4 சுயேச்சைகளும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 95-வது வார்டுக்கு உள்பட்ட குறிச்சிப்பிரிவு நொய்யல்பாலம் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி இப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் (1035) மேயர் பதவிக்கு 140 பேர் வாக்களித்தனர். ஆனால் கவுன்சிலர்களுக்கு 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 133 பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.

இதே பள்ளியில் மற்றொரு வாக்குச் சாவடியில் 130 பேர் மேயருக்கு வாக்களித்தனர். கவுன்சிலர்களுக்கு 20 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். எஞ்சிய 110 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தனர்.

87-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் இரு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளில் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

கவுன்சிலர் தேர்தல் புறக்கணிப்பு குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலர் ஜி. உமர், தமுமுக மாவட்ட செயலர் எச்.அமீது ஆகியோர் கூறியது:

தாழ்த்தப்பட்டோர் வார்டுகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், குறிச்சி நகராட்சியில் இருந்து சேர்க்கப்பட்டுள்ள 2 வார்டுகளில் ஏற்கெனவே முஸ்லிம் சமூகத்தினர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

மூன்றாவதாக ஒரு வார்டை சேர்த்து தனி வார்டாக மாற்றியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.
 
நன்றி; தினமணி 18 Oct 2011

தென்சென்னையில் தெருக்கள் தோறும் பிரச்சாரம்!

 

எழுச்சியுடன் நடைபெற்ற பெண்களுக்கான நிகழ்ச்சி.

 

ஜாமீனில் வெளியான நீதியின் குரல்.

செய்தி நன்றி; தினத்தந்தி.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

'நச்'சுன்னு ஒரு கேள்வி!

முதல்வர் ஜெயலலிதா; ''அடுத்தவர் சொத்தை அபகரிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. சென்னையில் தி.மு.க.,வின் அண்ணா அறிவாலய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக, நான் திருச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசினேன். அதற்கு பதிலளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, அது மொத்தமே 25 கிரவுண்ட் நிலத்தில் தான் இருப்பதாக பொய் கூறியுள்ளார்.

உண்மையில், அது 4.5 ஏக்கர் அதாவது 90 கிரவுண்ட் நிலத்தில் இருக்கிறது. அப்படியென்றால், 25 கிரவுண்ட் போக மீத நிலத்தை அரசிடம் திருப்பித்தர கருணாநிதி தயாரா?

காவலரை மிரட்டும் காவி சு.சாமி


முஸ்லிம்களுக்கு எதிரான மததுவேஷ கருத்துக்களை உதிர்த்த அரசியல் கோமாளியும், காவி சிந்தனையாளருமான ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி
மீது கடந்தவாரம் மதஉணர்வுகளை தூண்டக்கூடிய செய்திகளை வெளியிட்டதற்காக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
 
வழக்கமாக அடுத்தவர் மீது உப்புச் சப்பில்லாத வழக்குகளை தொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி, ''நல்ல பாத்துக்கங்க; அரசியலில் நானும் இருக்கேன்''' என காமெடி செய்துவரும் இந்த சு. சாமிக்கு தன் மீதே வழக்கு போடப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் மீது வழக்கு பதிவு செய்த டில்லி போலீசாரை மிரட்டும் வகையில், ''என் மீது டில்லி போலீசார் போட்ட வழக்கின் நகலி என்னிடம் இன்னும்  தரவில்லை.நகல் கிடைக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
 
சு.சாமியின் இந்த மிரட்டலை, போலீசைத் தானே மிரட்டியுள்ளார் என்று சட்டம் சும்மா இருக்குமானால், நாளை இவர் நீதிமன்றத்தையும் மிரட்டினாலும் ஆச்சர்யமில்லை. எனவே இவர் போன்ற மததுவேஷ புல்லுருவிகள் மீது  சட்டம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!

 "லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் அன்னாஹசாரே. இவரது உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் சங்பரிவார சக்திகளின் உந்துதல் உள்ளது என மத்திய அமைச்சர் திக்விஜய்சிங் போன்றவர்கள் மட்டுமன்றி நடுநிலையான அரசியல் பார்வையாளர்களும் விமர்சித்தனர். அதை உண்மைப்படுத்தும் வகையில், ஹசாரேயின் உண்ணாவிரத மேடை காவிகளால் நிரம்பியிருந்தது. அதுமட்டுமன்றி, இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் தள்ளப்பட்டவுடன்  அங்கு ஓடோடி சென்று ஆதரவளித்தவர்களும் ராம்தேவ்- ரவிசங்கர் போன்ற காவிகள் தான். மேலும் ஹசாரேயின் உண்ணாவிரத  போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஒத்துழைப்பு வழங்கியது என்ற உண்மையும்  வெளியாகியுள்ளது. ''சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர்'' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகாவத் கூறியுள்ளார். இவையெல்லாம் ஹசாரே-சங்பரிவார் உறவை உண்மைப்பைடுத்துவதாகும்.

இது ஒருபுறமிருக்க, ஹசாரே ஊழலை ஒழிக்க வந்த இரண்டாம் மகாத்மா என கருதிய பெரும்பான்மை மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவரை ஆதரித்தனர். ஆனால் ஹசாரே அதை மறந்து இன்று அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்து விட்டார். சமீபத்தில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடியுங்கள்' என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்' என, தெரிவித்தார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால் ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், "ஊழல் அரசாங்கம்' என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.

அதில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர தவறிவிட்ட காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, பொதுமக்களை ஹசாரே கேட்டுக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ்க்கு எதிரான சிந்தனையை விதைத்து, எதிர்கட்சியான பாஜகவின் வெற்றிக்கு ஹசாரே வலுவான அடித்தளம் அமைத்து தனது செஞ்சோற்றுக் கடனை நிறைவேற்றுகிறார். இதன் மூலம் ஹசாரே அரசியலிலும் தடம் பதிக்கிறார்.

இதற்கிடையில்  எதிர்பாராத விதமாக இந்துத்துவாவின் மற்றொரு அங்கமான சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு போராட்டங்கள் வேடிக்கையானவை என்று விமர்சித்துள்ளார்.   "ஊழலுக்கு எதிராக ஹசாரே போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால், பெரிய மீன்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க அன்னா ஹசாரே வலை வீசினால், வலை தான் கிழியும். பெரிய மீன்கள் தப்பி ஓடி விடும்' என பால்தாக்கரே கூற,  "தாக்கரேவுக்கு வயசாகி விட்டது. அவர் அப்படித் தான் பேசுவார்' என ஹசாரே பதிலடி கொடுக்க,  ஹசாரேவின் இந்த பதிலால் கோபமடைந்த பால் தாக்கரே, "என்னை விட உங்களுக்கு வயது குறைவாக இருப்பதற்காக, குழந்தைத் தனமாகச் செயல்படக்கூடாது. நாங்கள் காந்தியவாதிகள் கிடையாது. தேவையில்லாமல் விரோதத்தை தூண்டாதீர்கள்' என எச்சரிக்க இவர்களுக்கிடையில் நடக்கும் கூத்துக்களும் பஞ்சமில்லை. ஹசாரேயின் நாடகத்தில் அடுத்த காட்சி என்னவோ?


வியாழன், 13 அக்டோபர், 2011

சாட்சிகளை மிரட்டிய சங்கராச்சாரி...???

சங்கரராமன் கொலை வழக்கில்

ரவுடிகள் மிரட்டியதால் முரண் சாட்சி அளித்தேன்

தலைமை நீதிபதிக்கு சங்கரராமன் மனைவி கடிதம்
சென்னை, அக்.13
ரவுடிகள் மிரட்டியதால் சங்கரராமன் கொலை வழக்கில் முரண் சாட்சி (பல்டி சாட்சி) அளித்தேன் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவரது மனைவி மனு கொடுத்துள்ளார்.
காஞ்சீபுரம் கோயில் நிர்வாகி சங்கரராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். வழக்கை புதுச்சேரி செசன்சு கோர்ட்டு விசாரித்து வருகிறது. சாட்சி விசாரணையில் பலர் முரண் சாட்சி (பல்டி) அளித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த கோர்ட்டின் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேரம் பேசியதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கின் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு சங்கரராமனின் மனைவி பத்மா மனு ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:&
2009&ம் ஆண்டில் சாட்சி விசாரணைக்காக என்னை புதுச்சேரி கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். Ôசங்கரராமனை பார்த்து பேச வேண்டும்Õ என்று கொலைக்கு முந்தைய நாள் என் வீட்டுக்கு வந்து விசாரித்த சிலரை நான் கோர்ட்டில் அடையாளம் காட்டினேன். சாட்சி சொல்லிவிட்டு மதிய உணவுக்காக அமர்ந்திருந்தேன்.அப்போது 3 பேர் என்னிடம் வந்தனர். உண்மையை பேசினால் உனது மகன், மகளை ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்து விடுவோம். அவர்களின் உடல் கூட உனக்குக் கிடைக்காது என்று மிரட்டினர். பின்னர் மதியத்துக்கு மேல் நடந்த குறுக்கு விசாரணையில் உண்மையை சொல்ல முடியாமல் போய்விட்டது. இதனால் முரண் சாட்சியாகிவிட்டது. இதுபோல்தான் பணம் கொடுத்தும், மிரட்டியும் பலர் முரண் சாட்சி அளித்துள்ளனர். எனது மருமகனும் மிரட்டப்படுகிறார். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி நன்றி; தினத்தந்தி.

சனி, 8 அக்டோபர், 2011

குஜராத்தில் மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

 குஜராத்தில் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு நாடு முழு வதும் உள்ள மக்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த துடன் போராட்டங்கள், தர்ணாக்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.

கோத்ரா நிகழ்வுக்குப் பிந்தைய வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட இந்து வெறியர்களைக் கட்டுப் படுத்த வேண் டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி காவல் துறைக்கு உத்தரவிட் டதை காவல்துறை அதிகாரி சந்தீப்பட் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைத் தது நரேந்திரமோடி அரசு.

மோடியின் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுடில்லி ஜந்தர்மந்திரில் மனித உரிமை ஆர்வலர்கள் தர்ணாப் போராட்டம் நடத்தினர். குஜராத் அரசு கைது செய்த அய். பி.எஸ். அதிகாரி சந்தீப் பட்டை உடனடியாக விடுதலை செய்ய வேண் டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் சப்னா ஆஸ்மி கூறுகையில், சந்தீப் பட்டின் கைது நடவடிக்கையைக் கண் டித்து நாடு முழுவதும் 40 நகரங்களில் எதிர்ப் புப் போராட்டம் நடை பெற்று வருகிறது என் றார்.

குஜராத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என் றும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். திரைப்பட இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், தங்களுக்கு எதிரான நபர்களை இருக்கும் இடம் தெரியாமல் செய் யும் பாரதிய ஜனதாவின் தத்துவார்த்தத்தை  நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

ஓய்வு பெற்றகுஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.சிறீகுமார் கூறு கையில், குஜராத்தில் மோடி அரசின் நட வடிக்கை மிக மோச மான வன்கொடுமை ஆகும். 2002 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பின்னர் மோடி அரசு காவல்துறை உள்பட அரசு அதிகாரிகளை அச்சுறுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கோத்ராவுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக 2 ஆவது சாட்சி நபராக சந்தீப்பட் உள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல் ஆதார மாகத் திகழ்ந்தவரான ஹரன் பாண்ட்யா என்ன ஆனார் என்றே தெரிய வில்லை. 

நன்றி; விடுதலை 08 அக்டோபர் 2011

வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்[!]

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், 1991  ஆண்டு நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேரும் பலியாயினர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததும், தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட  நிலையில்,  சென்னை உயர்நீதி மன்றத்தில் குற்றவாளிகள் சார்பாக செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் 8 வாரம் தண்டனையை தள்ளி வைத்ததும் நாமறிந்ததே. 
 
இதே காலகட்டத்தில் புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதா, புலிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலை வழக்கு குற்றவாளிகள் மூவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் வேண்டும் என்று சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானத்தை  காங்கிரஸ் நீங்கலாக, அனைத்து  கட்சிகளும் வரவேற்றன.   
 
அப்போது, தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு, டெல்லி பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசியல் வாதிகள் அமைதி காப்பார்களா? என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைத்தார். உமர்அப்துல்லாஹ்வின் செய்தி வெளியான மாத்திரமே பாஜக குய்யோ- முறையோ என கூப்பாடு போட ஆரம்பித்தது.  
 
இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டதுபோல காஷ்மீர் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ., சேக் அப்துல் ரஷீத் என்பவர், அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்ட சபையில் கொண்டு வந்தார்.
 
இந்த தீர்மானத்துக்கு பாரதீய ஜனதா, தேசிய பாந்தர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த தீர்மானத்தை கைவிட வேண்டும் என்று சபாநாயகரிடம் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
 
பாரதீய ஜனதா உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜை மீது நின்று கூச்சல் போட்டனர். ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சலும், அமளியும் நிலவியது. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் முகமது அக்பர் லோன் பலமுறை கேட்டுக் கொண்டார்.   ஆனால், அமளி நீடித்ததால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்படடது. சபை மீணடும் கூடியதும், அமளி நீடித்தது. எனவே மறுபடியும் ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
 
இதறிடையில் இந்த  தீர்மானம் காலாவதி ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து எம்.எல்.ஏ. அப்துல் ரஷித், தனது ஆதரவாளர்களுடன் சட்டசபைக்கு வெளியே ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இருப்பினும், அவர் சட்டசபைக்குள் செல்ல மறுத்து விட்டார். அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் தமிழர்கள் என்பதற்காக தமிழக சட்டமன்றம் தீர்மானம்  கொண்டுவந்தால், அமைதி காக்கும் அரசியல்வாதிகள், காஷ்மீரி என்பதற்காக காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்றனர். காரணம் அப்சல் நாடாளுமன்ற தாக்குதல் குற்றாவாளி என்று கருதப் படுவதாலா? அல்லது அவர் ஒரு முஸ்லிம் என்பதாலா?  16 உயிர்களை படுகோரமாக கொன்ற வழக்காளிகளுக்கு காட்டப்படும் கருணை; ஒரு கட்டடத்தை தாக்கியதாக கூறப்படுபவனுக்கு இல்லையாம். ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்.