வெள்ளி, 15 ஜூன், 2012

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[5]

பொதுவாக ஒரு பெண் அவள் பருவ வயதை அடைந்தவுடன் திருமணத்திற்கான தகுதியை அடைந்துவிடுகிறாள். ஒரு பெண் பூப்பெய்வது அவளது உடல் நிலையை பொருத்து வயதுகள் மாறுபடலாம். இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் பதினொரு வயது முதல் பதினைந்து வயதுக்குள் பூப்பெய்தி விடுகிறார்கள். இந்த வயதில் அவர்களுக்கு இயற்கையாகவே இளமைக்கனவுகள் தோன்ற ஆரம்பித்துவிடும். எனவேதான் 'பதினாறு வயதினிலே' என்று படம் எடுத்தார்கள். 

ஆண்களை எடுத்துக்கொண்டால் 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்று சொல்லக்கூடிய பதிமூன்று முதல் பத்தொன்பது வயதிற்குள் 'அனைத்தையும்' கரைத்து குடித்துவிடுகிறார்கள். ஒரு காலத்தில் கல்லூரியில் வளர்ந்த காதல்கதைகள் இன்று நடுநிலை பள்ளியிலேயே முளைவிடத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமன்றி மொபைல் போன்கள், இணைய தளங்கள், சின்னத்திரை-வண்ணத்திரை-மஞ்சள் பத்திரிக்கைகள்-நீலப்படங்கள் இவைகளெல்லாம் இரு சாராரையும் பிஞ்சிலே பழுக்கவைக்கும் காரியத்தை கன கச்சிதமாக செய்துகொண்டிருக்கின்றன. இத்தகைய காலகட்டத்தில் ஆணுக்கு 21 வயதும், பெண்ணிற்கு 18 வயதும் திருமண வயதாக நடைமுறையில் சட்டத்தில் இருப்பது பெரும்பாலும் ஏட்டளவில்தான் உள்ளதேயன்றி, நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதற்கு மைனர் ஜோடிகளின் காதல் ஓட்டங்கள் நிதர்சன சான்றுகளாக நிதமும் பத்திரிக்கையை அலங்கரிப்பதை நாம் பார்க்கிறோம். 

இந்நிலையில் இந்த திருமண வயது குறித்து தெளிவான வரவேற்கத்தக்க தீர்ப்பை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு தீர்ப்பை டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியது. அதன் விபரம் வருமாறு;

டெல்லியை சேர்ந்த 18 வயது வாலிபர் 16 வயது பெண்ணை திருமணம் செய்தார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர், திருமண வயதை அடையாத தங்களின் மகளை அந்த வாலிபர் கடத்திக்கொண்டுபோய் திருமணம் செய்துவிட்டார் என்று புகார் கூறினார். இதையடுத்து மணமகன், நாங்கள் இருவரும் திருமண வயதை அடையாவிட்டாலும் இருவரும் விரும்பியே திருமணம் செய்துள்ளோம் எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். பி.டி. அஹ்மத், வீ.கே. ஜெயின் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில்;

'ஆணோ பெண்ணோ அவர்கள் திருமண வயதை எட்டாதவர்களாக இருந்தாலும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அந்த திருமணம் சட்டப்படி செல்லும். சிறு வயதில் விருப்பம் இல்லாமல் செய்துவைக்கும் திருமணம் தான் குழந்தை திருமணமாக கருதப்படும். திருமணம் செய்துகொள்ளும் இரண்டு பேரும் மைனர்களாக இருந்தால், அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணத்திற்கு சம்மதித்தால் அந்த திருமணம் செல்லும்.
இந்து திருமண சட்டப்படி ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிரம்பவேண்டும் என்று கூறினாலும் இந்த வழக்கிற்கு அது பொருந்தாது என்று தமது தீர்ப்பில் கூறினர்.

ஆனுக்கு 21 வயதும், பெண்ணிற்கு 18 வயதும் ஆன பின்னால் செய்யும் திருமணமே சட்டப்படி செல்லுபடியாகும் என்று மக்கள் கருதிவந்த நிலையில், இருவரும் விரும்பித் திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல என்றும், ஆனுக்கு 21 பெண்ணுக்கு 18 என தீர்மானித்தது அவர்களின் விருப்பமின்றி செய்யப்படும் கட்டாய திருமணத்திற்கே பொருந்தும் என்று ஒரு தெளிவான வரையறையை காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம், இதே பாணியில் முஸ்லிம்கள் விசயத்திலும் தீர்ப்பளித்து முரண்பட்டுள்ளதை பார்ப்போம்.

தனது16 வயது மகளை பையன் வீட்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி ஒரு முஸ்லிம் பெற்றோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அவர்கள் தங்கள் தீர்ப்பில்,

''இஸ்லாமிய சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பருவம் அடைந்துவிட்டால் பெற்றோரின் சம்மதம் இல்லாவிட்டாலும் அவர் தனது மனதிற்கு பிடித்தவரை மணக்கலாம் என்றும், 18 வயதிற்குட்பட்டவராக இருந்தாலும் அவர் தனது கணவர் வீட்டில் வசிக்கலாம் என்பதை இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
அதன்படி பருவமடைந்த ஒரு முஸ்லிம் பெண் அதாவது 15 வயது பெண் தான் விரும்பியவரை மணக்கலாம் என்றனர்.
மேலும் தான் விரும்பித் தான் அந்த பையனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதனால் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று அந்த பெண் கேட்டுக் கொண்டதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி அவர் 18 வயதை அடையும் வரை அவரது கணவர் வீட்டார் ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது போன்று ஒரு முஸ்லிம் பெண் தான் விரும்பியவரை மணக்கலாம் என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்றாலும், அந்த விரும்பியவர் யார் என்பதில் சில நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கிறது. ஒரு முஸ்லிமான பெண், ஒரு முஸ்லிமல்லாத ஆண்மகனை விரும்பினால் அந்த ஆண்மகன் இஸ்லாத்தை தழுவினாலே தவிர திருமணம் செய்யமுடியாது. அதுபோன்று அப்பெண் விரும்பும் ஆண்மகன் ஒரு இஸ்லாமியனாகவே இருந்தாலும், திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அவனும் வருவான் என்றால், அவனை திருமணம் செய்யமுடியாது. உதாரணத்திற்கு தாய் மாமன் போன்ற உறவுகள். 

அதே நேரத்தில் இவ்வாறு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், திருமணத்தின் போது பெண்ணின் சம்மதத்தை பெறவேண்டும் என்பது கடவுளின் தூதர் முஹம்மது[ஸல்] அவர்களின் கட்டளையாகும். பெண்ணின் சம்மதம் இல்லாமல் பெற்றோரோ மற்றவரோ கட்டாயத் திருமணம் செய்விக்க இஸ்லாம் தடை விதிக்கிறது. எனவே ஒரு முஸ்லிமான பெண் யாரை விரும்புகிறாரோ அவரை திருமணம் செய்யலாம் என்ற நீதிபதிகளின் கூற்று, சில நிபந்தனைகளுடன் கூடிய இஸ்லாத்தில் உள்ள ஒன்றாகும்.

அடுத்து, தான் விரும்பித் தான் அந்த பையனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதனால் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று அந்த பெண் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். 

அந்தப் பெண் விரும்பியே அவனுடன் சென்றதால் கடத்தல் வழக்கு பதிவு செய்யமுடியாது என்ற நீதிபதிகளின் கூற்று ஏற்புடையதுதான் என்றாலும், இவ்வாறு விரும்பியவனுடன் ஓடிப் போவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரு முஸ்லிம் பெண், தனக்கு திருமணம் செய்ய இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உறவுமுறை கொண்ட ஒரு பையனை விரும்பினாலும், அவனை முறைப்படி தனது பெற்றோர் மூலமாகவோ, அவர்கள் மறுக்கும் பட்சத்தில் உறவினர்கள் மூலமாகவோ, ஊர் ஜமாஅத் மூலமாகவோ திருமணம் செய்யலாமேயன்றி, விரும்பியவனுடன் ஓடிப்போய் எங்கோ பதிவுத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஏனென்றால் ஒரு இஸ்லாமியப் பெண்ணின் திருமணம் அங்கீகாரம் பெறவேண்டுமானால், அப்பெண்ணிற்கு ''வலீ' எனும் பொறுப்பாளர் அவசியம். இந்தப் பொறுப்பாளர் என்பவர் பெண்ணின் தந்தை அல்லது சகோதரன் ஆவார்கள். அப்படி தந்தையோ சகோதரனோ இல்லை என்றால், ஜமாஅத் பிரமுகர்கள் பொறுப்பாளராக இருந்து அப்பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும். அவ்வாறில்லாமல் ஒரு பெண் தான் விரும்பியவனை தானாக திருமணம் செய்து கொண்டாலோ, பொறுப்பாளர் என்ற விதி இல்லாத இந்திய பதிவுத் திருமணத்தை செய்துகொன்டாலோ அந்த திருமணம் இஸ்லாமிய அடிப்படையில் செல்லாது. ஏனென்றால் கடவுளின் தூதர் முஹம்மது [ஸல்] அவர்கள், ''பெண்ணிற்கு பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது'' என்று கூறியுள்ளார்கள்.

எனவே நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறிய விசயங்களை வைத்துப் பார்க்கும்போது, பொதுவான அளவுகோலைக் கொண்டு இஸ்லாமியத் திருமணத்தையும் அளந்துள்ளனர் என்று தெரிகிறது. எனவே சில நெருடல்கள் தெரிகின்றது. அதே நேரத்தில், 
ஒரு ஆணோ- பெண்ணோ அவர்களாக விரும்பி, தாமதமாக திருமணம் செய்தால் அது அவர்களின் விருப்பம். ஆனால் அவர்களை இத்தனை வயதில் தான் திருமணம் செய்யவேண்டும் என சட்டம் போட்டு தடுக்கமுடியாது என்பது நீதிபதிகளின் தீர்ப்பில் புலப்படுகிறது. எனவே திருமணம் செய்யும் ஜோடிகளின் வயதைப் பார்ப்பதைவிட அந்த ஜோடிகளுக்கு அவர்களின் பரிபூரண சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறதா என்பதையும், அத்திருமணத்தில் வரதட்சனை உள்ளிட்ட சட்டம் தடுத்தவைகள் இடம்பெறுகிறதா என்பதையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் கவனிக்க முன்வரவேண்டும் என்பதுதான் நாம் கூறும் செய்தியாகும்.

தீர்ப்புகள் வரும்...


வியாழன், 14 ஜூன், 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்ததான சேவையை பாராட்டி டாக்டர்.எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் விருது!

லக ரத்ததான நாளையொட்டி டாக்டர்.எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற விழாவை யொட்டி தன்னார்வ ரத்ததான முகாம்களை நடத்திய அமைப்புகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது! இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ரத்த தான சேவைக்காக பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர்.மயில் வாகனன் முன்னிலையில் முன்னால் காவல்துறை தலைவரும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் இந்நாள்   தலைவருமான ஆர்.நடராஜ் விருதை வழங்கினார். இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மருத்துவ அணி செயலாளர் கலிமுல்லாஹ், மற்றும் தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கலீல் ரஹ்மான் ஆகியோர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்.




இப்போது விற்பனையில் இந்தவார சமுதாய மக்கள் ரிப்போர்ட்.


புதன், 13 ஜூன், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [இறுதிப்பகுதி]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

மவ்லவி ஹாமித்பக்ரி மன்பஈ அவர்கள் பத்துக்கும் மேற்ப்பட்ட பெயரில் லெட்டர் பேடு தயாரித்து வசூல் வேட்டை நடத்தினார் என்று பீஜே குற்றம் சாட்டினார். அதற்கான ஆவணங்களை அவர் பதிவு செய்யவில்லை. அது போகட்டும். இவரது மேலான்மைக்குழுத் தலைவர் சம்சுல்லுஹா அவர்கள், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முகவரியான 
11 A ராவுத்தர் கிழக்குத்தெரு என்றே ஒரே முகவரியில்,

  1. தவ்ஹீது ஜமாஅத்.
  2. மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி.
  3. மேலப்பாளையம் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்.
இவ்வாறான லெட்டர் பேடுகள் தயாரித்து அரபியில் பல கடிதங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளாரே! இதற்கு பீஜே என்ன சொல்லப்போகிறார்? மேற்கண்ட அனைத்தும் ஒரே இடத்தில் இயங்குகிறது எனவே ஒரே முகவரியில் லெட்டர் பேடு தயாரித்தார்கள் என்று பீஜே சொல்லலாம். தவ்ஹீத் ஜமாஅத் சரி, மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி சரி. அதென்ன மேலப்பாளையம் ஜாக் என்ற அமைப்பு?

ஜாக் வழிகேடு இயக்கம் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு அந்த ஜாக்கை உல்டா பண்ணி மேலப்பாளையம் ஜாக் என்று ஒரு அமைப்பு துவங்கியது அதுவும் 2004 ல் ததஜ உருவான பின்னால் 2005 ல் மேலப்பாளையம் ஜாக் என்ற பெயரில் ஒரு குட்டி அமைப்பு உருவாக்கியதன் காரணம் என்னவென்று பீஜே சொல்வாரா? ஊரில் உள்ள சொத்துக்களை எல்லாம் ததஜ பெயரில் எழுத வேண்டும் என்று சொல்லும் பீஜே, மேலப்பாளையம் பள்ளிவாசலை ததஜ பெயரில் எழுதி வைக்கச் சொல்ல முடியுமா? மேலப்பாளையம் ஜாக் என்ற லுஹாவின் குட்டி அமைப்பை கலைக்கச் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் இந்த குட்டி அமைப்பு உருவாக்கப்பட்டதே உண்மையான ஜாக் பெயரில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானை அமுக்குவதற்காகத் தானே!

சரி போகட்டும்., வெளிநாட்டிற்கு பிழைக்கப்போன தமிழனிடம் மட்டுமே நாங்கள் காசு வாங்குவோம். வெளிநாட்டுக்காரன் கைமடக்கு தந்தால் வாங்கமாட்டோம் என்று மார்தட்டும் பீஜே, அஹ்லே ஹதீஸ் வழிகேடு என்று சொல்லிவிட்டு அந்த அமைப்பிடம் அரபியில் வாங்கிய இந்த பரிந்துரைக் கடிதம் எதற்காக என்று பதில் சொல்லட்டும். 

ததஜவுக்கு சொந்தமான, சம்சுல்லுஹா மற்றும் எம்.எஸ்.ஸுலைமான் போன்றோரின் மேற்பார்வையில் இயங்கும் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்லூரிக்காக ஒரு அரபி நிறுவனத்திற்கு சம்ஷுல்லுஹா அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய வெவ்வேறு இரு கடிதம் சாம்பிளுக்காக.


இந்த கடிதங்கள் எல்லாம் எந்த தமிழனுக்கு எழுதப்பட்டவை என்று சொல்லட்டும். இதுபோன்று இன்னும் ஏராளம் உண்டு.

அன்பான சகோதரர்களே!
வெளிநாட்டு நிதி விசயத்தில் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஹாமித்பக்ரி மற்றும் சைபுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் மீது பழிபோட்டு விட்டு தன்னை பரிசுத்தவனாக காட்டிய பீஜேயின் வெளிநாட்டு நிதி தொடர்பான விசயங்களையும், அவரோடு இன்றும் இருக்கும் சகாக்களின் வெளிநாட்டு நிதி தொடர்பான விசயங்களையும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் 13 தொடர்களாக பதிவு செய்திருக்கிறோம். பல மாதங்களாக நாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியும் பீஜே மவுனம் காப்பதில் இருந்து அவரது உண்மைநிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். பீஜேயின் அவரது சகாக்களின், அவரது ஜமாஅத்தின் வெளிநாட்டு நிதி தொடர்பான நேரடி சாட்சிகள் மற்றும் இன்னும் சில ஆவணங்கள் நம்மிடம் உள்ளன. இதுவரை எழுப்பிய வினாக்களுக்கு பீஜே பதிலளித்தால் மீதமுள்ள ஆவணங்களும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்களே இவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோளாகும்.

பீஜேயின் இரட்டை வேடத்தை தோலுரிக்கும் எனது இந்த முயற்சிக்கு, ஆவணங்கள் தந்துதவிய சகோதரர்கள் ஆலோசனைகள் வழங்கிய சகோதரர்கள் அனைவருக்கும், என்னை தனி மெயிலில் தரக்குறைவாக திட்டிக் குவித்த பீஜேயின் அபிமானிகளுக்கும் நன்றி. 
இந்த தொடர் முற்றுப்பெருகிறது. பீஜேயின் அன்றும்-இன்றும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன் 
இஸ்லாமிய சகோதரன்.,
முகவைஅப்பாஸ்.

எப்படி கொல்வது ?????


எப்படி கொல்வது ?????

உங்கள் நாட்டில் எண்ணெய் இருக்கிறதா???? நீ என் நண்பன். உனக்கு புது தொழில் நுட்பம் கற்றுத் தருகிறேன். உன் குடிமக்களுக்கு உல்லாச புரிகள் கட்டித் தருகிறேன். உன் குழந்தைகளுக்கு உலகின் முதல் தர கல்வி கற்றுத் தருகிறேன். உன் பாரம்பரியமெல்லாம் உதவாக்கரை சமாச்சாரங்கள், அவைகளையெல்லாம் உதறிவிட்டு வெளியே வா, தினமும் மதுவைக் குடி, கண்ணில் கண்ட பெண்ணின் இடுப்பிலெல்லாம் கைகளால் விளையாடி இன்பத்தில் திளைத்திரு, ஒரு புதிய உலகம் காண்பிக்கிறேன் வா….

பதிலுக்கு என் நாட்டு எண்ணெய் கம்பெனிகள் உன் நாட்டில் கொடி நாட்டட்டும், தினமும் என் நாட்டு எண்ணெய் கப்பல்கள் உன் துறைமுகத்தில் வலம் வரும். மறுபேச்சு பேசாமல் அவைகளின் அனைத்து இடுக்குகளையும் உன் எண்ணை வளத்தால் நிறைத்து அனுப்பு…… என்னது பணமா, ம், அதுவும் வேண்டுமா உனக்கு,,, சரி சரி,,, உலகச் சந்தையில் நான் வைத்திருக்கும் விலையை விட ஒரு ரூபாய் அதிகம் தருகிறேன். வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டிரு. எல்லா நாட்டுத் தலைவர்கள் நடுவிலும் உனக்கும் ஒரு நாற்காலி போட்டு, உலகில் இருக்கும் உதவாக்கரை விருதுகள் அத்தனையும் தருகிறேன். பல்லை இளித்து விட்டு பரிசு வாங்கிக் கொண்டு போ. என்னது…. காது கேக்கலை கொஞ்சம் சத்தமா சொல்லு, என்னது, உன் நாட்டு மக்களா, அவுங்கள விடுய்யா, அவுங்களா உனக்கு சோறு போடறாய்ங்க, உன் நாட்டு எண்ணெய் தான சோறு போடுது… அதை எப்பிடி வியாபாரம் பண்றதுன்னு பாரு. உனக்கும் உன் குழந்தைகளுக்கும் உலகின் சிறந்த நகரங்களில், கேளிக்கை விடுதிகள் கட்டித் தருகிறோம்…. அழகா உக்கார்ந்து சீமைச் சரக்கை உறிஞ்சுகிட்டே, முன்னால இடுப்பை வளைச்சு ஆடுற அழகுப் பெண்ணை அனுபவிச்சுகிட்டு சுகமா இருங்கப்பா, நாட்டு மக்கள் இருந்தாங்க, இருக்கறாங்க, இன்னமும் இருப்பாங்க, அவுங்களைப் பத்தியெல்லாம் கவலைப் படாத கண்ணு. அவுங்க மேட்டரை நான் கவுனுச்சுக்கறேன்.

என்னது, இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டியா, அப்ப எண்ணெய் தர மாட்டியா…. இப்ப பாருடா, என் சுய ரூபத்தை…… ங்கொய்யால… உன் நாட்டில் மனித உரிமை மீறப்படுகிறது. நீ மனித இனத்துக்கு எதிரான நியூக்ளியர் குண்டுகள் தயாரிக்கிறாய். ஐ.நா அமைப்பு உன்னை சோதிக்க வேண்டும், எப்ப பார்த்தாலும் குண்டு தயாரிப்பதிலேயே நீ உன் பணத்தை செலவிடுகிறாய், உன் நாட்டு மக்கள் ஒரு துண்டு ரொட்டிக்கும், ஒரு வேளை சோத்துக்கும் வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது நீ மட்டும் மாட மாளிகைகளில் வாழ்கிறாய், எங்கள் நாட்டு ஊடகங்கள் இனி உன் மீது படையெடுக்கும், அழுக்கு நிறைந்த வீதிகளும், விபச்சாரம் செய்யும் பெண்களும், சோத்துக்கில்லாத குழந்தைகளும் படம் பிடிக்கப்பட்டு, உனது நாடு என்றாலே இப்படி சிங்கியடிக்கும் கூட்டம் தான் என பிரச்சாரம் செய்வோம், நேட்டோ படைகள், ஐ.நாவின் கூட்டு படைகள், இன்னும் எங்கள் நாட்டு சொந்தப் படைகளெல்லாம் உன் நாட்டில் முகாமிட்டாலொழிய உன் நாடு உருப்படாமல் போகும், உலகத்தையே ரட்சிக்க அவதாரமெடுத்திருக்கும் நான், ஐ.நா என்ற பெயரில், நேட்டோ என்ற பெயரில் இன்னும் என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள், அந்த எல்லா பெயரிலும் உன்னை கண்காணிப்பது அவசியம். பாவம், உன் நாட்டு மக்கள், உன்னைப் போன்ற அரக்கனின் கையில் சிக்கி, தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரங்கே…. ஐ.நா. சபையின் செயலரா, தலைவரா, தலையாரியா, பூசாரியா…., என்ன எழவோ, கூப்பிடுயா அந்த ஆளை, யோவ், உடனே அறிக்கை ஒண்ணு ரெடி பண்ணு, நான் சொல்றத அப்பிடியே எழுது. நான் சொன்ன பேச்சுக்கு அடங்காமல் அழிச்சாட்டியம் பண்ணும் அவன் நாட்டில் வறுமை, மனித உரிமை மீறல், தினம் தினம் பட்டினிச் சாவு, உலகத்தையே அச்சுறுத்தும் அணுகுண்டுகள் தயாரிப்பு, ஆட்சியாளர்களின் சுக போக வாழ்வால் மக்கள் நலப் பணிகள் பாதிப்பு என்று ஒரு அறிக்கை தயார் செய்து உடனே வாசித்து விடு. அந்த நாட்டின் வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம் என மறக்காமல் பல முறை சொல்லு…..
அப்புறம், யாருப்பா அது, நம்ம கைத்தடிகளெல்லாம் எங்கடா ஒழிஞ்சீங்க, சீக்கிரம் வாங்கடா, இங்க பாரு, இவன் நமக்கு எண்ணெய் குடுக்க மாட்டிங்கறான், நம்ம சொன்ன பேச்சை கேக்க மாட்டிங்கறான், ஒண்ணு பண்ணுங்க, அவன் ஊர்ல இருக்கற தெருப் பொறிக்கிகளை எல்லாம் ஒண்ணு சேருங்க "புரட்சிகர மனித நேய புனித இதிகாச தேசிய விடுதலை இளைஞர் முன்னணி" இந்த வார்த்தைகளையெல்லாம் முன்னால பின்னால எப்பிடி வேண்ணாலும் மாத்தி மாத்தி போட்டு ஒப்புக்கு ஒரு பெயர் வைத்து ஒரு கட்சியை தயார் பண்ணுங்க, கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக ஒரு வீரிய புரட்சின்னு ஃபிளக்ஸ் பேனர் கட்டுங்க, அவுங்களுக்கு துப்பாக்கி, பீரங்கி, வெடி குண்டு இன்னும் என்ன குண்டெல்லம் வேணுமோ எல்லாத்தையும் குடுங்க, மத ரீதியான உணர்வை தூண்டி விடுங்க, தினமும் எங்கயாவது ஒரு இடத்துல குண்டு வைக்க சொல்லிக் குடுங்க. தினமும் எத்தனை பொண்ணுங்களை கற்பழிக்க முடியுமோ அத்தனையும் செய்யச் சொல்லுங்க, புரட்சின்னு வந்துட்டா, இதெல்லாம் சகஜம் தானே, அப்புறம் கண்ணுல பட்டவனையெல்லாம் குருவி சுடற மாதிரி சுடச் சொல்லுங்க. என்னது பணம் வேணுமா, நம்ம மரப் பீரோவுல அடுக்கி வெச்சிருக்குது பாருப்பா, ஒரு பத்து இருபது கட்டுகளை எடுத்து விசுறுங்க, எல்ல பேட்டை ரவுடியும் நம்ம கிட்ட வாலாட்டுவான், அப்புறம் பார்க்கலாம் அவங்க நாட்டாமை எங்க போறான்னு, ங்கொய்யால …. தனி ஆவர்த்தனமா பண்ற,, இப்ப வெக்கறண்டா ஆப்பு உனக்கு…… எப்பூடி….

எங்கு பார்த்தாலும் மணல் குவிந்த பாலைவனம், ஒப்புக்கு ஒரு சில இடங்களில் மாத்திரம் அரிதாக காணப் படும் நீரூற்றுகள், மிகக் குறைந்த அளவில் விவசாயம் என பாலைவன நாடுகளுக்கே உரிய எல்லா அழகுடனும் அவஸ்தைகளுடனும்தான் லிபியாவின் மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வெய்யில் காலத்தில் 57 டிகிரி வெய்யிலோடு இலவச இணைப்பாக மணற்புயலும் அடிக்கும். குளிர் காலத்திலோ எலும்புக்குள் ஊசியேற்றி குசலம் விசாரிக்கும் பயங்கரக் குளிர், தண்ணீர் என்பதே ஒரு அதிசய காட்சிப் பொருள்தான். இப்படி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு தென் லிபியாவில் கிடைத்த அற்புத சுரங்கம்தான் அவர்களது வாழ்வாதாரத்தையே மாற்றிப் போட்டது. ஆம், 1953 ம் ஆண்டின் ஒரு சுபயோக சுப தினத்தில், எல்லா ராசிகளும் ஒன்று கூடி ஒரே கோணத்தில் பார்க்க, சுக்கிரன் திசை மட்டும் உக்கிரமாய் இருக்க, எண்ணய் கிடைக்குமா என பூமியை தோண்டப் போக அங்கு ஒரு அதிசய சுரங்கமே கிடைத்தது. பாலைவனத்தில் தெளிந்த தண்ணீர் ஊற்றைவிட பெரிய அதிசய சுரங்கம் வேறென்ன இருக்க முடியும். ஆமாம், தோண்டத் தோண்ட நிறைய இடங்களில் தண்ணீர் கிடைத்தது. போதாதா, மக்கள் குதூகலித்தார்கள். உலகத்தின் எட்டாவது அதிசயமாக ஒரு செயற்கை நதியையே உருவாக்கினார்கள். தெற்கில் இருந்த தண்ணீரை வடக்கு, கிழக்கு மேற்கு இன்னும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் தங்கு தடையின்றி எடுத்துப் போனார்கள். நாட்டில் எல்லோரும் தலைமுழுகி ஆனந்தமாக குளிக்க ஆரம்பித்ததே இந்த தண்ணீர் வந்த பின்தான் போலுள்ளது. உலகின் ஒரே ஒரு செயற்கை நதி என பெயரிட்டார்கள்.

சரி, தாகத்துக்கு தண்ணீர் வந்தாயிற்று, அடுத்தது என்ன என யோசித்தார், அப்போதைய ஆட்சியாளர் கடாபி. அடுத்தது இருக்கிற எண்ணை வளத்தை வைத்து தன்னிறைவடைவோம் என ஒரு உயரிய நோக்குடன் தனது எண்ணை வியாபாரத்தை பல மடங்கு பெருக்கினார். யார் வேண்டுமானாலும் வாருங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளுங்கள், ஆனால் விலை நான் சொல்வதுதான். ஒழுக்கமாக கையில காசு, வாயில தோசைங்கற கொள்கையில் வியாபாரம் பண்ணுங்கள் என கறாராக சொல்லி விட்டார். வேறு வழியில்லை, ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். காடாபியிடம் இருப்பது உயர்தர சரக்கு, அந்த மனிதனை பகைத்துக் கொண்டால், சரக்கு கிடைக்காமல் போனாலும் போய்விடும். ஆக, கடாபிக்கு வணக்கம் சொல்லுங்கள், எண்ணெயை அள்ளுங்கள் என பல்லைக் கடித்துக் கொண்டு உலக நாட்டாமைகள் எண்ணெய் அள்ளின.

சிறுகச் சிறுக கடாபியின் கஜானா நிரம்பலாயிற்று. முதலில் என் மக்களுக்கு படிப்பறிவு வேண்டும் என பள்ளிகளை திறந்தார். தொடர்ச்சியாக, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என வளர்ந்து கொண்டே போய், கல்வி கட்டாயமாக்கப் பட்டு, இப்போதைய கணக்குப் படி லிபியாவில் 82 சதவீதம் பேர் கல்வியறிவுள்ளவர்களாய் உள்ளனர்.

எல்லோருக்கும் வீடு என்ற தனது கனவை நனவாக்கினார் கடாபி. லிபியாவின் குடிமக்களுக்கு அரசாங்கமே வீடு கட்டிக் கொடுத்தது. எந்த நாட்டிடமும், அல்லது உலக வங்கி, அல்லது எந்த நிதி நிறுவனத்திடமும் தனது நாட்டின் வளர்ச்சிக்காக கடாபி கையேந்த வில்லை. முற்றிலும் சுய உழைப்பு, சுய சம்பாத்தியம் அதன் மூலம் தன்னிறைவு என்பது கடாபின் கொள்கையாயிருந்தது. அதன் மூலம் வெற்றியும் கண்டார். ஆனால் எண்ணெய் விவகாரத்தில் மாத்திரம் மூக்கை நுழைக்க முயன்ற உலக நாட்டாமைகளை அப்படியே விரட்டி அடித்தார். ஆப்பிரிக்கா மீது தீராத காதல் கொண்டிருந்த இந்த தொப்பிக்கார முரட்டு மனிதர் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்காவின் வளங்களெல்லாம் ஆப்பிரிக்க மண்ணின் மைந்தர்கள் அனுபவிக்கவே இறைவன் படைத்தான், இதை வெளிநாட்டு சக்திகள் கொள்ளை கொண்டு போக வேண்டாம் என ஒரு பரந்த கனவை கொள்கையாக வைத்து அதற்கென அயராது பாடு பட்டார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா என உரத்த சத்தமிட்டார். "ஆப்பிரிக்கர்களே ஒன்று கூடுங்கள், நமது வளங்களை நாம் பங்கிடுவோம், நாம் உழைப்போம், தன்னிறைவடைவோம்" என அறைகூவல் விடுத்தார். ஏகாதிபத்தியத்தின் மரு உருவமான மேற்கு நாடுகளின் அனைத்து கொள்கைகளையும் தன் கால் தூசுக்கும் கூட மதிக்காமல் எதிர்குரல் கொடுத்தார்.

இது போதுமே, உலக நாட்டாமை என தன்னை சுய பிரகடனப் படுத்திக் கொண்டு முக மூடி அணிந்த ஓநாயான அமெரிக்காவுக்கு மூக்கு மட்டுமல்ல, உடலின் எல்லா பாகங்களிலும் வேர்த்தது. கடாபியை கண்காணியுங்கள். எந்த ஒரு நாடும் எங்களிடம் கையேந்திக் கொண்டு, ஆமாம் சாமி போட்டு தலையாட்டிக் கொண்டிருக்கிற வரை நாமும் நல்லுறவு என்ற போர்வையில் அவர்களுடன் கைகுலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம். ஆனால் இவன், ஆப்பிரிக்க ஒருங்கிணைப்பு என்கிறான், ஆப்பிரிக்க வளங்களை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டான். இவனை வளர விட்டால் ஆப்பிரிக்கா என்ற அட்சய பாத்திரத்தில் நாம் அள்ள முடியாது. இவனை தனிமைப் படுத்துங்கள் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பொருளாதார தடைகள், அவ்வப்பொழுது லிபியாவிலிருக்கும் பொறுக்கிகளுக்கு கொம்பு சீவி விடுதல் என தன் தகிடு தத்தங்களை முடிந்த வரை ஆடிப் பார்த்தார்கள். ஆனால் கடாபி அசரவில்லை. அவர்கள் ஒரு அடி பாய்வதற்குள், இவர் நான்கு அடி பாய்ந்தார். பொறுத்து பொறுத்து பார்த்தார்கள். கடாபி இனி எண்ணெய் வர்த்தகம் டாலர் , யூரோ போன்ற மதிப்பிழந்த பணங்களில் இல்லை, நான் சொல்லும் பணத்தில் தான் பேரம் நடக்க வேண்டுமென்றார். ஆஹா, இனியும் விட்டால் இவன் எங்க போய் நிப்பானோ தெரியாதுடா என்றார்கள். ரைட்டு ஆரம்பிச்சுரு, அடிங்கடா அவனை, மனித உரிமை மீறல்கள், ரசாயன ஆயுதங்கள் இன்னும் என்ன வேணுமானாலும் சொல்லு. ஆனால் அவனை ஒழிச்சுக் கட்டு, அதோட விடாதே அங்க நமக்கு ஆமாம் சாமி போடற ஒருத்தனை ஆட்சியில வை…… அடித்தார்கள்.

ஒரு பைசா கடன் வாங்காத அந்த கடாபியை அடித்தார்கள், தன்னிறைவு என்றால் அது கடின உழைப்பினால் மாத்திரமே சாத்தியம் என்ற கடாபியை அடித்தார்கள், ஒரு சில நீரூற்றுகளை ஒட்டு மொத்த தேசத்துக்கும் வழங்கி, பாலைவனத்தில் சோலைகளை ஏற்படுத்திய கடாபியை, ஒன்று பட்ட ஆப்பிரிக்கா என்ற உயர்ந்த கனவை வாயிலாவது உச்சரித்த கடாபியை, எழுத்தறிவில்லா தேசத்தின் குடிமக்களுக்கு, பட்டப்படிப்பையும் இலவசமாக வழங்கிய கடாபியை, ஆப்பிரிக்க வளங்களெல்லாம் மண்ணின் மைந்தர்களுக்கே என முழங்கிய கடாபியை, என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீட்டில்தான் வாழ வேண்டும் என எல்லாருக்கும் வீடு கட்டிக் கொடுத்த கடாபியை, பெண்கள் முன்னேற வேண்டும் என பாடுபட்ட கடாபியை, உலக நாட்டாமைகளின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய கடாபியை, எங்கெல்லாம் நட்பின் பெயரில் சுரண்டல்கள் நடந்ததோ, அதற்கு எதிராக குரல் கொடுத்த கடாபியை, பிச்சைக் காரர்களே இல்லாத ஒரு தேசத்தை உருவாக்கிய கடாபியை ஒரு சில தெருப் பொறுக்கிகள் சேர்ந்து நாயை அடிப்பது போல் அடித்து அவரது ரத்தம் வழியும் உடலை தெருவில் இழுத்துக் கொண்டு போய் அவமானப் படுத்தினார்கள்.

ஆமாம், கடாபி கொஞ்சம் கோக்கு மாக்கான ஆசாமிதான், பகட்டு உடைகள் அணிவது பிடிக்கும், பள பள நகைகள் அணிவது பிடிக்கும், எப்போதும் அழகிய பெண்கள் சூழ நடப்பது பிடிக்கும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வித விதமான உடைகள் அணிவது பிடிக்கும், ஆன்மீகம் பேச பிடிக்கும், எந்த எதிர் விளைவுகளையும் யோசிக்காமல் மனதில் பட்டதை அப்படியே பேசப் பிடிக்கும், தனது அரசியல் விரோதிகளுக்கு மேலோக பதவி அளித்து கௌரவிப்பது பிடிக்கும், முக்கியமாக தன்னிறைவு, அகண்ட சாம்ராஜ்யம் போன்ற கனவுகள் காண்பது பிடிக்கும். ஆனால், அவர் அழித்தொழிக்கப் பட வேண்டிய ஆபத்தான மனிதன் அல்ல, அவ்வப்பொழுது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்தான், ஆனால் அதுவும் இஸ்ரேலியர்களின் அத்து மீறல்களுக்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே இருந்தது. தீவிரவாதத்தை அவர் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக தன் மக்கள், தன் நாடு, தன் வளங்கள் என்று சதா சிந்தித்துக் கொண்டிருந்தவர். அரசியல் சதுரங்கத்தில் அவரும் பல காய்களை வெட்டியவர்தான் இல்லை என சொல்லவில்லை, ஆனால், அவைகளுக்கென பிரத்யேக காரணங்கள் இருந்ததோ என்னவோ, யாருக்குத் தெரியும். பொதுவில் அவரை ஒரு சர்வாதிகாரியாக, மத வெறியனாக, ஸ்த்ரீ லோலனாக இன்னும் எப்படியெல்லாம் திரித்துக் கூற முடியுமோ அப்படியெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் திரித்துக் கூறினாலும், தனது நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கென உடல் பொருள் ஆவியை கொடுத்து உழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி இருந்த ஒரு மனிதனை ஒரு தெரு நாயைப் போல சுட்டு, ரத்தம் தோய்ந்த ஆடையில்லா உடல் தெருக்களில் இழுத்துச் செல்லப் பட்டு சித்திரவதை செய்து கொல்வது தான் நீதி என்றால், இப்பொழுது ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், ஒரு காலத்தில் வியட்நாமிலும் இன்னும் உலகின் பல நாடுகளிலும் தினமும் பெண்களை கற்பழித்துக் கொண்டும், எண்ணெய் வளங்களை சுரண்டிக் கொண்டுமிருக்கிற உலக நாட்டாமைக் காரர்களை எப்படிக் கொல்வது??????

நன்றி:தராசு&

Engr.Sulthan

_

ஞாயிறு, 10 ஜூன், 2012

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் 45-வது ஆண்டு தினம்.

ஜெருசலேம், ஜூன் 10: 1967-ம் ஆண்டு நடைபெற்ற 6 நாள் போரில், மேற்கு கரை, காசா பகுதி, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. அதன் 45-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான யூதர்களும், அரேபியர்களும் பங்கேற்ற எதிர்ப்புப் பேரணி டெல் அவிவ் நகரில் நடைபெற்றதாக இஸ்ரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹாரெட்ஸ் என்ற இடதுசாரி சிந்தனை மிக்க பத்திரிகையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலிய ராணுவ வானொலி சில நூறு பேர்களே பேரணியில் பங்கேற்றதாக தெரிவித்தது.

"ஆக்கிரமிப்பு அகலாத வரை சமூக நீதி கிடைக்காது' என்ற முழக்கத்துடன் அவர்கள் பேரணியில் பங்கேற்றதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

பாலஸ்தீனர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 300 பாலஸ்தீனர்கள் சனிக்கிழமை மதியம் போராட்டம் நடத்தினர்.

ரமல்லா பகுதிக்கு வடக்கில் உள்ள பீத் நுபா கிராமத்தில் ராணுவத்தினர் மீது கற்களை எரிந்தும், டயர்களைக் கொளுத்தியும் பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தினர்.

பாதுகாப்புப் படைகள் வீசிய கண்ணீர் புகை குண்டுகளாலும், ரப்பர் குண்டுகளாலும் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்தனர்.

நன்றி;தினமணி.

வெள்ளி, 8 ஜூன், 2012

சென்னை லாக் நகரில் 150 ஏழை மாணவர்களுக்கு INTJ சார்பில் இலவச நோட் புக்!

சென்னை பல்கலைக் கழகத்திற்கு பின்னால் பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதி லாக் நகர் இந்தப் பகுதியில் முஸ்லிமல்லாதவர்கள் அதிகம் வசிக்கிறார்கள்! இந்தப் பகுதியில் உள்ள ஒரு ஜன்டாவை அகற்றிவிட்டு சில வருடங்களுக்கு மின் அதைப் பள்ளிவாசலாக  மாற்றி, அங்கு பல் வேறு தாவா பணிகளை செய்வதோடு, அம்மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது! அந்த வகையில் கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் அங்கு உள்ள 150 ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நோட் புக்ஸ் வழங்கப்பட்டது! கிளை நிர்வாகிகள் லாக் நகர் யூசுப், அமீன், மாவட்ட மருத்துவ அணி கலீல் ஆகியோர்  வழங்கினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.

INTJ மின்வாரிய i முற்றுகை அறிவிப்பால் காவல் துறை அதிகாரிகள் நேரில் வந்து சமரசம்!


 INTJ  மின்வாரிய முற்றுகை அறிவிப்பால் 
காவல் துறை அதிகாரிகள் நேரில் வந்து சமரசம்! 

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு அதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதை சரி செய்ய வேண்டிய மின் வாரியம் போதிய பணியாளகள் இல்லை! பொறுப்பான அதிகாரிகள் இல்லை என பொறுப்பை தட்டிக் கழிப்பதும், மக்கள் மின் வாரிய அலுவலகத்தில் சென்று கத்துவதும்  காவல் துறை வந்து மக்களை சமரசம் செய்வதும தொடர் கதையாகிப் போனதால் திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இன்று வெள்ளிக்கிழமை இன்று எஸ்.எம்.பாக்கர் தலைமையில் ஆர்பாட்டத்தை அறிவித்து இருந்தது! 

இந்த ஆர்பாட்ட அறிவிப்பை கண்டு காவல் துறை அதிகாரிகள் உளவுத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனை அடிப்படையில் 'புதுக் கோட்டை இடைத் தேர்தல் முடியட்டும் எங்களுக்கு பத்து நாள் அவகாசம் கொடுங்கள் நாங்கள் தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்து தருகிறோம்!  நாங்கள் உங்கள் தலைவரை சந்தித்து உறுதி அளிக்கிறோம்! உங்கள் பள்ளிவாசலுக்கே வந்து உங்கள் நிர்வாகிகளை அழைத்து சென்று மின்வாரிய உயர்அதிகாரிகளை சந்திக்க வைத்து பிரச்சனையை முடித்து தருகிறோம் எனக் கேட்டதை அடுத்து கிளை நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

இதை அடுத்து திருவல்லிக்கேணி ஐ.என்.டி.ஜேமர்கசுக்கு வந்த காவல் துறை அதிகாரிகள் எஸ்.எம்.பாக்கரிடம் இந்தப் பிரச்சனையை சரி செய்வதாக வாக்களித்தனர்.அவர்களிடம் கடந்த ஆட்சியில் இதே பிரச்சனைக்காக கொட்டும் மழையில் ஆயிரக்கனகானவர்கள் கலைஞர் வீட்டை முற்றுகையிடம் அளவிற்கு சென்றதை எடுத்து சொல்லி அந்த நிலைக்கு மக்களை தள்ள வேண்டாம் ! எனக் கூறினார.பின்னர் காவல் துறை அதிகாரிகளுக்கு திருமறைக் குரான் தமிழாக்கம் வழங்கப்ப்ட்டது! பின்னர் மாவட்ட நிர்வாகிகள் சிக்கந்தர் மற்றும் முனுசு ஆகியோரடங்கிய குழு காவல் துறை அதிகாரிகளோடு மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து பேசியது! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்ட அறிவிப்பால் காவல் துறை அதிகாரிகள் மர்கசுக்கு வந்த இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது!அல்ஹம்து லில்லாஹ்.      

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[4]

தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில், பெருந்தலைவர் என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் காமராசர் அவர்கள் மேடையில் இருக்கும் போதே ஒரு பேச்சாளர்,

"காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்" என்று பேசினார்.

அடுத்துப் பேசிய காமராஜர்,

" நடக்கிறதைச் சொல்லணும். நாங்கள் நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனுமின்னு சொல்லுறீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்து விடுவதா வச்சுக்குவோம்.

அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்லுவான்" – என்றார்''.

'உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று பேசியவரும், ஏன் கேட்டுக் கொண்டு இருந்த பொது மக்களும் அசந்து போனார்கள். 

காமராஜர் அவர்களின் இந்த பேச்சு வெற்று அரசியல் வாக்குறுதிகளுக்கு சாட்டையடியாக இருந்தாலும், மறுபக்கம் ஒருவனுக்குச் சொந்தமான ஒன்றில் இன்னொருவனுக்கு எந்த பங்குமில்லை என்ற தத்துவத்தை அழகாக உணர்த்துவதாக இருப்பதை நாம் காணலாம். 

இந்த அடிப்படையில் இன்றைக்கு பிறரின் சொத்துக்களை போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்கும் கும்பல் ஒருபுறமிருக்க, தனது சொத்தை பாதுகாக்கும் பொருட்டு, சம்மந்தப்பட்ட உரிமையாளரால் நியமிக்கப்படும் காவலாளிகள் அல்லது மேனேஜர்கள், முதலாளியின் பலவீனத்தை பயன்படுத்தி, சொத்துக்களை தனதாக்கிக் கொள்ள முயற்ச்சிப்பதையும் காண்கிறோம். அந்த வரிசையில், உசாநீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பான ஒரு வழக்கு, அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படும் பேராசைக்காரர்களுக்கு பேரிடியாய் அமைந்துள்ளதோடு, இஸ்லாமிய அடிப்படைக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தனது நிலங்களை பாதுகாக்க ஒரு காவலாளியை நியமிக்கிறார். அவரது பணிக்காக ஊதியமும் வழங்கி வருகிறார். இந்த காவலாளி தொடர்ந்து இரு தலைமுறையாக அந்த நிலத்தை பாதுகாத்து வருகையில், அவரது உள்ளத்தில் ஒரு ஊசலாட்டம். இத்தனை ஆண்டுகளாய் இந்த நிலத்தை நமது எஜமானர் விற்கவோ, வேறுவகைக்கு பயன்படுத்தவோ செய்யவில்லை. எனவே இரு தலைமுறையாக நமது பராமரிப்பில் உள்ளதை காரணம் காட்டி நிலத்தை நமதாக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் உச்சநீதிமன்றத்தை அணுகி, ''இரு தலைமுறைகளாக இந்த நிலத்தை நான் பாதுகாத்து வருவதால் இந்த நிலம் எனக்கே சொந்தம் என கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்று ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். 

இந்த மனு மீதான தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா அடங்கிய "பெஞ்ச்', ''மனைகள் அல்லது நிலங்களை வாங்கும் உரிமையாளர்கள் தங்களுடைய தொழில், வியாபாரம், வேலை காரணமாக ஒருவருடைய பராமரிப்பு அல்லது பொறுப்பில் விட்டுவைத்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சொத்து அவர்களுக்கே உரியது என்று உரிமை கோர சட்டத்தில் வழியில்லை என்றும், நிலங்களை அல்லது சொத்துகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவற்றின் உரிமையாளர் ஒப்படைக்கும்போதே அவர் திரும்பக் கேட்கும்போது அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதே இயற்கை நீதி. பராமரிப்புக்கும் இதர சேவைகளுக்கும் உரிமையாளர் அவருக்குச் செலவுக்குப் பணம் தருவதே அப்படிப் பார்த்துக் கொள்வதற்காகத்தான். அதற்குப் பிறகும் அந்தச் சொத்து தனக்கே உரியது என்று கோர எந்தவித நியாயமும் இல்லை என்றும் கூறியுள்ள நீதிபதிகள்,

இப்போதெல்லாம் தங்களுக்கு சட்டப்படி சொந்தமில்லை என்று தெரிந்தும் ஏதாவது அற்ப ஆதாரத்தை அல்லது காரணத்தைக் காட்டி இதுபோல அலைக்கழிக்கும் வழக்குகளைத் தொடுக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தனர். இத்தகைய வழக்குகளைத் தொடுப்பவர்களுக்குக் கடுமையான அபராதம் விதித்தால்தான் இனி எதிர்காலத்தில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் இந்த வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்ததாகவும் மனுதாரர் வெறும் வாட்ச்மேன்தான் என்பதால் 25,000 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த அபராதத்தை 2 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறினர். அத்துடன் அந்த நிலத்தை அதன் உரிமையாளரிடம் 2 மாதங்களுக்குள் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய இந்த அற்புதமான தீர்ப்பு பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.  (4:6)

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.  (4:10)

மேற்கண்ட இரு வசனங்களிலும் அனாதைகளின் சொத்துக்களை அவர்களின் பருவகாலம் வரை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற ஒருவர் ஏழையாக இருப்பின் அந்த சொத்துக்களில் நியாயமான அளவு [பராமரிப்புக் கூலி என்ற வகையில்] சாப்பிடலாம். ஆனால் இந்த பராமரிப்பாளர் செல்வந்தராக இருந்தால், அனாதையின் சொத்தில் இருந்து கடுகளவும் அனுபவிக்க அனுமதியில்லை என்று கூறும் இஸ்லாம், அந்த அனாதைகள் உரிய பருவத்தை அடைந்து, அவர்களது சொத்துக்களை மேலாண்மை செய்யும் தகுதியை அடைந்துவிட்டால் எவ்வித குறைவுமின்றி, அவர்களிடம் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்கிறது. இந்த வசனத்தின் அடிப்படையில். மேற்கண்ட வழக்கின் காவலாளி, சொத்துக்களை பாரமரிப்பதற்காக ஊதியம் பெற்றது சரிதான் என்றாலும், அந்த சொத்துக்களை அமுக்க நினைத்ததை இந்த வசனம் கடுமையாக கண்டிக்கிறது. இன்னும் தெளிவாக, 

''நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை [சொத்துக்களை] அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். [4:58] 
என்று கூறி, ஒருவரின் சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பேற்ற மற்றவர் ஒருபோதும் அந்த சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே அருள்மறை சொல்வதன் மூலம், தன்னைத்தானே இறைவேதம் என்று நிரூபிப்பது அதிசயமல்லவா?

தீர்ப்புகள் வரும்....