புதன், 16 மார்ச், 2011

முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிப்போம்- இதஜவின் சமுதாய நலன் சார்ந்த செயற்குழு முடிவு!

இறைவனின்  திருப்பெயரால் ...
அல்லாஹ்வின் பேரருளால், இன்று (15.03.2011) சென்னை இம்பிரியல் ஹோட்டலில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு மிக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் ஏகோபித்த முடிவின்படி கீழ்கண்ட தீர்மானத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் முடிவு எடுத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

  1. இட ஒதுக்கீட்டு குளறுபடிகளை நீக்கி, இட ஒதுக்கீட்டை  5%  ஆக்கிதருவது எனும் கோரிக்கையை ஏற்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!
  2. அதே சமயம் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் எந்த கட்சியை சேர்ந்து இருந்தாலும் அவர்களை ஆதரிப்பது என முடிவு!
  3. முஸ்லிம் வேட்பாளர்களுக்கிடையில்  நேரடி மோதலை தவிர்க்க முயசிப்பது.  முடியாத  பட்சத்தில் அவர்களில் சிறந்தவர்களை ஆதரிப்பது!    
  4. புதுவையில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்..ஆர்,காங்கிரஸ் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது  எனவும் முடிவு!
  5. பாபர் மஸ்ஜித் ,மற்றும் மத்தியில் இட ஒதுக்கீடு விசயங்களில்   தொடர் துரோகம் இழைக்கும் காங்கிரசுக்கு பாடம் புகட்டும் விதமாக அதை எதிர்த்து பிரசாரம் செய்ய முடிவு! 

 
 
 
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி  மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.[11 ;44 ]
 

வியாழன், 10 மார்ச், 2011

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்.

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 
04 -03  2011 அன்று நடக்கவிருந்து, பின்னர் தவிர்க்க முடியாத  காரணத்தால் தள்ளி வைக்கப்பட்ட இரத்ததான முகாம், இன்ஷா
அல்லாஹ் வெள்ளிக்கிழமை[ 01 -04 -2011] பிற்பகல் 2 மணிமுதல்  சிறப்புடன் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக; 
அழைப்பின் மகிழ்வில்; இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.[INTJ]
குவைத் மண்டலம்.

தொடர்புக்கு;
 65653431,97659759 ,65120393 ,65727633 ,
 97102763 ,97465872 ,55890813 ,65531023  

குவைத் சுதந்திர தின பொன்விழாவையொட்டி பங்களாதேஷில் உணவு விநியோகம்!

குவைத் சுதந்திர தின பொன்விழாவை கடந்த 25 -26  தேதிகளில் சிறப்பாக கொண்டாடியது குவைத் அரசு. இதையடுத்து, குவைத் அதிபர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்களின் உத்தரவின் பேரில்,  பங்களாதேஷில் உள்ள குவைத் தூதரகம் சார்பாக ஒரு லட்சம்  பேருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்த உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 
இராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைன், குவைத்தை ஆக்கிரமித்தபோது, உரியநேரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தது மற்றும் மீட்புப் போரில் பங்கெடுத்தது ஆகிய சேவைகளை செய்த பங்களாதேஷின் செயல்பாட்டை மனதில் கொண்டே  இந்த உணவு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கண்ட இந்நிகழ்ச்சியில்  பங்களாதேஷுக்கான  குவைத் தூதர் அலி அல் தபிரி, மூன்றாவது செயலாளர் அனஸ் அல் சலூம் மற்றும் யூசுப் புதய்யிர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

குண்டுவீச்சில் 9 குழந்தைகள் பலி; ஒபாமா வருத்தம் தீர்வாகுமா?

ப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க நா[நே]ச நாட்டுப்படையினர், இரண்டு நாட்களுக்கு முன் நடத்திய குண்டு வீச்சில் அப்பாவி குழந்தைகள் 9 பேர் கொல்லப்பட்டனர். எனவே, இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க படையின் தளபதி லெப்டினன்ட் டேவிட்டும், அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, குழந்தைகள் பலியானதற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
 
ஒபாமாவின் இரங்கல் இறந்து போன குழந்தைகளை மீட்டுத் தந்துவிடுமா? என்ற அதிர்வலை எழாமல் இல்லை. மேலும், அமெரிக்க படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜனநாயகத்தை  நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் நாடு பிடிக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஒபாமா மறுபரிசீலனை செய்வாரா? 

சட்டங்கள் செயல்பாட்டிற்கு வருமா?

மிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பல்வேறு தேர்தல் கட்டுப்பாடுகள்  பற்றி கூறியுள்ளார் அவற்றில் சில;
 
* கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. * ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.
 * பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும். * பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.
 
* விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
  * அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.
 
 * தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.
 * ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.
 
 
* கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.
 * மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
 
 தேர்தல் வரும் வேளையில் தேர்தல் கமிஷனின் அதிகாரிகள் இவ்வாறான பல்வேறு சட்டங்கள் போடுவதும், தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சி வாக்காளர்களுக்கு  பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுத்ததாக எதிர்கட்சியும், எதிர்கட்சி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுத்ததாக ஆளும்கட்சியும் பரஸ்பரம் புகார் மனுக்களோடு படையெடுப்பார்கள். இரு தரப்பு வழக்கும் பதியப்படும்.
 
அதே போல ஒவ்வொரு கட்சியினரும் எதிர்கட்சிகள் தங்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாக மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொள்வர். விதிமுறைகளை மீறியதாக பல வழக்குகளும் பதியப்படும். அதே போல வேட்பாளர் அதிகமாக செலவு செய்ததாக புகார்கள் வழக்காக மாறும். ஆனால் இவையாவும் தேர்தல் முடிந்த  கையோடு கிணத்தில் போட்ட கல்லாக மாறிவிடும். பின்னர் அந்த வழக்குகளின் நிலை என்ன என்பதை பற்றி புகார் கொடுத்தவர்களோ, பதிவு செய்த  அதிகாரிகளோ, கவலை கொள்வதுமில்லை. மக்களும் தேர்தலோடு  மறந்து விடுவார்கள்.
 
நாம்  அறிந்தவரை தேர்தல் காலகட்டத்தில் பதியப்பட்ட வழக்குக்காக யாரும் கைது செய்யப்பட்டதாகவோ, தண்டிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. எனவே சட்டங்கள் போடுவது பெரிதல்ல. அந்த சட்டங்கள் மீறப்படும் நிலையில் அவற்றை மீறியவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் தேர்தல் நேர முறைகேடுகள்- வன்முறைகள் குறையும் என்றும், தேர்தல் நேரத்தில் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடைமுறையில் இருப்பதுதான் சிறந்தது என்றும்  மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


குவைத் இந்திய தூதரகத்தின் தகவல் பலகையில் தமிழைக் காணோம்!

குவைத்தில் சுமார் ஆறு லட்சத்து அறுபதாயிரம் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில்  சுமார் ஒரு லட்சம் பேர் தமிழர்களாக இருக்கக் கூடும். பிழைக்க வந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டால்  முதலில் தமிழர்கள் நாடும் இடம் இந்திய தூதரகம் தான். திராவிடக் கட்சிகளின் தீவிர இந்தி எதிர்ப்பு கொள்கையால் இந்தியை கற்காத, இந்தியில் பேசத்  தெரியாத தமிழர்கள் இங்கே தூதரகத்திற்கு சென்றால் அங்கே தமிழ் வழிகாட்டி பலகை இல்லை என்ற குறைபட்டுக் கொள்கின்றனர் தமிழர்கள்.
 
சமீபத்தில் தூதரகத்தில் உள்ள தகவல் பலகையை படமெடுத்த சகோதரர் அதை நமக்கு அனுப்பியிருந்தார். அதில் தமிழை தவிர மற்ற மொழிகளில் எழுதப்படிருந்தது. தமிழை செம்மொழியாக்கி விட்டோம் என்று பெருமிதப்படும் முதல்வர், வெளிநாடு வாழ்  தமிழர்களுக்கு நலவாரியம் கண்ட முதல்வர், தூதரகத்தில் தமிழில் தகவல் பலகை வைக்கவும், தமிழில் ஒரு வழிகாட்டி[guide ] நியமிக்கவும் மத்திய வெளியுறவுத்துறை மூலம் முயற்ச்சிக்க  வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகிறார்கள்.

வெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்!

றிய நிலையில் உள்ள பெண்களும், கணவனை இழந்த விதவைகளும், கணவன் இருந்தும் உபயோகமில்லாத பெண்களும், கவுரமாக தங்களின் வயிற்றைக் கழுவிக்கொள்வதற்காக வீட்டு வேலைகளை  தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் நல்லவர்களாக  உள்ளநிலையிலும், சில கெட்ட பெண்களும் இருப்பதை மறுக்க முடியாது. அதோடு,  வேலைக்காரிகளையும்- வீட்டு எஜமானர்களையும் இணைத்து வராத கவிதைகளும், காமெடிகளும், கதைகளும் மிகக்குறைவு. மேலும், ஒரு வீட்டின்  ரகசியம் வேலைக்காரப் பெண்களால்தான் வெளியேறும் என்ற கருத்து பரவலாக உண்டு. இது உண்மையோ பொய்யோ, ஆனால் 'ரகசியநோய்' இவர்களில் சிலர் மூலம் உள்ளேவர வாய்ப்புண்டு என்பதற்கு சமீபத்தில் பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி சான்றாகத் திகழ்கிறது.
 
மும்பையை சேர்ந்த 29 வயது பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)   5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. அவர் மூலம் சாந்திக்கும் எய்ட்ஸ் பரவியது. இதனால் சாந்தி கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்தார். வேலைபார்த்த இடத்தில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை சொல்லவில்லை. கணவர் மூலம் எய்ட்ஸ் தாக்கியதால் ஆண்கள் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.எனவே ஆண்களை பழி வாங்க எய்ட்சை பரப்பும் செயலில் ஈடுபட்டார்.
 
அவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள், அவர்களுடைய உறவினர்கள், அடுக்கு மாடி குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் "செக்ஸ்" உறவில் ஈடுபட்டார். அதில் பலருடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார். இவருக்கு "எய்ட்ஸ்" இருப்பது தெரியாமல் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலேயே உறவு வைத்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்குமே "எய்ட்ஸ்" பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சாந்தி மும்பையை சேர்ந்த டாக்டர் கிலிடாவிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போதுதான் அவர் 100 ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்ததை டாக்டரிடம் தெரிவித்து உள்ளார். 
 
இத்தகைய அதிர்ச்சியான செய்தி,சபலப்புத்தியுள்ள ஆண்களின் மண்டையில் ஓங்கி ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கிறது. இதற்கு பின்னும், பனிப்பெண் தானே என்று பார்வையை செலுத்தினால், அதற்கான  'பனிஷ்மென்ட்[punishment ] பயங்கரமானது என்பதையும், வீட்டு ரகசியம் வெளியே போகிறதோ இல்லையோ, இது போன்ற சாந்திகளால் ரகசியநோய் உள்ளேவேரும்  என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[அல்-குர்'ஆன் 17 ;32 ]
 


கடாபி பதவி விலக வேண்டுமாம்;சொல்கிறார் ஹிலாரி!

மெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்பவர்களில் லிபியா அதிபர் கடாபியும் ஒருவர். இவருக்கு எதிராக காய் நகர்த்த சமயம் பார்த்து காத்திருந்த அமெரிக்காவுக்கு, லிபிய மக்களின் கிளர்ச்சி அருமையான வாய்ப்பாக அமைந்தது. இதன் மூலம் கடாபிக்கு நெருக்கடியை உண்டாக்க தீர்மானித்த அமெரிக்கா, அந்த நாட்டு அரசாங்கம் மீது பொருளாதார தடையை விதித்து உள்ளதோடு, ராணுவத் தாக்குதலும் நடத்த முன்னேற்பாடுகளும்  செய்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடாபி மீது விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார் ஒபாமா.
 
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28 அன்று ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில்  பேசிய அமெரிக்காவின்  செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ''அமைதியாக போராட்டம் நடத்தும் மக்கள் மீது கடாபியின் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். கடுமையான ஆயுதங்கள் மூலம் பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். எனவே கடாபி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று பேசியுள்ளார்.
 
லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி அரசு நடந்து கொள்ளும் முறை தவறென்றே வைத்துக் கொள்வோம். ஆனாலும் கூட இதை சொல்லும் தார்மீக உரிமை அமெரிக்காவிற்கு உண்டா என்றால் நிச்சயமாக இல்லை.ஏனெனில், அமெரிக்காவின் நேசநாட்டுப் படைகள் ஆப்கானிலும், ஈராக்கிலும் நாச நாட்டுப் படைகளாக மாற்றி, அப்பாவிகளை கொன்று குவிக்கிறதே! அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் காஸாவை கருகிய மலராக ஆக்கியபோது இதே அமெரிக்கா கண்மூடி சயனித்ததே! அப்போதெல்லாம் அப்பாவிகள் மீது அமெரிக்காவிற்கு வராத அக்கறை, தெரியாத மனித உரிமைகள் இப்போது மட்டும் பாய்ந்து வருவதேன்?
 
இன்னும் சொல்லப்போனால் மனித உரிமை மீறல்களின் மறு பதிப்பாக விளங்கும் அமெரிக்காவிற்கு, ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில் கருத்துரையாற்ற கூட தகுதியுண்டா என்பதே கேள்விக்குரியதாகும்.  எனவே, ஆப்கானிலும், ஈராக்கிலும் மனித உரிமை மீறல்களை செய்துகொண்டு, மறுபுறம் மனித உரிமை பேசித்திரிவது, 'யோக்கியன் வருகிறான்; சொம்பை எடுத்து உள்ளே வை' என்ற பழமொழியை  நினைவுபடுத்துவதாக உள்ளது.
 
குறிப்பு; ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலில் இருந்து லிபியா நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


புதன், 9 மார்ச், 2011

தேர்தல் தேதியை மாற்றுமா தேர்தல் கமிஷன்?

தோ வருகிறது, அதோ வருகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டமன்றத்  தேர்தல் வந்தே விட்டது. மத்திய தேர்தல் ஆணையம்  தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 13-ந் தேதி சட்டசபை தேர்தல் அறிவித்து உள்ளது. மார்ச் 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.  
 
திருமணத் தேதி  குறிக்கப் பட்டுவிட்ட பின்னும்  மணமக்கள் தேர்வு இன்னும் முடிவாகவில்லை. அதாவது தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளும் இன்னும் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை முழுமையாக  முடிக்கவில்லை. எனவே தான் வழக்கத்திற்கு மாற்றமாக அரசியல்கட்சிகள் தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறைகூறுகின்றன. 
 
மேலும்,  தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 25-ம்  தேதி முடிகிறது. 7 லட்சத்து 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 22-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். அதே போல பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5-ந் தேதி தொடங்கி மே 2-ந் தேதி வரை நடக்கிறது. வருகிற 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் 20-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 11-ந் தேதி வரை தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருக்கும். வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது, ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்வது என பலவகையிலும் பிரசாரம் நடக்கும். இது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர்.
 
மேலும் ஏப்ரல் 14-ந் தேதி சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நாள் கொண்டாட்டம் வருகிறது. இது தமிழர்களுக்கு முக்கிய திருநாளாகும். தேர்தல் வேலைகளால் திரு விழாவுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் ஏப்ரல் 13-ந் தேதி தேர்தலுக்காக விடுமுறை விடப்படுகிறது. 14-ந் தேதி அம்பேத்கார் பிறந்த நாள் விடுமுறை, 16-ந் தேதி மகா வீர் ஜெயந்தி விடுமுறை, 17-ந் தேதி ஞாயிறு விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை வருகிறது.
 
இப்படி தொடர்ந்து விடுமுறை வருவதால் வேலை பார்ப்பவர்களும், பொது மக்களும் 5 நாட்கள் விடு முறையை எங்காவது சென்று கொண்டாட வேண்டும் என்றே நினைப்பார்கள். 12-ந் தேதி இரவே அந்த இடங்களுக்கு சென்று விடுவார்கள். இதனால் ஓட்டுப் போட ஆள்வராமல் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து விடும். மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டுமானால் அவர்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையில் தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் ஓங்கும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்து தேர்தலை மே மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கை, அதிமுக மதிமுக சிறுத்தைகள்  உள்ளிட்ட பிரதான கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.
 
இக்கட்சிகளின் கோரிக்கையும் நியாயமான ஒன்றாகவே படுகிறது. ஏனெனில் வாக்குப் பதிவு நடப்பது ஏப்ரல் 13 என்றால், வாக்கு எண்ணிக்கையோ மே 13 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிந்து ஒருமாதம் கழித்து எண்ணுவது பொருத்தமான ஒன்றல்ல. வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதற்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகளின் உழைப்பும், பல கோடி ரூபாய்களும் செலவிடப்பட வேண்டும். இது போக ஒருமாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை என்பது மக்களின் மனதில் சநதேக அலையையும் ஏற்படுத்தக் கூடும்.
 
அடுத்து வாக்கு எண்ணிக்கைக்கும், அடுத்த சட்டமன்றம் தொடங்குவதற்கும் இருக்கும் இடைவெளி மூன்று நாட்கள் மட்டுமே! இந்த மூன்று நாளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள்  சான்றிதழ் பெறுதல், ஒன்று கூடி தனது தலைவரை தேர்ந்தெடுத்தல், அந்த தலைவர் கவர்னரை சந்தித்தல், அவர் பதவிப் பிரமாணம் செய்தல், மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக்கி 234 உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்வித்தல் இவையாவும் இந்த மூன்று நாளில் சாத்தியமா  என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் நிலவுகிறது. ஒருவேளை தொங்கு சட்டமன்றம் வந்தால் பிற கட்சிகளிடம் பேரம் பேச, ஆதரவு பெற இந்த மூன்று நாளில் முடியுமா என்ற கவலையும் அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைக்கிறது. 
 
ஆனால் தேர்தல் கமிஷனோ, அனைத்தையும் அலசி ஆராய்ந்துதான தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டதாக கூறுகிறது. அதே நேரத்தில் மாணவர்களின் தேர்வுக்காலம், விடுமுறைக் காலம், புதிய அரசுக்கு உள்ள குறுகிய அவகாசம் இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி மாற்றியமைக்கப் படுவதே சிறந்தது என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது. கவனத்தில் கொள்ளுமா தேர்தல் கமிஷன்?