வெள்ளி, 16 செப்டம்பர், 2011

ஊருக்கு உபதேசம் செய்யும் ஜெயலலிதா.

ட்ட‌ப்பேரவை‌யி‌ல் நடைபெ‌‌ற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அத்துறையின் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில் அளித்துப் பேசுகை‌யி‌ல், முதல்அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசும்போது, 'மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்றும், மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும் என்றும் வாய்கிழிய பேசுபவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று பேசியுள்ளார்.
 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை அதிகம் வலியுறுத்தும் அரசியல் கட்சிகளில் பாமகவும் அதன் நிறுவனர் ராமதாஸும் முதலிடத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் கூற்று மறைமுகமாக ராமதாஸை சாடும் வகையில் உள்ளதாக சில அரசியல் நோக்கர்கள் கருதினாலும், ராமதாஸ் மட்டுமன்றி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய அமைப்புகளும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா, 'யார் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்'களோ அவர்களை குறிப்பிட்டு சொல்லாமல் பொத்தாம் பொதுவாக விமர்சிப்பது மதுவிலக்கை கொண்டு வந்து மனித குலத்தை காக்க நினைக்கும் அனைவரையுமே இழிவுபடுத்தும் வார்த்தையாகும்.
 
மேலும், ஜெயலலிதா இவ்வாறு சொல்வது அவரது பலவீனத்தையும் ஒரு சேர காட்டுவதாக உள்ளது. ஒரு புறம் பூரண மதுவிலக்கு பேசிக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் ஜெயலலிதா, அத்தகைய இரட்டை வேடதாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை மக்கள் முன் அடையாளம் காட்டுவதை விடுத்து இவ்வாறு பொத்தாம் பொதுவாக புகார் கூறுவது அறிவுடமை அல்ல. ஏனெனில், இதே சட்டமன்றத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன், "தி.மு.க.வினருக்கு சிறைவாசம் சுகவாசமாக இருப்பதாகவும்,"நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் பாதிப்பேர் ஜெயிலிலும், பாதிப்பேர் பெயிலிலும் இருக்கின்றனர்" என்று கூறியபோது, குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா,

"தி.மு.க.,வினரிடம் இப்போது ஆட்சி கிடையாது; அதிகாரம் கிடையாது. அவர்கள் எப்படி செல்வாக்கைப் பயன்படுத்தி சுகவாசிகளாக இருக்க முடியும்? அவர்களுக்கு இப்போது என்ன செல்வாக்கு இருக்கிறது? உறுப்பினரின் பேச்சு, சிறைத் துறை அதிகாரிகளை குற்றம்சாட்டுவது போல் இருக்கிறது. பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. எந்த சிறையில், எந்தக் கைதி சுகவாசியாக இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு, உறுப்பினர் கூற வேண்டும்" என்றாரே. ஜெயலலிதாவின் இந்த அறிவுரையின்படி யார் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று குறிப்பிட்டு சொல்லாமல் இவர் மட்டும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது ஊருக்குத்தான் உபதேசம் என்பது போல அல்லவா உள்ளது. எனவே, மதுவிலக்கு விசயத்தில் வெட்டி அரசியல் பேசிக்கொண்டிருக்காமல், அண்ணாவின் வழியில்  தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமுல்படுத்த ஜெயலலிதா முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக