வெள்ளி, 8 ஜூன், 2012

'காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா....'''!

''காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா....'''! இப்படி ஒரு பாடலின் வரி எல்லோருக்கும் நிலைவில் இருக்கும். அதுபோல, சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்கள் இறுதியாகவும், உறுதியாகவும் நம்புவது சிபிஐ விசாரணையையும், அது தரும் தீர்ப்பையும் தான். ஒரு சம்பவத்தில் காவல்துறை விசாரிப்பதில் திருப்தியில்லாதவர்கள் கேட்பது, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரனைக்கு மாற்றவேண்டும் என்பதுதான். அந்த அளவுக்கு சிபிஐ மீது மக்களுக்கு ஒரு அதீத நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.

சிபிஐயும் பல்வேறு பிரச்சினைகளில் நேர்மையான விசாரணை மற்றும் தீர்ப்பின் மூலமும் நீதியை நிலைநாட்டியுள்ளது என்பதும் அனைவரின் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். அத்தகைய சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரே லஞ்சம் வாங்கிக் கொண்டு நீதியை சாகடித்துள்ள செய்தி ஊடகங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி மூவரும் சட்ட விரோத சுரங்கத் தொழில் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எடியூரப்பா மந்திரி சபையில் அமைச்சர்களாக இருந்த கருணாகர ரெட்டியும் ஜனார்த்தன ரெட்டியும் சுரங்கத் தொழில் முறைகேடு காரணமாக பதவி இழந்தனர். பிறகு அவர்களை சிபிஐ கைது செய்து ஜெயிலில் அடைத்தது. 

அந்த கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள சிபிஐ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அந்த சிபிஐ கோர்ட்டின் நீதிபதியாக இருப்பவர் பட்டாபிராமராவ்.
ரெட்டி சகோதரர்களில் ஜனார்த்தன ரெட்டி மீது மட்டுமே அந்த கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் வழங்க. அதற்கு லஞ்சமாக 10 கோடி பேரம் பேசி, மூன்று கோடி முன் பணம் பெற்றுக்கொண்டு, சிபிஐ நீதிபதி பட்டாபிராமராவ் ஜாமீன் வழங்கியுள்ளார். 

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆந்திர ஐகோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டி விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. 

அந்த அப்பீல் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், சிபிஐ கோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 23-ந்தேதி ஜனார்த்தன ரெட்டியின் விடுதலை உத்தரவை ரத்து செய்தனர். 

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். இதற்கிடையே ஆந்திரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மதன் தலைமையில் நீதிபதிகள் குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை கூடி தீவிர ஆலோசனை நடத்தியது. அதன் பிறகு சிபிஐ கோர்ட்டு நீதிபதி பட்டாபிராமராவை சஸ்பெண்டு செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இது தொடர்பான விசாரணை முடியும் வரை நீதிபதி பட்டாபிராமராவ் ஐதராபாத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதற்கிடையே நீதிபதி பட்டாபிராமராவின் நடவடிக்கைகளில் ஏற்கனவே சந்தேகம் அடைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், அவருக்கு தெரியாமலே அவரது செயல்பாடுகளை கண்காணித்தனர். அவரது போன், அவரது மகன் போன் அழைப்புகள் ஓட்டு கேட்கப்பட்டன.

பிறகு நீதிபதி பட்டாபிராமராவ், அவரது மகனிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், கர்நாடக சட்ட மந்திரி பிரதாப்ரெட்டி, 2 எம்.எல்.ஏ.க்கள், ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் சில ரவுடிகள் ஆகியோர் நீதிபதிக்கு பணம் கொடுத்ததில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக சிபிஐ விசாரித்து ஏராளமான ஆதாரங்களை திரட்டி உள்ளது.

நாட்டையே உலுக்கிய சுரங்கத்தொழில் முறைகேட்டில் கைதான ஒருவரை ஜாமீனில் விடுதலை செய்ய சிபிஐ கோர்ட்டு நீதிபதியே ரூ.10 கோடி பேரம் பேசி பணம் பெற்றது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக கைதாவது இதுவே முதல் முறையாகும். லஞ்ச லாவண்யமற்ற தூய்மையான கரத்துக்கு சொந்தக்காரர்கள் என மார்தட்டிக் கொள்ளும் பாஜக ஆளும் கர்நாடகாவில், அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களின் விடுதலைக்காக நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து, நீதியை சாகடிக்க முற்பட்டுள்ளனர். இத்தகையோர் இந்தியாவை ஆண்டால், என்னாகும் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு மதவாத, ஊழல்வாத பாஜகவை வீட்டிற்கு அனுப்ப முயற்சிக்கவேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக