வியாழன், 21 ஜூன், 2012

ஜனாதிபதி, கொடியவர்களுக்கு கருணை காட்டுவது நியாயமா?

ந்திய நாட்டின் அரசியல் சட்டத்தின் 72வது பிரிவு மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் கருணை மனுமீதான பரிசீலனை செய்யவும், அவர்களுக்கு தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஒரு குற்றவாளி விசயத்தில் மன்னிப்பதற்கும், தண்டனையை குறைப்பதற்கும் பாதிக்கப்பட்டவனுக்கு அதிகாரம் வழங்கினால் அதில் அர்த்தமிருக்கும். ஆனால் எங்கோ யாரோ பாதிக்கப்பட, அந்த பாதிப்பிற்கு எந்த சம்மந்தமுமில்லாத ஜனாதிபதி மன்னிப்பது சரியல்ல என்பது மனிதநேயர்கள் பலரின் கருத்தாக உள்ளது. அதை மெய்ப்படுத்தும் வகையில்தான் கருணை மனு மீதான ஜனாதிபதியின் சில முடிவுகள அமைந்துள்ளன.

மனிதனுக்கு இரக்கம் காட்டலாம்; மனிதம் கொன்றவனுக்கு இரக்கம் காட்டக்கூடாது. ஒரு பெண்ணைக் கற்பழிப்பது பெரும்பாவம்; ஆனால் அதைவிட பெரும்பாவம் ஒன்றுமறியா சிறுமிகளை கற்பழித்துக் கொல்வது. 

உ.பி.யை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு ஐந்து வயது சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. இந்த கொடுங்கோலனின் கருணை மனுவை பரிசீலித்த ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்துள்ளார். தனது பருவ வயது பெண்ணைக் கற்பித்துக் கொல்லப்பட்டாலே துடிக்கும் பெற்றோர்கள், பால்மணம் மாறாத பாலகனான ஐந்துவயது சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்டபோது எப்படி துடித்திருப்பார்கள் என்பதை ஒரு பெண்ணாக இருக்கும் ஜனாதிபதி உணரவில்லையா? இவனைப் போன்றவர்களுக்கு தூக்குத்தண்டனை என்பது சிறியதண்டனையே. அதைத்தாண்டி வேறு தண்டனை இல்லை என்பதால்தான் இந்த தூக்குத் தண்டனை கூட விதிக்கப்படுகிறது. ஆனால் அதைக் கூட தனது கருணை[!]யால்[!] ஜனாதிபதி மாற்றி, அவருக்கு ஆயுள்தண்டனை என்கிறார் என்றால் இந்த சட்டவிதி அவசியமா என்பதை சிந்திக்கவேண்டும்.

மேலும், ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரை கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற ஒருவருக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கொடூரமாக கொன்றதற்காக மரண தண்டனை பெற்றவர்கள் கரண்சிங் மற்றும் குன்வர் பகதூர் சிங் ஆகியோருக்கும் மரணதண்டனையை மாற்றி ஆயுள்தண்டையாக குறைத்துள்ளார் ஜனாதிபதி. 

ஒருவரை அநியாயமாக கொன்றாலே அது மனிதாபிமானமற்ற செயல். ஆனால் இரண்டுபேரை, ஐந்துபேரை கொடூரமாக கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களுக்கு மரணதண்டனை கூடாது; ஆயுள்தண்டனை போதும் என்ற முடிவை ஜனாதிபதி எடுக்கிறார் என்றால், ஜனாதிபதி குடும்பத்தில் இதுபோன்ற கொடூரங்கள் நடந்தாலும் இந்த முடிவைத் தான் எடுப்பாரா? 

இதையெல்லாம் விட நமது நாட்டில் ஒருவருக்கு மரணதண்டனை வழங்குவது அரிதிலும் அரிதான வழக்குகளில் தான். அந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் இழைத்த கொடூரங்கள் அடிப்படையில் தான் இந்த மரணதண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் அதைக் கூட மாற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டென்றால், வழக்குகள் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு? தீர்ப்புகள் எதற்கு? 

எனவே ஒரு குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்த பின்னால், அந்த குற்றவாளியை மன்னிக்கும் உரிமை பாதிக்கப்படவனுக்கோ, அல்லது அவனது குடும்பத்தாருக்கோ வழங்கும் வகையில் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மனிதநேய பற்றாளர்கள் குரல்கொடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக