வெள்ளி, 8 ஜூன், 2012

விளையாட்டு வீரர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிகளை கொட்டிக் கொடுப்பது நீதியா?

விளையாட்டு என்பது உடலுக்கும், மனதிற்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பொம்மை வடிவிலான சில காய்களை அங்கும் இங்கும் நகர்த்தி விளையாடும் ஒரு விளையாட்டுதான் 'செஸ்' என்பதாகும். இந்த விளையாட்டில் உடலுக்கு எந்த நன்மையுமில்லை. மாறாக உட்கார்ந்து கொண்டே விளையாடுவதால் அது உடலுக்கு சோர்வையே தரும். அதே நேரத்தில் இந்த விளையாட்டில் மூளைக்கு மட்டுமே வேலை என்ற உண்மையும் மறுப்பதற்கில்லை. 

இது ஒருபுறமிருக்க, எப்படி பாரம்பரியமான பல விளையாட்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இன்று பாலகனின் கையில் கூட 'பேட்'டை பிடிக்க வைத்து சுவீகரித்துக்கொண்ட கிரிக்கெட் போல, செஸ்' விளையாட்டும் இந்தியர்களில் கணிசமானோரால் விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது. எந்த அளவுக்கென்றால், இந்த விளையாட்டின் உலக சாம்பியனாக ஐந்தாவது முறையாக பட்டம் வெல்லும் அளவுக்கு இதில் இந்தியர்கள் அனுபவமிக்கவர்களாக உள்ளனர். இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் போட்டியில் ஐந்தாவது முறையாக ஆனந்த் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தன் பங்கிற்கு, ஆனந்துக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி வழங்கியுள்ளார்.

செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த், ஒரு இந்தியர் என்ற அடிப்படையில் அவரை பாராட்டுவதும், அவரது வெற்றியில் மகிழ்வதும் ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். ஆனால், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் இரண்டுகோடியை ஆனந்திற்கு தூக்கிக் கொடுப்பது சரியானதா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். உண்மையில் ஆனந்த் ஏழையாக இருந்து அவரை உற்சாகப்படுத்துவதற்காக இந்த தொகை வழங்கப் படுமானால் அதில் ஒரு அர்த்தமிருக்கும். ஆனால் ஆனந்தைப் பொருத்தமட்டில் இதுபோன்ற பலகோடிகளை கண்டிருக்கக் கூடும். அவ்வாறிருக்க, கோடிகளில் புரளும் கிரிக்கெட் வீரர்களுக்கு அவ்வப்போது மத்திய அரசு தன் பங்கிற்கு கோடிகளை அள்ளிக் கொடுப்பது போல், ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை உள்ளது.

இந்த இரண்டு கோடி வழங்கப்பட்டது ஆனந்தை கவுரவப்படுத்தவே என்று அரசு கூறுமானால், அவரை விட கவுரவப்படுத்த வேண்டிய இந்தியக் குடிமகன்கள் நம் நாட்டில் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இருக்க வீடின்றி, தெருவோரம் குடியேறி, மழையில் நனைந்து, வெளியில் காய்ந்து, வாடும் நிலையிலும் எவரிடத்திலும் கையேந்தாமல் தனது கரத்தால் உழைக்கும் ஒரு ஏழைத் தொழிலாளி கவுரவப்படுத்தப்பட வேண்டியவன். அவனைப் போன்ற எண்ணற்ற ஏழைகளுக்கு இந்த இரண்டு கோடியில் ஒரு குடிசை அமைத்துத் தந்தால் அவனது குலம் உள்ளவரை முதல்வரை பாராட்டுவானே! 

நன்றாக படிப்பு வந்தும், வீட்டின் வறுமை காரணமாக மேல்படிப்பு படிக்கமுடியாமல் ஏட்டைத் தூக்கி எறிந்து விட்டு ஏதேனும் ஒரு கடையில் சம்பளத்திற்கு பணியாற்றும் எண்ணற்ற கல்விமான்களை தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு இந்த இரண்டு கோடிகளை வழங்கினால் நாட்டிற்கு சேவையாற்றும் எத்தனையோ நல்ல அறிவாளிகளை நாம் பெற்றுக் கொள்ள முடியுமே! 

வறுமையின் காரணத்தால் கொடிய வட்டி என்ற நரகில் விழுந்து, கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழைகள் இருக்கும் நாட்டில், இதுபோன்ற இரண்டுகோடிகளை கடன்பட்டோரை காப்பாற்றுவதற்காக அரசு செலவிடலாமே!

பிள்ளைகளை பெற்றும், அனாதைகளாக ரோட்டில் கையேந்தும் எத்தனையோ முதியோர்களை காப்பாற்றும் வகையில், இந்த இரண்டு கோடிகளை செலவழிக்கலாமே! இந்த நலத்திட்ட்டங்களை ஆனந்தின் பெயரால் கூட அரசு செயல்படுத்தலாமே! இதனால் ஆனந்தையும் கவுரப்படுத்தியதாக ஆகும். தேவையுள்ளவர்களும் பயனடைவார்கள்;. இதைச் செய்யாமல் ஆனந்திற்காக இருந்தாலும் சரி, வேறு எந்த பணக்கார விளையாட்டு வீரர்களுக்காக இருந்தாலும், அவர்களுக்கு வழங்கும் இந்த பரிசுத் தொகைகள் 'கோடியோடு கோடி சேர்ந்தது' என்றுதான் ஆகும் என்பதை முதல்வர் புரிந்து கொள்ளட்டும். அப்படியே கொடுத்தே தீருவேன் என்பது முதல்வரின் கொள்கையாக இருக்குமானால், அவரது கட்சி நிதியிலிருந்து கொடுத்தால் எவரும் கேள்வி கேட்கமாட்டார்கள். அவ்வாறில்லாமல் வயிற்றுப் பசிக்கு துடிக்கும் மக்கள் அரைவயிறு கஞ்சிக்கு அல்லாடிக் கொண்டிருக்கையில், முட்டில் பசியுள்ளவர்களுக்கு முழுக்கோழி பிரியாணி போட நினைப்பது அதுவும், மக்களின் வரிப்பணத்தில் செய்யநினைப்பது சரியா என்பதை முதல்வர் சீர்தூக்கிப் பார்க்கட்டும் என்பதே ஏழைமக்களின் ஏக்கமாக உள்ளது. 

நபியே! அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவுசெய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்." [அல் குர்'ஆன் 2:215 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக