வியாழன், 21 ஜூன், 2012

மின்சார வாரியத்தின் அலட்சியம்; பயமுறுத்தும் மின் கம்பங்கள்.

தொட்டால் ஷாக் அடிப்பது மின்சாரம் மட்டுமல்ல; மின் கட்டணமும் தான் என்று சொல்லும் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது தமிழ்நாடு மின்சார வாரியம். மின்வெட்டுக்கு மத்தியில் மக்கள் அல்லலுறுவது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் மின் இணைப்பு சாதனங்கள் பழுது வேறு பயம் கட்டுகிறது. சாலைகளிலும் தெருக்களிலும் கூன் விழுந்த கிழவியாக வளைந்து நிற்கும் மின் கம்பங்கள். திறந்தே கிடக்கும் மின் இணைப்புப் பெட்டிகள். கல்யாண வீட்டில் கட்டப்பட்ட சீரியல் லைட்டு போல் தொங்கும் வயர்கள். லேசாக காத்தடித்தாலோ மழை பெய்தாலோ தண்ணீரில் கலங்கும் மின் கசிவுகள் என்று ஏகப்பட்ட விசயங்களை கூறலாம். மின் சாதனங்களின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்ன என்று பார்த்தால் இவைகளில் பெரும்பாலனாவை கி.மு.வில் நிறுவப்பட்டவையாகும். அதனால்தான் தான் கடலூர் பகுதியில் தானே புயல் ஏற்பட்டபோது மின் கம்பங்கள் வாழைமரங்கள் போல சாய்ந்தன. பல நாட்கள் அம்மக்கள் இருளில் தவிக்கும் நிலை உண்டானது. 

இந்நிலையில், நேதாஜி போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் ஆர். அன்பழகன் என்பவர் பொது நல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ''பழுதடைந்த நிலையில் உள்ள மின் இணைப்புப் பெட்டிகள், மின் கம்பங்கள் ஆகியவற்றை சீர் செய்யக் கோரி தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவருக்கு 12.9.2011 அன்று கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எனினும் மின்சார வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. மின்சார வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜி. வாசுதேவன், பதில் மனு தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. எனினும் இதுவரை மின்சார வாரியம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஆகவே, மின்சார வாரியத் தலைவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், இந்தத் தொகையை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு வழங்கிட வேண்டும். அவ்வாறு தொகை வழங்குவதைப் பொறுத்து பதில் மனு தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வருவதற்குள் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை எனில், அடுத்த விசாரணையின்போது மின்சார வாரியத் தலைவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மின் இணைப்பு சாதனங்களை தானாக சீர் செய்யவேண்டிய மின்வாரியம் அவ்வாறு செய்யாததோடு, அது சம்மந்தமான வழக்கு கோர்ட்டுக்கு வந்தபின்பு அதற்கு பதில் மனு தாக்கல் செய்வதில் கூட மெத்தனத்தைக் கடைபிடிக்கிறது என்றால், மின்வாரியத்தின் வேகமான செயல்பாட்டை தெரிந்து கொள்ளலாம். மின்சாரத்துரை அமைச்சர் திரு. நத்தம் விஸ்வநாதன், நத்தை வேகத்தில் செல்லாமல் போர்க்கால அடிப்படையில் மின்வாரியக் குறைபாடுகளை சீர் செய்யமுன் வரவேண்டும். செய்வாரா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக