வெள்ளி, 15 ஜூன், 2012

தேர்தல் முறைகேடு வழக்குகள்; தீர்வு என்ன?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற சொல் வழக்கு உண்டு. அதை உண்மைப் படுத்துவது போன்றே நமது நீதிமன்றங்களின் பெரும்பாலான நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. ஒரு கொலை வழக்கு கோர்ட்டுக்கு போனால், கொலையாளி செத்தபின்பு அவனுக்கு மரணதண்டனை வழங்குவதும், வாய்க்கால் தகராறுக்காக கோர்ட்டுக்குப் போனால், வயலையே விற்று செலவு செய்தபின்பு தீர்ப்பு வருவதும், இவ்வாறான வேடிக்கைகளை அவ்வப்போது நீதிமன்றம் செய்து வருவதை மக்கள் பார்த்துதான் வருகின்றனர். நீதிமன்றத்தின் இழுத்தடிப்புக்கு மற்றொரு சான்றை பார்க்கலாம்.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் இப்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லாது என்று அறிவிக்ககோரி, சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சிதம்பரம் வழக்கை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது. இதுதான் அரசியல் அரங்கில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்தியாக உள்ளது. 

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நமது நாட்டின் நீதி வழங்கும் தன்மை ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது. சிதம்பரம் வெற்றி மீதான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் அது விசாரணைக்கு உகந்ததாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது என்றால், இன்னும் விசாரணைக்கு எத்தனை ஆண்டுகள்., தீர்ப்புக்கு எத்தனை ஆண்டுகளோ..! அதற்குள் சிதம்பரமும் ஐந்தாண்டுகள் முழுமையாக ஆண்டு அனுபவித்து விடுவார் என்றே தோன்றுகிறது. இதை நாம் மிகையாக சொல்லவில்லை. 
 
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேல்துரையும், அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியனும் போட்டியிட்டனர். அதில், வேல்துரை 4 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை கடந்த 2009-ம் ஆண்டில் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மனோஜ் பாண்டியன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பன்சால், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்துரை எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தனர். 

2006 தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஒருவரது வெற்றி குறித்த வழக்கு, அவர் முழுமையாக ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து முடித்து, அடுத்த தேர்தலை சந்திக்கும் நிலையில் அவரது வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது என்றால், இப்போது சிதம்பரம் தனது பதவிக்காலத்தில் மூன்று ஆண்டுகளை முடித்த நிலையில், இப்போதுதான் அவருக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகிறது என்றால், முன்னர் சொன்ன வேல்துரை வழக்கு நிலைதான் சிதம்பரம் வழக்கிற்கும் ஏற்படும் என்பது உள்ளங்கை நெல்லைக்கனியாக தெரிகிறது. 

நீதிமன்ற விஷயம் இப்படி இருக்க,மறுபுறம் சிதம்பரம் பதவிவிலக வேண்ண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, பாஜக தலைவர் நிதின் கட்காரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கோருகிறார்கள்.மறுபுறம் காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் மட்டுமன்றி திமுக தலைவர் கருணாநிதியும் கூட சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை என்று கூறிவருகிறார்கள். சம்மந்தப்பட்ட சிதம்பரமும் ''நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று சொல்லி வருவதோடு, இந்த தீர்ப்பு எனக்கு பின்னடைவு இல்லை என்றும் கூறுகிறார்.

இவ்வாறான நிலையில் இதற்கு என்னதான் தீர்வு? ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விட்டதால், விசாரணை நடப்பதால் மட்டும் அவர் குற்றவாளி என்று கருதமுடியாது. அதை வைத்து அவரை பதவி விலக கோருவதும் சரியல்ல. அதே நேரத்தில் தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்று சிதம்பரம் பதவி விலகி தனது வெற்றியின் உண்மையை நிரூபிக்க முன்வருவரானால் அது அவருக்கு நற்பெயரை பெற்றுத்தரும். ஆனால் பதவிவிலகாமல் இருந்துகொண்டே இவ்வழக்கை சந்திப்பாரானால், அவருக்கு நியாயத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்தாலும், மக்கள் மத்தியில் 'இந்த தீர்ப்பை பெற தனது அதிகாரத்தை பயன்படுத்தி இருப்பாரோ' என்ற சந்தேகம் எழுவதும் இயல்பானதுதான். இதில் எது சிறந்தது என்பதை சிதம்பரம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அடுத்து தேர்தல் முறைகேடு வழக்குகளை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கும் நிலையை மாற்றி, ஒருவரது வெற்றி குறித்து வழக்கு தொடுப்பவர்கள் தேர்தல் முடிவு அறிவித்த ஒரு வாரத்திற்குள் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும். ஒரு வர காலத்திற்கு பின் தொடுக்கப்படும் வழக்கு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அந்த ஒரு வார காலம் வரை வெற்றி பெற்ற எவருக்கும் தேர்தல் கமிஷன் சான்றிதழ் வழங்கக் கூடாது. பதவி ஏற்க அனுமதிக்க கூடாது. ஒருவரது வெற்றிக்கு எதிராக தொடரப்படும் வழக்கு மீது போர்க்கால அடிப்படையில் நீதிமன்றங்களில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பளித்து இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பொய்யான வழக்கை தாக்கல் செய்பவருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த தேர்தல் பஞ்சாயத்து முடிவுக்கு வரும். சட்டமியற்றுபவர்கள் சற்று சிந்திப்பார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக