வியாழன், 21 ஜூன், 2012

நடிகைக்கு கோயில்; நாடு எங்கே செல்கிறது?

மது தெருவில் வசிக்கும் ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், நாளை மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். இவளை சமூகம் என்னபெயர் சொல்லி அழைக்கும் என்பதை நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால் அப்பெண்ணிற்குப் பெயர் நடிகை. அவள் செய்வது கலைசேவை. ஒரே காரியத்தை நிஜத்தில் செய்யும்போது பலிக்கும் சமுதாயம்; அந்த நிஜத்தையே காமெராவில் சுருட்டி நிழலாக காட்டினால் அதற்கு கைதட்டுகிறது.

ஆரம்பகால சினிமாக்களில் டூயட் பாடும் நாயகனும்-நாயகியும் ஆளுக்கொரு மரத்தை சுற்றிவருவார்கள். நாளடைவில் தொட்டுவிட தொட்டுவிடதொடரும் என்று ஆரம்பித்து நாயகனும்-நாயகியும் தொட்டு, பிறகு பட்டு, பிறகு கட்டிப்பிடித்து, பிறகு கட்டி உருள ஆரம்பித்து விட்டார்கள். இன்றைய இந்திய சினிமாவில் 99 சதவிகித ஆபாச காட்சிகள் அரங்கேறுவதை பார்க்கிறோம். படுக்கையைக் காட்சியில் பகிரங்கமாக தோன்றும் நடிகையை துணிச்சலாக நடித்துள்ளார் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன. முத்தக் காட்சிகள் அதுவும் பிரெஞ்சு முத்தங்கள் இங்கே சாதாரணம். அதற்கென ஸ்பெசலிஸ்ட் ஆக ஒரு நடிகர் இருக்கிறார். அவரோடு நடிக்கும் நடிகைக்கு எப்படியும் 'பச்சக்' இல்லாமல் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நடிகரிடம் உதட்டில் வாங்கிய நடிகையிடம் ''உங்களுக்கு அந்த நேரத்தில் எப்படியிருந்தது?என்ற மில்லியன் டாலர் கேள்வியை மறக்காமல் பத்திரிக்கைகள் கேட்பதுதான். ஒரு கணவனும் மனைவியும் ரகசியமாக செய்யும் காரியத்தை, ஒரு அன்னிய ஆணும் ஒரு அந்நியப் பெண்ணும் டேமொவாக திரையில் காட்டுவதுதான் கலையா? கலைக்கும் விரசத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு தமிழனின் ரசனை மாறிவிட்டது.

ஆக, ஒரு காலத்தில் அசிங்கமாக கருதப்பட்டவைகள் இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவைகளாக மாறிவிட்டது. இதை நாம் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் திரையில் ஆபாசத்தை விதைத்து இளசு முதல் பெரிசு வரை அனைவரையும் வழிகெடுக்கும் இந்த திரை கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்-கேடயங்கள்- விருதுகள். இது போக 'நடிக்கும்' இவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது. 

இந்த அரிதார நாயகர்கள் திரையில் செய்யும் சாகசங்களை உண்மை என நம்பி தன்னை ஆளும் ஆட்சியாளராக தேர்ந்தெடுத்தான். தமிழகத்தின் அறுபதாண்டு கால அரசியல் கனவுலகை சுற்றியே வலம் வருகிறது. தனது தாய்க்கு நோய் என்றால் கவலைப்படாதவன் தனது தலைவனுக்கு நோய் என்றால் துடிக்கின்றான். அதோடு இன்னும் ஒருபடி மேலே போய் அவர்களை கடவுளாக சித்தரித்து கோயில் காட்டி ஆறுகால பூஜைக்கும் ஆவன செய்தான்.

தமிழகத்தில் நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆர் எனும் நடிகருக்கு கோயில் உண்டு. பூஜைகள் உண்டு. குஷ்பூ எனும் நடிகைக்கு கோயில் உண்டு. இப்போது ஹன்சிகா எனும் நடிகைக்கு கோயில் கட்டப் போகிறார்களாம்.

''மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள். இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கட்டுமானத்துக்கான செங்கல், ஜல்லி வாங்குவதற்காக அப்பகுதியில் ரசிகர்கள் நன்கொடை வசூலித்து வருகிறார்கள். செப்டம்பரில் கோவில் கட்டிட வேலைகள் துவங்கும் என்றும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் ஹன்சிகா கோவில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்கின்றனர். பூஜை செய்ய பூசாரியும் நியமிக்கப்பட உள்ளார்.

இது குறித்து சம்மந்தப்பட்ட நடிகையிடம் கேட்டபோது, "சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை அணுகி கோவில் கட்ட அனுமதி கேட்டனர். எனக்கு கோவில் கட்டப்போவதாக அவர்கள் சொன்னதும் என் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொண்டேன். ஆனால் மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவது தவறானது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ரசிகர்கள் கோவில் கட்டக்கூடாது. அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன்," என்று சொன்னதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

நடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டுபவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆற்றல் இந்த நடிகர் நடிகைகளுக்கு உண்டு என்று நம்புகிறார்களா? ஆம் என்றால் சம்மந்தப்பட்ட நடிகைகள் உயிரோடுதானே இருக்கிறார்கள்? நேரடியாகப் போய் வரம் கேட்கவேண்டியதுதானே? கோயில் எதற்கு? பூஜை எதற்கு? படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் வேறுபாடு தெரியாத அளவுக்கு இவர்களுக்கு பகுத்தறிவு மழுங்கிவிட்டதா என்பதை நினைக்கும்போது மறைந்த அண்ணா சொன்ன வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. ஏ தாழ்ந்த தமிழகமே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக