வியாழன், 21 ஜூன், 2012

புதுக்கோட்டையின் வெற்றி டெல்லி செங்கோட்டையின் முன்னோட்டமா?

''நேற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை; இன்று புதுக்கோட்டை; நாளை டெல்லி செங்கோட்டை'' இது அதிமுகவினரின் இப்போதைய ஸ்லோகமாக உள்ளது. நடந்துமுடிந்த புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக அசுர பலத்துடன் வெற்றி பெற்றதையடுத்து அதிமுகவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் நடைபெற்ற மூன்றாவது இடைத்தேர்தல் இதுவாகும். மூன்றிலும் அதிமுகவே வெற்றிவாகை சூடியுள்ளது. இதில் புதுக்கோட்டை வெற்றி பற்றி அலசுவோம். 

இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளரின் மரணத்தையொட்டி இந்த இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி விலகியதையடுத்து, புதுக்கோட்டையில் அதிமுகவே போட்டியிட்டது. ஆனால் உண்மையில் முதல்வர் ஜெயலலிதா அரசியல் தர்மம் பேணுபவராக இருந்தால் இந்த் தொகுதியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கே ஒதுக்கியிருக்க வேண்டும். ஏனென்றால் இவரது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கிறார். பின்பு காங்கிர்ஸ்-அதிமுக கூட்டணி உடைந்த நிலையில், காங்கிரஸ் வென்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகிறது. அதில் கூட்டணியில் இல்லாவிட்டாலும் அந்த தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்த எம்.ஜி.ஆர்., அதோடு நின்றுவிடாமல் காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரமும்  செய்தார் என்பது கடந்த கால அரசியல் வரலாறு. ஆனால் அவரது கட்சிக்கு தலைமை தாங்கும் ஜெயலலிதாவோ கூட்டணி தர்மம் கிலோ என்னவிலை என்று கேட்கும் வகையில் புதுக்கோட்டையில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தினார். இந்திய கம்யூனிஸ்டாவது கூட்டணியில் இல்லாத நிலை. ஆனால் மதிமுக கூட்டணியில் இருந்த நிலையிலும் மதிமுக வெற்றிபெற்ற திருமங்கலம் தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்காக வைகோவை பிரச்சாரம் செய்யவைத்த அரசியல் பாரம்பரியம் ஜெயலலிதாவுடையது. இந்த விசயத்தில் இவரது அரசியல் எதிரி கருணாநிதி தேவலாம். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதியான சாத்தான்குளம்- ஸ்ரீ வைகுண்டம் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் அக்கட்சிக்கே போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது திமுக., இப்போது புதுக்கோட்டைக்குள் நுழைவோம்.

புதுக்கோட்டையின் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான் 71 ஆயிரத்து 498 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி என்பது யானை ஒரு சிற்றெறும்போடு மோதி வென்றது போலாகும். ஆம். இந்த தேர்தலில் பிரதான கட்சியான திமுக-மதிமுக-போன்றவைகள் போட்டியிலிருந்து  விலகிய நிலையில் தேமுதிக மட்டுமே எதிர்த்து நின்றது. எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதாவின் முந்தைய ஆண்டுகளிலும் சரி திமுக., காங்கிரஸ், மதிமுக போன்ற பிரதான கட்சிகளுடன் மோதிய காலம் போய், நேற்று மழையில் முளைத்த கட்சியுடன் மோதி பெற்ற வெற்றி என்பது அதிமுக மார்தட்டும் அளவுக்கு சிறந்த வெற்றியா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதே நேரத்தில் அதிமுகவின் வாக்குவங்கி உயர்ந்துள்ளதாக ஜெயலிதா கூறியுள்ளார். இந்த உயர்வு அதிமுக ஆட்சியின் சாதனையாலா? அல்லது திமுக தலைவர் கருணாநிதி பாணியில் சொல்வதானால் தேர்தல் நேர்மையாக நடந்ததாலா? என்பது அவருக்கே வெளிச்சம்.

மற்றொரு பக்கம் அதிமுகவுடன் மோதிய தேமுதிக முதன்முறையாக இடைத் தேர்தல் ஒன்றில் டெபாசிட்டை தக்க வைத்து புதிய வரலாறு படைத்துள்ளது. தேமுதிக இரண்டாவது இடத்தைப் பெற்றது. கூடவே டெபாசிட்டையும் தக்க வைத்துக் கொண்டது. இதையொட்டி தேமுதிகவுக்கு ஏறுமுகம் என்று எக்கச்சக்கமாக அறிக்கை வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். உண்மையில் திமுக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதாலும், பிற கட்சிகள் போட்டியிட விருப்பம் இல்லாததாலும்தான் தேமுதிகவுக்கு இந்த உயர்வு கிடைத்துள்ளது. திமுக உள்ளிட்ட தேர்தலில் போட்டியிடாத கட்சியினரும் வாக்களித்துள்ளனர். அவர்கள் நிச்சயமாக அதிமுகவுக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு. அப்படியானால் அவர்களின் வாக்கு எங்கே சென்றது? அங்குதான் சூட்சுமம்உள்ளது. தேமுதிகவின் டெபாசிட் மீட்பு சாதனையும் அடங்கியுள்ளதாக அரசியல் வர்ணனையாளர்கள் கூறுகின்றனர். 

தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுகவுக்கு எதிராக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து மண்ணைக் கவ்வ வையுங்கள் என்று ஜெயலலிதா பேசினார். அதையும் தாண்டி தேமுதிக டெபாசிட் பெற்றுள்ளது என்றால் அது விஜயகாந்தின் சட்டசபையில் மக்கள் பிரச்சினைகளை பேசிய சாதனையால் அல்ல. அவரது கட்சி வளர்சியினால் அல்ல. மாறாக அவருக்கு கிடைத்த மறைமுக அரசியல் ஆதரவால் தான் என்பது தெளிவு. எனவே இதை பெரிய பெருமையாக எடுத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் தேமுதிக உள்ளது. இவர்கள் சங்கரன் கோயிலில் டெபாசிட் பெற்றிருந்தாலோ, இரண்டாம் இடத்திற்கு வந்திருந்தாலோ கூட இவ்வாறு பெருமையடிப்பதில் அர்த்தமிருக்கும்.

ஆக, நாம் ஏற்கனவே பல செய்திகளில் சொன்னது போன்று, இடைத்தேர்தல்கள் என்பது மக்களின் நாடித்துடிப்பை காட்டக்கூடியதல்ல. அது ஆளுங்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டக்கூடியதே என்பதைத்தான் இந்த கோட்டை வெற்றியும் சொல்கிறது என்பதுதான் உண்மை. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக