வியாழன், 28 ஜூன், 2012

பசுநேசம் பேசும் ராமகோபாலனே! பதில் சொல்வீரா?

சிலருக்கு சில விசயங்களைத் தாண்டி சிந்திக்கத் தெரியாது போலும். இந்துத்துவாக்களின் சிந்தனை என்பது ஒன்று மதவாதம்; மற்றொன்று மாமிசவாதம் என்ற வட்டத்திற்குள் தான் நிற்கிறது. மதவாதம் தெரியும்; அது என்ன மாமிசவாதம் என்கிறீர்களா? கோயில்களில் ஆடு மாடு கோழி என்று அத்தனை ஜீவராசிகளும் வெட்டி வீழ்த்தப்படுவதை கண்டுகொள்ளாமல் உணவுக்காக மாடுகளை அறுக்கப்படுவதை தடுக்கவேண்டும் என்று கூக்குரல் எழுப்புவதுதான் மாமிசவாதம். இந்த மாமிசவாததை மாதம் ஒருமுறை மறக்காமல் கிளப்பிவிடுவார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி[!] ராமகோபால அய்யர்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிராமங்களிலோ, நகரங்களிலோ எருமை மாடுகளை பார்ப்பது அரிதாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள பசுக்களும், காளைகளும், எருமைகளும் கொல்லப்பட்டு மாமிசமாகவும் , தோலாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடும். இதன் ஆபத்தை உணர்ந்த கர்நாடக அரசு மாடுகளைக் கொல்வதை தடை செய்ததுடன் லாரிகளில் மாடுகளை ஏற்றிச் செல்லவும் தடை விதித்துள்ளது.

ஆந்திராவில் விவசாயிகளின் பரிதாப நிலையால் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் பாவத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை தமிழகத்துக்கு வரும் முன் தடுக்க முதல்வர் மாடுகளைக் கொல்வதை தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வெளி மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்தோ , தமிழகம் வழியாகவோ மாடுகள் கொண்டு செல்வதையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராமகோபாலன் அறிக்கையின்படி பார்த்தால் ஆந்திராவில் விவசாயிகள் தங்களின் வறுமை காரணமாக மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்பதாக கூறும் ராமகோபாலன், அத்தகைய விவசாயிகளை அணுகி நீங்கள் மாட்டுக்குன்டான தொகையை எங்களிடம் வாங்கிக்கொள்ளுங்கள்; மாட்டை நீங்களே பராமரியுங்கள் என்று சொல்லவேண்டியதுதானே! அல்லது அந்த மாடுகளை கசாப்புக் கடைக்கு விற்கவிடாமல் மொத்தமாக கொள்முதல் செய்து ராமகோபாலன் பராமரிக்க வேண்டியதுதானே! யார் தடுத்தார்கள்? அதையும் செய்யமாட்டாராம். அவர்களையும் விற்க விடமாட்டாராம். என்ன கொடுமை சார் இது! வெளி மாநிலங்களுக்கு தமிழகம் வழியாக மாடுகளை கொண்டுபோக தடை விதிக்கனுமாம் சொல்கிறார் ராமகோபாலன். தடை விதிப்பதற்கு மாடுகள் என்ன கஞ்சாவா?அபினா? அல்லது தடை செய்யப்பட்ட போதைப் பொருளா என்ன?

மேலும், அரசு விழாக்களில் அசைவ உணவு பரிமாறப்படுவது குறித்து ஆட்சேபித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பில், ''ஒருவரது உணவு விசயத்தில் இதைத்தான் சாப்பிட வேண்டும்; இதை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு மற்றவருக்கு உரிமை இல்லை. இது சம்மந்தமாக எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், சாப்பாடு பழக்க வழக்கங்களில் கோர்ட்டு தலையிட முடியாது என்று அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த தீர்ப்பு என்ன சொல்கிறது என்று ராமகோபாலனுக்கு புரிகிறதா? ஒருவரது உணவு விசயத்தில் தலையிடும் உரிமை மற்ற மனிதனுக்கு மட்டுமல்ல; கோர்ட்டுக்கே இல்லை என்று சொல்லியிருக்கும்போது, மாடு இறைச்சிக்காக விற்கப் படுவதையும், அறுக்கப்பைடுவதையும், உண்பதையும் விமர்சிக்கும் உரிமை ராமகோபாலனுக்கு மட்டும் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளதா?

சரி. இவ்வளவு பசு நேசம் பேசும் ராமகோபாலன் அவர்கள், வேதமாக ஏற்றுக்கொண்டிருக்க கூடிய 'யஜூர்' எனும் வேதத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் கீழ்கண்ட யாகங்களை ஆதரிக்கிறாரா என்று சொல்லட்டும். இந்த யாகங்களை ஆதரிக்கவில்லை என்றால் 'யஜூர்' வேதத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று அறிவிக்கட்டும்.

சமஸ்கிருதத்தில் யாகத்துக்குப் பெயர்; [அடைப்புக்குறிப்புக்குள் தமிழில் விளக்கம்]

1. கோஸவம். [பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்]

2. வாயவீய ஸ்வேதபக. [வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்]

3. லத்ஸோப கரணம். [கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்]

4. அஷ்டதச பசு விதானம். [பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்]

5. ஏகாதசீன பசுவிதானம் [பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்]

6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா [நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்]

7. உபாகரண மந்த்ரம் [யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்]

8. கவ்ய பசுவிதானம் [பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்]

9. ஆதித்ய தேவ தாகபசு [சூரிய தேவதைக்கு பசு யாகம்]

ஆதாரம்;- மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி

உயிரற்ற கல்லாய் இருக்கும் கடவுளுக்கு[!] பசுவை வெட்டலாம்; உயிரோடு இருக்கும் மனிதன் உண்பதற்காக மட்டும் வெட்டக்கூடாது என்று ராமகோபாலன் சொல்வது அபத்தம்தானே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக