வியாழன், 28 ஜூன், 2012

ஜனாதிபதி தேர்தல்; ஒரு பார்வை.



முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பொதுத்தேர்தலின் தோரணையில் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அவரா..இவரா.. என பல்வேறு அனுமானங்கள் அணிவகுத்த நிலையில், காங்கிரஸ் கட்சி சிட்டிங் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

பிரதான எதிர்கட்சியான பாஜக நிலைதான் பரிதாபத்திற்குரியதாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அப்துல்கலாமை முன்னிறுத்தி பேசியவர்கள், பின்பு பிரணாப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் கொஞ்சம் அடக்கி வாசித்து, தனது வேட்பாளரையும் நிறுத்த வழியின்றி, சத்தமின்றி சங்மாவுக்கு ஆதரவு என அறிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தால் துணைஜனாதிபதி பதவியை பேரம் பேசலாம் என்ற வாய்ப்பையும் இழந்து நிற்கிறது பாஜக.

காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளில் மிகப்பெரிய கட்சியான திரினாமூல் காங்கிரஸ் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப்பை ஆதரிக்க மறுத்து, தென் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை வேட்பாளராக முன்மொழிந்தது. ஆரம்பத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடியும் மம்தாவின் கருத்தை எதிரொலித்தது. பின்னர் என்ன அரசியல் திரைமறைவு காரியங்கள் நடந்ததோ சட்டென பின்வாங்கி பிரணாப்பை ஆதரிப்பதாக கூறிவிட்டது. வெறுத்துப் போன மம்தா, பேஸ்புக்கில் கலாமுக்கு ஆதரவான கருத்தினைப் பதிய, பல்லாயிரக்கணக்கான மக்கள் கலாம் தான் எங்கள் ஜனாதிபதி என்று கருத்துக்களை பதிவு செய்தார்கள். ஆரம்பத்தில் கலாம் போட்டியிடும் ஒரு தோற்றம் தென்பட்டாலும் பின்னாளில் ஏற்பட்ட அரசியல் சுழற்சிகளை பார்த்து அழகாக ஒதுங்கிக் கொண்டார். கலாமை ஆதரித்த மம்தாவின் நிலை இந்த நொடிவரை தெளிவாகத் தெரியவில்லை.

இன்னொரு பக்கம் தமிழே எங்கள் உயிர் மூச்சு என்றும் தமிழனை வாழவைப்பதே கழகத்தின் லட்சியம் என முழங்கும் மு.கருணாநிதியோ, முந்திக்கொண்டு பிரணாப்பை முன்மொழிந்து ஆதரவு தெரிவிக்கிறார். அதோடு நிற்காமல் கலாம் என்றால் கலகம் என்றும் கூறி வார்த்தைக் கலகம் உண்டாக்கினார். கலைஞரின் தமிழ் உணர்வை அளவிடும் அளவுகோலாகவும் இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது. அடுத்து, ஆளுக்கு முந்தி சங்மாவை வேட்பாளராக ஆதரித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, வெறும் ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல் சங்மாவுக்கு ஆதரவு தேடும் வேலையையும் செய்தார். இடையில் சென்னை வந்த பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி ஜெயலலிதாவை சந்தித்த பின்பு, ஜெயலலிதாவின் சங்மா ஆதரவில் மாற்றம் வரும் என்று ஊடகங்கள் கணித்தன. அதற்கேற்றார்போல் ஜெயலலிதாவும் சில நாட்கள் சங்மா ஆதரவு பற்றி எதுவும் கருத்து கூறாமல் இருந்தார். இப்போது பாஜக வெளிப்படையாக சங்மாவை ஆதரித்த  பின்புதான் எனது சங்மா ஆதரவில் மாற்றம் இல்லை என்று கூறி வருகிறார். 

இதுபோக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பால்தாக்கரேயின் சிவசேனா போன்ற கட்சிகள் எதிர்பாராவிதமாக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க, இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், தமிழகத்தில் தேமுதிகவும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளன. இவர்களையெல்லாம் விட ஒன்றுமில்லாத நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானோ, பிரணாப்பை தமிழக கட்சிகள் ஆதரிக்க வேண்டுமென்றால், ராஜீவ்காந்தி கொலையாளிகளை அவர் மன்னித்து விடுதலை செய்ய ஒப்புகொண்டால் ஆதரிக்கலாம் என்று தனது வழக்கமான 'புலி'ப்பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

இவைகள் எல்லாம் ஒரு புறமிருக்க, காங்கிரஸ் வேட்பாளரோடு மோதும் சங்மா ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். சோனியா வெளிநாட்டுப் பெண் என்ற விமர்சனத்தை முன் வைத்து சரத்பவாரோடு சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டவர். பின்பு அதே காங்கிரசோடு சந்தர்ப்பவாத கூட்டணி கண்டு தனது மகளை காங்கிரஸ் அமைச்சரவையில் மந்திரியாக்கியவர். இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இவரது கட்சியே எதிர்ப்பு தெரிவித்ததோடு, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதால் கட்சியை தலைமுழுகியவர். இத்தனை சிறப்புகள்[!] சங்மாவுக்கு இருந்தாலும், எளிதாக தேன் எடுக்கலாம் என நினைத்த காங்கிரசுக்கு கடுமையான போட்டியாக களத்தில் நிற்கிறார். ஜெயிக்கிறோமோ இல்லையோ பிரனாப்புக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குவதில் குறியாக இருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக போது விவாதம் ஒன்றில் மோதிக்கொள்வார்கள். அதுபோன்று, ""ஜனநாயகத்தில் விவாதங்கள் அவசியம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக என்னுடன் விவாதிக்க தயாரா?,'' என, பிரணாப் முகர்ஜிக்கு சங்மா சவால் விடுத்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி சிட்டிங் நிதியமைச்சர் என்பதால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவுகளுக்கு அவர்தான் காரணம் என்று சங்மா கருதுகிறார் போலும். அதனால் தான் ''தற்போது நாட்டின் பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஊழல்கள் பெருகியுள்ளன. இந்த ஊழல்களுக்கு எல்லாம் பொறுப்பு யார்? இதுபற்றி வேட்பாளர் அளவில் விவாதம் நடத்த வேண்டியது அவசியம். அதனால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, பிரணாப் முகர்ஜியுடன் விவாதம் நடத்த நான் தயார். அவர் தயாரா? என்று கூறியுள்ளார்.

சங்மாவின் அழைப்பை ஏற்று விவாதக்களம் கண்டு, தனது நிதியமைச்சர் பதவிக் காலத்தில் இந்திய நாட்டின் பொருளாதார முன்னேற்றம் கண்டதை நிரூபிக்கவேண்டிய பிரணாப் முகர்ஜி தரப்போ, ''ஜனாதிபதிக்கும் நிதிக்கும் சம்மந்தமில்லை; எனவே இதைப் பற்றி விவாதிக்கவேண்டிய அவசியமில்லை' என்று பின்வாங்கிவிட்டது. ஜனாதிபதிக்கும் நிதித்துறைக்கும் சம்மந்தமில்லை என்ற காங்கிரசின் கருத்து சரிதான் என்றாலும், சங்மா அழைப்பது நடப்பு பொருளாதார நிலை குறித்து விவாதிக்கவே என்பதை காங்கிரஸ் வசதியாக மறைத்து விட்டது. ஆக இப்போதைய நிலவரப்படி ஜெயிக்கும் வாய்ப்பு பிரணாப் முகர்ஜிக்கே என்றாலும், கடைசிவரை முயற்சிப்பது என்ற மும்முரத்தில் சங்மா இருக்கிறார்.

ஆனால் மக்கள் கருத்தோ வேறுமாதிரி உள்ளது. ஜனாதிபதியை மக்களே தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று சிலரும், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி உறுப்பினர்களை இன்னாருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று நிர்பந்திக்காமல் நாட்டின் முதல் குடிமகனை தேர்ந்தெடுக்கும் விசயத்தில் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கி, அவர்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க அனுமதிக்கவேண்டும் என்று பலரும் கருத்துக் கூறுகிறார்கள். 
ஆனாலும் கூட யார் ஜனாதிபதி ஆனாலும் அவர்கள் செய்யப்போவது அரசு முறைப்பயணமாக அயல்நாட்டை சுற்றிப்பார்ப்பது; கொடூர குற்றங்களை செய்த பாவிகளுக்கு கருணை[!] காட்டுவது; மத்திய அரசு நீட்டும் பேப்பரில் கையெழுத்துப் போடுவது., இதற்குப் போய் இத்தனை மோதல்கள் முட்டல்கள் தேவையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக