ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

எங்களுக்குத் தெரியாமல் கண்காணிப்புக் குழு தலைவரை நியமிப்பதா? மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் சாட்டையடி!


புதுடில்லி, பிப்.25- குஜராத்தில் நடந்த 22 மோதல்கள் (என்கவுன் டர்கள்) தொடர்பான விசாரணையை கண்காணிப்பதற்காக அமைக் கப்பட்ட குழுவுக்கு, எங்களை ஆலோசிக்காமல், புதிய தலைவரை நியமித்தது ஏன்?' என, அம் மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத்தில் 2002 - 2006 வரையிலான காலத்தில், காவல்துறை யினரால் 22 மோதல்கள் நடத்தப்பட்டன. இவை போலி மோதல்கள் என புகார் தெரிவிக்கப்பட் டது. இதைத் தொடர்ந்து, இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான கண்காணிப்புக்குழு அமைக் கப்பட்டது.

இந்நிலையில், தன் உடல் நிலையைக் காரணம் காட்டி, கண்காணிப்புக் குழுவில் தொடர முடியாது என, நீதிபதி ஷா, சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, மும்பை உயர்நீதிமன்றம் முன் னாள் நீதிபதி கே.ஆர். வியாஸ் என்பவரை, கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமித்து, குஜராத் அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப் பித்தது.

இதற்கிடையே, குஜ ராத்தில் நடந்த மோதல் கள் (என்கவுன்டர்கள்) குறித்து, சி.பி.அய்., அல்லது தனி அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என, மூத்த செய்தியாளர் பி.ஜி.வர்கீஸ், இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தார் ஆகியோர், உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள், நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் அப் தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகி யோரைக் கொண்ட பெஞ்ச், இந்த மனுக் களை விசாரித்தது.

அப்போது நீதிபதி கள் கூறியதாவது: குஜராத் மோதல்கள் தொடர்பான வழக்கு,  விசாரணைக்கு வரும் என உங்களுக்கு (குஜ ராத் அரசு தரப்பு வழக்கறிஞர்) தெரியும். அப்படியிருந்தும், கண்காணிப்புக் குழுவுக்கு, புதிய தலைவரை நியமிப்பது குறித்து, எங்களுக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? எங்களை ஆலோசிக்காமல் புதிய தலைவரை எப்படி நியமித்தீர்கள்? இந்த விவகாரத்தை தேவையில்லாமல் சிக்கலாக்கியுள்ளீர்கள். புதிய தலைவரை நியமிப் பதற்கு முன், உச்சநீதி மன்றத்தை  அணுகியிருக்க வேண்டும். இதனை எங்களின் கவனத்துக்குக் கொண்டு வராதது ஏன் என்றனர்.

குஜராத் மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கூறுகையில், கண்காணிப்புக் குழு வின் இடைக்கால அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, உச்சநீதிமன்றம், கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, புதிய தலைவரை நியமிக்கும் உத்தரவு, அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டது' என்றார். குஜராத் அரசின் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், வரும் 27ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். 

நன்றி;விடுதலை.

சனி, 25 பிப்ரவரி, 2012

சுவனத்தில் ஆதம்[அலை]-ஹவ்வா[அலை] ஆடை அவிழ்ந்ததா? பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான். அல்-குர்'ஆன் 7 ;22

மேற்கண்ட இந்த வசனத்திற்கு, ''ஆதம்-ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் அந்த மரத்தினை சுவைத்தவுடன் அவர்களின் ஆடை நீங்கி, அவர்களின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவர்கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டனர்.''என்ற விளக்கத்தை அறிஞர்கள் முன்வைத்துள்ளார்கள். அறிஞர்களின் இந்த வாதம் தவறு என்று கூறும் அறிஞர் பீஜே அவர்கள், 
''இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்க வில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர் களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது தான் சரியாகும். இதைச் சாப்பிட்டவுடன் சொர்க்கத்தின் இலைகளால் இருவரும் தம்மை மறைத்துக் கொண்டார்கள் என்று அடுத்தடுத்த வசனங் களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இம் மரம் பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் என்பது தெரியவரும்.'' என்று தனது திருக்குர்'ஆன் தமிழாக்கம் முதல் பதிப்பில் சொன்னார். பின்னாளில் எழுந்த விமர்சனங்களை கண்டு, இப்போது இறுதியாக ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.'' என்று கூறுகிறார்.

இந்த வசனத்தை பொருத்தவரை இது பீஜே அவர்களின் மூன்றாவது பரிமாணமாகும்.


பரிமாணம்;1 இந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று திருக்குர்ஆன் 2:35, 7:19,20,22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் திருகுர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென் பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம்(அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். திருகுர்ஆனிலும், நபிமொழியிலும் கூறப்படாததைக் கூறுவோர் இறைவன் பெயரில் இட்டுக் கட்டிய குற்றத்தைச் சுமப்பவர்களாவர்.

பரிமாணம்;2 இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்கவில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர்களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது சரியாகும்.

பரிமாணம்;3  ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.''

முதல் பரிமாணத்தில் அது எந்த மரமாக இருந்தால் நமக்கென்ன என்கிறார். இரண்டாவது பரிமாணத்தில் அது பாலுணர்வை தூண்டிய மரம் என்கிறார். மூன்றாவது பரிமாணத்தில் அது அவர்களின் வெட்கத்தலங்களின் தனித்தன்மையை உணர்த்திய மரம் என்கிறார். இப்போதைய தனது பரிமாணங்களுக்கு பீஜே ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். அது இதுதான்; 

"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.(20:118)

பார்த்தீர்களா! இந்த வசனத்தில் அல்லாஹ் சுவனத்தில் நிர்வாணமாக இருக்கமாட்டீர் என்று சொல்கிறான். பிறகு எப்படி ஆதம்-ஹவ்வா நிர்வானமகியிருப்பார்கள் என்று கூறுகிறார். அறிஞர் பீஜேயின் வேலையே முன்னால் உள்ள வசனங்களையும், பின்னால் உள்ள வசனங்களையும் விட்டுவிட்டு தனக்கு தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டுவதுதான். மேற்கண்ட வசனத்திற்கான விளக்கம் பெற எங்கும் போக வேண்டியதில்லை. பீஜே விட்டுவிட்ட  இதையொட்டிய வசனங்களை சேர்த்து பார்த்தாலே விளங்கிக் கொள்ள முடியும். 

அப்பொழுது "ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.  (20:117
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.  (20:118)
"இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிளில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).  (20:119)
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான்.  (20:120)
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.  (20:121)
பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.  (20:122)

பீஜே சொல்வது போல் வெறுமனே இறைவன் நிர்வாணமாக இருக்க மாட்டீர் என்று மட்டும் சொல்லவில்லை. ஆதம் தம்பதிகளே! இந்த சுவனத்தில் நீங்கள் பசியுடனோ, தாகத்துடனோ, வெளியில் கஷ்டப்பட்டுக் கொண்டோ இருக்கவேண்டியதில்லை என்றும் சொல்லும் இறைவன் நிர்வாணமாகவும் இருக்கமாட்டீர்கள் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? ஆதம் தம்பதிகளுக்கு சுவனத்தில் செய்து கொடுத்துள்ள வசதி வாய்ப்புகளை கூறுகின்றான். அந்த வசதி வாய்ப்புகளை அனுபவித்த நிலையில், ஆதம் ஹவ்வா தம்பதிகள் மாறு செய்ததால் அங்கே நிர்வாணமாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் அறிஞர் பீஜே குழம்புவதும்-குழப்புவதும் ஏன்? பீஜேயின் கூற்றுப்படி ஆதம் அலை, ஹவ்வா அலை ஆகியோருக்கு சுவனத்தில் நிர்வாணமே இருக்ககூடாது என்றால் அவர்கள் தாம்பத்தியத்திலும் கூட நிர்வாணம் இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுமே! அதற்கு என்ன பதில் சொல்வார்? அவ்விருவருக்கும் தாம்பத்தியம் தடை செய்யப்பட்டது என்று கூறுவரா?

இதுபோக, ஆதம்-ஹவ்வா ஆடை அவிழ்ந்தது என்ற அறிஞர்களின் கருத்து தவறு என்று இன்று சொல்கிறாரே! அதே பீஜே அவர்கள், அல்ஜன்னத் டிசம்பர் 94 இதழில், 'நிர்வாணமாக குளிக்கலாமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது,

''ஆதம் ஹவ்வா இருவரும் தடையை மீறி விலக்கப்பட்டதை உண்டவுடன் அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. நிர்வாணிகளாயினர்.உடனே சொர்க்கத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலானார்கள் என்ற விபரம் 7 ;22 20;121 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது. மனிதர்கள் குறிப்பாக நபிமார்கள் தம் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளும் இயல்பினராகவே உள்ளனர் என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். கணவன் மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்த நிலையில், வேறு எவரும் இல்லாத நிலையில் இறைவன் முன்னிலையில் வெட்கப்பட்டுக்கொண்டே ஆதமும் ஹவ்வாவும் தங்களை மறைந்துக் கொண்டனர்.'' என்று பதிலளித்துள்ளார்.

அதாவது இந்த பதிலில் ஏற்கனவே உறுப்பும் இருந்து, உணர்ச்சியும் இருந்து, உறுப்பின் தனித்தன்மைகளையும் உணர்ந்துள்ள மனிதன் ஒருவர் தான் கேட்கின்றார். நான் ஆடையின்றி குளிக்கலாமா என்று? உடனே அறிஞர் பீஜே, ஆதம்-ஹவ்வா அலை தம்பதியைப் பார்த்தீர்களா? அவர்கள் யாருமே இல்லாமல் தனித்திருந்த போதும், நிர்வாணமானவுடன் தங்களை மறைத்துக் கொண்டார்கள். இதுதான் மனித இயல்பு என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கோ அல்ஜன்னத்தில் கூறியதற்கு மாற்றமாக, மனமுரண்டாக அடுத்தடுத்த மூன்று பரிமாணங்களைக் கண்டிருக்கிறார். இன்னும் எத்தனையோ?

வியாழன், 23 பிப்ரவரி, 2012

வாரம் தவறாமல் வாங்கிக் கட்டிக் கொள்ளும் மோடி அரசு!

குஜராத்தை ஆளும் மோடி திறமையான முதல்வர்; அவரது ஆட்சியில் குஜராத் ஒளிர்கிறது. மோடி பிரதமரானால் இந்தியாவே ஒளிரும் என்று ஒருபுறம் வஞ்சப்புகழ்ச்சி அணிகள் கோரஸ் பாடிக்கொண்டிருக்க, மறுபுறமோ வாரம் தவறாமல் நீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டு வகை தொகை தெரியாமல் முழித்து வருகிறார் வர்ணாசிரம மோடி.

கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் கலவரத்தின்போது 500-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்காதது அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது என்று கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அளித்தத் தீர்ப்பில் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்காக மோடி வாங்கிய 'குட்டு' காயம் ஆறுவதற்குள் அடுத்த சாட்டையை சுழற்றியுள்ளது உயர்நீதிமன்றம்.

2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆமதாபாதில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. கலவரத்தால் பாதி
க்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். அவர்களது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அவர்களது மனுக்கள் 2011 ஆகஸ்டிலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டதாக இந்த மாதத் தொடக்கத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியரும், மாநில அரசும் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுவை உயர் நீதிமன்றத்தில் கடை உரிமையாளர்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அகில் குரேஷி, சி.எல்.சோனி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு மார்ச் 14-க்குள் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த சாட்டியாடியை எவ்வாறு எதிர்கொள்வது என முதுகை தடவிக்கொண்டே மோடி யோசித்துக் கொண்டிருக்கையில், உச்சநீதிமன்றம் 'நச்' சென்று ஒரு கண்டனத்தை மோடிக்கு பதிவு செய்துள்ளது. 2002கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்ட வழக்கில் பிரபல சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டுக்கு எதிராக விசாரணை நடத்தியதற்காக குஜராத் அரசைக் கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், ''இந்த வழக்கில் டீஸ்தாவை அரசு குற்றவாளியாக்கப் பார்க்கிறது. இது 100 சதவிகிதம் போலியான வழக்கு என கூறியுள்ள நீதிபதிகள், இத்தகைய வழக்குகளால் குஜராத் அரசுக்கு எவ்வித பெருமையும் கிடைத்து விட்டது என வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். குஜராத் இனச்சுத்திகரிப்பு படுகொலையில் மோடியின் கரம் 'கறை' படிந்துள்ளதையும், முஸ்லிம்களுக்கு எதிரான அக்கலவரத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர போராடுபவர்களை பொய் வழக்கு போட்டு மோடி சிறையில் தள்ளுவதையும் நீதிமன்றம் கண்கூடாக கண்டும் கூட அவரை தண்டிக்காமல் வெறும் கண்டனத்தை பதிவு செய்வது பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரைத் துடைத்துவிடாது என்பதை நீதிமன்றங்கள் உணரவேண்டும். 

அதோடு, தான் ஆளும் மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை தொடர்ந்து வாங்கிக்கட்டிக் கொள்ளும் ஒரே அரசியல்வாதி மோடி மட்டும் தான் என நம்புகிறோம். ஆனாலும் மோடி தான் திறமையான முதல்வர் என்று சொல்லித் திரிபவர்கள், நீதிமன்ற தொடர் கண்டனத்திற்கு பின்பாவது திருந்தட்டும்.
 

ஆர்எஸ்எஸ்., மதவாத இயக்கம் மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கம்; சீதாராம் யெச்சூரி விளாசல்.

ஆர்எஸ்எஸ் இயக்கமானது மதவாத இயக்கம் மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டிருப்பதிலிருந்து இது புலனாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

2007-ம் ஆண்டு சம்ஜவ்தா குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்குள்ள தொடர்பு இப்போது மேலும் வலுவடைந்துள்ளது. தங்களது அமைப்புக்கு இதில் தொடர்பில்லை என்று ஆர்எஸ்எஸ் தொடர்ந்து மறுத்துவந்துள்ளது. ஆனால் இயக்கத்தைச் சேர்ந்த கமல் செளகான் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது என்று யெச்சூரி கூறினார். யெச்சூரியின் கருத்துகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் அவர் மேலும் எழுதியிருப்பது:

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த செளகான், நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். இந்த அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 2008-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மாலேகாவ்னில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், ஹைதராபாத்தில் மெக்கா மஸ்ஜித்தில் 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் மற்றும் ஆஜ்மீர் தர்காவில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியாவில் பரவிவரும் ஹிந்துத்வா பயங்கரவாதம் வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது என்று யெச்சூரி கூறினார்.

பயங்கரவாதத்துக்கு ஜாதி,மத பேதம் இல்லை என்பது புலனாகியுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்புகள் மேற்கொள்ளவிருந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றிய தகவல் வெளியானது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரவாதத் தன்மை, நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது குறைத்துக் காட்டப்பட்டது. நாட்டின் முக்கியப் பிரச்னைகள் கிடப்பில் போட்டப்பட்டன. தங்களது அரசு 5 ஆண்டுக்காலம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை போல நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையான காலத்தில் பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நான்டெட், பார்பானி, ஜால்னா, ஜலேகாவ்ன் ஆகிய பகுதிகளிலும் உத்தரப் பிரதேச த்தில் மாவ் மற்றும் கான்பூரிலும், தமிழகத்தில் தென்காசியிலும் வழக்குகள் பாரபட்சமாக நடந்துள்ளன.

இத்தகைய மதவாத அமைப்புகளின் செயல்பாடுகளை சகித்துக்கொள்ளும் போக்கு ஏற்புடையதல்ல. தங்களது இயக்கத்தில் சிலரது செயல்பாடுகள் இயக்கக் கொள்கையிலிருந்து சற்று விலகிச் செல்வதாக ஆர்எஸ்எஸ் குறிப்பிடுகிறது. அதற்காக ஒட்டுமொத்த இயக்கத்தைக் குறைகூறாதீர்கள் என்றும் வலியுறுத்துகிறது.

ஆனால் இவ்விதம் கூறுவதில் அர்த்தமில்லை. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனரான டாக்டர் ஹெக்டேவாருக்கு முன்னுதாரணாக விளங்கியவர் பி.எஸ் மூன்ஞ்சே. இவர் இத்தாலிக்கு சென்று பாசிச சர்வாதிகாரி முசோலினியை 1931-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். மூன்ஞ்சே தனது டைரியில், மார்ச் 20-ம் தேதி எழுதிய விவரத்தில், பாசிச இயக்கத்தால் தான் ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர் படையை உருவாக்குவதன் மூலம் இதை சாத்தியமாக்கமுடியும் என்ற முசோலினியின் கருத்தை அவர் ஏற்றார். இதையடுத்து நாடு திரும்பிய அவர் நாசிக்கில் 1935-ம் ஆண்டு மத்திய ஹிந்து ராணுவ கல்வி மையத்தை தொடங்கினார். இந்த மையம்தான் இப்போது ஹிந்துத்வா தீவிரவாத பயிற்சி மையமாக மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மதச்சார்பற்ற நாடாக திகழும் இந்தியாவை, ஹிந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக உள்ளது என்று யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும் என்று கம்யூனிச தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நன்றி;தினமணி.

இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் சமுதாய மக்கள் ரிப்போர்ட்.

 

சனி, 18 பிப்ரவரி, 2012

கர்நாடக பாஜக முதல்வரின் உதவியாளர்களின் மாத சம்பளம் வெறும் 70 லட்சம் தான்!

பெங்களூர், பிப். 18-
 
கர்நாடக முதல்-மந்திரியாக சதானந்த கவுடா இருந்து வருகிறார். இவருக்கு அலுவலக உதவியாளர்கள் எத்தனை பேர். வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் எத்தனை பேர். அவர்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்தார். அவர் கேட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட துறை கொடுத்துள்ளது.
 
அதன் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல்-மந்திரி சதானந்தாவுக்கு 287 உதவியாளர்கள் இருப்பது தெரிய வந்தது. இவர்களில் முதல் - மந்திரியின் முதன்மைச் செயலாளர், ஆலோசகர்கள், அலுவலக உதவியாளர்களும் அடங்குவர். இவர்களில் 237 பேர் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான சவுதா கட்டிடத்தில் பணிபுரிகிறார்கள்.
 
21 பேர் முதல்- மந்திரியின் வீட்டிலும், 29 பேர் முதல்-மந்திரியின் அலுவலக இல்லமான "கிருஷ்ணா"விலும் வேலைக்காரர்களாக பணிபுரிகிறார்கள்.   287 பேருக்கும் சம்பளமாக மாதந்தோறும் ரூ. 70 லட்சம் செலவிடப்படுகிறது. விதான சவுதாவில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் ரூ. 56.88 லட்சம் வழங்கப்படுகிறது.
 
முதல் - மந்திரியின் முதன்மை செயலாளர்களாக 2 பேர் பணிபுரிகிறார்கள். முதலாவது செயலாளர் பிரசாத் சம்பளம் மட்டும் அதிகபட்சமாக
ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 641. மற்றொரு செயலாளரின் சம்பளம்
ரூ. 1 லட்சத்து 1,532 ஆகும். பொருளாதார ஆலோசகரின் சம்பளம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 852. முதல்-மந்திரியின் செயலகம் விதான சவுதாவில் ஒரே இடத்தில் இல்லை. பல துறைகளாக பிரிந்து கிடக்கிறது.
 
நிர்வாகம், வளர்ச்சி பணிகள், முதல்- மந்திரியின் நிவாரண நிதி, நியமனம், மத்திய அரசு பிரிவு, கம்ப்யூட்டர் பிரிவு, பத்திரிகை, மக்கள் தொடர்பு போன்ற பல துறைகள் முதல்-மந்திரிக்கு தனியாக செயல்படுகிறது. இதற்கான ஊழியர்கள் பல்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். காண்டிராக்ட் முறையிலும் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை முதல்- மந்திரியின் செயலகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி;மாலைமலர். 

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

Fwd: ஸஹீஹான ஹதீஸ்கள் குர்'ஆனுக்கு முரண்படுமா? பயிற்சி வகுப்பு!




ஐ.என்.டி.ஜே.'யின் 'ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தாஃவா சென்டர்கள்!

ஐ.என்.டி.ஜே.'யின் 'இஸ்லாமிய இறையியல் கல்லூரி!


நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம்


வியாழன், 16 பிப்ரவரி, 2012

முஸ்லிம் இனப்படுகொலையை தடுக்கத் தவறிய மோடிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 'குட்டு'!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய முஸ்லிம் இனப்படுகொலை நடந்தேறியது. பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு, முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களும் காவி வெறியில் கருகின. இந்த கலவரத்தில் சேதம் அடைந்த மத வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தர விடக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில்  குஜராத் இஸ்லாமிய நிவாரண குழு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ''நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசு, கோத்ரா ரயில் எரிப்புக்குப்பின் நடைபெற்ற கலவரத்தை தடுக்கத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியதோடு, "கலவரத்தை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் மாநில அரசு செயல் பட்டதால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அவற்றை பழுதுபார்த்து தேவையான இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும். கலவரத்தின்போது சேதம் அடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறு வனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதுபோல், வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 26 முதன்மை செசன்சு நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் மாவட்டங்களில் இருந்து இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று இழப்பீடுத் தொகை பற்றி முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து 6 மாதங்களுக்குள் உயர்நீதிமன்றத்திற்கு அவர்கள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.''என்று கூறியுள்ளனர். 

மேலும், "கலவரத் தின்போது அழிக்கப் பட்ட அல்லது சேதம் அடைந்த வழிபாட்டுத் தலங்களை பழுது பார்த்து சீரமைப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும், இந்த மனு அரச மைப்புச் சட்டத்தின் 27-ஆவது பிரிவுக்கு எதிரானது என்றும் வாதிட்ட மோடி அரசின் வழக்கறிஞரின் வாதமும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்த  குஜராத் இஸ்லாமிய நிவாரண குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹக்கிம், "வழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருக்கும் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது'' என்று கூறி வரவேற்று இருக்கிறார்.

ஏற்கனவே நவீன நீரோ மன்னன் என உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு உள்ளான மோடி, இப்போது குஜராத் நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆனாலும் மோடியை திறமையான முதல்வர் என்றும், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றும் கூறித்திரியும் 'சோ'க்களுக்கும், அம்பானிகளுக்கும்  புரியவா போகிறது?


இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் சமுதாய மக்கள் ரிப்போர்ட்!






'பாக்கத்தான செஞ்சாங்க'; ஆபாசத்திற்கு ஆதரவளிக்கும் பாஜக!

'ருவாட்டு நாற்றத்தை கஸ்தூரி வாசனை கூட மாற்றி விடாது' என்று சொல்வதைப் போல், என்னதான் தங்களை தேசபகதர்கள் என்றும், ஒழுக்க சீலர்கள் என்றும், கறை படியா கரத்தையுடையவர்கள் என்றும் காவி சிந்தனையுடைய பாஜக காட்டிக் கொண்டாலும், பாஜகவை பத்தரை மாற்றுத் தங்கமாக சில பத்திரிக்கைகள் வரிந்து கட்டிக் கொண்டு வாழ்த்துப்பா பாடினாலும், அவ்வப்போது பாஜகவின் உண்மை முடைநாற்றம் வெளியே வந்து நாற்றமெடுக்கிறது. சுரங்கம் முதல் சவப்பெட்டி வரை ஊழல், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் என்று ஒருபுறம், மறுபக்கம் தனிமனித ஒழுக்கக்கேட்டிலும் எங்களை விஞ்ச ஆள் இல்லை என்று காட்டியுள்ளது பாஜக.

கர்நாடக சட்டப் பேரவையில் சிந்தகி வட்டத்தில் பாகிஸ்தான் கொடியேற்றப்பட்டது தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது,  ஆளும் பி.ஜே.பி. அமைச்சர்கள் மூவர் கைப்பேசியில் ஆபாச காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் என்ற செய்தி நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாட்டு ஊடகங்களிலும் இந்த அசிங்கம் வெளியாகி இந்தியாவின் மானம் இந்த போலி தேசபக்தர்களால் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் மட்டமான ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் குறைந்த பட்சம் பொதுமக்கள் மத்தியிலாவது தன்னை யோக்கியனாக காட்டிக் கொள்ள முயற்சிப்பான். ஆனால் இந்த மதவாத பாஜக அமைச்சர்களோ பொது இடத்தில் அதுவும் சட்டமன்றத்தில் சரசக் காட்சியை ரசிக்கிறார்கள் என்றால் இவர்களை விட கேடுகெட்ட ஒரு கூட்டம் உண்டா? இந்த லட்சணத்தில் கொஞ்சம் கூட உறுத்தல் இன்றி, ''கர்நாடக சட்டசபையில் அமைச்சர்கள் மூன்று பேர், ஆபாசப் படத்தை பார்த்ததோடு நிறுத்தி கொண்டார்களேயொழிய, வேறு எந்த வகையான தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என்று  கோவா மாநில எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., தலைவருமான மனோகர் பரிக்கர் வக்காலத்து வாங்கியுள்ளார். இவர்கள் தான் தேசபக்தர்களாம். மக்கள் விழித்துக் கொண்டு இதுபோன்ற காவிக்கறையோடு, ஊழல், ஆபாசக் கறைகளையும் கொண்ட இந்த 'ஆக்டோபஸ்' கட்சிகளை புறந்தள்ளுவது நாட்டிற்கு நல்லது.


'பஸ்டே' என்றபெயரில் வன்முறை; மாணவர்களின் மாறும் வழிமுறை!

சிரியையை கொலை செய்த மாணவன் என்ற செய்தி வந்த அதே நாளில், மற்றொருபுறம் கல்லூரி மாணவர்கள் 'பஸ்டே' என்ற பெயரில் நடத்திய வன்முறைத் தாண்டவம் குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது. 150 ஆண்டுகால பாரம்பரியமிக்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தான் இந்த வன்முறையை நிகழ்த்தி அக்கலூரிக்கு நற்பெயர்[!] பெற்றுத் தந்துள்ளனர். மாணவர்கள் இந்தியாவின் வருங்கால தூண்கள் என்று சொல்லப்படுவதுண்டு. காரணம் மாணவப் பருவம் தான் ஒருவனின் வருங்கால வாழ்க்கையின் உரைகல்லாக உள்ளது. மாணவப் பருவத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்ட பலர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மேதைகளாக திகழ்ந்து தனக்கும், தனது குடும்பத்தினர்க்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்த்த  வரலாறு உண்டு. அப்படிப்பட்ட மாணவப் பருவம் இன்று பல்வேறு சமூக சீர்கேடுகளின் தாக்கத்தால் சீர்குலைந்து நிற்கிறது. இன்றைய  மாணவர்களிடம் பெற்றோரை மதிக்கும் பாங்கு- ஆசிரியருக்கு கண்ணியமளிக்கும்  போக்கு ஆகியவை  மிக மிக குறைந்ததன் விளைவு அங்கே 'எவருக்கும் கட்டுப்படாமை' என்ற மனப்பக்குவம் மேலோங்கி நிற்கிறது.
 
கடந்த நவம்பர், 2008 ல் நடைபெற்ற சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதல் மாணவர்களின் வரலாற்றில் விழுந்த துடைக்க முடியா கரும்புள்ளியாகும். இதுபோக அவ்வப்போது மாணவர்கள் திடீர் திடீர் என கோஷ்டி மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் பொது இடத்தில் தாக்கிக் கொள்வதும் நடக்கிறது. மாணவர் தலைவர் தேர்தல், அரசியல் தேர்தல்களையும் தாண்டிய மனமாச்சர்யத்தை மாணவர்களிடம் உண்டாக்கி விடுகிறது. அதில் ஏற்படும் விரோதம் மாணவர்களிடையே பகையாக தொடரும் சூழல். இவ்வாறான விஷயங்கள் ஒருபுறமிருக்க, மாணவர்களின் சில கொண்டாட்டங்கள் மக்களின் வெறுப்பை சம்பாதிப்பவையாக உள்ளன.
 
இப்போது சில வாரங்களாக மாணவர்கள் 'பஸ்டே' கொண்டாடுகிறார்கள். அதாவது தாங்கள் எந்த வழித்தடத்தில் கல்லூரி செல்கிறார்களோ அந்த பஸ்ஸை ஆண்டுக்கொருமுறை அலங்கரித்து அளப்பரை செய்வதுதான் இவர்களின் கொண்டாட்டம். பொதுவாக ஒருவரின் கொண்டாட்டம் மற்றவர்களுக்கு திண்டாட்டமாகிவிடக்  கூடாது. ஆனால் இவர்களின் 'பஸ்டே' கொண்டாட்டம் மக்களுக்கு பல வகையில் இன்னல் தருபவையாக உள்ளன. பஸ்ஸின் கூரை மீது நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆட்டம் போடுவது; பஸ்ஸில் உள்ள பொதுவான பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது; பஸ்ஸை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முக்கிய சாலைகளில் ஊர்வலமாக செல்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது; பஸ்ஸை சிறைபிடித்தது  போன்று தங்கள் கல்லூரியில் பல மணிநேரம் நிறுத்தி வைத்து பயணிகளை இம்சிப்பது; பஸ்ஸை சேதப்படுத்துவது இவ்வாறாக இவர்களின் கொண்டாட்டம் மற்றவர்களுக்கு திண்டாட்டத்தையும் , அரசுக்கு வருமான இழப்பையும் உண்டாக்குகிறது.
 
ஆயினும் பிரச்சினை செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது ஒட்டுமொத்த  மாணவர்கள் பிரச்சினையாக  மாறிவிடும் என்ற பயத்தில் காவல்துறையும் மென்மையை வெளிப்படுத்துகிறது. காவல்துறையின் இந்த மென்மையான அணுகுமுறை மாணவர்களுக்கு மேலும் தெம்பைத் தருவதாக உள்ளது. அதனால் மாணவர்களின் அளவுகடந்த இம்சையும் ஆண்டுதோறும் தொடர்கிறது. மாணவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மாணவசக்தி வலுவானது என்பதற்காக மனம்போன போக்கில் செயல்பாட்டை அமைத்துக் கொள்வது ஆரோக்கியமன்று. உண்மையில் 'பஸ்டே' கொண்டாடும் மாணவர்கள் செய்யவேண்டியது என்ன? இதுபோன்ற மக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயல்பாட்டை விடுத்து, உங்களை தினமும் பாதுகாப்பாக கல்லூரியில் கொண்டு சேர்க்கும்  குறிப்பிட்ட வழித்தடத்தின் ஓட்டுனர்- நடத்துனரை கவுரவித்து, அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினால் உங்கள் மீது அவர்களுக்கும்- பொது மக்களுக்கும் நல்ல அபிப்ராயம் தோன்றும். மாணவர்கள் செய்வார்களா? 

காதலர் தின எதிர்ப்பு; காவியின் நோக்கமா? கலாச்சாரத்தின் தாக்கமா?

காதலர்தினம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காதலர் தின கொண்டாட்டத்தை சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து வந்தாலும், இந்துத்துவா சிந்தனையாளர்கள் இதை கடுமையாக எதிர்ப்பதை நாம் பார்க்கிறோம். இவர்களின் இந்த எதிர்ப்புணர்வுக்கு காரணம் நாட்டின் கலாச்சாரத்தின் மீதான காதலா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் கலாசார சீரழிவின் உச்சத்தில் இருப்பவர்கள் இந்துத்துவாக்கள் தான் என்பதற்கு கர்நாடக அமைச்சர்களின் இப்போதைய நடவடிக்கையே சான்றாக உள்ளது. பிறகு ஏன் இவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்? அங்கே தான் ஒளிந்துள்ளது இன்னொரு மதத்துவேஷம். ஆம். காதலர்தினம் என்பது கிறிஸ்தவ மதத்தவர் சம்மந்தப்பட்ட ஒன்றாகும். எனவே தான் இந்துத்துவாக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் நேரடியாக இவ்வாறு சொல்லமுடியாததால், கலாச்சாரம் ஆபாசம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு எதிர்ப்பார்கள். காதலர் தினம் குறித்து வீரத் துறவி[!]யும், இந்து முன்னணி அமைப்பாளருமான ராம.கோபாலன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், 

''நமது நாட்டைக் குறிவைத்து பல தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சில நேரிடையாக வந்து தாக்குகின்றன, சில கொல்லைப்புறமாக , மறைமுகமாக வருகின்றன. அவை நமது பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கெடுக்கும் நச்சுப் பிரச்சாரங்கள். அப்படிப்பட்ட ஒன்று தான் காதலர் தினம். இதன் நோக்கம் கலாச்சாரத்தைச் சீரழிப்பது, சந்தையை வளர்ப்பது. எவ்வாறு அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்குங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு மக்களை மயக்குகிறார்களோ, அதுபோல காதலர் தினத்திலும் விளம்பர உத்தி மூலம் பொருள்கள் வாங்க விளம்பரப்படுத்துகிறார்கள். இதனால் நிறைவது இவர்களது கஜானா.ஆனால் அதற்கு விலையாவது நமது மக்களின் பண்பாடு. இவையெல்லாம் தனிமனித சுதந்திரம் என்ற வாதம் பித்தலாட்டமானது. இதை அனுமதித்தால் தேசத்தின் அடையாளம் அழிந்து போகும். இந்த விஷ வித்தை அலட்சியப்படுத்தினால் அது வளர்ந்து, பல கிளைகளைப் பரப்பி நாசம் செய்துவிடும்.'' என்று கூறியுள்ளார். 

ராமகோபால அய்யரின் கருத்தை ஊன்றி கவனித்தால் ஒன்று புலப்படும். காதலர்தினம் எப்படி சந்தையை வளர்க்க வியாபாரிகள் செய்த திட்டம் என்கிறாரோ, அதேபோல, அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்குவது என்பது பக்தி சார்ந்த விசயமல்ல. அன்று தங்கம் வாங்கினால் பெருகும் என்பது கட்டுக்கதை. இவ்வாறு வியாபாரிகள் தான் கதையளந்து மக்களை மயக்குகிறார்கள் என்று அய்யர் அவரையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளார். நாம் வரவேற்கிறோம். எனவே ராமகோபாலன் அவர்களிடம் நாம் கேட்பது, காதலர் தினம் என்றபெயரில் வியாபாரமாக்கல் குறித்து வியர்த்துப் போய் அறிக்கை வெளியிட்ட நீங்கள், இதே போன்று அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்குவது மூடத்தனம் என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டால், உங்களுக்கு உண்மையிலேயே கொஞ்சம் சமுதாய அக்கறை உள்ளது என மக்கள் நம்புவதற்கு வாய்ப்பாக அமையும் செய்வீர்களா?

வியாழன், 9 பிப்ரவரி, 2012

பெருகுகிறது கைதிகளின் எண்ணிக்கை; நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்; தீர்வு கூறும் இஸ்லாம்!

ட நெருக்கடியின் தாத்பரியத்தை அறியவேண்டுமானால் சென்னை நகரின் சாலைகளில் காலையிலும், மாலையிலும் செல்லும் மாநகரப் பேருந்துகளை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். மூச்சு விட முடியாத அளவுக்கு கூட்டத்தை திணித்துக்கொண்டு பஸ்கள் பயணிக்கின்றன. இந்த கூட்ட நெரிசல் பஸ்கள்-ரயில்களில் மட்டுமல்ல; சிறைச்சாலையிலும் ஏற்பட்டுள்ளதுதான் வேடிக்கை. 

நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 374 சிறைகளில், 3 லட்சம் பேரைத் தான் வைக்க முடியும். ஆனால், தற்போது 4 லட்சம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய சிறையான திகார் சிறையில், 6 ஆயிரத்து 500 பேருக்குத் தான் இடம் உண்டு. தற்போது, இந்த சிறையில், 12 ஆயிரத்து 500க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.ஆயிரம் கைதிகளுக்கு மேல் உள்ள சிறையில், நெரிசலைக் குறைப்பதற்கான ஆய்வை, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

சிறைச்சாலைகளில் இந்த இடநெருக்கடி எதனால் ஏற்பட்டது? ஒற்றை வரியில் சொல்வதானால் குற்றங்களுக்கான  நமது நாட்டு சட்டங்களும் போதுமானதல்ல. அதை அமுல்படுத்தும் விதமும் சரியானதல்ல என்பதுதான். சிறையில் அடைந்து கிடக்கும் கைதிகள் யாவரும் தண்டனை வழங்கப்பட்டவர்களா? என்றால் இல்லை. சிறைவாசிகளில் தண்டனை வழங்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, விசாரணைக் கைதிகள், தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கைதிகள், தண்டனை நிறைவேற்றப்படாமல் காத்திருக்கும் தூக்குத் தண்டனை கைதிகள், தண்டனையை தள்ளுபடி செய்ய கருணை மனு போட்டு விட்டு 'ஹாயாக' அமர்ந்திருக்கும் கைதிகள், அரசியல் கைதிகள் இவ்வாறு பல்வேறு பிரிவினர்கள் உள்ளனர். அதனால்தான் சிறைச்சாலை நிரம்பி வழிகின்றது. குற்றம் செய்ததாக கைது செய்யப்படுபவன் அவனது குற்றத்திற்கான தண்டனை வழங்கப்பட்டால் கூட சில ஆண்டுகளில் விடுதலை ஆகிவிடுவான். ஆனால் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு பின்னால் அவனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். உதாரணத்திற்கு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பது ஆண்டுகாலம் கழித்து மதானி குற்றமற்றவர் என  நீதிமன்றம் விடுவித்ததை கூறலாம். இவ்வாறான நீதிமன்றத் தீர்ப்புகள் தாமதம் ஒருபுறம், வழக்கை முடிக்கவேண்டும் என்பதற்காக சில காவலர்கள் அப்பாவிகளை கைது செய்து  சிறையை நிரப்புவது ஒருபுறம் என சிறை நிரம்பும் பட்டியல் நீள்கிறது. 

இதுபோக ஒரு ஜேப்படி திருடனை பிடித்து அவனுக்கு சில ஆண்டுகள் தண்டனை விதித்து, அவனுக்கு அதே மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யப்படுகிறது. அவன் மீண்டும் வெளியே வந்து திருடுகிறான். அதே போல் கற்பழிப்பில் ஈடுபட்டவன், கொலை செய்தவன், வன்முறையில் ஈடுபட்டவன், பயங்கரவாத செயலில் ஈடுபட்டவன் என அனைவருக்கும் சிறை எனும் அறையில் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் செலவிடப்படுகிறது. இதுபோக, நமது நாட்டின் சட்டம் ஒருவனுக்கு மரணதண்டனை வழங்குவது என்பதே குதிரைக் கொம்பு. அப்படி மரணதண்டனை  வழங்கப்பட்ட சில கைதிகளுக்கு அதை உடனடியாக நிறைவேற்றாமல் காலம் கடத்திவருவதையும் காண்கிறோம். உதாரணமாக முன்னாள் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கபட்ட மூவர், கீழ்கோர்ட்டில் பெற்ற தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றம் போய், அங்கு தள்ளுபடி,பின்பு உச்சநீதிமன்றம் போய் அங்கும் தள்ளுபடி, பிறகு ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்து அங்கும் தள்ளுபடியான பின்பாவது தண்டனை நிறைவேற்றப் பட்டதா? என்றால் இல்லை. இப்போது வடிவேலு பாணியில், 'மறுபடியும் மொதல்ல இருந்தா' எனக் கேட்கும் வண்ணம், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் தனடனைக்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது. அப்படியானால் ஏற்கனவே இதே கைதிகளின் மேல்முறையீட்டு மனுவை இதே நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் அர்த்தம் நமக்கு விளங்கவில்லை. ஆக, இவ்வாறான காவலர்கள்-நீதிமன்றம்- சட்டத்தின் ஓட்டைகள் இவையாவும் கைதிகளால் சிறைச்சாலை நிரம்பி வழிய காரணமாக அமைக்கின்றது என்பது ஆணித்தரமான உண்மையாகும்.

சரி., இந்த சிறைச்சாலை நிரம்பி வழிவதை தடுக்க என்ன வழி? அனைத்திற்கும் வழிகாட்டும் இஸ்லாம் இதற்கும் ஒரு எளிய வழியை காட்டுகிறது. மிகப்பெரிய பரப்பளவை ஆட்சி செய்த இறைவனின் தூதர் முஹம்மது[ஸல்] அவர்களின் ஆட்சியில் சிறைச்சாலைகள் இல்லை. கைதிகளுக்கு அரசு பொதுநிதி செலவிடப்படவில்லை. அப்படியானால் குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப் பட்டார்கள்? குற்றம் நடந்து அவை விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் உடனடி தீர்ப்பு; உடனடி தண்டனை. திருடினால் கை வெட்டப்பட்டு அவன் விடுவிக்கப்படுவான். கொலை செய்தால் கொலையுண்டவனின் குடும்பத்தார் மன்னித்தாலே தவிர கொலையாளி கொல்லப்படுவான். விபச்சாரம் திருமணமானவன் செய்தால் கல்லால் எறிந்து கொல்லப்படுவான், திருமணம் ஆகாதவன் செய்தால் நூறு கசையடிகள், வழிப்பறி செய்தால் மாறுகால்-மாறு கை வாங்கப்படும். இதுபோக கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என காயங்களுக்கு ஏற்ப குற்றவாளிக்கு காயத்தை ஏற்படுத்துதால். இவ்வாறாக இந்த தண்டனைகள் யாவும் ஏக காலத்தில் நிறைவேற்றப் பட்டதால் குற்றங்கள் குறைந்தன., அல்ல. குற்றங்கள் மறைந்தே போயின என்றே சொல்லமுடியும். இஸ்லாம் காட்டும் இந்த நீதியான விசாரணை; கடுமையான தண்டனை; கால தாமதமில்லாத தண்டனை என்ற இந்த வழிமுறை இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டால் சிறைச்சாலையும் தேவையில்லை. சிறையை பாதுகாக்க காவலர்களும் தேவையில்லை. பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் விரையமாக்கவும் தேவையில்லை. செயல்படுத்த முன் வருமா அரசு?



அண்ணா பிறந்த நாளுக்காக ஆலயங்களில் சிறப்பு வழிபாடு; சமபந்தி தடபுடல் விருந்து; பல்லிளிக்கும் பகுத்தறிவு!

கைபர்போலன் கணவாய் வழியாக இந்திய துணைக்கண்டத்தில் நுழைந்த ஆரியர்கள்,பிறப்பின் பெயரால் மனிதர்களில் தீண்டாமையை கடைபிடிப்பதையும்,கடவுளின்பெயரால் கற்பனையான மூடநம்பிக்கைகளையும் விதைப்பதையும் கண்ணுற்ற திரு.பெரியார் அவர்கள், அதை ஒழிப்பதற்கான பகுத்தறிவு முயற்சியில் ஈடுபட்டு ஒரு முடிவெடுத்தார். 'மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைகொளுத்திய கதையாக' கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்தை முன்வைத்தார். அதே பெரியாருடன் பகுத்தறிவு பாதையில் பயணித்து 'ஆரியமாயை' கண்ட அண்ணா,  பின்னாளில், தி.க.வை உடைத்து  தி.மு.க., ஆனவுடன்  'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தத்துவத்தை முன்வைத்தார். [இதுதான் இஸ்லாமிய கடவுள்கொள்கையாகும்] 

பிறகு  தி.மு.க. பிளந்து அண்ணாதி.மு.க. உதயமானவுடன், எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வழிபட்டார். கருணாநிதியோ மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார்.மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து மகிழ்ந்தார். அத்துடன் 'கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று திருவாய் மலர்ந்தார். ஜெயலலிதாவை சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவர் அண்ணா தி.மு.க.வை, அத்வானி தி.மு.கவாக நடத்திவருபவர்.

இப்படியான இவர்களின் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியாக[?] இந்த ஆண்டும்  அண்ணா நினைவுநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெற அதில் ஆளுங்கட்சி மந்திரிகள், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சமபந்தி விருந்தை ஒரு கட்டு கட்டியுள்ளனர். கோயிலை நம்பக் கூடிய ஒருவர் எப்படி தனது பிறந்தநாள், திருமண நாள், மற்றும் விசேஷ நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வாரோ, அன்னதானங்கள் வழங்குவாரோ அதே போன்று அண்ணாவின் பிறந்தநாள் அதே கோயிலில் அதே சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்களுடன் அரங்கேறுகிறது. அண்ணா பிறந்த நாளுக்குக்கும் கோயிலுக்கும் என்ன சம்மந்தம் என இந்த பகுத்தறிவு தடுமாற்றத்தை கண்டிக்கவேண்டிய கி.வீரமணியோ கண்டுகொள்ளவில்லை.

இந்த சிறப்பு வழிப்பாடு-மற்றும் சமபந்திவிருந்து நடைபெறும் கோவில்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், நாத்திகரான அண்ணாவின் திதியை கோவில்களில் நடத்துவது ஆலயவிதிமுறைகளுக்கு முரணானது என்றும், கடந்த ஆண்டு அறிவித்த இந்து மக்கள் கட்சி இந்த ஆண்டு 'கப்சிப்'. ஒருவேளை கடந்த ஆண்டு இந்த நிகழ்வை நடத்தியது திமுக., ஆனால் இந்த ஆண்டு நடத்துவது அம்மா கட்சி என்பதாலோ என்னவோ நமக்குத் தெரியவில்லை.

ஆக, தவறான கொள்கைகளில் உறுதியிருக்காது என்ற வாக்கிற்கேற்ப, பகுத்தறிவு என்ற முலாம் பூசிக்கொண்டு பக்தர்களாக வலம்வரும் திராவிட கட்சியினரை, உண்மையான பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்திற்கு அழைக்கிறோம்.' இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து' என்ற பெரியாரின் வாக்கை, நீங்கள் உண்மையில் பெரியாரை பின்பற்றுவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்பதன்மூலம் உண்மைப்படுத்த முன்வாருங்கள்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

நரேந்திரமோடி ஒரு ஹிட்லர் – நந்திதா தாஸ்.

வதோதரா:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி நாசி பயங்கரவாதி அடோல்ஃப் ஹிட்லரைப் போன்றவர் என திரைப்பட நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

muஎம்.எஸ் பல்கலைக்கழகத்தில் விமன்ஸ் ஸ்டடீஸ் ரிசர்ச் சென்டர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

அப்பொழுது அவர் கூறியது: ஹிட்லரின் காலத்தில் தான் ஜெர்மனியில் மிகச்சிறந்த சாலைகள் போடப்பட்டன. ஐரோப்பிய நகரங்களை இணைக்கும் சிறந்த சாலைகளாக அவை இப்பொழுதும் கருதப்படுகின்றன. ஜெர்மனிக்கு சிறந்த மருத்துவமனைகள் ஹிட்லர் காலத்தில்தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப்பிரியராகவும், சைவ உணவை சாப்பிடுபவராகவும், மதுபானம் அருந்தாதவராகவும் இருந்தார். ஆனால், இன்று இவற்றின் பெயரால் ஜெர்மனி நாட்டவர் கூட ஹிட்லரை நினைவு கூறுவதில்லை.

குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் கோர நினைவுகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை பணத்தால் மாற்றிவிட முடியாது. இனப் படுகொலையை மறக்கவேண்டும் என சிலர் உபதேசிக்கிறார்கள். ஆனால், அது என்னால் இயலாது' என நந்திதா தாஸ் கூறினார்.

இனப் படுகொலையை தவிர்த்தால் குஜராத்தின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் மோடி என்ற வாதத்திற்கு பதில் தரும் வகையில் தனது உரையை அவர் ஆற்றினார்.

மனித உரிமை ஆர்வலரான நந்திதா, 'ஃபிராக்' என்ற திரைப்படத்தை இயக்கியவர். இத்திரைப்படம் குஜராத் இனப் படுகொலையின் பிந்தைய சூழல்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.

நன்றி; தூது ஆன்லைன்.காம்.

சனி, 4 பிப்ரவரி, 2012

நபிகள் நாயகம் துறவியா?

நபிகள் நாயகம் என்று தமிழ் மக்கள் அறிந்து வைத்துள்ள இறைத்தூதர் முஹம்மது ஸல்.. அவர்களின் உதயதினம்  என்று முஸ்லிம்களில் ஒரு சாரார் நம்பும் மீலாது நாளில் அனைத்து தலைவர்களும் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு மீலாது வாழ்த்து ஒன்றை தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ''இஸ்லாம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே உருவாக்கிய நபிகள் பெருமான் அறப்போராளியாக, வணிகராக, அரசியல்வாதியாக, பேச்சாளராக, சீர்த்திருத்தவாதியாக, அனாத ரட்சகராக, அடிமைகளைக் காப்பவராக, பெண் விடுதலைக்குப் போராடுபவராக, நீதிபதியாக திகந்தவர் என்றல்லாம் கூறியுள்ள கருணாநிதி, நபிகள் நாயகம் துறவியாக வாழ்ந்தவர் என்றும் கூறியுள்ளார். 

கருணாநிதியின் இந்த கூற்று தவறாகும். ஏனெனில் அந்த நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாத்தில் துறவறம் என்பது அறவே இல்லை. மேலும் நபிகள் நாயகம் அவர்கள் பதினொரு திருமணங்கள் செய்துள்ளார்கள். குழந்தைகள் பெற்றுள்ளார்கள்.தம் பிள்ளைகளுக்கு மணமுடித்து வைத்து பேரப்பிள்ளைகளையும் கண்டுள்ளார்கள்.அதோடு ''திருமணம் என்பது எனது வழிமுறை; யார் அதை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்' என்றும் முஸ்லிம்களுக்கு திருமணத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்கள். உண்மை இவ்வாறிருக்க நபிகள் நாயகம்  துறவியாக வாழ்ந்தார் என்று கூறுவது கருணாநிதியின் வரலாற்றுப் பிழையாகும். ஏனென்றால் மற்ற அரசியல்வாதிகள் போல் பிறர் எழுதித் தருவதை கையெழுத்திட்டு அனுப்பும் சராசரி அரசியல்வாதியல்ல கருணாநிதி. தினமும் பத்திரிக்கைகள்-நூல்களோடு தொடர்புடையவர் என்றும், அதையும் தாண்டி சிறுவயது முதலே இஸ்லாமிய கொடி ஏந்தியவன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி அவர்கள் இவ்வாறு எழுதுவது வேதனைக்குரியதாகும். இந்த விசயத்தில் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்வதோடு, திருத்தமும் வெளியிடுவார் என நம்புகிறோம். 

மேலும் கருணாநிதி அதே வாழ்த்துச் செய்தியில், முஸ்லிம்களுக்கு செய்த சாதனைகள்[!] என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அதில், ''தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 குறித்து இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தது.' என்றும் கூறியுள்ளார். முதலாவதாக காலம் காலமாக பள்ளிவாசலில் முஸ்லிம்களின் திருமணங்கள் பக்காவாக பதிவு செய்துவரும் நிலையில், இந்த கட்டாய திருமண பதிவு சட்டத்தை கொண்டுவந்தவரே இவர்தான்.இவர் கொண்டுவந்த திருமணப் பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அம்சங்கள் உள்ளன என்பதையறிந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-தமுமுக உள்ளிட்ட சில சமுதாய அமைப்புகள் ஒரு குழுவாக அன்றைய சட்ட அமைச்சர் துரைமுருகனை சந்தித்து முறையிட்டபோது, அரசு கொண்டுவந்த திருமணச் சட்டத்தில் என்னென்ன பாதகமான அம்சங்கள் உள்ளன என்பதை நீங்கள் ஒரு வரைவாக தாருங்கள். அதை நான் பதிவுத் துறைக்கு 'பார்வேர்டு' செய்கிறேன் என்று சொன்னார். அவ்வாறே அந்த வரைவு சமுதாய அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு சார்பாக வழங்கப்பட்டது. அதற்கு பின்னும் இவர்கள் எந்த மாற்றமும் செயவில்லை. ஆனால் திருமண பதிவு சட்டத்தில் திருந்த்தம் செய்யப்பட்டுவிட்டதாக கருணாநிதி கூறுகிறார் என்றால் அவருக்கு தவறான தகவல் தரப்பட்டிருக்கிறது என்று அறியமுடிகிறது.

எனவே, கருணாநிதி அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், அறிக்கை விடுவதில் காட்டும் அக்கறையை அதில் சொல்லப்படும் கருத்திலும் காட்டுமாறு அன்புடன் கூறிக்கொள்கிறோம்.