சனி, 18 பிப்ரவரி, 2012

கர்நாடக பாஜக முதல்வரின் உதவியாளர்களின் மாத சம்பளம் வெறும் 70 லட்சம் தான்!

பெங்களூர், பிப். 18-
 
கர்நாடக முதல்-மந்திரியாக சதானந்த கவுடா இருந்து வருகிறார். இவருக்கு அலுவலக உதவியாளர்கள் எத்தனை பேர். வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் எத்தனை பேர். அவர்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்தார். அவர் கேட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட துறை கொடுத்துள்ளது.
 
அதன் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல்-மந்திரி சதானந்தாவுக்கு 287 உதவியாளர்கள் இருப்பது தெரிய வந்தது. இவர்களில் முதல் - மந்திரியின் முதன்மைச் செயலாளர், ஆலோசகர்கள், அலுவலக உதவியாளர்களும் அடங்குவர். இவர்களில் 237 பேர் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான சவுதா கட்டிடத்தில் பணிபுரிகிறார்கள்.
 
21 பேர் முதல்- மந்திரியின் வீட்டிலும், 29 பேர் முதல்-மந்திரியின் அலுவலக இல்லமான "கிருஷ்ணா"விலும் வேலைக்காரர்களாக பணிபுரிகிறார்கள்.   287 பேருக்கும் சம்பளமாக மாதந்தோறும் ரூ. 70 லட்சம் செலவிடப்படுகிறது. விதான சவுதாவில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் ரூ. 56.88 லட்சம் வழங்கப்படுகிறது.
 
முதல் - மந்திரியின் முதன்மை செயலாளர்களாக 2 பேர் பணிபுரிகிறார்கள். முதலாவது செயலாளர் பிரசாத் சம்பளம் மட்டும் அதிகபட்சமாக
ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 641. மற்றொரு செயலாளரின் சம்பளம்
ரூ. 1 லட்சத்து 1,532 ஆகும். பொருளாதார ஆலோசகரின் சம்பளம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 852. முதல்-மந்திரியின் செயலகம் விதான சவுதாவில் ஒரே இடத்தில் இல்லை. பல துறைகளாக பிரிந்து கிடக்கிறது.
 
நிர்வாகம், வளர்ச்சி பணிகள், முதல்- மந்திரியின் நிவாரண நிதி, நியமனம், மத்திய அரசு பிரிவு, கம்ப்யூட்டர் பிரிவு, பத்திரிகை, மக்கள் தொடர்பு போன்ற பல துறைகள் முதல்-மந்திரிக்கு தனியாக செயல்படுகிறது. இதற்கான ஊழியர்கள் பல்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். காண்டிராக்ட் முறையிலும் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை முதல்- மந்திரியின் செயலகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி;மாலைமலர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக