வியாழன், 16 பிப்ரவரி, 2012

'பஸ்டே' என்றபெயரில் வன்முறை; மாணவர்களின் மாறும் வழிமுறை!

சிரியையை கொலை செய்த மாணவன் என்ற செய்தி வந்த அதே நாளில், மற்றொருபுறம் கல்லூரி மாணவர்கள் 'பஸ்டே' என்ற பெயரில் நடத்திய வன்முறைத் தாண்டவம் குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது. 150 ஆண்டுகால பாரம்பரியமிக்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தான் இந்த வன்முறையை நிகழ்த்தி அக்கலூரிக்கு நற்பெயர்[!] பெற்றுத் தந்துள்ளனர். மாணவர்கள் இந்தியாவின் வருங்கால தூண்கள் என்று சொல்லப்படுவதுண்டு. காரணம் மாணவப் பருவம் தான் ஒருவனின் வருங்கால வாழ்க்கையின் உரைகல்லாக உள்ளது. மாணவப் பருவத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்ட பலர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மேதைகளாக திகழ்ந்து தனக்கும், தனது குடும்பத்தினர்க்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்த்த  வரலாறு உண்டு. அப்படிப்பட்ட மாணவப் பருவம் இன்று பல்வேறு சமூக சீர்கேடுகளின் தாக்கத்தால் சீர்குலைந்து நிற்கிறது. இன்றைய  மாணவர்களிடம் பெற்றோரை மதிக்கும் பாங்கு- ஆசிரியருக்கு கண்ணியமளிக்கும்  போக்கு ஆகியவை  மிக மிக குறைந்ததன் விளைவு அங்கே 'எவருக்கும் கட்டுப்படாமை' என்ற மனப்பக்குவம் மேலோங்கி நிற்கிறது.
 
கடந்த நவம்பர், 2008 ல் நடைபெற்ற சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதல் மாணவர்களின் வரலாற்றில் விழுந்த துடைக்க முடியா கரும்புள்ளியாகும். இதுபோக அவ்வப்போது மாணவர்கள் திடீர் திடீர் என கோஷ்டி மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் பொது இடத்தில் தாக்கிக் கொள்வதும் நடக்கிறது. மாணவர் தலைவர் தேர்தல், அரசியல் தேர்தல்களையும் தாண்டிய மனமாச்சர்யத்தை மாணவர்களிடம் உண்டாக்கி விடுகிறது. அதில் ஏற்படும் விரோதம் மாணவர்களிடையே பகையாக தொடரும் சூழல். இவ்வாறான விஷயங்கள் ஒருபுறமிருக்க, மாணவர்களின் சில கொண்டாட்டங்கள் மக்களின் வெறுப்பை சம்பாதிப்பவையாக உள்ளன.
 
இப்போது சில வாரங்களாக மாணவர்கள் 'பஸ்டே' கொண்டாடுகிறார்கள். அதாவது தாங்கள் எந்த வழித்தடத்தில் கல்லூரி செல்கிறார்களோ அந்த பஸ்ஸை ஆண்டுக்கொருமுறை அலங்கரித்து அளப்பரை செய்வதுதான் இவர்களின் கொண்டாட்டம். பொதுவாக ஒருவரின் கொண்டாட்டம் மற்றவர்களுக்கு திண்டாட்டமாகிவிடக்  கூடாது. ஆனால் இவர்களின் 'பஸ்டே' கொண்டாட்டம் மக்களுக்கு பல வகையில் இன்னல் தருபவையாக உள்ளன. பஸ்ஸின் கூரை மீது நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆட்டம் போடுவது; பஸ்ஸில் உள்ள பொதுவான பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது; பஸ்ஸை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முக்கிய சாலைகளில் ஊர்வலமாக செல்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது; பஸ்ஸை சிறைபிடித்தது  போன்று தங்கள் கல்லூரியில் பல மணிநேரம் நிறுத்தி வைத்து பயணிகளை இம்சிப்பது; பஸ்ஸை சேதப்படுத்துவது இவ்வாறாக இவர்களின் கொண்டாட்டம் மற்றவர்களுக்கு திண்டாட்டத்தையும் , அரசுக்கு வருமான இழப்பையும் உண்டாக்குகிறது.
 
ஆயினும் பிரச்சினை செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது ஒட்டுமொத்த  மாணவர்கள் பிரச்சினையாக  மாறிவிடும் என்ற பயத்தில் காவல்துறையும் மென்மையை வெளிப்படுத்துகிறது. காவல்துறையின் இந்த மென்மையான அணுகுமுறை மாணவர்களுக்கு மேலும் தெம்பைத் தருவதாக உள்ளது. அதனால் மாணவர்களின் அளவுகடந்த இம்சையும் ஆண்டுதோறும் தொடர்கிறது. மாணவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மாணவசக்தி வலுவானது என்பதற்காக மனம்போன போக்கில் செயல்பாட்டை அமைத்துக் கொள்வது ஆரோக்கியமன்று. உண்மையில் 'பஸ்டே' கொண்டாடும் மாணவர்கள் செய்யவேண்டியது என்ன? இதுபோன்ற மக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயல்பாட்டை விடுத்து, உங்களை தினமும் பாதுகாப்பாக கல்லூரியில் கொண்டு சேர்க்கும்  குறிப்பிட்ட வழித்தடத்தின் ஓட்டுனர்- நடத்துனரை கவுரவித்து, அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினால் உங்கள் மீது அவர்களுக்கும்- பொது மக்களுக்கும் நல்ல அபிப்ராயம் தோன்றும். மாணவர்கள் செய்வார்களா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக