வியாழன், 26 மே, 2011

பசுக்களை பாதுகாப்பது சாத்தியமில்லை- பணக்கார கோயிலின் பரபரப்பு முடிவு!

லகில் பெரும்பான்மை நாடுகளில் பெரும்பான்மை மக்களால் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மாட்டிறைச்சியை குறிப்பிட்ட சதவிகிதத்தினர் நீங்கலாக, மற்றவர்களால் விரும்பி உண்ணப்படும்  உணவாகவும்,  ஏழைகள் வாங்கும் விலையிலும் கிடைக்கிறது. மாட்டிறைச்சிக்காக வயதான மாடுகளும், பால் கறவை முடிவுற்ற மாடுகளும், உரிமையாளர்களால் பராமரிக்க முடியாத நிலையில் விற்கப்படும் மாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மாடுகளை விற்பதையும், மாட்டிறைச்சி உண்பதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சர்ச்சையாக்குவது சங்பரிவார்களின் வேலையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட, ''பசுக்கள்-கன்றுகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.அவற்றை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று  பா.ஜ.க. கூறியிருந்தது.

இந்த அளவுக்கு பசுநேசனாக இவர்கள் தங்களை காட்டிக் கொள்வது பசுக்களின் மீதுள்ள கருணையால் அல்ல. இவ்வாறு சொல்வதின் நோக்கம், முஸ்லிம்கள் மற்றும் பிராமணரல்லாத சமூக மக்கள் பசுவை இறைச்சியாக பயன்படுத்துவதாலும், முஸ்லிம்கள் தியாகத்திருநாளின்போது குர்பானி கொடுப்பதாலும், இதை தடுக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம். இது ஒருபுறமிருக்க பசுக்கள் மீது இவர்களுக்கு உண்மையில் பரிவு இருக்குமென்றால் யார் பசுக்களை விற்க எண்ணுகிறார்களோ அவர்களிடமிருந்து அதை  விலைக்கு வாங்கி செலவு செய்து பாதுகாக்கட்டுமே! யார் தடுத்தார்கள்? அதுமட்டுமன்றி சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலையோரம் 'கவர்ச்சி படங்களை' தின்று உயிர் வாழும் பசுக்களை தேடி சென்று உணவளிக்கட்டுமே! மேலும்,  கோவில்களில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்டு சிலகோவில்களில் உரிய பராமரிப்பின்றி பசுக்கள் செத்து மடிவதாகவும், திருட்டுத்தானமாக 'கசாப்பு' கடைக்கு விற்பதாகவும் சிலமாதங்களுக்கு முன் ஒரு இதழ் செய்தி வெளியிட்டது. இந்த பசுநேசர்கள் முதலில் கோவில் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கட்டுமே! இதையெல்லாம் இவர்கள் செய்யமாட்டார்கள்.

மேலும், பசுக்களை பாதுகாப்பது என்பது சாத்தியமல்ல என்று உலகிலேயே பணக்கார கடவுளான[!]திருப்பதி வெங்கடேச பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து பசுதானத்திற்கு இடைக்கால 144 போட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. 

''திருப்பதி கோவிலுக்கு, கோதானம் வழங்க பிரார்த்தித்துக் கொள்ளும் பக்தர்கள் வழங்கிய பசுக்கள், 900 வரை உள்ளன. இவற்றில் தற்போது, 140 பசுக்கள் மட்டுமே பால் கொடுக்கின்றன. பசுக்களை வளர்த்து பராமரிக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆண்டுக்கு மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவழித்து வருகிறது. இந்த பசுக்களால், நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டர் பால் கிடைக்கிறது. திருமலை கோவில் உட்பட திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த பல்வேறு கோவில்களின் பூஜைக்கு பால் பயன்படுத்தப்படுகிறது. கோசாலையில் பசுக்களை பராமரிக்க, 10 பேர் வரை கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது இங்கு ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளதால், வெளியிலிருந்து தினமும் 20 டேங்க் வரை பசுக்களின் தேவைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தொலைதூரத்திலிருந்து கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் பசுக்களினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு நான்கு பசுக்கள் இறந்தன.எனவே, கோதானமாக அளிக்கும் பசுக்களை பெற்றுக்கொள்வதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளது என்கிறது அந்த செய்தி.

தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் குவியும் திருப்பதி தேவஸ்தானத்தால் கூட பசுக்களை பராமரிக்க முடியவில்லை என்றால், அன்றாடங்காய்ச்சியான பாமரன் பால் வற்றிப்போன மாட்டை வைத்து கடடியழ வேண்டும் என சங்கபரிவார் சொல்வது தவறு என விளங்குகிறதல்லவா? எனவே இனியாகினும் பசுவை வைத்து அரசியல் செய்வதை சங்பரிவார கூட்டம் நிறுத்திக்கொள்ளுமா? செத்த பசுவின் தோலை உரித்த மனிதனை கொல்லும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமா? மனிதனுக்காக படைக்கப்பட்டவைகளை மனிதன் அனுபவிப்பதை தடுக்கும் மனித உரிமை மீறலை சங்பரிவார் கைவிடுமா? பொறுத்திருந்து பார்ப்போமே!


 

வீட்டிற்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடும் ஆளும் வர்க்கம்!

டு மேய்க்கும் தொழிலாளி அந்தி சாயும் நேரத்தில் தனது ஆட்டை எண்ணியபோது அதில் ஒரு குட்டி மட்டும் குறைந்ததாம். அலறித் துடித்த அவன் அங்கும் இங்கும் தேடினானாம். அதைபார்த்த ஒருவர் அட மடையா! நீ தேடும் குட்டி உனது தோளில்தான் கிடக்கிறது என்றவுடன் அந்த தொழிலாளி அசடு வழிந்தானாம். இந்த கதை போல நமது இருக்கிறது மத்திய ஆட்சியாளர்களின் லட்சணம்.
 
வீட்டிற்குள் வலைய வரும் நச்சுப் பாம்பான இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டுகொள்ளாத அரசு, அண்டை வீடான பாகிஸ்தானில், 'எங்கள் வீட்டிலிருந்து  தப்பிய ஐம்பது தேள்கள் உங்கள் வீட்டில் மறைந்துள்ளது.  அதை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று அட்டகாசமாக பட்டியல் கொடுத்தது. பரவாயில்லையே! துணிச்சலான நடவடிக்கைதான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் பட்டியலில் உள்ள தேள்களில் பல பாரத நாட்டிலேயே பவனி வரும் செய்தி பரபரப்பாக வெளியாக பாகிஸ்தானுக்கு முன்பாக பல்லிளித்து நிற்கிறது  நமது பாதுகாப்பு லட்சணம்.
 
இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்புகள் மற்றும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தியா கோரி வருகிறது. இதற்காக 50 பேர்களின் பெயர்களை கொண்ட பட்டியலை, பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்தது. அதில் 41வது பெயராக வாசுல் கமார்கான் என்ற பெயர் இடம் பெற்றது. ஆனால் அவர் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. இது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட பெரோஸ் அப்துல் கான் என்ற ஹம்சா, மும்பையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதும், தற்போது அவர் மும்பை ஜெயிலில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.
ஐக்கிய தேசிய புரட்சி முன்னணி தலைவர் ராஜ் குமார் மெகேன் பெயரும், பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் அவர் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்.
இதுபோன்ற தவறுகள், இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானிடம் கொடுத்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. எனவே புதிய பட்டியல் கொடுக்கப்படுமா? என்று, இந்திய உள்துறை பாதுகாப்பு செயலாளர் யு.கே. பன்சாலிடம நிருபர்கள் கேட்டபோது,
 
பாகிஸ்தானிடம் இந்தியா ஏற்கனவே அளித்த பட்டியலை திரும்ப பெறும் யோசனை இல்லை. ஆனால் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தீவிரவாதிகளின் பெயர்களை, மீண்டும் ஆய்வு செய்து வருகிறோம். தவறான பெயர்களை இடம் பெறச்செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் புதிய பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுப்போம். அதில் எந்தவித தவறும் இல்லாத படி பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
 
இந்த நிலைமையில், பட்டியலில் இருந்து கான் பெயரை சி.பி.ஐ. இன்று நீக்கியது. கான் பற்றி மும்பை போலீசில் இருந்து தகவல் அளிக்கப்படவில்லை என்றும் சி.பி.ஐ. குறை கூறியுள்ளது.
இதற்க்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தவறுதலாக நடந்ததாகவும் , இது மாதியான தவறுகள் ஏற்பட்டிருக்க கூடாது  என   கூறிய சிதம்பரம், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார்.
 
குற்றவாளிகளை ஒப்படைக்கக்கோரும் பட்டியலை தயாரிப்பதில் கூட முழுமையான கவனம் இல்லாத நிலையில் இந்தியா இருக்கிறது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானமே. தனது வீட்டில்  வைத்துக் கொண்டே அடுத்த வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக நினைக்கும் மடமையைதான் என்ன சொல்வது?  

இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட்!

சமுதாய மக்கள் ரிப்போர்டரை ஆன்லைனில் படிக்க; http://makkalreport-e-paper.blogspot.com/
குவைத்தில் சமுதாய மக்கள் ரிப்போர்ட் பெற்றிட தொடர்பு கொள்க; 97659759

 

புதன், 25 மே, 2011

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்; முதல்வரின் மனநிலையில் இல்லை மாற்றம்!

முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் அமைச்சர் இல்லாமலேயே தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்தவர். ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், கருணாநிதியின் துரோகங்கள் தந்த வலியால், இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயம் ஜெயலலிதா கட்சிக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உறுதுணையாக நின்றது.
 
அரசியலில் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையிலிருந்த ஜெயலலிதா, மீண்டும் அரியாசனம் ஏறியவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தனது மனநிலையை வெளிப்படுத்தினார். அவரது அமைச்சரவையில் கவுண்டர் சமுதாயத்திற்கு 8 , தேவர் சமுதாயத்திற்கு 6 , வன்னியர் சமுதாயத்திற்கு 5 என அமைச்சர் பதவிகளை வழங்கியவர், தமிழகத்தில் சுமார் 13 சதவிகிதம் உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே ஒரு அமைச்சர் பதவியை  வழங்கினார். அதுவும் நிதி, போக்குவரத்து, சட்டம், மின்சாரம், பொதுப்பணி போன்ற பிரபல்யமான துறைகள் எல்லாம் தமக்கு வேண்டிய சமுதாயத்திற்கு தந்துவிட்டு முஸ்லிம்களுக்கு 'சுற்றுச்சூழல்' என சுற்றலில் விட்டார்.
 
ஜெயலிதாவின் இந்த செயல், அவரது கடந்த கால அரசியல் தோல்வி அவருக்கு மன மாற்றத்தை தந்திருக்கும் என நம்பி வாக்களித்த முஸ்லிம்களுக்கு நெஞ்சில் நெருஞ்சியாய் குத்தியது. இருந்தாலும் 'ஆலை இல்லாத ஊருல இலுப்பைப் பூ சக்கரை' என்ற பழமொழிகேற்ப, ஏதோ ஒன்றாவது தந்தாரே என ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அல்லாஹ் அந்த அமைச்சரையும் அற்பநாளில் இறப்பெய்த செய்துவிட்டான். [இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்]
 
மரியம்பிச்சை மரணமடைந்த செய்தியறிந்து முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு கண்ணீர் வடித்த வேளையில், மரியம்பிச்சைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. இது சற்றே ஆறுதலாக தெரிந்தது. மரியம்பிச்சை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது துறை ஒரு முஸ்லிமுக்கே வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த வேளையில் அந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்து இருக்கிறார் ஜெயலலிதா.
கவர்னர் பர்னாலாபிறப்பித்த உத்தரவில்  மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் துறைகள் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
 
''தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின் பேரில், மறைந்த அமைச்சர் என்.மரியம் பிச்சையிடம் இருந்த சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் ஆகிய துறைகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், இனிமேல் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  
 
இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரதிநித்துவம் இல்லாத ஆட்சி நடத்த ஜெயலலிதா நாடிவிட்டார் என தெரிகிறது. மேலும் இவரது கட்சியில் முஹம்மது ஜான் மற்றும் அப்துர்ரஹீம் ஆகிய முஸ்லிம் எம்.எல். ஏக்கள் இருக்கும் நிலையில் அவர்களை அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்காமல் புறந்தள்ளியிருக்கிறார். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவிற்கு நீண்டகாலமாக விசுவாசமாக இருக்கும் அன்வர்ராஜாவுக்கு இந்த பதவியை வழங்கியிருக்கலாம். அவரை மரியம்பிச்சை தொகுதி இடைத் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்திருக்கலாம். அதையும் ஜெயலலிதா தவிர்த்துள்ளார்.
 
ஆக ஜெயலலிதாவின் போக்கு 'மாறாதய்யா மாறாது; மனமும் குணமும் மாறாது' என்று அவரது அரசியல் ஆசான் பாடலில் பாடியது போலவே உள்ளது. கருணாநிதியின் பக்கம் முஸ்லிம்களின் ஆதரவு இனி ஒருபோதும் திரும்பாது இன்ஷா அல்லாஹ். அதேபோல  ஜெயலலிதா முஸ்லிம்கள் விசயத்தில் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் வரும் தேர்தல்களில்  முஸ்லிம்களின் வெற்றிச்சின்னம் 49 'ஓ வாக மாறிவிடும் என்பது நிதர்சனமான தெரிகிறது.

செவ்வாய், 24 மே, 2011

மானம் போச்சு; மாம்பழமும் போகுமா?

மிழகத்தில் வன்னியர் சங்கம் என்ற சாதி அமைப்பின் மூலம் 1980 வாக்கில் தனது பொதுவாழ்க்கையை தொடங்கிய மருத்துவர்  ராமதாஸ், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற கோஷத்தை முன்வைத்தார். தனது இனத்திற்கு இடஒதுகீட்டை பெறுவதற்காக மரத்தை வெட்டி சாலையை மறிப்பது போன்ற அதிரடி நடவடிக்கையால் அரசுக்கு தலைவலியை உண்டாக்குபவராகவும், அந்த சமூக மக்களுக்கு ஆபத்து பாந்தவனகவும் அடையாளப்படுத்திக்  கொண்டார்.  
 
எல்லோருக்கும் வரும் அரசியல் ஆசை  இவருக்கும் வந்தது. வன்னியர் சங்கத்தை பெயரளவுக்கு வைத்துக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கி நிறுவனராக கோலோச்சினார். ஆரம்பத்தில் தனிக்கடை விரித்து போனி ஆகாததால் அடுத்தடுத்த தேர்தலில் அணி சேரத் தொடங்கினார். அதோடு கூட்டணி சேர்வதில் அரசியல் கட்சிகளுக்கு பாடம் நடத்தும் அளவுக்கு ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு  இடத்தை மாற்றினார். இவ்வாறான இவரது பா.ம.க ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கி, மாநிலத்தையும் தாண்டி மத்தியிலும் அங்கம் வகிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றது. 
 
பா.ம.க சாதிகட்சியல்ல என்று சொல்லி முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உழைப்பையும் வாக்குகளையும்  அள்ளிய ராமதாஸ், உப்புச்சப்பில்லாத கட்சி பதவி நீங்கலாக  சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்களாக  இவரது கட்சி மூலம் முஸ்லிம்களைநிறுத்தாமல் கவனமுடன் பார்த்துக் கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 30  தொகுதிகளை திமுகவில் பெற்ற ராமதாஸ் மருந்துக்குக் கூட ஒரு முஸ்லிமை வேட்பாளராக்கவில்லை. இவரது இந்த முஸ்லிம் விரோத போக்கிற்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி பெரும்பான்மை வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்ததன் மூலம் வெறும் மூன்று இடங்களில் வெற்றி பெற்று முச்சந்தியில் நிற்கிறார். இவருக்கு அடுத்த சோதனையாக முகவரியும் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்! தேர்தல் தோல்வியால் பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரத்தை இழக்கிறது.  
 
ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் மொத்தம் பதிவான ஓட்டில் 6 சதவீதம் ஓட்டுகள் பெற்று இருக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு மொத்தம் 19 லட்சத்து 27 ஆயிரத்து 783 ஓட்டுகள் கிடைத்தது. இது 5.23 சதவீதம் ஆகும்.  இதன் மூலம் தேர்தல் கமிஷனின் விதிகளை அக்கட்சி எட்டவில்லை.   இதன் காரணமாக பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரத்தை இழக்கிறது. மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துவிடுமாயின் அதிகாரப்பூர்வ சின்னமும் அதாவது மாம்பழமும் போய்விடும் என்று செய்திகள் கூறுகின்றன.ஆனால் தங்களது கட்சிக்கு சட்டமன்றத்தில்  மூன்று உறுப்பினர்கள் இருப்பதால் மாம்பழம் பறிபோகாது என்கிறது மருத்துவர் கட்சி.
 
மேலும் கடந்த ஜூலை 29, 2010 தேதியிட்ட  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆணையில் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை ரத்து செய்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது. '2006  ல்  புதுவையில் ஆட்சி; 2011 ல் தமிழகத்தில் ஆட்சி' என்று முழங்கிய மருத்துவர், இன்று இரு மாநிலங்களிலும் கட்சியின் முகவரியை கூட காக்க முடியாமல் முனங்கிக்கொண்டிருக்கிறார். அதே வேளையில் மருத்துவருக்கு இன்னொரு வேதனை செய்தி என்னவெனில், எந்த விஜயகாந்தை பற்றி அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று பகட்டாக கூறினாரோ அந்த விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கிறது.
 
சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணியில் 41 தொகுதியில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 29 லட்சத்து 3 ஆயிரத்து 228 ஓட்டுகள் பெற்றது. இது 7.88 சதவீத ஓட்டுகள் ஆகும். இதுதவிர அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்து தி.மு.க.வை 3-வது இடத்துக்கு தள்ளியது. இதன் மூலம் தே.மு.தி.க. அரசியல் அங்கீகாரம் பெற்று நிலையான சின்னத்தையும் பெறுகிறது என்பதுதான் 'ஹைலைட்'. பாட்டாளி மக்கள் கட்சி, பாட்டாளிகளை மறந்ததால் பரிதாப மருத்துவர் கட்சியாக காட்சியளிக்கிறது. நல்ல மருந்தை [மத சார்பின்மை] தந்து மருத்துவர் தேற்றுவரா?
 
 
 
 

திங்கள், 23 மே, 2011

மரியம்பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்தார்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் வக்ஃபுவாரிய அமைச்சரான மரியம்பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்தார். மக்கள் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகி,அமைச்சராகிய நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன். அவரது இக்லாஸான அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!அவரது பாவங்களையும் மன்னிப்பானாக! முஸ்லிம் சமுதாயத்திற்கு ஜெயலலிதா வழங்கிய ஒரே அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரியம்பிச்சையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அமைதியையும்,நிம்மதியையும் தந்தருள்வானாக! 

-முகவைஅப்பாஸ்.

வெள்ளி, 20 மே, 2011

ஆ.ராசாவை தொடர்ந்து திகார் சிறைச்சாலை நோக்கி கனிமொழி&சரத்குமார்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். இவ்வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில்,
 
''கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்தார். மேலும் இருவரையும் 14 நாள் கோர்ட்டு காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் கனிமொழி எம்.பி.யையும், சரத்குமாரையும் இன்று மாலை 4 மணிக்கு கைது செய்து, திகார் சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் கனிமொழி திகார் சிறையில் பெண்களுக்கான தனி அறையில் அடைக்கப்படுவார்.
 
உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கணும்.. தப்பு செஞ்சவன் கம்பி எண்ணனும் என்பது தானே உலக நியதி!

மம்தாவின் அரசியல் பண்பாடு; ஜெயலலிதாவுக்கு ஒரு முன்மாதிரி!

மேற்கு வங்க முதல்வராக வெள்ளிக்கிழமை [20 -05 -11 ]திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பதவி ஏற்க உள்ளார். மேற்கு வங்க வரலாற்றில் முதல்வராக பதவியேற்கும்  முதல் பெண்மணி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். மேலும் இவர் யாரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினாரோ அந்த முன்னாள் முதல்வருக்கு பதவியேற்பு விழாவிற்கு நேரடி அழைப்பு விடுத்ததன் மூலம் ஒரு சிறப்பிற்குரிய பண்பையும் மம்தாபானர்ஜி வெளிப்படுத்தியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி இதற்கான அழைப்பிதழை புத்ததேவ் இல்லத்திற்கு சென்று அளித்தார். பதவி ஏற்பு விழாவில் புத்ததேவ், அவரது மனைவி மீரா பட்டாசார்யா ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  மம்தா பானர்ஜி கூறியதன்பேரில் புத்ததேவ் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்ததாக செய்தியாளர்களிடம் சாட்டர்ஜி கூறினார். அனைத்துத் தரப்பினருக்கும் அளிக்க வேண்டிய உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் வீட்டிற்கு நேரில் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
 
இந்த செய்தி அரசியல் போட்டி என்பது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இத்தகைய பண்புதான்  காலஞ்சென்ற தமிழக அரசியல் தலைவர்களிடத்திலும் இருந்தது. ஆனால் இன்றைய தமிழக நிலையோ எதிர்கட்சியை எதிரிக் கட்சியாக கருதும் அளவுக்கு அரசியல் சிந்தனை குறுகிவிட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி அவரது கட்சியின் இரண்டாம் காட்ட தலைவர்கள் கூட கந்துகொண்டதாக தெரியவில்லை. கருணாநிதிக்கு முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மம்தா போன்று ஜெயலலிதாவும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தனது பிரதிநிதி மூலம் வீட்டிற்கு  சென்று அழைப்பிதழ் வாங்கியிருந்தால் இன்றைக்கு ஜெயலலிதாவின் கவுரவம் எங்கோ சென்றிருக்குமே! ஹூம்... ''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு' என்றார் அண்ணாவின் தத்துவத்தை அம்மையார் என்றைக்குத்தான் கடைபிடிப்பாரோ?

ஜெயலலிதாவி​ன் ஆட்சி ஆரம்பமே அதிருப்தியா​ய்...

 

குவைத் இதஜ'வின் வாராந்திர பிரசுரம்! [20-05-2011]

பெரிதாக்கி படிக்க பிரசுரத்தின் மீது கிளிக் செய்க; 

வியாழன், 19 மே, 2011

மக்களை முட்டாளாக்க நினைத்த 'முக்காலி' சாமியார்!

மாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தோன்றவே செய்வர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களை சுரண்டும் போலி சாமியார்கள் அவ்வப்போது பிடிபட்டு அவர்களை பற்றிய செய்திகள் வெளியானாலும் போலி சாமியார்களை  நம்பும் மக்கள் திருந்துவது போல் தெரியவில்லை. இத்தகைய போலி சாமியார்கள் பட்டியலில்  ஒரு முக்காலி  சாமியார் பற்றிய பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. இதில் ஏனைய சாமியார்களுக்கும் இவருக்கும் ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. மற்ற சாமியார்கள் எல்லாம் காணமல் போன பொருட்களை  கண்டுபிடித்து தருவதாக கதை விட்டால், இவரோ காணமல் போன  கடவுளையே[?] கண்டுபிடித்து தருவதாக கதை விட்டு கடைசியில் கம்பி நீட்டியுள்ளார்.
 
காரைக்குடி அருகே 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அந்த கிராமம். அங்கு ஒரு அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மறைவான ஒரு இடத்தில் சுவாமி சிலை உள்ளது.  இந்த சிலை கடந்த ஆண்டு காணாமல் பொய் விட்டதாக கிராம மக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர். போலீஸ் நிலைய அதிகாரி விசாரணையை மேற் கொண்ட போது,  காணாமல் போன சுவாமி சிலை எது. அந்த சாமியின் பெயர் என்ன? எந்த உலோகத்தால் ஆனது. அதன் மதிப்பு என்ன? அதனை பார்த்தவர்கள் யார் என்ற போலீசார்களின் கேள்விகளுக்கு யாராலும் சரியாக பதில் சொல்லமுடியவில்லை. இதனால் அந்த புகாரின் பேரில் போலீசாரால் வழக்கு கூட பதிவு செய்ய முடிய வில்லை.
 
இந்நிலையில், அறந்தாங்கியில் உள்ள முக்காலி சாமியார் என்பவரிடம் சாமி சிலை காணாமல் போனது குறித்து முறையிடப் பட்டது. அவரோ கவலைப் படாதீர்கள் நான் கண்டு பிடித்து தருகிறேன் என காரியத்தில் இறங்கினார். உடனே கிராமத்தில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடானது. பூஜையின் முடிவில் முக்காலி ஒன்றை நிறுத்தினார் அறந்தாங்கி சாமியார். அதனை அந்த பகுதி குழந்தைகள் சிலர் தொடவேண்டும் எனவும், அதன் பின் முக்காலி தானாகவே நகர்ந்து சாமி சிலையை திருடியவர் வீட்டுக்கே சென்றுவிடும் என கூறினார். அதன்பின் சாமியார் செய்த தந்திரமும், குழந்தைகள் கைகளால் முக்காலியை அழுத்தியதாலும் முக்காலி லேசாக நகர தொடங்கியது. இதனால் பரபரப்பான அப்பகுதி மக்கள் கூட்டம் முக்காலி பின்னாலும், முக்காலி சாமியாரின் பின்னாலும் ஆர்வத்துடன் சென்றனர்.
காலையில் ஆரம்பித்த சாமியை தேடிய முக்காலி சாமியாரின் கண்டுபிடிப்பு படலம். காடு,மேடு, கண்மாய் என நகர்ந்து இரவிலேயே அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் வீட்டு முன்பு நின்றதது. அந்த வீட்டில் இருந்த பெரியவர் ஊர்மக்கள் மத்தியில் நல்ல பெயரோடும், புகழோடும் வாழ்ந்துவரும் பிரமுகராம். அவரது மகன்களும் நல்ல வேலையில் இருப்பவர்களாம். இதனால் சாமியாரின் செயல் மீது சந்தேகம் அடைந்த ஊர்மக்கள் சாமியாரை சுற்றி வளைத்துகொண்டனர்.
நீங்கள் கூறியப்படி இந்த சிலை இங்கு இருந்தால் நீங்கள் எடுத்து தாருங்கள் ரூ.ஒரு கோடி தருகிறோம். இல்லையென்றால் 'பிராடுதனம்' செய்த முக்காலி சாமியாரை சும்மா விடமாட்டோம் என கூறினர். கூட்டத்தில் நின்ற சிலர் முக்காலியோடு சேர்த்து சாமியாரை மரத்தில் கட்டுங்கள் என கூச்சலிட அந்த இடமே பரபரப்பானது.
 
அடுத்த நொடியில் ஊர் மக்கள் காலில் விழுந்த முக்காலி சாமியார், 'அய்யா என்னை விட்டு, விடுங்கள் வயிற்றுபிழைப்புக்காக இதைசெய்துவிட்டேன். இனிமேல் இதுபோன்ற பிராடு தனத்தில் ஈடுபடமாட்டேன் என சத்தியம் செய்து கதறி அழதொடங்கிவிட்டார். அதன் பின் ஊர்மக்கள் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர். முக்காலி சாமியாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனத்த போலீசார், முக்காலிசாமியாரின் பிராடு தனத்தை மக்களே புரிந்து கொண்டதால், இதுபோன்று ஏமாறாதீர்கள் என அறிவுரை கூறி சென்றுவிட்டனர். 
இந்த முக்காலி சாமியாரின் விசயத்தில் முடிவிலாவது மக்கள் விழித்துக் கொண்டனர். ஆனால்,  'முற்றிலும் துறந்த[!] முக்காலிகள் முன்னால் இன்னும் சரணடையும் முட்டாள்தனமான மக்கள் என்றைக்குத்தான் விழிப்படைவார்களோ?

மும்பையின் நீரோ யார்?

ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையை கேட்டிருக்கிறோம். இதேபோல், மும்பையிலும் ஒரு நீரோ வசிக்கிறார் என்பதை நினைக்கும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது. சிவசேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே தான், அந்த நீரோ.

மகாராஷ்டிராவில் உள்ள ஜாய்ட்பூரில், போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்து, சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, சமீபத்தில் அறிக்கை விட்டார், உத்தவ். அறிக்கை விட்ட கையோடு, கேமராவும், கையுமாக, ம.பி., மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்று விட்டார். அங்குள்ள தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள விலங்குகளை புகைப்படம் எடுப்பதில், அவர் மிகவும், "பிசி'யாக இருந்தபோது, ஜாய்ட்பூரில், போலீசாருக்கு எதிரான போராட்டம், உச்சக் கட்டத்தை அடைந்தது. இரு தரப்புக்கும் இடையே, மோதல் ஏற்பட்டு, தீ வைப்பு, அடிதடி சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவங்கள் எதுவுமே தெரியாதது போல், விலங்குகளை புகைப்படம் எடுப்பதில், ஆர்வமாக இருந்தார் உத்தவ். இது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது."இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது...?' என, கிண்டலாக கேட்கின்றனர், மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் கூறுகையில், "உத்தவ், இதுபோல் செயல்படுவது, இது முதல் முறையல்ல. ஐந்தாண்டுகளுக்கு முன், பலத்த மழை காரணமாக, மும்பை நகரமே, தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. அப்போது, உத்தவ் என்ன செய்தார் தெரியுமா? ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், நண்பர்களுடன் உல்லாசமாக தன் பிறந்த நாளை கொண்டாடினார்' என, விரக்தியுடன் கூறினர்.


நன்றி;தினமலர்  

அத்துமீற சொல்வதுதான் ஆதித்தனார் வழியா?

ஸாமா பின் லேடனை கொல்வதற்காக,  பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அடாவடித்தனம் உலக அளவில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை ஏதோ புத்திசாலித் தனமான வீரமிக்க செயல் என்று சிலர் பாராட்ட முற்படுகின்றனர். அதில், அதிகாலையில் அகிலத்தின் செய்திகளை அனைவரும் அறிய ஆதித்தனார்  அவர்கள் தந்த அற்புதமான நாளிதழான தினத்தந்தி முன்னிலை வகிக்கிறது.

'கடந்த 7 -5 -2011 அன்று தலையங்கம் தீட்டியுள்ள தினத்தந்தி, 'தாவூத் இப்ராஹீம், ஹபீஸ் சயீத், மவ்லானா மசூத் அசார்,மற்றும் பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் முழு ஆதரவில் தான் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கே தெரியாமல் அந்த நாட்டிற்குள் நுழைந்து உஸாமா பின் லேடனின் கதையை முடிக்க அமரிக்காவால் முடிகிறபோது, அண்டை நாடான இந்தியா ஏன் தூங்கிக் கொண்டிருகிறது? நமது நாட்டில் நாச வேலைகளை செய்த இந்த நாசகாரர்களை பிடிப்பதற்கு அமெரிக்காவின் அதே பாணியை நாம் பின்பற்றினால்தான் என்ன? என்பதுதான் மக்களின் இப்போதைய கேள்வி' என்று எழுதியுள்ளது தினத்தந்தி.

தினத்தந்தி இதன் மூலல்ம் சொல்லவருவது, அமெரிக்காவின் பாணியில் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகளை  பிடித்து வாருங்கள் என்பதுதான். தாவூத் இப்ராஹீம் உள்ளிட்டவர்கள் தீவிரவாதிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களை முறைப்படி கைதிகள் பரிமாற்றம் அல்லது குற்றவாளிகள் பரஸ்பரம் ஒப்படைப்பு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேசி இந்தியா கொண்டுவரவேண்டும் என்று தினத்தந்தி கூறினால் அது பாரட்டிற்குரியதாகும். ஆனால், ஒருவன் தனக்கு வேண்டிய பொருள் அடுத்த வீட்டில் பதுங்கியுள்ளது என்று கூறிக்கொண்டு அண்டை வீட்டில் வீட்டாரின் அனுமதியின்றி நுழைந்தான் என்பதற்காக அவன் செய்த அதே முட்டாள்தனத்தை அதாவது யார் வீட்டிலும் யாரும் நுழையலாம் என்ற சித்தாந்தத்தை ஒரு பத்திரிக்கை ஆதரிப்பதுதான் பத்திரிக்கை தர்மமா? இவ்வாறு ஒவ்வொரு நாடும் செய்ய முனைந்தால் உலகம் நிம்மதியாக இருக்குமா? நாடுகள் பாதுகாப்புக்குத்தான் உத்தரவாதம் இருக்குமா? ஒரு பத்திரிக்கையின் எழுதுகோல் எந்த அளவுக்கு  நீதியின் பக்கம் நிற்கவேண்டும் என்பதற்கும்  ஒரு நாடு தவறு தவறு செய்தால் அதை தட்சான்யமின்றி சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்கும் மற்றொரு பத்திரிக்கையையின் தலையங்கத்தையே தினத்தந்தியின் பார்வைக்கு தருகிறோம்.

லிபியாவில் நடந்துவரும் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சிக்கு நடுவே, அப்பாவிகளை கொள்வதாக கூறி லிபியா மீது அநியாய தாக்குதல் நடத்தி வருகிறது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள். இதுகுறித்து தினமணி நாளிதழ் கடந்த மார்ச் 12  அன்று, 'அந்நியர் புகலென்ன நீதி? என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் ஒரு பகுதி கீழே;

''லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?

நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா? என்று நடுநிலையுடன் கேட்கிறது தினமணி.

அமெரிக்காவின் பாணியில் அத்துமீறுவதுதான் வீரம் என்றால், தர்மம் என்றால் காஷ்மீர் உள்நாட்டு பிரச்சினையில், அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதையும் தினத்தந்தி சரியே என தலையங்கம் வடிக்குமா என்பதே சாமான்ய மக்களின் இப்போதைய கேள்வி. எனவே தீவிரவாதிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் கடுகளவும் கடுகின் முனையளவும் சந்தேகமேயில்லை. ஆனால் அதற்கான வழி என்பது நேர்மையானதாக இருக்கவேண்டும். அத்தகைய வழியைத்  தான் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைகள் முன்  வைக்கவேண்டும். அதை விடுத்து குறுக்கு வழியை ஊக்கப்படுத்தி குறுகிய மனப்பான்மையுடன் வெளியிடும் செய்தியை  தினத்தந்தி நிறுத்திக் கொள்வதுதான் அய்யா ஆதித்தனார் அவர்கள், அந்த நாளிதழை  தொடங்கிய நோக்கத்திற்கு  ஏற்றதாக இருக்கும் என்பதை வாஞ்சையுடன் கூறிக்கொள்கிறோம்.


ஊழலின்றி அரசியல் 'நோ';உண்மையை போட்டுடைக்கும் குமாரசாமி!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை அறவே ஒழிப்போம்'. இது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் முழங்கும் வாசகமாகும். ஆனால் எந்த கட்சியும் ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதற்கு அக்கட்சிகளின் மேல் அவ்வப்போது பாயும் ஊழல் வழக்குகளே சான்றாக உள்ளன. தேனை கையில் எடுத்தவன் புறங்கையை  சுவைக்காமல் இருக்கமுடியாது என்பதைப் போல் கோடிகளை கொட்டி செய்யும் அரசியல் வியாபாரத்தில் நியாயமாக கிடைக்கும் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகைகள், சலுகைகளை மட்டும் வைத்து 'லாபகரமான' வியாபாரம் செய்யமுடியாது என்பதால்தான் எத்தனை பூஜ்ஜியங்கள் போடுவது என்று குழம்பும் அளவுக்கு பெருந்தொகை எல்லாம் ஊழல் செய்யப்படுகின்றன. இரும்பைத் தின்று கசாயம்  குடித்தால் சரியாகிவிடும் என்று நினைப்பவர்களைப் போல் ஊழல் செய்துவிட்டு, அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் மக்கள் சேவையாற்றவே அவதாரம் எடுத்ததாக அடுக்குமொழி பேசுகின்றனர் சில அரசியல்வாதிகள். ஆனால் ஊழல் இல்லாமல் அரசியல் செய்ய இயலாது என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் ஒரு அரசியல்வாதி. 
 
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஒரு பேட்டியில்,  ''இன்றைய கால கட்டத்தில் ஊழல் இன்றி அரசியல் செய்வது கஷ்டம். தற்போது அரசியலில் மகாத்மா காந்தி இருந்தாலும் கூட, அவரால் ஊழல் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. அப்படி செய்யாவிட்டால் அரசியலில் இருந்து அவர்  விலக வேண்டியது இருக்கும். கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் பணிகளுக்கு ஊழல் இன்றி ஒன்றும் செய்யமுடியாது. நான் முதல்வராக  இருந்தபோது  அரசு திட்டங்களை திறம்பட நிறைவேற்றினேன். அப்போது ஊழல் எதுவும் செய்ய்யவில்லை. ஆனால் சிலர் எனக்கு சுய விருப்பத்தின் பேரில் நன்கொடை கொடுத்துள்ளனர். அதை கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
 
'கள்ளுக்கடை காசில தாண்டா கட்சிக்கொடி ஏறுது போடா' என்ற பாடலைப் போல் அரசியல் கட்சிகளை இயங்கவைக்கும் எரிபொருள் ஊழல் தான் என்பது குமாரசாமியின் கூற்றில் வெளிப்படுகிறது. இதையும் தான்டி அரசியலில் ஊழல் செய்யாமல் ஒருவர் செயல்பட்டால் அவர் கின்னஸில் இடம்பெறக் கூடியவர்தானோ? 

படித்து விட்டீர்களா? இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் உங்கள் 'சமுதாய மக்கள் ரிப்போர்ட்' வார இதழ்.

குவைத்தில் மக்கள் ரிப்போர்ட் வாங்கிட; 97659759
மக்கள் ரிப்போர்டரை இணையதளத்தில் படித்திட; http://makkalreport-e-paper.blogspot.com/
 
செய்தி வெளியீடு; இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
குவைத் மண்டலம்.


புதன், 18 மே, 2011

முதல்வரின் கோபம் கட்டிடத்தின் மீதா? கோபாலபுரத்தார் மீதா?

மிழக முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, தான் எடுத்த முடிவில் எப்போதும் பிடிவாதமாக இருக்கக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், ஆரம்பத்திலேயே பிடிவாதம் பிடிப்பது அவருக்கு சற்றே மக்கள் மத்தியில் ஒரு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா கடந்தமுறை முதல்வராக இருந்தபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசதிகள் போதாது என்பதால் ராணிமேரி கல்லூரியில் புதிய சட்டமன்றம் கட்ட ஆலோசித்ததும், அதையொட்டி எழுந்த பிரச்சினையால் அதை அவர் கைவிட்டதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
 
அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, தனது ஆட்சியின் இறுதியாண்டில் அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான கோடிகளை இறைத்து, ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய சட்டமன்றத்தை எழுப்பி, அதை பிரதமரை வைத்து திறந்து அதில் தனது பெயரை பதியவைத்து சென்று விட்டார். இந்த புதிய சட்டமன்றத்தில் சட்டசபை கூட்டங்களும் மந்திரிசபை கூட்டங்களும் நடந்தேறியுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர், ''மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயின்ட்ஜார்ஜ்  கோட்டையிலேயே தலைமை செயலகம் செயல்படும் என ஏற்கனவே அறிவித்தபடி, கருணாநிதி அரசால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்து, செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் தனது அமைச்சரவை சகாக்கள் சகிதமாக பணியை தொடங்கிவிட்டார். அதுமட்டுமன்றி அங்கு கருணாநிதியால் நிர்மானிக்கப்பட்டிருந்த  செம்மொழி நூலகத்தை காலிசெய்து அங்கே சட்டசபை நடப்பதற்கான அனைத்து வசதிகளும் போர்கால அடிப்படையில் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வருகின்றன. சட்டசபை நிர்மாணப் பணிகளை செய்வதற்கு அவசர அவசரமாக மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது ஒருபுறம், இப்பணிகள் நிறைவடையாததால் இன்னும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதில் தாமதம் மறுபுறம் இவையாவும் முதல்வர் ஜெயலலிதாவின் பிடிவாதத்தின் விளைவுகள்.
 
புதிய தலைமைச்செயலகம் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் இருக்கும் போது, அதை புறக்கணித்து பழைய அலுவலகத்தில் தான் செயல்படுவேன் என்பது எந்தவகை நியாயம் என்பதை ஜெயலலிதா சிந்திக்கவேண்டும்.  கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட  கட்டடத்தை புறக்கணிப்பது, 'புருஷன் மேல உள்ள கோபத்தை புள்ள மேல காட்டும் தாய்மார்களை போல' என்ற கிராமத்து சொல் வழக்கை நினைவுபடுத்துவதாக உள்ளது. எனவே புதிய தலைமைச்செயலகம் என்பது கருணாநிதியால் கட்டப்பட்டதே தவிர கருணாநிதியின் கைக்காசில் கட்டப்பட்டதல்ல என்று ஜெயலலிதா உணர்ந்தால் நன்று. தலைமைச்செயலகத்தை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் முடிவை வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

திங்கள், 16 மே, 2011

நரேந்திரமோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை இதஜ புறக்கணித்து!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

டந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை,  இன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுக அழைத்திருந்தது. ஆனால், அதில் முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த நரேந்திர மோடி பங்கேற்ற காரணத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த நிகழச்சியினை புறக்கணித்தது.  எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.

அவ்வாறே முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ள அதிமுகவின் தோழமை கட்சியான மமகவும் இந்த பதவியேற்வு விழாவை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ

இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.[அல்-குர்'ஆன்; 5 ;2 ]

வியாழன், 12 மே, 2011

டித்து விட்டீர்களா? இப்போது விற்பனையில் பரபரப்பான செய்திகளுடன் உங்கள் 'சமுதாய மக்கள் ரிப்போர்ட்' வார இதழ்.
குவைத்தில் மக்கள் ரிப்போர்ட் வாங்கிட; 97659759
மக்கள் ரிப்போர்டரை இணையதளத்தில் படித்திட; http://makkalreport-e-paper.blogspot.com/
 
செய்தி வெளியீடு; இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
குவைத் மண்டலம்.

குவைத் இதஜ'வின் வாரந்திர பிரசுரம்! [13-05-2011]

பெரிதாக்கி படிக்க பிரசுரத்தின் மீது கிளிக் செய்க; 

அச்சப்பட்டால் ஆட்சி செய்ய முடியாது; எடியூரப்பா அரசுக்கு உச்சநீதிமன்றம் சாட்டையடி!

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் வளர்ச்சி வான் தொட்டு நிற்கிறது என்று அக்கட்சியினர் பீற்றிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பலவீனமாக ஆட்சி நடத்துபவர்கள் அவர்கள்தான். இதை நாம் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
 
மாநிலத்தின் வளர்சியை கவனத்தில் கொண்டு சில திட்டங்கள் தீட்டப்படும் போது, அதை செயல்படுத்துவதற்காக தனியாருக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். அந்த நிலங்களுக்கு உரியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, அரசு அதை கையகப்படுத்தி தனது திட்டங்களை நிறைவேற்றும். ஆனால் சாதாரண இந்த நில கையகப்படுத்தும் திறமை கூட கர்நாடக பாஜக அரசுக்கு இல்லை என்பதுதான் அவர்களின் ஆளும் திறனுக்கு சான்றாக உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்-மைசூர் இடையே அதிவிரைவு தனிச் சாலை அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டது. தனியார் உதவியோடு 5 செயற்கை கோள் நகரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ரூ.2,500 கோடி மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேறினால் பெங்களூரில் இருந்து மைசூருக்கு 90 நிமிடங்களில் செல்ல முடியும். ஆனால், கடந்த 2004ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டாலும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் சிக்கல் நீடிக்கிறது. நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
 
இந்த நிலையில், நிலத்தை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு ஆர்வமின்றி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் போது,  கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மாநில அட்வகேட் ஜெனரல் ஹர்னகள்ளி தாக்கல் செய்த அறிக்கையில், ''கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணியில் சிக்கல் உள்ளது. விவசாயிகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம். இது போன்ற விவகாரங்கள் மிகவும் உணர்வுப் பூர்வமானவை' என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ''உங்களால் (கர்நாடக அரசு) நிலத்தை ஏன் கையகப்படுத்த முடியாது? சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்ற கேள்வி இங்கே ஏன் எழுகிறது? நீங்கள் அச்சப்பட்டால் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் பயப்பட்டால் உங்களால் உயிர் வாழ முடியாது.
அடிப்படை வசதியான சாலை அமைப்பதற்கு கூட நிலத்தை கையகப்படுத்த முடியாது என மாநில அரசு ஒப்புக்கொள்வது ஆச்சரியம் அளிக்கிறது.  இது பொது விவகாரம். அதிகாரத்தில் இருந்து கொண்டு எந்த பணிகளையும் அரசு செய்யவில்லை. இதனால், 'கோமா' நிலையில் இருப்பது போன்று நீங்கள் காணப்படுகிறீர்கள் என்று சாடியுள்ளனர்.
 
ஏற்கனவே நில மோசடி புகார் எதிரொலியாக முதல்-மந்திரி எடியூரபபாவின் மகனும், மகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை திருப்பி கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து எடியூரப்பாவின் உறவினர்கள் இருவர் பெங்களூர் வளர்ச்சி ஆணையம் மூலம் தாங்கள் பெற்ற நிலத்தை திருப்பி ஒப்படைத்தனர். அரசு நிலத்தை மகனுக்கும்-மகளுக்கும்- உறவினர்களுக்கும் கையளிக்கத் தெரிந்த எடியூரப்பாவிற்கு, மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்த தெரியவில்லை. இந்த இயலாமையால் உச்சநீதிமன்றத்தின் சரமாரி விமர்சனத்திற்கு இவரது அரசு ஆளாகியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ''என்னமோ உச்சநீதிமன்றம் என்னை மட்டும் தான் குறை சொன்னதுமாதிரி சொல்றீங்க; எங்க மோடியையும் தான் 'நவீன நீரோ மன்னன்'ன்னு விமர்சனம் பண்ணுச்சு. இதெல்லாம் அரசியலல்ல எங்களுக்கு சாதரணமப்பா' என்று எடியூரப்பா சொன்னாலும் சொல்லலாம். இந்த லட்சணத்துல தேச பக்தியில் எங்களை மிஞ்ச ஆள் உண்டான்னு வெற்றுக் கூச்சல் வேறு.

எங்களின் வன்முறையை காட்சிப் பொருளாக்குவதா? குதிக்கும் இந்துமுன்னணி!

தீபாவளியும் பொங்கலும்  தமிழகத்தில் பெரும்பான்மை இந்து சமுதாய மக்கள் பிரதானமாக கொண்டாடும் பண்டிகைகளாகும். இந்த பண்டிகைகளில் மக்களுக்கு எந்த பயமும் இல்லை. மாநிலத்தில் எந்த பதற்றமுமில்லை. இன்னும் சொன்னப்போனால் இதுபோன்ற  பண்டிகை காலங்களில்  முஸ்லிம்களுக்கும் இந்து சமுதாய மக்களுக்கும் மத்தியில் பரஸ்பரம் விருந்தோம்பல்  முறை கூட இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் நடப்பதை காணலாம். அந்த அளவுக்கு எவ்வித மோதலும் இன்றி இந்த பண்டிகைகள் நடந்தேற, மோதலுக்கென்றே உருவாக்கப்பட்டதோ என எண்னும் வகையில், இந்துத்துவாக்கள் முனைப்புடன் கொண்டாடும்  ஒரே விழாவான விநாயகர் சதுர்த்தி மட்டும் அமைந்து விடுவதை பார்க்கிறோம்.
 
விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே அரசுக்கும் மக்களுக்கும் பதற்றம். காவல்துறை குவிப்பு; சொல்லி வைத்ததுபோல் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் மோதல்கள். இவையாவும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா காட்சிகள். இதற்கு காரணம் மாற்றுப்பாதை இருந்தாலும் அதை புறந்தள்ளி, முஸ்லிம்கள் வசிக்கும் தெரு வழியாகவோ, அல்லது பள்ளிவாசல் அமைந்துள்ள தெரு வழியாகவோ தான் ஊர்வலம் செல்வேன் என அடம்பிடிப்பதும், 'பத்து காசு முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு' போன்ற கோஷங்களை எழுப்புவதும், ஊர்வலத்தில் செல்பவர்கள் முஸ்லிம் பெண்களிடம் அனாகரிகரிகமாக நடந்து கொள்வதும், தட்டிக்கேட்டால் முஸ்லிம்களையும் வீடுகளையும் கடைகளையும் தாக்குவதும் ஆங்காங்கே நடந்தாலும் முத்துபேட்டை இதற்கு முக்கிய முதல் சான்றாக திகழ்கிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தை  எதிர்த்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். திரைப்படத்தில் மதத்தை இழிவு படுத்தும் வகையில் ஏதேனும் காட்சிகள் இருந்தாலோ, அல்லது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் காட்சிகள் இருந்தாலோ அதை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடப்பதும், அந்த படத்தை தடை செய்ய கோருவதும் வழக்கமாக அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுதான். ஆனால் இந்துமுன்ன்னணி ஆர்ப்பாட்டடம் செய்ததற்கு சொல்லும் காரணம்,   ''படத்தில் ஒரு காட்சியில் விநாயகர் ஊர்வலத்தில்  இந்து மதத்தை சேர்ந்தவர்கள் முஸ்லிம் குடும்பத்தை தாக்குவதுபோல் காட்சியமைக்கப்பட்டு உள்ளது. இந்த காட்சியால் இந்துக்கள் மனம் புண்பட்டுள்ளது. இரு மதத்து நல்லுறவையும் பாதிக்கும் நிலையிலும் இக்காட்சியமைந்துள்ளது. இதை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்கிறது.
 
படத்திலிருந்து ஒரு காட்சியை நீக்கவேண்டுமெனில் அக்காட்சி புனையப்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால் இந்து முன்னணி நீக்க சொல்லும் காட்சி என்பது அவர்கள் விநாயகர் ஊர்வலத்தில் இதுவரை செய்யாத ஒன்றா? 02.09.09-ல் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின் போது, ஊர்வலப் பாதையில் இருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மசூதி மற்றும் கடைகளும் தாக்கப்பட்டன என்பதை மறுக்குமா இந்துமுன்னணி? இது சாம்பிள்தான். விநாயகர் ஊர்வலத்தின் பெயரால் அமைதியான தமிழகத்தில் இந்துத்துவாக்கள் செய்த அட்டூழியங்களின் பட்டியல்கள் அடுக்கடுக்காக உள்ளன. அவசியப்பட்டால் வெளியிடுவோம். ஆக இவர்கள் செய்த வன்முறையை படத்தில் காட்டினால் அதை எதிர்த்து போராட்டமாம். ஆனால் மும்பை கலவரத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்க, பால்தாக்கரேயின் எழுதுகோலே மும்பை கலவரத்திற்கு காரணம் என்று நீதியரசர் கிருஷ்ணா அவர்களின் விசாரணை அறிக்கை கூறிக்கொண்டிருக்க, இந்த உண்மையை மறைத்து முஸ்லிம்களே முன்னின்று கலவரத்தில் ஈடுபடுவதாக மணிரத்தினம் எனும் அவாள் 'பம்பாய்' எனும் படத்தில் காட்டினாரே! அப்போது இரு சமுதாய நல்லிணக்கம் கெடும் என்று அக்காட்சியை நீக்க சொன்னதா இந்து முன்னணி? இதன் மூலம் தெரிவது என்ன? நாங்கள் செய்தததாகவே இருந்தாலும் அதை படத்தில் காட்சியாக வைக்கக்கூடாது. ஆனால் முஸ்லிம் செய்யாத ஒன்றாகினும்  அதை நாங்கள் காட்சியாக்கி காசாக்குவோம் என்பதுதானே. நல்ல கொள்கைதான் போங்கள்.

மதானி வலையில் சிக்க மறுக்கும் 'ஜாமீன்'

'நானும் எல்லா மீண் மார்க்கெட்டிலயும்  விசாரிச்சுட்டேன். நெத்திலி மீனு இருக்குன்றான்; நெய் மீனு இருக்குன்றான்; வஞ்சிரம் மீனு இருக்குன்றான்; வாலை மீனு இருக்கின்றான் ஆனால் 'ஜாமீன்' மட்டும் இல்லன்னே என்று வரும் ஒரு காமெடி காட்சி போல யார் யாருக்கோ கிடைக்கும் ஜாமீன் மதானிக்கு மட்டும் வலையில் சிக்க மறுக்கிறது.
 
பத்தாண்டுகால சிறைவாசத்திற்கு பின் குற்றமற்றவராக கோவை சிறை மீண்ட மதானியை லபக்கென பிடித்து நீதிமன்றக் காவலில்  வைத்தது கர்நாடக பாஜக அரசு. பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் சூரத், ஆமதாபாத், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள மதானி, தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் அளிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த பிப்ரவரியில் விசாரித்த உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. மதானிக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அளிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மதானி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனு 4 -5 -11 புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான சுதா மிஸ்ரா ஆகியோர் விசாரித்தனர். மதானி சார்பில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும், கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் அந்தியர்ஜுனாவும் ஆஜராகி வாதிட்டனர்.

"மதானி, கேரளத்தில் பிரபலமான அரசியல் தலைவர். அவர் ஒரு மனித உரிமை ஆர்வலரும்கூட. அவர் மீதான கர்நாடக அரசின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல், வகுப்பு உள்நோக்கமுடையது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.' என்று சாந்தி பூஷண் வாதிட்டார்.

கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் அந்தியர்ஜுனா இதை கடுமையாக எதிர்த்தார். "மதானிக்கு பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்பிருக்கிறது. இதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. அவருக்கு ஜாமீன் அளிப்பது மாநில, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என்று கூறினார்.

இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, மதானி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. அவருக்கு ஜாமீன் வழங்கினால் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. விநாயக் சென்னுக்கு செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால் மதானிக்கு ஜாமீன் வழங்குவதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன்' என்றார்.

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் இந்தக் கருத்துக்கு வழக்கறிஞர் அந்தியர்ஜுனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "விநாயக் சென்னுடன் மதானியை எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது. இருவர் மீதான வழக்குகளும் முற்றிலும் மாறுபட்டவை. விநாயக் சென்னுக்கு இந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது நாம் அனைவரும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தோம். ஆனால் மதானிக்கு ஜாமீன் அளித்தால் மகிழ்ச்சியோ, பெருமையோ அடைய முடியாது. ஏனென்றால் 100-க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளவர் அவர். இதனால் அவருக்கு எக்காரணத்தை முன்னிட்டும் ஜாமீன் வழங்கக்கூடாது' என்றார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்தை நீதிபதி ஞான சுதா மிஸ்ராவும் ஏற்கவில்லை. அவரும் எதிர்ப்பு தெரிவித்தார். மதானி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரத்தை அளித்துள்ளது கார்நாடக அரசு. இதில் அவருக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரமும் அடங்கும். அவருக்கு ஜாமீன் அளித்தால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது ஏற்புடையதுதான். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்குவது சரியான முடிவாக இருக்காது என்றே கருதுகிறேன்' என்றார்.

இவ்வாறு மதானிக்கு ஜாமீன் வழங்குவதில் நீதிபதிகளிடையே ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இதனால் இருவரும் ஜாமீன் மனுவை வேறொரு பெஞ்சின் விசாரணைக்கு உட்படுத்துமாறு தலைமை நீதிபதி கபாடியாவுக்கு பரிந்துரைத்ததாக செய்திகள் கூறுகின்றன. மதானியின் இந்த வழக்கு விசயத்தில் அவருக்கு ஜாமீன் மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஏனெனில் கர்நாடக அரசு கூறும் குற்றச்சாட்டுகளில் மதானி ஜாமீன் மறுக்கப்படும் அளவுக்கு முதல் குற்றவாளியல்ல. அவர் 28 வது குற்றவாளியே. மேலும் நூற்றிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு இதுவரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதே இல்லையா? மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி  6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுவிக்கவில்லையா? ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவருக்கே ஜாமீன் வழங்கியிருக்கும்போது, வெறுமனே குற்றம் சாட்டப்பட்டுள்ள  கைதியாக உள்ள மதானிக்கு ஜாமீன் மறுப்பது எந்தவகை நியாயம்? மேலும் அவருக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரம் கர்நாடக அரசால் வழங்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்  நீதிபதி ஞான சுதா மிஸ்ரா. நீதிபதியின் கூற்றை சரியென்றே கொண்டாலும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் விசயத்தில் உச்சநீதிமன்றத்தின் நிலை  என்ன? "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறிருக்க வெறுமனே தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் மதானிக்கு தொடர்பு என்ற காரணம்  காட்டி, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கதை கட்டி  ஜாமீன் மறுப்பது எந்தவகை நீதி? நீதிமான்களுக்கே வெளிச்சம்.

'புஸ்'வானமான புகார்கள்!

தேர்தல் பிரசாரத்தின் போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் எதிரணியில் உள்ள அரசியல் கட்சியை நார்நாராக கிழித்தது. இதில் தனிப்பட்ட விமர்சனம் செய்ததாக மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மீது தேர்தல் கமிஷனிடம் புகார் வந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முதல்அமைச்சர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததாக தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டது.
அதேபோன்று துணை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதாக அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் கூறப்பட்டது.
 
இந்த புகார்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த்  தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசிற்கு 3 பேரும் தேர்தல் கமிஷனுக்கு விளக்க கடிதம் அனுப்பினார்கள். அந்த விளக்க கடிதங்களை தமிழக தேர்தல் கமிஷன் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தன. அந்த விளக்கங்களை தலைமைதேர்தல் கமிஷனர் குரேஷி மற்றும் 2 தேர்தல் அதிகாரிகள் 3 தலைவர்களின் விளக்கத்தினை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த விளக் கங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேர் மீதும் கூறப்பட்ட தனிப்பட்ட விமர்சன புகார்கள் தொடர்பாக மேல்நடவடிக்கை எடுப்பது இல்லை என மத்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்து இந்த முடிவு பற்றி தமிழக தேர்தல் கமிஷனுக்கு மத்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கும் தெரிவித்து உள்ளது. 
பெரிய தலைவர்கள் சமந்தப்பட்ட பெரிய அளவிலான புகார்களே 'புஸ்'வானமான  பின், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதியப்பட்ட சுமார் 62 ,000௦௦௦ வழக்குகளின் ஆயுள் கெட்டியாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளதாக தெரிகிறது.


'நச்'சுன்னு ஒரு கேள்வி!
காங்கிரஸ் எம்.எல்.ஏ.  ஹசன் அலி பத்திரிக்கை பேட்டி ஒன்றில்; ''இன்று தமிழருக்கு வரிந்து கட்டி வரும் சீமான் போன்றவர்களை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். இலங்கை காத்தான்குடியில் முஸ்லிம்களை கொன்று குவித்த போது, தமிழர்களுக்கு உதவிய ராஜீவை மனித வெடிகுண்டு மூலம் கொன்ற போது, இலங்கை தமிழர் தலைவர்கள், அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன் உள்ளிட்டோர் புலிகளால் கொல்லப்பட்ட போது, இந்த சீமான் எங்கே சென்றார்?


அமெரிக்காவின் அடிச்சுவட்டில் முதல்வரின் அறிக்கை?

மெரிக்க அதிரடிப் படையால் உஸாமா பின் லாதின் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதையொட்டி முதல்வர்  கருணாநிதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதை படிக்கும்போது ஒபாமா எழுதிக் கொடுத்த அறிக்கையை இவர் கையெழுத்திட்டு வெளியிட்டு விட்டாரோ  என எண்ணத் தோன்றும் அளவுக்கு அதில் உள்ள அம்சங்கள் அமைந்துள்ளன.
 
சின்னஞ்சிறு குழந்தையும் உஸாமா கொல்லப்பட்ட விஷயத்தில் அமெரிக்காவின் கூற்றை சந்தேகம் கொண்டு பார்க்கும் நிலையில்,  ''ஒசாமா பின்லேடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின் இன்று இல்லை. ஆம்; 40 நிமிடங்களில் அவரது கதை முடிந்து விட்டது. அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஆணித்தரமாக கூறுகிறார் முதல்வர். முதல்வர்  ஒருவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து வருமாறு  தனது அதிகாரத்திற்குடபட்ட காவல்துறைக்கு உத்தரவிடுகிறார். அந்த காவல்துறை அதிகாரி சிறிது நேரத்தில் முதல்வரிடம் வந்து,
அய்யா! நீங்கள் சொன்ன அந்த ஆளின் கதையை முடித்து விட்டேன் என்கிறார். உடனே முதல்வர் 'எங்கய்யா அந்த ஆளோட புகைப்படத்தை என்கிறார்.  
அந்த அதிகாரி, அய்யா! அந்த புகைப்படம் ரெம்ப கோரமாக இருக்குது. அதனால் உங்களிடம் காட்டமாட்டேன் என்கிறார்.
எங்கய்யா பிணத்தை என்று கேட்கிறார் முதல்வர். அய்யா! அவனது மதப்படி 24 மணிநேரத்துல புதைக்கணும்; அதுனால நான் மெரீனா கடலுக்குள்ள தூக்கி போட்டுட்டேன் என்கிறார். இப்படி ஒரு அதிகாரி முதல்வரிடம் சொன்னால், அதை முதல்வர் ஏற்று, நீ அந்த ஆளை கொன்றது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்வரா? அப்படி ஏற்றுக் கொள்வதுதான் ஆளுமைத் திறனா என்று கேட்கத் தோன்றுகிறது.
 
மேலும் ''சவுதி அரேபிய அரசு அவருக்குத் தடை விதிக்கவே, சூடானில் அடைக்கலம் புகுந்தார் பின்லேடன். நைரோபி, கென்யா, தான்சானியா உள்பட பல இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும், அமெரிக்காவிலும் 'அல் கய்தா''அமைப்பு குண்டு வெடிப்பை நடத்தியது. சூடானில் இருந்தும் நாடு கடத்தப்பட்ட பின்லேடன், ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்து, அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப்போர் என அறிவித்தார் எகிறார் முதல்வர்.''
 
முதல்வர் உஸாமாவின் வரலாற்றை  இன்னும் கொஞ்சம் புரட்டுவது நன்று. உஸாமா ஆப்கான் வந்ததற்கு பிரதான  காரணம் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளை விரட்டவே என்பதை முதல்வர் அறியவில்லையா? சோவியத் படை விரட்டப்பட்ட பின் அங்கே தாலிபான்கள் தலைமையில் ஒரு ஆட்சியை உஸாமா உருவாக்கி நடத்திவரும் வேளையில், தலிபான்களின் ஆட்சியில் இஸ்லாமிய அடிப்பையிலான சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை  கண்ட அமெரிக்கா, எங்கே ஒரு முழுமையான  இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சியாக ஆப்கான் அரசு மாறிவிடுமோ என்ற குறுகிய சிந்தனையின் வெளிப்பாடுதான் இரட்டைக் கோபுர தாக்குதலும் அதையொட்டிய ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போரும் என்பதும் முதல்வர் அறியாதது ஆச்சர்யமே.
 
அடுத்து அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணம் உசாமாதான் என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்காவே இன்றுவரை சமர்ப்பிக்காமல் வெற்று செய்திகளின் மூலம் ஆப்கான் மீது போர் தொடுத்த நிலையில், ''நியூயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடம் பின்லேடனின் சதித்திட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது'' என்று திட்டவட்டமாக முதல்வர் கூறுகிறார். அமெரிக்க எல்லைக்குள் அந்நிய நாட்டு எறும்பு ஊர்ந்தாலும் அது எங்கள்  கண்களுக்கு தெரியாமல் போகாது என மார்தட்டும் அமெரிக்காவில் புகுந்து அந்த நாட்டு விமானங்களையே கடத்தி இந்த தாக்குதல் தொடுப்பது சாத்தியமே என்கிறாரா  முதல்வர்? அதுவும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகனை தாக்கும் அளவுக்கு உஸாமா வலிமையானவர் என்றும், அமெரிக்கா பலவீனமான நாடு என்றும் முதல்வர் ஒப்புக்கொள்வாரா?  
 
அடுத்து, உஸாமா கொல்லப்பட்டதை  உலக நாடுகளில் பெரும்பாலானவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன என்கிறார் முதல்வர். உலகத்தில் உள்ள எந்தனை நாடுகள் உஸாமா கொல்லப்பட்டதை  வரவேற்றன? அமெரிக்காவின் நேச நாடுகளும், அமெரிக்காவின் நட்பு பேணும் சில  முஸ்லிம் நாடுகளும் வரவேற்று உள்ளன. இவர்கள்தான் முதல்வர் பார்வையில் பெரும்பான்மை நாடுகளா?  
 
''வரலாறு தனது வரிகளை இரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்திற்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதனைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை'' என்று பின்லேடனின் ஆசிரியர் தந்த போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலைநிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின்லேடன், தன் கையில் எடுத்த கருவிதான் ''பயங்கரவாதம்'' என்கிறார் முதல்வர். ஒசாமாவிற்கு இத்தகைய துர்போதனை செய்த ஆசிரியர் யார் என்றோ, அவரை பற்றிய குறிப்பையோ மறந்தும் கூட முதல்வர் சொல்லவில்லை என்பது ஆச்சர்யமே. 
 
''கத்தியைக் கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்'' என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடனின் வாழ்க்கை என்றும் கூறுகிறார் முதல்வர். ஒரு அமெரிக்க எதிர்ப்பாளரை அதுவும் ஈராக் நாட்டின் மீது இருமுறை படையெடுத்து பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த அமெரிக்காவை எதிர்க்க, பாலஸ்தீன மக்களை கொல்லும் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவை எதிர்க்க நிராயுதபாணியாய் ஆக்கப்பட்ட  முஸ்லிம்களுக்கு ஆதரவாக இறங்குவதுதான் பயங்கரவாதமா? உஸாமாவின் தாக்குதல்கள் என்று கூறப்படுபவை அனைத்தும் அமெரிக்காவிற்கு எதிரானவையேயன்றி  ஒட்டுமொத்த உலகத்திற்கும் எதிரானவை அல்ல என்பதை ஊன்றி கவனித்தால் உண்மை விளங்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கபலமாக  நிற்பதுதான் சர்வதேச தீவிரவாதம் என்றால் முதல்வர் ஆதரிக்கும் புலிகள் எந்தவகையை சேர்ந்தவர்கள் என்பதை முதல்வர் கூறுவாரா? உஸாமா அமெரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டதால் கத்தியால் வந்த வினை என்றால் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டதையும் இவ்வாறே கூறுவாரா முதல்வர்?
 
இறுதியாக அமெரிக்கா தனக்கு தேவைஎன்றால் ஒருவரை ஊட்டச்சத்து கொடுத்து  உருவாக்கும்; தனக்கு தேவைஇல்லைஎன்றால் அவரையே தீவிரவாதியாக உலகுக்கு அடையாளம் காட்டி கதையை முடிக்கும் என்பதற்கு சதாம்களும், உசாமாக்களும் உதாரணமாக திகழ்கிறார்கள். எனவே, ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ, ஒரு நாட்டிற்கோ தீவிரவாத சான்றிதழ் அமெரிக்கா வழங்கிவிட்டால் அதுதான் உண்மை என நம்புவது பகுத்தறிவு பாதையில் வந்ததாக கூறிக்கொள்ளும் முதல்வருக்கு அழகா என்பதை அவரே தீர்மானிக்கட்டும்.

சோதனை மேல் சோதனை; மக்கள் ஆசி வேணும்- மோடி புலம்பல்!

 2002-ம் ஆண்டில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பையடுத்து நிகழ்த்தப்பட்ட முஸ்லிம் இன சுத்திகரிப்பு கலவரம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், மோடி மீது புதிதாக சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதன் பின்னணியில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்  மோடி.
குஜராத் மாநிலம் பொன்விழாவை நிறைவு செய்து, 51-ம் ஆண்டு  நிகழ்ச்சியில் பேசிய மோடி, ''கடந்த ஓராண்டாக எனக்கு எதிரான பல்வேறு சதிகள் நடைபெற்றபோது நான் அமைதியாகவே இருந்தேன். எனக்கு தொல்லை கொடுக்க வேண்டுமென்று பல்வேறு பிரச்னைகளைக் கிளப்பினர். மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் எனக்கு எதிராக ஏவி விட்டு வருகிறது.  வரும் காலத்தில் இப்போதுள்ள சோதனைகளை விட மேலும் பல சோதனைகளுக்கு நான் ஆளாக நேரிடும். இதனை எதிர்கொள்ள மக்களின் ஆசி தேவை. நமக்கு எதிராக அநீதி நடக்கும்போது அதனை பொறுத்துக் கொண்டிருப்பதும் கூட குற்றம்தான். இனியும் குஜராத் அதனை பொறுத்துக் கொள்ளாது என கூறியுள்ளார்.
இதன் மூலம் குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு  விஷயத்தில் மோடிக்கு எதிராக  மத்திய அரசு தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டும் மோடி, தனக்கு ஆதரவாக மக்களின் உதவியை நாடியுள்ளார். அதோடு தனக்கு ஒரு சோதனை என்றால் குஜராத் அதை பார்த்துக் கொண்டிருக்காது என்று கூறுவதன்  மூலம், ஒருவேளை சஞ்சீவ் பட்டின் அபிடவிட் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மோடி கைது செய்யப்பட்டால், மீண்டும் ஒரு கலவரத்தை சந்திக்க நேரும் என்று அரசை மிரட்டும் தொனியிலேயே மோடி இவ்வாறு கூறியதாக கருதுகிறார்கள் நடுநிலையாளர்கள். மராட்டிய மாநிலத்திலிருந்து குஜராத் எனும் தனி மாநிலம் அமைவதில் பாராட்டி உயிர்நீத்தவர்களில் முஸ்லிம்களும் அடங்குவர். அத்தகைய சமுதாயத்தை சொந்த மாநிலத்தில் அகதிகளாக ஆக்கிய சாதனை புரிந்த மோடி, இவ்வாறு மிரட்டும் தொனியில் பேசுவது குற்றவாளிகள் எல்லாம் கோபுரத்தில் இருந்தால் இப்படித்தானோ என எண்னும் வகையில் உள்ளதை மறுக்கமுடியாது.  

கடல் முற்றுகை போராட்டம்; பாஜகவின் 'தமாஷ்'

மிழக முதல்வர் வீடு முற்றுகை, மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முற்றுகை, உள்துறை  அமைச்சர் வீடு முற்றுகை,  இவ்வாறு பிரச்சினையோடு சம்மந்தப்பட்ட நபர் அல்லது சம்மந்தப்பட்ட இடம் முற்றுகை என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் மதவாத பாஜகவோ சம்மந்தமில்லாமல் ஒரு இடத்தை அதாவது கடலை முற்றுகையிடப் போகிறதாம். ''தமிழக மீனவர்களை தாக்கப்படுவதை கண்டித்து பாரதீய ஜனதாக கட்சி சார்பில் மே மாதம் கடல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது இன்று நேற்றல்ல. தொன்று தொட்டு நடந்து வருகிறது. மீனவர் மீதான தாக்குதலை தடுக்க முன்பு ஆண்ட பாஜகவாகட்டும் இன்று ஆளும் காங்கிரஸ் ஆகட்டும், தமிழக ஆட்சியாளர்களாகட்டும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையே. ஒரு மீனவர் கொல்லப்பட்டால் உடனே முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், தமிழ் ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதும் பின்பு அந்த பிரச்சினையை அடுத்த மீனவர் சிங்களரால் கொள்ளப்படும் வரை மறந்துவிடுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இதை மாற்றி மத்திய மாநில அரசுகள் தமது கடும் முயற்ச்சியின் மூலம் மீனவர்கள் நலன் காக்கப்பட ஆவன செய்யவேண்டும் என்பதிலும், மீனவர்களை கொல்லும் சிங்கள அரசை வன்மையாக கண்டிக்கவேண்டும் என்பதிலும் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
 
அந்தவகையில் மீனவர்களை கொள்ளும் சிங்கள அரசை கண்டிக்க நினைக்கும் பாஜகவின் முடிவு வரவேற்க தக்கது. ஆனால் அதற்கு என்ன செய்யவேண்டும்? இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தி தமது எதிர்ப்பை பதிவு செய்தால் அதில் அர்த்தமிருக்கும். அல்லது அங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காது எனில், எங்கு போராட்டம் நடத்த அரசு அனுமதிக்குதோ அங்கு நடத்துவது ஒருவகை. ஆனால் சம்மந்தமில்லாமல் கடலை போய் முற்றுகையிடுவேன் என்பது எந்தவகை அறிவுடமை? கடலா மீனவர்களை தாக்கியது? மீனவர் பிரச்சினையை வச்சு பாஜக  காமெடி கீமடி பண்ணலையே!

உஸாமாவின் மரணத்தை மக்கள் நம்பவில்லை; கருத்துக்கணிப்பு முடிவு!

ஸாமா  பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆன்-லைன் மூலம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 66 சதவீத பாகிஸ்தான் மக்கள், பின்லேடன் கொல்லப்பட்டதை நம்ப வில்லை என்று கூறி உள்ளனர்.
 
கருத்து கணிப்பில் கலந்து கொண்ட 75 சதவீதம் பேர், பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தியதை ஏற்கவில்லை. 2001-ம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பின்லேடன் என்பதை 25 சதவீதம் பேர் மட்டுமே நம்புவதாக கூறியுள்ளது. 

சிங்கத்தின்[உஸாமா] மரணமும்; சீறிப்பாயும் கேள்விகளும்!

ன்ன! தலைப்பை பார்த்த உடனே உஸாமாவை 'சிங்கம்' என்றெல்லாம் புகழ்கிறார்களே என்று எண்ணி விட்டீர்களா? நாம் அவரை புகழவில்லை. அவரது பெயரின் தமிழாக்கம் தான் அது. இறைவன் அவரது பெயரிலேயே வீரத்தை அமைத்து விட்டான். இப்ப விசயத்திற்கு வருவோம். 

என்னைக் காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள் என்று காட்டு பகுதியிலிருந்து  தலை தெறிக்க ஓடி வந்தான் ஒருவன். அவனிடம் விசாரித்தபோது என்னை புலி விரட்டி வருகிறது என்றான்,. மக்களும் அவன் சொன்ன  பகுதியில் சென்று பார்த்து விட்டு புலி எதுவும் இல்லை என திரும்பினார்கள். மக்களை பார்த்து சிரித்தான் அவன். ஏன் சிரிக்கிறாய் என வினவியவுடன், 'நான் உங்களை ஏமாற்ற பொய் சொன்னேன் என்றான். மீண்டும் சில தினத்தில் அவனே காப்பாற்றுங்கள் என்ற கூவலோடு ஓடிவந்தான். இவன் பொய்யன்  என்பதால் மக்களும் அவன் சொன்னதை நம்பி உதவிக்கு செல்லவில்லை. இறுதியில் உண்மையிலேயே புலியால் தாக்கப்பட்டு அவன் செத்தான் என்று சிறார்களுக்கு கதை சொல்வதை நாம் கேட்டிருப்போம். அதுபோலத்தான் உஸாமா விசயத்தில் அமெரிக்காவின் நிலையும் உள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன் உஸாமா வேட்டையை தொடங்கிய அதிபயங்கரவாதி அமெரிக்கா, உஸாமா கொல்லப்பட்டுவிட்டார் என பலமுறை சொன்னது. ஆனாலும் இப்போது அதிபர் அறிவித்தது போல் உறுதியாக அறிவிக்காமல் செய்தியை பரப்பியது. உஸாமா கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா கூறிய அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் 'அமெரிக்கா மீது புனித போர் அறிவித்து உஸாமா ஒலிநாடா வெளியிட்டார் என்று செய்தி வெளியாகும். இவ்வாறான குழப்பத்தினால் உஸாமா, பாகிஸ்தானில் உள்ள அப்போதாபாத்தில் வைத்து அமெரிக்கா காமாண்டோ படையால் கொல்லப்பட்டு விட்டார் என்று ஒபாமா உறுதியாக அறிவித்தாலும்  அவரது அறிவிப்பை பெரும்பான்மை மக்கள் இந்த நொடி வரை சந்தேகத்துடனே பார்க்கின்றனர். இதற்கு மற்றொரு காரணம் உஸாமா மரணம் குறித்த அமெரிக்காவின் முன்னுக்குப் பின் முரணான சந்தேகத்திற்குரிய தகவல்கள்.

ஆரம்பமே அபத்தம்;

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள அப்போதாபாத் எனும் நகரில் மக்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக உஸாமா தனது ஒன்று- இரண்டு- மூன்று மனைவிகளுடன் பல பிள்ளைகளுடனும் வசித்து வந்தார் என்று கூறுகிறது அமெரிக்கா. ஒரு காட்டுக்குள் தனிகாட்டு ராஜாவாக வலம் வந்த  சாதாரண சந்தனக் கடத்தல் வீராப்பன் கூட தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒரு இடத்தில் வசிக்காதபோது, தனது ஜாகையை அவ்வப்போது மாற்றி தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநில அதிரடிப்படைக்கு பல ஆண்டுகள் அல்வா கொடுத்திருக்கும் போது, அமெரிக்கவால் 25 மில்லியன் டாலர் தலைக்கு விலை வைக்கப்பட்டுள்ள தேடப்படும் குற்றவாளியான உஸாமா, மக்கள் வசிக்கும் பகுதியில் மனைவி மக்கள் சகிதமாக ஐந்தாண்டுகள் ஒரே வீட்டில் வசித்தார் என்பது அறிவுக்கு பொருந்துகிறதா? இதுதான் உண்மை என்று அமெரிக்கா கூறுமானால் பாகிஸ்தானில் நினைத்த நேரத்தில் மாமியார் வீட்டில் நுழைவது போல் நுழைவதும், நினைத்தவுடன் பாகிஸ்தான் பகுதிகளில் விமானத்தாக்குதல் தொடுப்பதும் என்று ஏறக்குறைய தனது நாடுபோல் பாகிஸ்தானை கையாண்ட அமெரிக்காவிற்கு உஸாமா ஐந்தாண்டுகள் ஒரே இடத்தில் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உஸாமா விசயத்தில் தனது தோல்வியை ஒத்துக் கொள்ளத் தயாரா?  

அடுத்த நாட்டுக்குள் திருடனாய் நுழைந்த அமெரிக்கா;

அமெரிக்காவின் கூற்றுப்படி அப்போதாபாத் வீட்டில் உஸாமா இருந்ததை ஒரு பேச்சுக்கு சரிகன்டாலும், அமெரிக்கா செய்யவேண்டியது என்ன? பாகிஸ்தான் அரசுடனும், இராணுவத்துடனும் இந்த விஷயத்தை பகிர்ந்து அவர்களின் அனுமதியுடன் அல்லது அவர்களின் ஒத்துழைப்புடன் உஸாமா தங்கியிருந்த இடத்தில் தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும். ஆனால் உலக ஜனநாயகம் பேசும் அமெரிக்கா, பாகிஸ்தான் நாட்டிற்கும் ராணுவத்திற்கும் தெரியாமல் கள்ளத்தனமாக பாகிஸ்தானுக்குள் ஹெலிகாப்டர் மூலம் நுழைந்து தாக்குதல் தொடுத்து உஸாமாவை  கொன்றது பாகிஸ்தானின் இறையாண்மையை காலில் போட்டு மிதிப்பது போலவும், நான் நினைத்த நாட்டில் நினைத்த நேரத்தில் நுழைய எவரிடத்திலும் அனுமதி கேட்கவேண்டியதில்லை என்ற அமெரிக்காவின் ஆணவமும் இதில் வெளிப்படவில்லையா? அமெரிக்காவின் இதே பாணியில் ஒவ்வொரு நாடும் தான் தேடும் தீவிரவாதிகள்  அடுத்த நாட்டில் இருக்கிறார்கள் என கருதி  அத்துமீறி நுழையத் தொடங்கினால் எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியுமா? உதாரணத்திற்கு இந்தியாவில் போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான வாரன் ஆண்டர்சனை அமெரிக்கா பாதுகாத்து வைத்துள்ளது. அவரை மீட்கிறேன் என்ற பெயரில் இந்திய அதிரடிப்படை அமெரிக்காவில் அத்துமீறி நுழைந்து  தாக்குதல் தொடுத்தால் அதை அமெரிக்கா அங்கீகரிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது. அப்படியானால் அமெரிக்காவிற்கு ஒரு நீதி? மற்ற நாடுகளுக்கு ஒரு நீதியா? ஒரு நாட்டிற்குள் மாற்றொரு நாடு நுழைந்து தாக்குதல் தொடுக்கக் கூடாது என்பதற்காகத் தானே, நாடுகளுக்கு மத்தியில் குற்றவாளிகள் பரிமாற்றம் ஒபபந்தம் செய்யப்படுகிறது. அமெரிக்கா  பாணியை எல்லா நாடுகளும் கடைபிடிக்க தொடங்கினால் இந்த ஒப்பந்தங்கள் அவசியமில்லையே? மேலும் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது குறித்து நாங்கள் மன்னிப்பு கேட்கமாட்டோம் என்று அமெரிக்கா கூறுவது அந்நாட்டின் சட்டாம்பிள்ளைத்  தனத்தை காட்டவில்லையா? இந்த ஒரு விசயத்திற்காக மட்டுமே அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை  எடுக்க வேண்டாமோ? அப்படி ஐ.நா. செய்யத் தவறினால் அமெரிக்காவின் இந்த செயலை ஐ.நா. அங்கீகரிக்கிறது என்றுதானே அர்த்தம். ஐ.நா. அங்கீகரித்த செயலை அனைத்து நாடும் செய்யலாம் என்று தானே அர்த்தம். அப்படியானால் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் அத்துமீறலை ஐ.நா. அங்கீகரிக்கிறது என்ற வாசலை திறந்து விடுகிறதா?

சுட்டுப் பிடித்தார்களா? பிடித்து சுட்டார்களா?

உஸாமா அவர்கள் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்ட அமெரிக்க கமாண்டோ படைகளை எதிர்த்து உஸாமாவின் பாதுகாவலர்கள் தாக்குதல் தொடுத்ததாகவும் நாற்பது நிமிடங்கள் இரு தரப்புக்கும் தாக்குதல் நடந்ததின் முடிவாக வீட்டுக்குள் புகுந்து அறை, அறையாக சோதனையிட்ட அமெரிக்கப் படைகள் அங்கே உஸாமா கொல்லப்பட்டு கிடக்கவே அவரது உடலை எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த ஹெலிகாப்டரில் சென்று விட்டதாக கூறியது அமெரிக்கா. மேலும்,  வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜே கார்னே கூறும்போது, ''பின்லேடன் சரண் அடையாவிட்டால் சுட்டுக்கொல்ல சிறப்பு அதிரடிப்படைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்க படையிடம் பின்லேடன் சரணடைந்திருந்தால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய நீதியை அவரே தேடிக்கொண்டார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் உஸாமா சரணடையவில்லை எனவே அவரை சுட்டுக்கொன்றோம் என்கிறது அமெரிக்கத் தரப்பு. ஆனால் உஸாமா அவர்களின் மகள் கூறியதாக வந்துள்ள செய்தியில்,''3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை உயிருடன் பிடித்து கூட்டி வந்ததாகவும், அவரை ஹெலிகாப்டரில் ஏற்றும் முன் சுட்டுக் கொன்றதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார். இதன் மூலம் உஸாமா பிடிக்கப்பட்ட பின்பே வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளார் என்று சந்தேகம் எழுகிறதா இல்லையா?

உஸாமாவின் புகைப்படத்தை வெளியிட தயக்கம் ஏன்?

உஸாமா அவர்கள் கொல்லப் பட்டவுடன் ஒரு புகைப்படம் உலகம் முழுக்க வலம் வந்தது. அந்த புகைப்படம் உண்மைதானோ என்று மக்கள் நம்பத் தலைப்பட்ட வேளையில், அதில் அமெரிக்கா செய்துள்ள தில்லாலங்கடி  வேலையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது  பிரிட்டிஷ் பத்திரிக்கையான  'கார்டியன்'.  ''அப்படம் இரு படங்களின் கலவை. 1998 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பின் லாடினின் உண்மை படமும், இறந்த வேறொருவர் படமும், இணைக்கப்பட்டு இறந்த பின் லாதின் படம் என வெளியிடப்பட்டுள்ளது என்று போட்டுடைத்தது. இப்பத்திரிகை இந்த தகவலை தரும்வரை இந்தபடம் தான் உசாமாவுடையது என காட்ட அமெரிக்காவும், அதன் அடிவருடி பத்திரிக்கைகளும் பலத்த  சிரத்தை மேற்கொண்டன என்பதை கவனிக்க வேண்டும். இதற்கிடையில் உஸாமாவின் உண்மையான புகைப்படத்தை இந்த நொடி வரை வெளியிடாத அமெரிக்கா, அதற்கு கூறும் காரணமும் நகைப்பிற்குரியது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உஸாமாவின் புகைப்படம் குறித்து கூறும்போது, ''ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட நிலையில், அவனது உடல் மிகவும் கோரமாக இருந்தது. இதனால்தான், அவனது போட்டோ வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உஸாமாவின் புகைப்படத்தை திட்டவட்டமாக வெளியிடப் போவதில்லை என்று ஒபாமாவும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் லியான் பெனிட்டா, ''உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பின்லேடன் மரணப் புகைப்படங்களை வெளியிடுவது அவசியம் என்று கூறிய பின்னும், உஸாமாவின் புகைப்படத்தை வெளியிட தயங்குவதன் மூலம் உஸாமாவின் மரணம் சந்தேகத்தை எழுப்புகிறதா? இல்லையா? சொல்ல முடியாது. இதற்கு பின்னால் ஏதேனும் 'மார்பிங்' போட்டோவை காட்டி இதோ! உஸாமா என்று அமெரிக்கா சொல்லக்கூடும்.

உஸாமாவின் முழு உடலை உலகுக்கு காட்டாமல் மறைத்ததேனோ?

ஈராக் முன்னாள் அதிபர் சதாம்ஹுசைன் அவர்களை பதுங்கு குழியில் இருந்து கைது செய்து வெளியே எடுத்ததில் தொடங்கி, அவரை நீதிமனறத்தில் நிறுத்தி தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுத்து முதல் அந்த தண்டனை நிறைவேற்றும் காட்சிவரை உலக மக்களின் பார்வைக்கு வைத்து அவரது மரணத்தை சந்தேகமற நிரூபித்த அமெரிக்கா, அதே பாணியில் தன்னால் சுட்டுக்கொல்லப் பட்டதாக  கூறப்படும் உஸாமா அவர்களின் முழு உடலை உலக மக்களுக்கு காட்டாமல் மறைத்தது ஏனோ?

அவசர அவசரமாக  உசாமாவை கடலிலே  வீசிய காரணம் என்னவோ?
 
உஸாமாவை சுட்டுக் கொன்றதாக கூறும்   அமெரிக்கா அவரது உடலை அவசர அவசரமாக கடலில் அடக்கம் செய்துவிட்டதாக கூறுகிறது. இதை வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க பாதுகாப்புக்கான துணை ஆலோசகர் ஜான் பிரெனான் தெரிவித்துள்ளார். உசாமாவை கடலில் தள்ளியதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கா கூறிய காரணம் பாரீர்; 
 ''இறந்த ஒருவரின் உடலை 24 மணி நேரத்துக்குள் புதைக்க வேண்டும் என்று இஸ்லாமிய கோட்பாடு கூறுவதால், வேறு நாட்டுக்கு அந்த உடலை கொண்டு சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, மதச்சடங்குகள் செய்து குறிப்பிட்ட நேரத்துக்குள் அடக்கம் செய்ய முடியாது என்பதால், கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக ஜான் பிரெனான் தெரிவிக்கிறார்.
 
இந்த விஷயத்தில் இரண்டு மாபாதகங்களை அமெரிக்கா செய்துள்ளது. ஒன்று அமெரிக்கா கூறுவது போன்று உஸாமா  உடலை விரைவாக அடக்கம் செய்வதுதான் நோக்கமென்றால் அந்த அடக்கத்தை பூமியில் செய்யாமல் மிருக்கத்தனமாக கடலில் வீசியது ஏன்? அடுத்து உஸாமாவின் அடக்கம் விசயத்தில் இஸ்லாத்தில் இல்லாத சட்டத்தை சொல்லி இருப்பதாக  காட்டி தன்னை காக்க  எத்தனிக்கிறது அமெரிக்கா. ''இறந்த ஒருவரின் உடலை 24 மணி நேரத்துக்குள் புதைக்க வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தில் இல்லவே இல்லை. தனது தவறை மறைக்க  இஸ்லாமிய சட்டத்தில் குழப்பம் செய்யும் அமெரிக்காவின் செயலை உலக முஸ்லிம் நாடுகள் கண்டு கொள்ளது ஏனோ தெரியவில்லை. மேலும் என்னதான் மாபாவியாக இருந்தாலும் அவனது உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்ற உலக நியதியையும் அப்பட்டமாக அமெரிக்கா மீறி, ஒரு முஸ்லிமை மீனுக்கு இறையாக்கினேன் என்று திமிராக நடந்துகொண்ட அமெரிக்காவை மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக மனித உரிமை அமைப்புகளுகளும் வன்மையாக கண்டிக்க முன்வரவேண்டும். உஸாமா கடலில் வீசப்பட்டதற்கு ஆரம்பத்தில் இஸ்லாத்தை காரணம் கட்டிய அமெரிக்கா, பின்னாளில் தனது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தி விட்டது. உஸாமாவை ஏதேனும் ஒரு பகுதியில் அடக்கம் செய்தால் அந்த பகுதி மக்கள் சென்று வரும் சுற்றுலா தலமாகவோ புனித தலமாகவோ மாறிவிடும். அதன் மூலம் உஸாமா என்றென்றும் மக்களால் நினைக்கப்படக் கூடியவராக மாறிவிடுவார். அவரது தாக்கம் அமெரிக்கா எதிர்ப்பு போராளிகளுக்கு  அதிகரிக்கும் அது அமெரிக்காவிற்கு நல்லதல்ல என்பதால்தான் கடலில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்காவின் உஸாமா மீதான வஞ்சத்தை உணர்ந்து கொள்ளலாம்.
 
உஸாமாவின் மனைவியர் மக்கள் பாதுகாவலர்கள் எங்கே?
 உசாமாவை வேட்டையாடியபோது அவரது மனைவியின் பின்னால் அவர் பதுங்கினார். எனவே அவரது மனைவியை சுட்டுக்கொன்றோம் என்று முதலில் கூறிய அமெரிக்கா, பின்னர் மனைவி கொல்லப்படவில்லை. அவரது காலில்தான் சுட்டோம் என்று பலியடித்தது. உசாமாவோடு இரு பெண்கள் இருந்தார்கள் என்று ஆரம்பத்திலும் பின்னர் மூன்று மனைவியர் என்றும் பிள்ளைகள் எண்ணிக்கையில் முன்னுக்குப் பின் முரணாகவும் கூறுகிறது. இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? பாகிஸ்தான் கண்காணிப்பில் இருபபதாக கூறிக்கொண்டாலும் அவர்களை இதுவரை காட்டாதது சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் உஸாமா வேட்டையின் போது அவரது பாதுகாவலர்களுடன் நாற்பது நிமிடம் மோதியதாக கூறும் அமெரிக்கா, அவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தெளிவான தகவலை சொல்லாதது ஏனோ? அவர்களை கொன்றுவிட்டதாக கூறும் அமெரிக்கா குறைந்தபட்சம் அவர்களின் உடலைக் கூட முழுமையாக  காட்டாமல் உஸாமா பாணியில் மறைத்து வருவது ஏனோ?
 
எக்கச்சக்க பலம் வாய்ந்த அமெரிக்காவிற்கு எட்டு மாதம் ஏனோ?

உஸாமா அவர்கள் கொல்லப்பட்டதை  உலகிற்கு அறிவித்த ஒபாமா, ''கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், பின்லாடன் இருக்குமிடம் தெரிந்தது. பாகிஸ்தானின் உள்ளடங்கிய இடம் ஒன்றில் அவர் இருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்கிறார் ஒபாமா. உஸாமா இருக்கும் இடம் பற்றி எட்டு மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிந்தும் அவரை உடனடியாக பிடிக்காமல் இப்போது கொன்றதாக கூறுவதுதான் உஸாமாவின் மரணத்தில் உச்சகட்ட சந்தேகத்தை எழுப்புகிறது.  

இதுதான் சொகுசு மாளிகையோ?

உஸாமா அவர்கள் தங்கியிருந்த மாளிகை உயர்தர வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகை என்று அமெரிக்கா தரப்பு செய்தி பரப்புகிறது. ஆனால் அவர்கள் காட்டும் அந்த வீட்டை பார்த்தால் சாமான்ய  மக்கள் வாழும் வீடு போன்றே உள்ளது. மேலும் அந்த வீட்டில் தொலைக்காட்சியோ, இன்டெர் நேட்டோ, தொலைபேசியோ கூட இல்லை என்று செய்திகள் கூறுகின்றன. உஸாமா உயர்தர சொகுசு மாளிகையில் வசித்தார் என்று சொல்வதன் மூலம் அவர் சுகபோக வாழ்க்கை  வாழ்ந்தாரேயன்றி அவர் மக்களுக்காக அனைத்தையும் துறந்த தியாகியல்ல என்று காட்ட முனைகிறது அமெரிக்கா. இதன் மூலம் மலைகளிலும் மடுக்களிலும் கஷ்டப்படும் போராளிகள் உள்ளத்தில் உஸாமா மீது ஒரு தப்பெண்ணத்தை விதைத்து அவர்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணுகிறதோ அமெரிக்கா?

இறுதியாக உஸாமா அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம். உஸாமா இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று நாம் சொல்லவரவில்லை. அதே நேரத்தில் அவர் கொல்லப் பட்டுவிட்டார் என்ற அமெரிக்காவின் வாதம் பலவீனமாக இருக்கிறது என்பதே நமது நிலையாகும். இருப்பினும் உஸாமாவை கொன்றதாக அமெரிக்கா கூறுவதற்கு ஒருவேளை கீழ்கண்ட காரணம் இருக்குமோ;

  • உஸாமாவை கொன்ற ஹீரோவாக தன்னை காட்டி 2012 ல் நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு அரியாசனத்தை கைப்பற்றும் நோக்கமோ?
  • ஆப்கான்-ஈராக் மீதான நீண்டநாள் போரின் மூலம் நாட்டு மக்களிடம் எழுந்துள்ள  அதிருப்தியை மறைத்து, அந்த போர் தொடங்கப்பட்ட நோக்கத்தை உஸாமாவை கொன்றதன் மூலம் சாதித்ததாக காட்டிக் கொள்வதற்காகவோ?
  • சமீபத்திய லிபியா மீதான தாக்குதல்; மற்றும் அரபு நாட்டு உள் விவகாரங்களில் தலையீடு போன்றவற்றின் மூலம் ஏற்பட்ட சரிவை சரிக்கட்டுவதற்காகவோ?

ஒரே ஒரு ஆறுதல் செய்தி;

அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார். ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.


செவ்வாய், 10 மே, 2011

உஸாமாவுக்காக காஃயிப் ஜனாஸா தொழுகை...?

ஸாமா அவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கக் கூறியதை பெரும்பான்மையோர் நம்பவில்லைஎனினும் அவர் மரணித்துவிட்டார் என்று நம்புபவர்களும் உள்ளனர். அவ்வாறு நம்பும் முஸ்லிம்களில் சிலர் அவருக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் காஃயிப் ஜனாஸா [இறந்தவர் உடல் வேறு பகுதியில் இருக்கும் ஒருவருக்கு செய்யும் தொழுகை] நடத்தியுள்ளனர். இவ்வாறு இந்த தொழுகை நடத்துவதற்கு அவர்கள் வைக்கும் ஒரே ஆதாரம் இதுதான்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். நூல்;புகாரி எண்; 1245

 
ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள்; [மன்னர்) நஜாஷீ இறந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'இன்று (ஒரு) நல்ல மனிதர் இறந்துவிட்டார். எனவே, எழுந்து நின்று உங்கள் சகோதரர் 'அஸ்ஹமா'வுக்காக (ஃகாயிப் ஜனாஸாத் தொழுகை) தொழுங்கள்" என்று கூறினார்கள். நூல்; புகாரி எண்; 3877 ]
 

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
இன்றைய தினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவீட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். நூல்; புகாரி 1320

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் ஒரு மனிதர் எங்கு இறந்தாலும் அவருக்காக காஃயிப் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என கூறுகின்றனர். ஆனால் அபிசீனியா மன்னருக்கு ரஸூல்[ஸல்] அவர்கள் தொழுகை நடத்தியதற்கு காரணம், அவர் முஸ்லிம்கள் வசிக்காத  பகுதியில் மரணித்துவிட்டார். எனவே அவருக்காக  தொழுகை நடத்துங்கள் என்ற நபியவர்களின் கூடுதல்  விளக்கம் அஹ்மத் நூலில் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் உஸாமா அவர்களுக்கு காஃயிப் ஜனாஸா தொழுகை நடத்த இயலாது.

அதே நேரத்தில் உஸாமாவுக்கு தொழுகை நடத்தியவர்கள் ஒரு காரணம் சொல்லலாம். கொஞ்சம் கூட இரக்கமின்றி உஸாமாவின் உடலை கடலில் வீசிய அமெரிக்கா, உசாமாவுக்காக  ஜனாஸா தொழுகை நடத்தியிருக்காது. எனவே மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அவருக்காக நாம் தொழுகை நடத்தலாம் என்று கூறக்கூடும். இதை ஒரு வாதத்திற்கு சரிகன்டாலும் உஸாமா அவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட  அன்றைய தினமே பாகிஸ்தானில்  கராச்சி நகரில் ஜமாத்து உத் தாவா அமைப்பின் சார்பாக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட காஃயிப் ஜனாஸா தொழுகை உசாமாவுக்காக  நடத்தப்பட்டு விட்டது. அதோடு அவரது ஜனாஸாவிற்கான கடமை முஸ்லிம்கள் மீது முடிந்து விட்ட நிலையில் அதற்கு பின் வேறு வேறு பகுதிகளில் நடத்தியது எந்த ஆதாரமும் அற்றதாகும்.

நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்

திங்கள், 9 மே, 2011

குவைத்தில் 'நரேந்திர மோடிக்கு எதிரான கண்டனக் கூட்டம்...

குவைத்தில் தமுமுக சார்பாக, தமிழ் அமைப்புகள் பங்குபெற்ற 'நரேந்திர மோடிக்கு எதிரான கண்டனக் கூட்டம் 06 -05-11 வெள்ளியன்று  மாலை 7 மணிக்கு 'மண்ணு-சல்வா' உணவகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  கண்டன உரையாற்றுவதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தமுமுக அழைப்பு விடுத்ததையொட்டி, நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் முகவைஅப்பாஸ் உரையாற்றினார். அவர் தனது உரையில், கோத்ரா ரயில் எரிப்பில் முஸ்லிம்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டை விவரித்ததுடன், அதையொட்டி மோடி வகையறாக்கள் நடத்திய முஸ்லிம் இன சுத்திகரிப்பை உணர்ச்சிப்பூர்வமாக விவரித்தார்.  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள்  அமைப்பினர் அறிவழகன் மற்றும் மகிழன் ஆகியோருக்கும், பெரியார் நூலகம் செல்லப்பெருமாள் அவர்களுக்கும், ம.தி.மு.கவின் மறுமலர்ச்சி பேரவையின் நிர்வாகி சத்யா அவர்களுக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருக்குர்'ஆன் வழங்கப்பட்டது. இதஜ வின் இந்த தாஃவா முயற்சிக்கு தமுமுக குவைத் மண்டல நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவர்களுக்கு  இதஜ குவைத் மண்டலம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

வியாழன், 5 மே, 2011

பொதுமக்களிடம் பெரும் கண்ணியமே கவுரவம்;; அஜீத் அதிரடி!

சுமாரான ஹீரோவிலிருந்து சூப்பர் ஹீரோ வரைக்கும் ரசிகர் மன்றங்கள் தமிழகத்தில் உண்டு. அறிமுக நாயகனுக்கும் அடைமொழியிட்டு அசத்தலாக மன்றம் தொடங்குவதில் தமிழ்நாட்டு ரசிகனுக்கு ஈடு இணை எவரும் இருக்க முடியாது. ரசிகர் நற்பணி மன்றம் என்று இவர்கள் தொடங்கினாலும் இவர்களின் நற்பணி என்னவோ தனது தலைவனின் புதுப்  பட வெளியீட்டின் போது தியேட்டரை அலங்கரிப்பது, ஆளுயர கட்டவுட்களை நிறுவுவது, மனைவியின் தாலியை மார்வாடி கடையில் வைத்தேனும் தலைவனின் கட்டவுட்டுக்கு மலர் மாலை சூடுவது, பசியால் பாலுக்கு அழுகும் குழந்தைக்கு இறங்காத இவன், தனது தலைவனின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யத் தவறுவதில்லை. புது பட பெட்டியை மேள தாளம் முழங்க  தியேட்டர் வரை கொண்டு வரும் அளப்பரை என்ன; தலைவனின் படம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அழகு குத்திக் கொள்ளும் பக்தி என்ன; இவர்களின் இந்த கூத்துக்கள் தான் பெரும்பாலும் 'நற்பணி'யாக இருந்துள்ளது. 
 
தனது ரசிகனின் இதுபோன்ற 'நற்பணிகளை' ஊக்கப்படுத்தி, மன்றங்களை  நாளடைவில் கட்சியாக்கி மகுடம் சூட நினைக்கும் சில கூத்தாடிகளுக்கு மத்தியில் நடிகர் அஜீத்குமார் சற்றே வித்தியாசமானவர் போலும். முதல்வரை  பாராட்டும் விழாவில் கலந்து கொள்வதை பிறவிப் பயனாக கருதும் கலைஞர்களுக்கு மத்தியில், பாராட்டுவிழாவிற்கு வந்தே தீரவேண்டும் என்று சிலரால் மிரட்டப்படுகிறோம் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசி ரஜினிகாந்த் உள்ளிட்ட அரங்கத்தின் ஒட்டுமொத்த கைதட்டலையும் அள்ளியவர் அஜீத். தேர்தலில் வாக்களிக்க செல்லும் போதும் சாமான்யனாகவே  தன்னைக் கருதி எவ்வளவு பெரிய க்யூ ஆனாலும் வரிசையில் நின்று வாக்களிக்க இவர் தயங்கியதில்லை. இத்தகைய சில பண்புகளையுடைய அஜீத், பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ' இன்று முதல் [01 -05 -11 ]எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்'. என்று அறிவித்துள்ளார்.
 
மேலும், ''சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.  இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் என்றும் மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார் அஜீத். 
 
அஜீத்தின் இந்த முடிவு உள்ளபடியே பாரட்டிற்குரியதாகும். ரசிகர்கள் சிலரின் கண்ணியமற்ற செயல்பாடுகள் தனக்கும் கெட்டபெயரை உண்டாக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார். மேலும் ரசிகர்கள் நற்பணி என்ற பெயரில் குடும்பத்தை நட்டாற்றில் விடுவதை குறித்தும் அறிந்திருக்கிறார். எனவேதான் விசிலடிக்கும் ரசிகர்கள் முக்கியமல்ல; விவரமான சிந்தனை தான் முக்கியம் என தெளிவான  முடிவை எட்டியிருக்கிறார். அஜீத்தின் இந்த வழியை  பின்பற்றி ஏனைய நடிகர்களும்  மன்றங்களை கலைத்து விட்டாலே பாதி குடும்பங்களின் பிரச்சினையும், பாதுகாப்பு பிரச்சினையும் ஒரு சேர முடிவுக்கு வந்துவிடும்.  செய்வார்களா?