புதன், 18 மே, 2011

முதல்வரின் கோபம் கட்டிடத்தின் மீதா? கோபாலபுரத்தார் மீதா?

மிழக முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, தான் எடுத்த முடிவில் எப்போதும் பிடிவாதமாக இருக்கக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், ஆரம்பத்திலேயே பிடிவாதம் பிடிப்பது அவருக்கு சற்றே மக்கள் மத்தியில் ஒரு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா கடந்தமுறை முதல்வராக இருந்தபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசதிகள் போதாது என்பதால் ராணிமேரி கல்லூரியில் புதிய சட்டமன்றம் கட்ட ஆலோசித்ததும், அதையொட்டி எழுந்த பிரச்சினையால் அதை அவர் கைவிட்டதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
 
அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, தனது ஆட்சியின் இறுதியாண்டில் அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான கோடிகளை இறைத்து, ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய சட்டமன்றத்தை எழுப்பி, அதை பிரதமரை வைத்து திறந்து அதில் தனது பெயரை பதியவைத்து சென்று விட்டார். இந்த புதிய சட்டமன்றத்தில் சட்டசபை கூட்டங்களும் மந்திரிசபை கூட்டங்களும் நடந்தேறியுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர், ''மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயின்ட்ஜார்ஜ்  கோட்டையிலேயே தலைமை செயலகம் செயல்படும் என ஏற்கனவே அறிவித்தபடி, கருணாநிதி அரசால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்து, செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் தனது அமைச்சரவை சகாக்கள் சகிதமாக பணியை தொடங்கிவிட்டார். அதுமட்டுமன்றி அங்கு கருணாநிதியால் நிர்மானிக்கப்பட்டிருந்த  செம்மொழி நூலகத்தை காலிசெய்து அங்கே சட்டசபை நடப்பதற்கான அனைத்து வசதிகளும் போர்கால அடிப்படையில் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வருகின்றன. சட்டசபை நிர்மாணப் பணிகளை செய்வதற்கு அவசர அவசரமாக மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது ஒருபுறம், இப்பணிகள் நிறைவடையாததால் இன்னும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதில் தாமதம் மறுபுறம் இவையாவும் முதல்வர் ஜெயலலிதாவின் பிடிவாதத்தின் விளைவுகள்.
 
புதிய தலைமைச்செயலகம் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் இருக்கும் போது, அதை புறக்கணித்து பழைய அலுவலகத்தில் தான் செயல்படுவேன் என்பது எந்தவகை நியாயம் என்பதை ஜெயலலிதா சிந்திக்கவேண்டும்.  கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட  கட்டடத்தை புறக்கணிப்பது, 'புருஷன் மேல உள்ள கோபத்தை புள்ள மேல காட்டும் தாய்மார்களை போல' என்ற கிராமத்து சொல் வழக்கை நினைவுபடுத்துவதாக உள்ளது. எனவே புதிய தலைமைச்செயலகம் என்பது கருணாநிதியால் கட்டப்பட்டதே தவிர கருணாநிதியின் கைக்காசில் கட்டப்பட்டதல்ல என்று ஜெயலலிதா உணர்ந்தால் நன்று. தலைமைச்செயலகத்தை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் முடிவை வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக