வியாழன், 5 மே, 2011

திரையுலகிற்கு பின்னால் ஓடும் முதல்வர்!

டே ராசா... ஒங்கப்பா அந்த தெருவுல உள்ள டீக்கடையில இருப்பாரு; சித்த கூட்டியாடா! என்று தனது மகனிடம் கிராமத்து தாய்மார்கள்  கூறுவதை நாம் கேட்டிருப்போம். தன் கணவன் எந்த இடத்துல அதிகமாக இருப்பாருன்னு அந்த தாய்க்கு தெரிஞ்சதாலதான் தன் மகனை அந்த இடத்திற்கு சரியாக அனுப்புவார்கள். அதே மாதிரி நம்ம முதல்வர  எங்கப்பான்னு யாராவது கேட்டா அவரை எதாவது ஒரு சினிமா விழாவுல பாக்கலாம்னு சொல்லி அனுப்பிடலாம். அந்த அளவுக்கு சீடி வெளிட்டு விழான்னா கூட ஓடி போய் பங்கெடுப்பவர் நம்ம முதல்வர். இவ்வளவு நெருக்கமாக திரையுலத்தோட இருந்ததும், பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியும், 'இந்த ஆட்சி மாறினாத்தான் திரையுலக காட்சியும் மாறும்' என்று முதல்வருக்கு  எதிரான குரல் ஆங்காங்கே திரையுலா பிரமுகர்களால் எழுப்பப்படுகிறது.
 
திரையுலகினரின் முதல்வர் மீதான அதிருப்திக்கு காரணம், திரைத்துறையை முதல்வரின் குடும்பம் ஆக்கிரமித்து விட்டது என்பதால் தான் என்ற வாதம் வலுவாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த வாதத்தின் அடிப்பதையில் ஒரு பிரபல எழுத்தாளர் கட்டுரை தீட்ட, 'என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று அவரை திட்டாத குறையாக அறிக்கை சமர்பித்துள்ளார் முதல்வர். திரைத்துறையில் முதல்வரின் வாரிசுகள் பங்கெடுப்பது ஒன்றும் இப்போதைய நிகழ்வல்ல. எம்.ஜி.ஆரை ஓரங்கட்ட தனது மகன் மு.க. முத்துவை 'பிள்ளையோ பிள்ளை' என்று வலம் வர செய்தவர் கருணாநிதி. அவரது குடும்பத்தில் சிலர் ஆரம்பத்தில் படங்களை தயாரித்தும் உள்ளனர். அப்போதெல்லாம் முதல்வர் குடும்பம் திரையுலகை ஆட்டி வைக்கிறது என்ற குரல் எழாமல் இப்போது மட்டும் எழுகிறது என்றால் அங்கே ஏதோ ஒன்று இருக்கிறது என்பது முதல்வருக்கு தெரியாதா?
 
அடுத்து திரையுலகில் கோலோச்சும் சில வாரிசுகளை பட்டியலிட்டுள்ளார் முதல்வர்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தொடங்கி அவரது வாரிசுகள், சிவாஜிக்குப் பிறகு அவருடைய வாரிசுகள், ரஜினி மற்றும் அவரது வாரிசுகள், கமல் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட வார்சுகள், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் தெரியாமல் போனதுதான் வேடிக்கை என்கிறார்.
 
முதல்வர் கூறும் மேற்கண்ட பட்டியல் என்னவோ உண்மைதான். ஆனால் மேற்கண்ட வாரிசுகளால் திரையுலகிற்கு பாதிப்பு என்ற குரல் எழவில்லையே!
அடுத்து சினிமா துறைக்கு அளித்த சலுகைகள் குறித்தும்  பட்டியலிடுகிறார் முதல்வர். அதை படித்தால் மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் வீனடிக்கப்பட்டுள்ளது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும்.
 
சினிமா துறை என்பது பொன் விளையும் பூமியாகும். சாதாரண  வியாபாரிக்கு எண்ணற்ற வரிகளை விதித்து மூச்சு முட்ட வைக்கும் அரசு, சினிமா கேளிக்கை வரிகளை குறைத்ததன் மூலம் ஆண்டிற்கு ரூ.60 கோடி அளவிற்கான வரிச்சலுகைகளை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் 1998ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசு வழங்கி மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்துள்ளது.
 
இது போக விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி செய்தது.
அத்துடன் உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999 முதல் 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 1.4.2000 முதல் திரைப்படங்கள் குத்தகை மீதான 4 சதவீத விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது. இதன் மூலம் பலகோடி மக்கள் வரிப்பணம் பாழாகியுள்ளது. 
 
இது போக உலகத்திலேயே எவரும் செய்யாத ஒரு புத்திசாலித்தனமான அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர். அதாவது தமிழை ஆட்சி மொழியாக கொண்ட தமிழகத்தில், தமிழை பேச்சுமொழியாக கொண்ட தமிழகத்தில் தமிழர்கள் பார்ப்பதற்காக தயாரிக்கும்  திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி முழுமையும் ரத்து செய்யப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. இதன் மூலம் கோடிகளை கொட்டி எடுக்கப்பட்ட எந்திரனும் வரிவிலக்கு பெற்றான். முதல்வரோ மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியதால் மக்களின் வயிற்றெரிச்சலை பெற்றார்.   
 
இது மட்டுமன்றி முதல்வரின் பட்டியல் இன்னும் நீள்கிறது. நாம் கேட்பது  என்னவென்றால் ஏனைய தொழில்களை போல் சினிமாவும் ஒரு தொழில் என்று இருக்கும்போது, சினிமாவிற்கு மட்டும் கூடுதல் சலுகைகளை அதுவும் அவசியமற்ற சலுகைகளை மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரியிறைத்ததோடு மட்டுமன்றி, அதை சாதனையாகவும்  சொல்லிக் கொள்கிறார் முதல்வர். ஆனால் முதல்வரின் இத்தனை கரிசனங்களையும் தான்டி, முதல்வர் மீதும், முதல்வர் குடும்பம் மீதும் எதிர்ப்பு குரல் திரைத்துறையிலிருந்து வெளியாவது குறித்து முதல்வர் பரிசீலிப்பாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக