வியாழன், 26 மே, 2011

வீட்டிற்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடும் ஆளும் வர்க்கம்!

டு மேய்க்கும் தொழிலாளி அந்தி சாயும் நேரத்தில் தனது ஆட்டை எண்ணியபோது அதில் ஒரு குட்டி மட்டும் குறைந்ததாம். அலறித் துடித்த அவன் அங்கும் இங்கும் தேடினானாம். அதைபார்த்த ஒருவர் அட மடையா! நீ தேடும் குட்டி உனது தோளில்தான் கிடக்கிறது என்றவுடன் அந்த தொழிலாளி அசடு வழிந்தானாம். இந்த கதை போல நமது இருக்கிறது மத்திய ஆட்சியாளர்களின் லட்சணம்.
 
வீட்டிற்குள் வலைய வரும் நச்சுப் பாம்பான இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டுகொள்ளாத அரசு, அண்டை வீடான பாகிஸ்தானில், 'எங்கள் வீட்டிலிருந்து  தப்பிய ஐம்பது தேள்கள் உங்கள் வீட்டில் மறைந்துள்ளது.  அதை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று அட்டகாசமாக பட்டியல் கொடுத்தது. பரவாயில்லையே! துணிச்சலான நடவடிக்கைதான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் பட்டியலில் உள்ள தேள்களில் பல பாரத நாட்டிலேயே பவனி வரும் செய்தி பரபரப்பாக வெளியாக பாகிஸ்தானுக்கு முன்பாக பல்லிளித்து நிற்கிறது  நமது பாதுகாப்பு லட்சணம்.
 
இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்புகள் மற்றும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தியா கோரி வருகிறது. இதற்காக 50 பேர்களின் பெயர்களை கொண்ட பட்டியலை, பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்தது. அதில் 41வது பெயராக வாசுல் கமார்கான் என்ற பெயர் இடம் பெற்றது. ஆனால் அவர் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. இது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட பெரோஸ் அப்துல் கான் என்ற ஹம்சா, மும்பையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதும், தற்போது அவர் மும்பை ஜெயிலில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.
ஐக்கிய தேசிய புரட்சி முன்னணி தலைவர் ராஜ் குமார் மெகேன் பெயரும், பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் அவர் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்.
இதுபோன்ற தவறுகள், இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானிடம் கொடுத்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. எனவே புதிய பட்டியல் கொடுக்கப்படுமா? என்று, இந்திய உள்துறை பாதுகாப்பு செயலாளர் யு.கே. பன்சாலிடம நிருபர்கள் கேட்டபோது,
 
பாகிஸ்தானிடம் இந்தியா ஏற்கனவே அளித்த பட்டியலை திரும்ப பெறும் யோசனை இல்லை. ஆனால் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தீவிரவாதிகளின் பெயர்களை, மீண்டும் ஆய்வு செய்து வருகிறோம். தவறான பெயர்களை இடம் பெறச்செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் புதிய பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுப்போம். அதில் எந்தவித தவறும் இல்லாத படி பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
 
இந்த நிலைமையில், பட்டியலில் இருந்து கான் பெயரை சி.பி.ஐ. இன்று நீக்கியது. கான் பற்றி மும்பை போலீசில் இருந்து தகவல் அளிக்கப்படவில்லை என்றும் சி.பி.ஐ. குறை கூறியுள்ளது.
இதற்க்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தவறுதலாக நடந்ததாகவும் , இது மாதியான தவறுகள் ஏற்பட்டிருக்க கூடாது  என   கூறிய சிதம்பரம், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார்.
 
குற்றவாளிகளை ஒப்படைக்கக்கோரும் பட்டியலை தயாரிப்பதில் கூட முழுமையான கவனம் இல்லாத நிலையில் இந்தியா இருக்கிறது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானமே. தனது வீட்டில்  வைத்துக் கொண்டே அடுத்த வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக நினைக்கும் மடமையைதான் என்ன சொல்வது?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக