வியாழன், 12 மே, 2011

சிங்கத்தின்[உஸாமா] மரணமும்; சீறிப்பாயும் கேள்விகளும்!

ன்ன! தலைப்பை பார்த்த உடனே உஸாமாவை 'சிங்கம்' என்றெல்லாம் புகழ்கிறார்களே என்று எண்ணி விட்டீர்களா? நாம் அவரை புகழவில்லை. அவரது பெயரின் தமிழாக்கம் தான் அது. இறைவன் அவரது பெயரிலேயே வீரத்தை அமைத்து விட்டான். இப்ப விசயத்திற்கு வருவோம். 

என்னைக் காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள் என்று காட்டு பகுதியிலிருந்து  தலை தெறிக்க ஓடி வந்தான் ஒருவன். அவனிடம் விசாரித்தபோது என்னை புலி விரட்டி வருகிறது என்றான்,. மக்களும் அவன் சொன்ன  பகுதியில் சென்று பார்த்து விட்டு புலி எதுவும் இல்லை என திரும்பினார்கள். மக்களை பார்த்து சிரித்தான் அவன். ஏன் சிரிக்கிறாய் என வினவியவுடன், 'நான் உங்களை ஏமாற்ற பொய் சொன்னேன் என்றான். மீண்டும் சில தினத்தில் அவனே காப்பாற்றுங்கள் என்ற கூவலோடு ஓடிவந்தான். இவன் பொய்யன்  என்பதால் மக்களும் அவன் சொன்னதை நம்பி உதவிக்கு செல்லவில்லை. இறுதியில் உண்மையிலேயே புலியால் தாக்கப்பட்டு அவன் செத்தான் என்று சிறார்களுக்கு கதை சொல்வதை நாம் கேட்டிருப்போம். அதுபோலத்தான் உஸாமா விசயத்தில் அமெரிக்காவின் நிலையும் உள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன் உஸாமா வேட்டையை தொடங்கிய அதிபயங்கரவாதி அமெரிக்கா, உஸாமா கொல்லப்பட்டுவிட்டார் என பலமுறை சொன்னது. ஆனாலும் இப்போது அதிபர் அறிவித்தது போல் உறுதியாக அறிவிக்காமல் செய்தியை பரப்பியது. உஸாமா கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா கூறிய அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் 'அமெரிக்கா மீது புனித போர் அறிவித்து உஸாமா ஒலிநாடா வெளியிட்டார் என்று செய்தி வெளியாகும். இவ்வாறான குழப்பத்தினால் உஸாமா, பாகிஸ்தானில் உள்ள அப்போதாபாத்தில் வைத்து அமெரிக்கா காமாண்டோ படையால் கொல்லப்பட்டு விட்டார் என்று ஒபாமா உறுதியாக அறிவித்தாலும்  அவரது அறிவிப்பை பெரும்பான்மை மக்கள் இந்த நொடி வரை சந்தேகத்துடனே பார்க்கின்றனர். இதற்கு மற்றொரு காரணம் உஸாமா மரணம் குறித்த அமெரிக்காவின் முன்னுக்குப் பின் முரணான சந்தேகத்திற்குரிய தகவல்கள்.

ஆரம்பமே அபத்தம்;

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள அப்போதாபாத் எனும் நகரில் மக்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக உஸாமா தனது ஒன்று- இரண்டு- மூன்று மனைவிகளுடன் பல பிள்ளைகளுடனும் வசித்து வந்தார் என்று கூறுகிறது அமெரிக்கா. ஒரு காட்டுக்குள் தனிகாட்டு ராஜாவாக வலம் வந்த  சாதாரண சந்தனக் கடத்தல் வீராப்பன் கூட தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒரு இடத்தில் வசிக்காதபோது, தனது ஜாகையை அவ்வப்போது மாற்றி தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநில அதிரடிப்படைக்கு பல ஆண்டுகள் அல்வா கொடுத்திருக்கும் போது, அமெரிக்கவால் 25 மில்லியன் டாலர் தலைக்கு விலை வைக்கப்பட்டுள்ள தேடப்படும் குற்றவாளியான உஸாமா, மக்கள் வசிக்கும் பகுதியில் மனைவி மக்கள் சகிதமாக ஐந்தாண்டுகள் ஒரே வீட்டில் வசித்தார் என்பது அறிவுக்கு பொருந்துகிறதா? இதுதான் உண்மை என்று அமெரிக்கா கூறுமானால் பாகிஸ்தானில் நினைத்த நேரத்தில் மாமியார் வீட்டில் நுழைவது போல் நுழைவதும், நினைத்தவுடன் பாகிஸ்தான் பகுதிகளில் விமானத்தாக்குதல் தொடுப்பதும் என்று ஏறக்குறைய தனது நாடுபோல் பாகிஸ்தானை கையாண்ட அமெரிக்காவிற்கு உஸாமா ஐந்தாண்டுகள் ஒரே இடத்தில் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உஸாமா விசயத்தில் தனது தோல்வியை ஒத்துக் கொள்ளத் தயாரா?  

அடுத்த நாட்டுக்குள் திருடனாய் நுழைந்த அமெரிக்கா;

அமெரிக்காவின் கூற்றுப்படி அப்போதாபாத் வீட்டில் உஸாமா இருந்ததை ஒரு பேச்சுக்கு சரிகன்டாலும், அமெரிக்கா செய்யவேண்டியது என்ன? பாகிஸ்தான் அரசுடனும், இராணுவத்துடனும் இந்த விஷயத்தை பகிர்ந்து அவர்களின் அனுமதியுடன் அல்லது அவர்களின் ஒத்துழைப்புடன் உஸாமா தங்கியிருந்த இடத்தில் தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும். ஆனால் உலக ஜனநாயகம் பேசும் அமெரிக்கா, பாகிஸ்தான் நாட்டிற்கும் ராணுவத்திற்கும் தெரியாமல் கள்ளத்தனமாக பாகிஸ்தானுக்குள் ஹெலிகாப்டர் மூலம் நுழைந்து தாக்குதல் தொடுத்து உஸாமாவை  கொன்றது பாகிஸ்தானின் இறையாண்மையை காலில் போட்டு மிதிப்பது போலவும், நான் நினைத்த நாட்டில் நினைத்த நேரத்தில் நுழைய எவரிடத்திலும் அனுமதி கேட்கவேண்டியதில்லை என்ற அமெரிக்காவின் ஆணவமும் இதில் வெளிப்படவில்லையா? அமெரிக்காவின் இதே பாணியில் ஒவ்வொரு நாடும் தான் தேடும் தீவிரவாதிகள்  அடுத்த நாட்டில் இருக்கிறார்கள் என கருதி  அத்துமீறி நுழையத் தொடங்கினால் எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியுமா? உதாரணத்திற்கு இந்தியாவில் போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான வாரன் ஆண்டர்சனை அமெரிக்கா பாதுகாத்து வைத்துள்ளது. அவரை மீட்கிறேன் என்ற பெயரில் இந்திய அதிரடிப்படை அமெரிக்காவில் அத்துமீறி நுழைந்து  தாக்குதல் தொடுத்தால் அதை அமெரிக்கா அங்கீகரிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது. அப்படியானால் அமெரிக்காவிற்கு ஒரு நீதி? மற்ற நாடுகளுக்கு ஒரு நீதியா? ஒரு நாட்டிற்குள் மாற்றொரு நாடு நுழைந்து தாக்குதல் தொடுக்கக் கூடாது என்பதற்காகத் தானே, நாடுகளுக்கு மத்தியில் குற்றவாளிகள் பரிமாற்றம் ஒபபந்தம் செய்யப்படுகிறது. அமெரிக்கா  பாணியை எல்லா நாடுகளும் கடைபிடிக்க தொடங்கினால் இந்த ஒப்பந்தங்கள் அவசியமில்லையே? மேலும் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது குறித்து நாங்கள் மன்னிப்பு கேட்கமாட்டோம் என்று அமெரிக்கா கூறுவது அந்நாட்டின் சட்டாம்பிள்ளைத்  தனத்தை காட்டவில்லையா? இந்த ஒரு விசயத்திற்காக மட்டுமே அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை  எடுக்க வேண்டாமோ? அப்படி ஐ.நா. செய்யத் தவறினால் அமெரிக்காவின் இந்த செயலை ஐ.நா. அங்கீகரிக்கிறது என்றுதானே அர்த்தம். ஐ.நா. அங்கீகரித்த செயலை அனைத்து நாடும் செய்யலாம் என்று தானே அர்த்தம். அப்படியானால் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் அத்துமீறலை ஐ.நா. அங்கீகரிக்கிறது என்ற வாசலை திறந்து விடுகிறதா?

சுட்டுப் பிடித்தார்களா? பிடித்து சுட்டார்களா?

உஸாமா அவர்கள் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்ட அமெரிக்க கமாண்டோ படைகளை எதிர்த்து உஸாமாவின் பாதுகாவலர்கள் தாக்குதல் தொடுத்ததாகவும் நாற்பது நிமிடங்கள் இரு தரப்புக்கும் தாக்குதல் நடந்ததின் முடிவாக வீட்டுக்குள் புகுந்து அறை, அறையாக சோதனையிட்ட அமெரிக்கப் படைகள் அங்கே உஸாமா கொல்லப்பட்டு கிடக்கவே அவரது உடலை எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த ஹெலிகாப்டரில் சென்று விட்டதாக கூறியது அமெரிக்கா. மேலும்,  வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜே கார்னே கூறும்போது, ''பின்லேடன் சரண் அடையாவிட்டால் சுட்டுக்கொல்ல சிறப்பு அதிரடிப்படைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்க படையிடம் பின்லேடன் சரணடைந்திருந்தால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய நீதியை அவரே தேடிக்கொண்டார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் உஸாமா சரணடையவில்லை எனவே அவரை சுட்டுக்கொன்றோம் என்கிறது அமெரிக்கத் தரப்பு. ஆனால் உஸாமா அவர்களின் மகள் கூறியதாக வந்துள்ள செய்தியில்,''3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை உயிருடன் பிடித்து கூட்டி வந்ததாகவும், அவரை ஹெலிகாப்டரில் ஏற்றும் முன் சுட்டுக் கொன்றதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார். இதன் மூலம் உஸாமா பிடிக்கப்பட்ட பின்பே வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளார் என்று சந்தேகம் எழுகிறதா இல்லையா?

உஸாமாவின் புகைப்படத்தை வெளியிட தயக்கம் ஏன்?

உஸாமா அவர்கள் கொல்லப் பட்டவுடன் ஒரு புகைப்படம் உலகம் முழுக்க வலம் வந்தது. அந்த புகைப்படம் உண்மைதானோ என்று மக்கள் நம்பத் தலைப்பட்ட வேளையில், அதில் அமெரிக்கா செய்துள்ள தில்லாலங்கடி  வேலையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது  பிரிட்டிஷ் பத்திரிக்கையான  'கார்டியன்'.  ''அப்படம் இரு படங்களின் கலவை. 1998 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பின் லாடினின் உண்மை படமும், இறந்த வேறொருவர் படமும், இணைக்கப்பட்டு இறந்த பின் லாதின் படம் என வெளியிடப்பட்டுள்ளது என்று போட்டுடைத்தது. இப்பத்திரிகை இந்த தகவலை தரும்வரை இந்தபடம் தான் உசாமாவுடையது என காட்ட அமெரிக்காவும், அதன் அடிவருடி பத்திரிக்கைகளும் பலத்த  சிரத்தை மேற்கொண்டன என்பதை கவனிக்க வேண்டும். இதற்கிடையில் உஸாமாவின் உண்மையான புகைப்படத்தை இந்த நொடி வரை வெளியிடாத அமெரிக்கா, அதற்கு கூறும் காரணமும் நகைப்பிற்குரியது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உஸாமாவின் புகைப்படம் குறித்து கூறும்போது, ''ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட நிலையில், அவனது உடல் மிகவும் கோரமாக இருந்தது. இதனால்தான், அவனது போட்டோ வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உஸாமாவின் புகைப்படத்தை திட்டவட்டமாக வெளியிடப் போவதில்லை என்று ஒபாமாவும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் லியான் பெனிட்டா, ''உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பின்லேடன் மரணப் புகைப்படங்களை வெளியிடுவது அவசியம் என்று கூறிய பின்னும், உஸாமாவின் புகைப்படத்தை வெளியிட தயங்குவதன் மூலம் உஸாமாவின் மரணம் சந்தேகத்தை எழுப்புகிறதா? இல்லையா? சொல்ல முடியாது. இதற்கு பின்னால் ஏதேனும் 'மார்பிங்' போட்டோவை காட்டி இதோ! உஸாமா என்று அமெரிக்கா சொல்லக்கூடும்.

உஸாமாவின் முழு உடலை உலகுக்கு காட்டாமல் மறைத்ததேனோ?

ஈராக் முன்னாள் அதிபர் சதாம்ஹுசைன் அவர்களை பதுங்கு குழியில் இருந்து கைது செய்து வெளியே எடுத்ததில் தொடங்கி, அவரை நீதிமனறத்தில் நிறுத்தி தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுத்து முதல் அந்த தண்டனை நிறைவேற்றும் காட்சிவரை உலக மக்களின் பார்வைக்கு வைத்து அவரது மரணத்தை சந்தேகமற நிரூபித்த அமெரிக்கா, அதே பாணியில் தன்னால் சுட்டுக்கொல்லப் பட்டதாக  கூறப்படும் உஸாமா அவர்களின் முழு உடலை உலக மக்களுக்கு காட்டாமல் மறைத்தது ஏனோ?

அவசர அவசரமாக  உசாமாவை கடலிலே  வீசிய காரணம் என்னவோ?
 
உஸாமாவை சுட்டுக் கொன்றதாக கூறும்   அமெரிக்கா அவரது உடலை அவசர அவசரமாக கடலில் அடக்கம் செய்துவிட்டதாக கூறுகிறது. இதை வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க பாதுகாப்புக்கான துணை ஆலோசகர் ஜான் பிரெனான் தெரிவித்துள்ளார். உசாமாவை கடலில் தள்ளியதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கா கூறிய காரணம் பாரீர்; 
 ''இறந்த ஒருவரின் உடலை 24 மணி நேரத்துக்குள் புதைக்க வேண்டும் என்று இஸ்லாமிய கோட்பாடு கூறுவதால், வேறு நாட்டுக்கு அந்த உடலை கொண்டு சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, மதச்சடங்குகள் செய்து குறிப்பிட்ட நேரத்துக்குள் அடக்கம் செய்ய முடியாது என்பதால், கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக ஜான் பிரெனான் தெரிவிக்கிறார்.
 
இந்த விஷயத்தில் இரண்டு மாபாதகங்களை அமெரிக்கா செய்துள்ளது. ஒன்று அமெரிக்கா கூறுவது போன்று உஸாமா  உடலை விரைவாக அடக்கம் செய்வதுதான் நோக்கமென்றால் அந்த அடக்கத்தை பூமியில் செய்யாமல் மிருக்கத்தனமாக கடலில் வீசியது ஏன்? அடுத்து உஸாமாவின் அடக்கம் விசயத்தில் இஸ்லாத்தில் இல்லாத சட்டத்தை சொல்லி இருப்பதாக  காட்டி தன்னை காக்க  எத்தனிக்கிறது அமெரிக்கா. ''இறந்த ஒருவரின் உடலை 24 மணி நேரத்துக்குள் புதைக்க வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தில் இல்லவே இல்லை. தனது தவறை மறைக்க  இஸ்லாமிய சட்டத்தில் குழப்பம் செய்யும் அமெரிக்காவின் செயலை உலக முஸ்லிம் நாடுகள் கண்டு கொள்ளது ஏனோ தெரியவில்லை. மேலும் என்னதான் மாபாவியாக இருந்தாலும் அவனது உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்ற உலக நியதியையும் அப்பட்டமாக அமெரிக்கா மீறி, ஒரு முஸ்லிமை மீனுக்கு இறையாக்கினேன் என்று திமிராக நடந்துகொண்ட அமெரிக்காவை மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக மனித உரிமை அமைப்புகளுகளும் வன்மையாக கண்டிக்க முன்வரவேண்டும். உஸாமா கடலில் வீசப்பட்டதற்கு ஆரம்பத்தில் இஸ்லாத்தை காரணம் கட்டிய அமெரிக்கா, பின்னாளில் தனது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தி விட்டது. உஸாமாவை ஏதேனும் ஒரு பகுதியில் அடக்கம் செய்தால் அந்த பகுதி மக்கள் சென்று வரும் சுற்றுலா தலமாகவோ புனித தலமாகவோ மாறிவிடும். அதன் மூலம் உஸாமா என்றென்றும் மக்களால் நினைக்கப்படக் கூடியவராக மாறிவிடுவார். அவரது தாக்கம் அமெரிக்கா எதிர்ப்பு போராளிகளுக்கு  அதிகரிக்கும் அது அமெரிக்காவிற்கு நல்லதல்ல என்பதால்தான் கடலில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்காவின் உஸாமா மீதான வஞ்சத்தை உணர்ந்து கொள்ளலாம்.
 
உஸாமாவின் மனைவியர் மக்கள் பாதுகாவலர்கள் எங்கே?
 உசாமாவை வேட்டையாடியபோது அவரது மனைவியின் பின்னால் அவர் பதுங்கினார். எனவே அவரது மனைவியை சுட்டுக்கொன்றோம் என்று முதலில் கூறிய அமெரிக்கா, பின்னர் மனைவி கொல்லப்படவில்லை. அவரது காலில்தான் சுட்டோம் என்று பலியடித்தது. உசாமாவோடு இரு பெண்கள் இருந்தார்கள் என்று ஆரம்பத்திலும் பின்னர் மூன்று மனைவியர் என்றும் பிள்ளைகள் எண்ணிக்கையில் முன்னுக்குப் பின் முரணாகவும் கூறுகிறது. இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? பாகிஸ்தான் கண்காணிப்பில் இருபபதாக கூறிக்கொண்டாலும் அவர்களை இதுவரை காட்டாதது சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் உஸாமா வேட்டையின் போது அவரது பாதுகாவலர்களுடன் நாற்பது நிமிடம் மோதியதாக கூறும் அமெரிக்கா, அவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தெளிவான தகவலை சொல்லாதது ஏனோ? அவர்களை கொன்றுவிட்டதாக கூறும் அமெரிக்கா குறைந்தபட்சம் அவர்களின் உடலைக் கூட முழுமையாக  காட்டாமல் உஸாமா பாணியில் மறைத்து வருவது ஏனோ?
 
எக்கச்சக்க பலம் வாய்ந்த அமெரிக்காவிற்கு எட்டு மாதம் ஏனோ?

உஸாமா அவர்கள் கொல்லப்பட்டதை  உலகிற்கு அறிவித்த ஒபாமா, ''கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், பின்லாடன் இருக்குமிடம் தெரிந்தது. பாகிஸ்தானின் உள்ளடங்கிய இடம் ஒன்றில் அவர் இருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்கிறார் ஒபாமா. உஸாமா இருக்கும் இடம் பற்றி எட்டு மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிந்தும் அவரை உடனடியாக பிடிக்காமல் இப்போது கொன்றதாக கூறுவதுதான் உஸாமாவின் மரணத்தில் உச்சகட்ட சந்தேகத்தை எழுப்புகிறது.  

இதுதான் சொகுசு மாளிகையோ?

உஸாமா அவர்கள் தங்கியிருந்த மாளிகை உயர்தர வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகை என்று அமெரிக்கா தரப்பு செய்தி பரப்புகிறது. ஆனால் அவர்கள் காட்டும் அந்த வீட்டை பார்த்தால் சாமான்ய  மக்கள் வாழும் வீடு போன்றே உள்ளது. மேலும் அந்த வீட்டில் தொலைக்காட்சியோ, இன்டெர் நேட்டோ, தொலைபேசியோ கூட இல்லை என்று செய்திகள் கூறுகின்றன. உஸாமா உயர்தர சொகுசு மாளிகையில் வசித்தார் என்று சொல்வதன் மூலம் அவர் சுகபோக வாழ்க்கை  வாழ்ந்தாரேயன்றி அவர் மக்களுக்காக அனைத்தையும் துறந்த தியாகியல்ல என்று காட்ட முனைகிறது அமெரிக்கா. இதன் மூலம் மலைகளிலும் மடுக்களிலும் கஷ்டப்படும் போராளிகள் உள்ளத்தில் உஸாமா மீது ஒரு தப்பெண்ணத்தை விதைத்து அவர்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணுகிறதோ அமெரிக்கா?

இறுதியாக உஸாமா அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம். உஸாமா இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று நாம் சொல்லவரவில்லை. அதே நேரத்தில் அவர் கொல்லப் பட்டுவிட்டார் என்ற அமெரிக்காவின் வாதம் பலவீனமாக இருக்கிறது என்பதே நமது நிலையாகும். இருப்பினும் உஸாமாவை கொன்றதாக அமெரிக்கா கூறுவதற்கு ஒருவேளை கீழ்கண்ட காரணம் இருக்குமோ;

  • உஸாமாவை கொன்ற ஹீரோவாக தன்னை காட்டி 2012 ல் நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு அரியாசனத்தை கைப்பற்றும் நோக்கமோ?
  • ஆப்கான்-ஈராக் மீதான நீண்டநாள் போரின் மூலம் நாட்டு மக்களிடம் எழுந்துள்ள  அதிருப்தியை மறைத்து, அந்த போர் தொடங்கப்பட்ட நோக்கத்தை உஸாமாவை கொன்றதன் மூலம் சாதித்ததாக காட்டிக் கொள்வதற்காகவோ?
  • சமீபத்திய லிபியா மீதான தாக்குதல்; மற்றும் அரபு நாட்டு உள் விவகாரங்களில் தலையீடு போன்றவற்றின் மூலம் ஏற்பட்ட சரிவை சரிக்கட்டுவதற்காகவோ?

ஒரே ஒரு ஆறுதல் செய்தி;

அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார். ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக