வியாழன், 5 மே, 2011

பொதுமக்களிடம் பெரும் கண்ணியமே கவுரவம்;; அஜீத் அதிரடி!

சுமாரான ஹீரோவிலிருந்து சூப்பர் ஹீரோ வரைக்கும் ரசிகர் மன்றங்கள் தமிழகத்தில் உண்டு. அறிமுக நாயகனுக்கும் அடைமொழியிட்டு அசத்தலாக மன்றம் தொடங்குவதில் தமிழ்நாட்டு ரசிகனுக்கு ஈடு இணை எவரும் இருக்க முடியாது. ரசிகர் நற்பணி மன்றம் என்று இவர்கள் தொடங்கினாலும் இவர்களின் நற்பணி என்னவோ தனது தலைவனின் புதுப்  பட வெளியீட்டின் போது தியேட்டரை அலங்கரிப்பது, ஆளுயர கட்டவுட்களை நிறுவுவது, மனைவியின் தாலியை மார்வாடி கடையில் வைத்தேனும் தலைவனின் கட்டவுட்டுக்கு மலர் மாலை சூடுவது, பசியால் பாலுக்கு அழுகும் குழந்தைக்கு இறங்காத இவன், தனது தலைவனின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யத் தவறுவதில்லை. புது பட பெட்டியை மேள தாளம் முழங்க  தியேட்டர் வரை கொண்டு வரும் அளப்பரை என்ன; தலைவனின் படம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அழகு குத்திக் கொள்ளும் பக்தி என்ன; இவர்களின் இந்த கூத்துக்கள் தான் பெரும்பாலும் 'நற்பணி'யாக இருந்துள்ளது. 
 
தனது ரசிகனின் இதுபோன்ற 'நற்பணிகளை' ஊக்கப்படுத்தி, மன்றங்களை  நாளடைவில் கட்சியாக்கி மகுடம் சூட நினைக்கும் சில கூத்தாடிகளுக்கு மத்தியில் நடிகர் அஜீத்குமார் சற்றே வித்தியாசமானவர் போலும். முதல்வரை  பாராட்டும் விழாவில் கலந்து கொள்வதை பிறவிப் பயனாக கருதும் கலைஞர்களுக்கு மத்தியில், பாராட்டுவிழாவிற்கு வந்தே தீரவேண்டும் என்று சிலரால் மிரட்டப்படுகிறோம் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசி ரஜினிகாந்த் உள்ளிட்ட அரங்கத்தின் ஒட்டுமொத்த கைதட்டலையும் அள்ளியவர் அஜீத். தேர்தலில் வாக்களிக்க செல்லும் போதும் சாமான்யனாகவே  தன்னைக் கருதி எவ்வளவு பெரிய க்யூ ஆனாலும் வரிசையில் நின்று வாக்களிக்க இவர் தயங்கியதில்லை. இத்தகைய சில பண்புகளையுடைய அஜீத், பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ' இன்று முதல் [01 -05 -11 ]எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்'. என்று அறிவித்துள்ளார்.
 
மேலும், ''சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.  இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் என்றும் மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார் அஜீத். 
 
அஜீத்தின் இந்த முடிவு உள்ளபடியே பாரட்டிற்குரியதாகும். ரசிகர்கள் சிலரின் கண்ணியமற்ற செயல்பாடுகள் தனக்கும் கெட்டபெயரை உண்டாக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார். மேலும் ரசிகர்கள் நற்பணி என்ற பெயரில் குடும்பத்தை நட்டாற்றில் விடுவதை குறித்தும் அறிந்திருக்கிறார். எனவேதான் விசிலடிக்கும் ரசிகர்கள் முக்கியமல்ல; விவரமான சிந்தனை தான் முக்கியம் என தெளிவான  முடிவை எட்டியிருக்கிறார். அஜீத்தின் இந்த வழியை  பின்பற்றி ஏனைய நடிகர்களும்  மன்றங்களை கலைத்து விட்டாலே பாதி குடும்பங்களின் பிரச்சினையும், பாதுகாப்பு பிரச்சினையும் ஒரு சேர முடிவுக்கு வந்துவிடும்.  செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக