வெள்ளி, 20 மே, 2011

மம்தாவின் அரசியல் பண்பாடு; ஜெயலலிதாவுக்கு ஒரு முன்மாதிரி!

மேற்கு வங்க முதல்வராக வெள்ளிக்கிழமை [20 -05 -11 ]திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பதவி ஏற்க உள்ளார். மேற்கு வங்க வரலாற்றில் முதல்வராக பதவியேற்கும்  முதல் பெண்மணி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். மேலும் இவர் யாரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினாரோ அந்த முன்னாள் முதல்வருக்கு பதவியேற்பு விழாவிற்கு நேரடி அழைப்பு விடுத்ததன் மூலம் ஒரு சிறப்பிற்குரிய பண்பையும் மம்தாபானர்ஜி வெளிப்படுத்தியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி இதற்கான அழைப்பிதழை புத்ததேவ் இல்லத்திற்கு சென்று அளித்தார். பதவி ஏற்பு விழாவில் புத்ததேவ், அவரது மனைவி மீரா பட்டாசார்யா ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  மம்தா பானர்ஜி கூறியதன்பேரில் புத்ததேவ் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்ததாக செய்தியாளர்களிடம் சாட்டர்ஜி கூறினார். அனைத்துத் தரப்பினருக்கும் அளிக்க வேண்டிய உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் வீட்டிற்கு நேரில் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
 
இந்த செய்தி அரசியல் போட்டி என்பது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இத்தகைய பண்புதான்  காலஞ்சென்ற தமிழக அரசியல் தலைவர்களிடத்திலும் இருந்தது. ஆனால் இன்றைய தமிழக நிலையோ எதிர்கட்சியை எதிரிக் கட்சியாக கருதும் அளவுக்கு அரசியல் சிந்தனை குறுகிவிட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி அவரது கட்சியின் இரண்டாம் காட்ட தலைவர்கள் கூட கந்துகொண்டதாக தெரியவில்லை. கருணாநிதிக்கு முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மம்தா போன்று ஜெயலலிதாவும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தனது பிரதிநிதி மூலம் வீட்டிற்கு  சென்று அழைப்பிதழ் வாங்கியிருந்தால் இன்றைக்கு ஜெயலலிதாவின் கவுரவம் எங்கோ சென்றிருக்குமே! ஹூம்... ''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு' என்றார் அண்ணாவின் தத்துவத்தை அம்மையார் என்றைக்குத்தான் கடைபிடிப்பாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக