செவ்வாய், 10 மே, 2011

உஸாமாவுக்காக காஃயிப் ஜனாஸா தொழுகை...?

ஸாமா அவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கக் கூறியதை பெரும்பான்மையோர் நம்பவில்லைஎனினும் அவர் மரணித்துவிட்டார் என்று நம்புபவர்களும் உள்ளனர். அவ்வாறு நம்பும் முஸ்லிம்களில் சிலர் அவருக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் காஃயிப் ஜனாஸா [இறந்தவர் உடல் வேறு பகுதியில் இருக்கும் ஒருவருக்கு செய்யும் தொழுகை] நடத்தியுள்ளனர். இவ்வாறு இந்த தொழுகை நடத்துவதற்கு அவர்கள் வைக்கும் ஒரே ஆதாரம் இதுதான்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். நூல்;புகாரி எண்; 1245

 
ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள்; [மன்னர்) நஜாஷீ இறந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'இன்று (ஒரு) நல்ல மனிதர் இறந்துவிட்டார். எனவே, எழுந்து நின்று உங்கள் சகோதரர் 'அஸ்ஹமா'வுக்காக (ஃகாயிப் ஜனாஸாத் தொழுகை) தொழுங்கள்" என்று கூறினார்கள். நூல்; புகாரி எண்; 3877 ]
 

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
இன்றைய தினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவீட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். நூல்; புகாரி 1320

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் ஒரு மனிதர் எங்கு இறந்தாலும் அவருக்காக காஃயிப் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என கூறுகின்றனர். ஆனால் அபிசீனியா மன்னருக்கு ரஸூல்[ஸல்] அவர்கள் தொழுகை நடத்தியதற்கு காரணம், அவர் முஸ்லிம்கள் வசிக்காத  பகுதியில் மரணித்துவிட்டார். எனவே அவருக்காக  தொழுகை நடத்துங்கள் என்ற நபியவர்களின் கூடுதல்  விளக்கம் அஹ்மத் நூலில் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் உஸாமா அவர்களுக்கு காஃயிப் ஜனாஸா தொழுகை நடத்த இயலாது.

அதே நேரத்தில் உஸாமாவுக்கு தொழுகை நடத்தியவர்கள் ஒரு காரணம் சொல்லலாம். கொஞ்சம் கூட இரக்கமின்றி உஸாமாவின் உடலை கடலில் வீசிய அமெரிக்கா, உசாமாவுக்காக  ஜனாஸா தொழுகை நடத்தியிருக்காது. எனவே மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அவருக்காக நாம் தொழுகை நடத்தலாம் என்று கூறக்கூடும். இதை ஒரு வாதத்திற்கு சரிகன்டாலும் உஸாமா அவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட  அன்றைய தினமே பாகிஸ்தானில்  கராச்சி நகரில் ஜமாத்து உத் தாவா அமைப்பின் சார்பாக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட காஃயிப் ஜனாஸா தொழுகை உசாமாவுக்காக  நடத்தப்பட்டு விட்டது. அதோடு அவரது ஜனாஸாவிற்கான கடமை முஸ்லிம்கள் மீது முடிந்து விட்ட நிலையில் அதற்கு பின் வேறு வேறு பகுதிகளில் நடத்தியது எந்த ஆதாரமும் அற்றதாகும்.

நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக