சனி, 4 பிப்ரவரி, 2012

நபிகள் நாயகம் துறவியா?

நபிகள் நாயகம் என்று தமிழ் மக்கள் அறிந்து வைத்துள்ள இறைத்தூதர் முஹம்மது ஸல்.. அவர்களின் உதயதினம்  என்று முஸ்லிம்களில் ஒரு சாரார் நம்பும் மீலாது நாளில் அனைத்து தலைவர்களும் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு மீலாது வாழ்த்து ஒன்றை தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ''இஸ்லாம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே உருவாக்கிய நபிகள் பெருமான் அறப்போராளியாக, வணிகராக, அரசியல்வாதியாக, பேச்சாளராக, சீர்த்திருத்தவாதியாக, அனாத ரட்சகராக, அடிமைகளைக் காப்பவராக, பெண் விடுதலைக்குப் போராடுபவராக, நீதிபதியாக திகந்தவர் என்றல்லாம் கூறியுள்ள கருணாநிதி, நபிகள் நாயகம் துறவியாக வாழ்ந்தவர் என்றும் கூறியுள்ளார். 

கருணாநிதியின் இந்த கூற்று தவறாகும். ஏனெனில் அந்த நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாத்தில் துறவறம் என்பது அறவே இல்லை. மேலும் நபிகள் நாயகம் அவர்கள் பதினொரு திருமணங்கள் செய்துள்ளார்கள். குழந்தைகள் பெற்றுள்ளார்கள்.தம் பிள்ளைகளுக்கு மணமுடித்து வைத்து பேரப்பிள்ளைகளையும் கண்டுள்ளார்கள்.அதோடு ''திருமணம் என்பது எனது வழிமுறை; யார் அதை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்' என்றும் முஸ்லிம்களுக்கு திருமணத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்கள். உண்மை இவ்வாறிருக்க நபிகள் நாயகம்  துறவியாக வாழ்ந்தார் என்று கூறுவது கருணாநிதியின் வரலாற்றுப் பிழையாகும். ஏனென்றால் மற்ற அரசியல்வாதிகள் போல் பிறர் எழுதித் தருவதை கையெழுத்திட்டு அனுப்பும் சராசரி அரசியல்வாதியல்ல கருணாநிதி. தினமும் பத்திரிக்கைகள்-நூல்களோடு தொடர்புடையவர் என்றும், அதையும் தாண்டி சிறுவயது முதலே இஸ்லாமிய கொடி ஏந்தியவன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி அவர்கள் இவ்வாறு எழுதுவது வேதனைக்குரியதாகும். இந்த விசயத்தில் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்வதோடு, திருத்தமும் வெளியிடுவார் என நம்புகிறோம். 

மேலும் கருணாநிதி அதே வாழ்த்துச் செய்தியில், முஸ்லிம்களுக்கு செய்த சாதனைகள்[!] என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அதில், ''தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 குறித்து இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தது.' என்றும் கூறியுள்ளார். முதலாவதாக காலம் காலமாக பள்ளிவாசலில் முஸ்லிம்களின் திருமணங்கள் பக்காவாக பதிவு செய்துவரும் நிலையில், இந்த கட்டாய திருமண பதிவு சட்டத்தை கொண்டுவந்தவரே இவர்தான்.இவர் கொண்டுவந்த திருமணப் பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அம்சங்கள் உள்ளன என்பதையறிந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-தமுமுக உள்ளிட்ட சில சமுதாய அமைப்புகள் ஒரு குழுவாக அன்றைய சட்ட அமைச்சர் துரைமுருகனை சந்தித்து முறையிட்டபோது, அரசு கொண்டுவந்த திருமணச் சட்டத்தில் என்னென்ன பாதகமான அம்சங்கள் உள்ளன என்பதை நீங்கள் ஒரு வரைவாக தாருங்கள். அதை நான் பதிவுத் துறைக்கு 'பார்வேர்டு' செய்கிறேன் என்று சொன்னார். அவ்வாறே அந்த வரைவு சமுதாய அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு சார்பாக வழங்கப்பட்டது. அதற்கு பின்னும் இவர்கள் எந்த மாற்றமும் செயவில்லை. ஆனால் திருமண பதிவு சட்டத்தில் திருந்த்தம் செய்யப்பட்டுவிட்டதாக கருணாநிதி கூறுகிறார் என்றால் அவருக்கு தவறான தகவல் தரப்பட்டிருக்கிறது என்று அறியமுடிகிறது.

எனவே, கருணாநிதி அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், அறிக்கை விடுவதில் காட்டும் அக்கறையை அதில் சொல்லப்படும் கருத்திலும் காட்டுமாறு அன்புடன் கூறிக்கொள்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக