வெள்ளி, 8 ஜூன், 2012

இரட்டைக் குவளையை இல்லாமல் ஆக்க, இஸ்லாமே தீர்வு.

ந்திய நாடு சுதந்திரம் அடைத்து அறுபத்தைந்து ஆண்டுகளை எட்டும் நிலையில், அன்று சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தனது வாழ்நாளில் அனுபவித்த தீண்டாமை இன்றும் தொடர்கதையாக உள்ளது. "ஜாதிகள் இல்லையடி-பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்!" என்ற பாரதியாரின் உன்னதமான வார்த்தைக்கு உயிரூட்ட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க,கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கரின் பிறந்த தின நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்கள் பேசும்போது, 

''தான் படித்த வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இணையாக குடிநீர் அருந்தக்கூட இயலாத அளவுக்கு தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டவர் அம்பேத்கர். ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தக் கூடாது என்ற கருத்தை சமூகம் சகித்துக் கொள்ளாத காலம் அது. இந்திய வரலாற்றில் அவையெல்லாம் கறுப்பு நாள்கள். அந்த சூழ்நிலை இன்று எவ்வளவோ மாறிவிட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அம்பேத்கர் பல போராட்டங்களை நடத்தினார்.

தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது. எனினும், இங்கு இன்னும் சில கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்வது வேதனை அளிக்கிறது. இந்த பாகுபாடுகள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றார் இக்பால்.

அம்பேத்கார், பெரியார் போன்ற தலைவர்கள் பாடுபட்டும் தமிழகத்தில் பிறப்பின் அடிப்படையில் பார்க்கப்படும் சாதிய பாகுபாடு களையப்பட்டு விட்டதா என்றால் இல்லை. இன்றும் மதுரை மாவட்டத்தில், 149 கிராமங்களின் டீக்கடைகளில் இரட்டைக் குவளைகள் நடைமுறையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட, மதுரை, "எவிடன்ஸ்' நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :ஒரு மாதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட, 149 கிராமங்களில், 463 டீக்கடைகளில், இரட்டை டம்ளர் முறை, தற்போதும் உள்ளது.இதில், 131 கிராமங்களில், இரு சமூகத்தினருக்கு, தனித் தனி டம்ளர் கொடுப்பதும், 12 கிராமங்களில், ஒரே டம்ளர்களை, இரு சமூகத்தினருக்கு தனித்தனியாக வைப்பதும் தொடர்கிறது. ஒன்பது டீக்கடைகளில், குறிப்பிட்ட சமூகத்தினர், டம்ளர்களை சுத்தப்படுத்தி வைக்கின்றனர். 67 கடைகளில், தனித் தனி இருக்கைகளும் உண்டு.இரட்டை டம்ளர் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, 2011 ஏப்ரலில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க, "சமத்துவ தேனீர் விருந்து' திட்டம், அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், கிடப்பில் உள்ளது.டீக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இரட்டை டம்ளர் முறையை கண்காணிக்க, தாசில்தார் தலைமையில் குழு அமைக்க வேண்டும். டீக்கடைகளில் மட்டுமல்ல; ஓட்டல், சலூன், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடியில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் நடக்கும் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில், இரட்டை டம்ளர் முறையை ஒழிப்பது குறித்து விவாதிக்க வேண்டும்'' இவ்வாறு கதிர் கூறியுள்ளார்.

என்னதான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவர்கள் மீதான சாதிய முத்திரை மட்டும் அகல்வது போல் தெரியவில்லை. இதனால்தான் சமூக நீதிக்காக சம உரிமைக்காக போராடிய பெரியார் அவர்களே ஒரு கட்டத்தில், 'இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து'' என்ற கருத்தை முன் வைத்தார். ஆம். இஸ்லாம் ஒன்றுதான் ஒருவனது பழைய முகவரியை மாற்றி முஸ்லிம் என்ற ஒரே முகவரியைத் தர வல்லது என்பதை பெரியார் உணர்ந்திருந்தார். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தை தழுவிய அடுத்த நொடியே பரம்பரை முஸ்லிமின் சகோதரனாகி விடுகின்றான். இவன் நேற்றுவரை தாழ்த்தப்பட்டவனாக இருந்தவனாயிற்றே; இவனுடன் நமக்கென்ன உறவு என்று எந்த முஸ்லிம்களும் நினைப்பதில்லை. மாறாக அவனோடு ஒரே தட்டில் உண்டு உறவாட இன் முகத்துடன் முன்வருவார்கள். இந்த பக்குவத்தை இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது. ஏனென்றால் இஸ்லாம் பிறப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமல்ல. மாறாக மனிதனின் வாழ்வின் அடிப்படையை வைத்து, அவன் இறைவனுக்கு அஞ்சும் தன்மையை வைத்தே அவனை சிறந்தவன் என்று சொல்லும் மார்க்கம். 

எனவே பட்டியலின மக்கள் கவனிக்க வேண்டியது. அம்பேத்கரே இந்துமத தீண்டமையினால் வெறுத்து, பல்லாயிரம் மக்கள் சகிதமாக புத்தமதம் தழுவினார். ஆனாலும் அம்பேத்கார் எதிர்பார்த்த அந்த சுயகவுரத்தை புத்தமதம் வழங்கிவிடவில்லை. அதனால்தான் இன்றும் அந்த இழிவு நீங்கவில்லை. அதே நேரத்தில் பெரியாரின் அறிவுரைப்படி இஸ்லாத்தில் இணைந்த பட்டியின மக்கள் இன்று தங்களின் பழைய பாரம்பரியம் என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அவர்கள் இழிவிலிருந்து நீங்கி, கவுரவத்துடன் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழ்கிறார்கள். எனவே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீராத இந்த இழிவை ஒரு நொடியில் நீக்கும் அருமருந்தான இஸ்லாத்தை நோக்கி வாருங்கள். இன்முகத்தோடு வரவேற்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக