வியாழன், 21 ஜூன், 2012

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் நிலைதான் வாயில்லா ஜீவன்களான ஆடுகளுக்கும்.

ரு பொருளை ஒருவன் எப்போது பாதுகாப்பான் என்றால், ஒன்று அந்த பொருள் அவனது உழைப்பில் வாங்கியதாக இருக்கவேண்டும். அல்லது அந்தப்பொருள் அவனிடம் இல்லாத ஒன்றாக இருக்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடுகள் இல்லை என்றே சொல்லிவிடலாம். பெரும்பாலான வீடுகளில் அறைக்கு ஒன்று என்ற கணக்கில் கூட தொலைக்கட்சிகள் வைத்துள்ளார்கள். ஆனாலும் முந்தைய திமுக ஆட்சியில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் சந்தையில் மலிவான விலைக்கு கிடைத்ததையும், டீக்கடை தொடங்கி பார்கள் வரைக்கும் அலங்கரித்தையும் பத்திரிக்கைகள் அவ்வப்போது படம்பிடித்துக் காட்டின. இப்போதைய அதிமுக ஆட்சி விலையில்லா ஆடு மற்றும் மாடுகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.

தமிழக அரசு வழங்கிய விலையில்லா ஆடு, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில், சில வாரங்களுக்கு முன் ஒரு வெள்ளாடு, ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. வெள்ளாடுகள் பெரும்பாலும், இரண்டு அல்லது மூன்று குட்டிகள் வரை போடும். ஆனால், ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளதால், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அம்மா ஆட்சியின் சாதனை என்று அதிமுகவினர் கொண்டாடும் அதே வேளையில், விலையில்லா ஆடுகள் கசாப்புக்கடையில் அணிவகுத்த செய்தி அவர்களை மட்டுமல்ல; மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விலையில்லா ஆடுகளை பெறும் பயனாளிகளுக்கு அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் பிரதானமாக, ஆடுகளை பெற்றவர்கள், குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை விற்பனை செய்யக் கூடாது என்பதாகும். ஆனால் தேனி மாவட்டம் போடி பகுதியில் அரசு வழங்கிய விலையில்லா ஆடுகளை, பயனாளிகள் 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய்க்கு கசாப்பு கடைகளுக்கு விற்பனை செய்துள்ளனர். இதுபோல வேறு சில பகுதிகளிலும் விலையிலா ஆடுகள் கசாப்புக்கடைக்காரன் கத்திக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது. இது எதை உணர்த்துகிறது என்றால், ஆள் படுக்கவே இடமில்லாத வீட்டில் வசிக்கக் கூடியவன் கூட அரசு தரும் விலையில்லா ஆட்டை வாங்கி விலைக்கு விற்றுவிடுவோம் என்று கருதுகிறான். சும்மா கிடைப்பதை மில்லியன் கணக்கில் பணம் வைத்திருப்பவன் கூட விடமாட்டான் என்பதுதான் எதார்த்தம். கடந்த திமுக அட்சியில் வழங்கப்பட்ட இலவச டிவியை வாங்க ஒரு பெண்மணி காரில் வந்து இறங்கிய செய்தி அனைவரும் அறிந்ததுதான். எனவே இலவசங்கள் வழங்குவது பெரிதல்ல. அதை தேவையுடையோருக்கு வழங்குகிறோமா? அல்லது அந்த தேவையின்பால் மக்களை தள்ளுகிறோமா என்பதை அரசு சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். பேங்கில் ஒரு தொழிற்கடன் வாங்கினால், அந்த நிறுவனம் நடக்கிறதா என்பதை வங்கி அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்வார்கள். அதுபோல விலையில்லா பொருட்களை வழங்கும் அரசு மாதந்தோறும் அந்த பொருட்கள் பயனாளிகளிடம் இருக்கிறதா என்பதை சோதித்தறிய வேண்டும். இவைகளை விட சிறந்த ஒன்று என்னவென்றால், விலையில்லா பொருட்கள் வழங்குவதை விட்டுவிட்டு, விலைமதிப்பில்லா கல்வியை அனைத்து மக்களுக்கும் விலையில்லாமல்[கட்டணமின்றி] வழங்க அரசு முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக