ஞாயிறு, 17 ஜூன், 2012

''கலாம் என்றால் கலகம்'., கலகத்தை உண்டாக்கிய கருணாநிதி.

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு சொல்லுக்கு அகராதி அர்த்தம் சொல்லி சர்ச்சைக்குள்ளாவது மிகவும் விருப்பமான ஒன்று போலும். இந்து என்ற வார்த்தைக்கு திருடர் என்று அர்த்தமே என்று முன்பு கூறி பரபரப்பூட்டினார். இப்போது முன்னால் ஜனாதிபதியும் நாடறிந்த கல்வியாளருமான அப்துல்கலாம் பற்றிய ஒரு செய்தியில், ''கலாம் என்றால் கலகம்' என்று சொல்லி கலகத்தை உண்டாக்கியிருக்கிறார் கருணாநிதி. 

ஒரு வார்த்தைக்கு அர்த்தம் சொல்வதாக இருந்தால் அந்த மொழி பற்றிய ஞானம் இருக்கவேண்டும். கலாம் என்பது அரபி வார்த்தையாகும். கலாம் என்றால், வார்த்தை அதாவது அல்லாஹ்வின் வார்த்தை என்பது அதன் பொருளாகும்.. முஸ்லிம்களின் வேத நூலான திருக்குர்'ஆனுக்கு கலாமுல்லாஹ் [அல்லாஹ்வின் வார்த்தை] என்று பெயர் உண்டு. அப்துல் கலாம் என்றால் அல்லாஹ்வின் வேதத்தின் அடிமை என்று பொருள் கொள்ளலாம். அப்துல்கலாம் என்று பெயர் வைக்கலாமா என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. ஏனென்றால் ஒருவர் அல்லாஹ்வின் பெயரோடு அப்துவை[அடிமை] சேர்த்துதான் வைக்கமுடியும். அல்லாஹ்வின் பெயரில் கலாம் என்ற பெயர் இல்லை. எனவே அப்துல்கலாம் என்ற பெயர் வைக்கக் கூடாது என்று சில முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள். இது அப்துல்கலாம் என்ற பெயரில் அரபி மொழி ரீதியான விளக்கம்.

ஆனால் கருணாநிதி ''கலாம் என்றால் ''கலகம்' என்ற ஒரு பொருள் உண்டு. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் கலகம் உண்டாகியுள்ளது என்று கூறியுள்ளார். தமிழ் அகராதிப்படி கலாம் என்ற வார்த்தைக்கு கலகம் என்ற அர்த்தம் உண்டா என்பது நமக்குத் தெரியாது. எனினும் அப்படி அர்த்தம் இருந்தால் கூட வேறு மொழியில் உள்ள வார்த்தைக்கு தமிழ் மொழி அர்த்தத்தை சொல்வது மூத்த அரசியல்வாதியும் முத்தமிழ் அறிஞர் என்றும் கூறிக்கொள்ளும் கருணாநிதிக்கு இது அழகா? என்பதை சிந்திக்கட்டும். 

மேலும் அப்துல்கலாம் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப்போகிறேன் எனக்கு அதரவு தாருங்கள் என்று எந்த கட்சி வாசலிலும் போய் நிற்கவில்லை. குறிப்பாக திமுகவின் வாசலில் நிற்கவில்லை. அப்துல்கலாமினால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த கலகமும் குழப்பமும் ஏற்படவில்லை. அவரது முந்தைய ஜனாதிபதி பதவிக் காலத்திலும் அவரால் நாட்டில் எந்த கலகமும் ஏற்பட்டதில்லை. வேண்டுமானால் நடந்த கலகத்தை தடுக்கத் தவறியவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆம். குஜரராத்தில் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு படுகொலைகள் மோடி அரசின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்டபோது ஜனாதிபதியான அப்துல்கலாம் மவுனம் காத்தார் என்பது உண்மை. ஒரு மாநில அரசு சட்டம் ஒழுங்கை காக்கத்தவறி மக்கள் இன்னலை சந்திக்கும் நிலையில் மத்தியப் படையை அனுப்ப ஜனாதிபதியான கலாம் முயற்சிக்கவில்லை. தனது அதிகாரத்தை பயன்படுத்தி குஜராத் அரசை அவர் கலைக்கவுமில்லை. குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறக் கூட அவர் சென்றதில்லை. இப்படி தானும் கலகம் செய்யாமல், நடக்கும் கலகத்தைக் கூட கண்டுகொள்ளாமல் இருந்தவரை பார்த்து கலகம் செய்பவர் என்ற ரீதியில் கருணாநிதி சொன்னது உள்ளபடியே அப்துல்கலாமை இழிவுபடுத்துவதாகும். கருணாநிதி ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன்னால் ஒன்றுக்கு பலமுறை யோசிப்பது நல்லது. கலாம் என்ற வார்த்தைக்கு கலகம் என்று தமிழில் அர்த்தம் உண்டு; எனவே நான் சொன்னது சரிதான் என்று கருணாநிதி சொல்வாரானால், 
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கேட்கும் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.

''தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகளின் பெயர் பொதுவாக `கழகம்' என்றே முடிகிறது. அப்படி என்றால் `கழகம்' என்பதற்கு என்ன பொருள்? ``பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்'' என்ற திருக்குறளின்படி பார்த்தால், கழகத்திற்குள் (சூதாடும் இடம்) காலை வைத்துவிட்டால் பழமையால் வழி வழிவந்த பாரம்பரிய செல்வமும், பண்பாடும் கெட்டுப் போகும் என்று பொருளாகும்.'' இதை கருணாநிதி ஏற்றுக் கொண்டு தனது கழகத்தை சூதாட்ட விடுதி என்று ஏற்றுக்கொள்வாரா? தனது இந்த கழகத்திற்குள் அதாவது சூதாட்ட விடுதிக்குள் நுழைந்தவன் பாரம்பரியமும்-பண்பாடும்-செல்வமும் கேட்டு சீரழிவான் என்பதை கருணாநிதி ஏற்றுக்கொள்வாரா? என்ற நல்லசாமியின் 'நச்' கேள்வி நியாயமான ஒன்றுதானே!

வார்த்தையால் கலகம் விளைவிப்பது கலைஞரே நியாயமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக