வெள்ளி, 15 ஜூன், 2012

சிறையில் ''அந்த' விசயத்திற்கும் அனுமதி கோரும் சிறைத்துறை அதிகாரி.

ந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே குற்றம் செய்யும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். சிறைச்சாலை என்பது அவர்கள் செய்த தவறுக்கு தண்டிக்கப்படும் ஒரு இடம் என்றும், தவறு செய்தவர்கள் திருந்துவதற்குரிய இடம் என்றும் பரவலாக கூறப்படுவதுண்டு . ஆனால் அதே சிறைச்சாலையில் சிலர் அனைத்து வசதிகளுடன் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக அவ்வப்போது மக்களால் பேசப்படுவதுண்டு. 

சிறைச்சாலைகளில் அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தப்படும்போது, சிறை விதிகளுக்கு முரணான சிகரெட், கஞ்சா உள்ளிட்ட சில போதைப் பொருட்கள், செல்போன்கள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டு சில அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்படுவதும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வருவதை நாம் அறிவோம். 

இது ஒரு புறமிருக்க, சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து பின்பு விடுதலையானவர்களில் சிலர் மீண்டும் அதே தவறை செய்து மீண்டும் சிறைச்சாலை செல்வது வாடிக்கையாகிவிட்டது. காரணம் சிறைச்சாலை அவர்களுக்கு பொழுதுபோக்கு இடமாக தெரிகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை என்பதும் புலப்படுகிறது. இதையெல்லாம் நாம் இங்கு முன்வைப்பதற்கு காரணம்,
சிறைக்கதவுகள் எப்போது திறக்கும்; நாம் நமது இறகை விரித்து எப்போது பறப்போம் என்று சுதந்திர வேட்கையுடன் பல சிறைப்பறவைகள்[சிறைவாசிகள்] காத்துக்கொண்டிருக்க, ஒரு சிறைவாசியோ தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அதிகப்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்த அதிசய சம்பவமும் நடந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, மும்பையை சேர்ந்த நாராயணன் நாயர் என்பவருக்கு கொலை செய்த குற்றத்திற்காக கோர்ட்டு அவருக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கிறது. குறைவான தண்டனையை அடைந்த அந்த நாராயணன நாயரோ, எனக்கு ஏழு ஆண்டு தண்டனை போதாது. எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்து நிரந்தரமாக ஜெயிலில் வைத்துவிடுங்கள் என்று நீதிபதியிடம் கூறியுள்ளார். இப்படி தனக்கு தண்டனையை அதிகப்படுத்தி கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் வேடிக்கையானதும் வேதனையானதுமாகும் . ஆம்! ஏழு ஆண்டு தணடனை முடிந்து தான் வெளியே வந்தால் தனக்கு சாப்பாட்டுக்கு வழியிருக்காது. எனவே நிரந்தரமாக சிறைச்சாலையில் இருக்கும் தண்டனை கொடுங்கள் என்று கூறியுள்ளார். சாதரண சாப்பாடு விஷயத்திற்காக சிறை வாழ்க்கை சிறந்தது என அந்த கைதி தீர்மானிக்கிறார் என்றால், சிறை என்பது நடைமுறையில் மக்கள் சொல்வதுபோல்,'''மாமியார் வீடு' போல் இருப்பதால்தான்.

அந்த காலத்தில் சில மன்னர்கள், நடந்து செல்லும் பாதசாரிகள் தங்கி இளைப்பாறுவதற்கு சாலைகளை ஒட்டி சத்திரங்களை எழுப்பியும், அவற்றில் சிலவற்றில் அவர்களுக்காக உணவும் ஏற்பாடு செய்ததை நாம் வரலாறுகளில் படித்ததுண்டு. அதுபோல் இந்த கைதிகள் சிறைச்சாலையை சத்திரமாக கருதியதால்தான் தண்டனையை அதிகப்படுத்தி கேட்கின்றனர். ஆக இந்திய குற்றவியல் சட்டம் குற்றவாளிகளை திருத்துவதில் தோல்விகண்டு, இதுபோன்ற சோம்பேறிகளை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது என்பதே உண்மை. 

அடுத்து இப்போதுள்ள நிலையிலேயே இவரைப்போன்ற கைதிகளுக்கு சிறையை விட்டுப் பிரிய மனமில்லை என்ற நிலை இருக்கும்போது, சிறைவாசிகள் தமது மனைவியரை சிறைக்குள் அழைத்து இல்லற வாழ்க்கை நடத்திட அனுமதிக்கவேண்டும் என்ற ஒரு கோரிக்கை அதுவும் சிறைத்துறை அதிகாரியால் முன் வைக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஜிபி சசிகாந்த் சிறையில் உள்ள நன்னடத்தை உள்ள கைதிகள் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு ஒரு பரிந்துரை அனுப்பியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மனிதனுக்கும் சாப்பாடு எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு செக்ஸும் அவசியமாகும். எனவே சிறையில் மனம் திருந்தி வாழும் ஆயுள் தண்டனை கைதிகள் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம். கைதிகளும் நம்மைபோல மனிதர்கள்தானே. அவர்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ள அனுமதித்தால் சிறைச்சாலைகளுக்குள் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். சிறைத்துறை சீர்திருத்தத்தின் ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' இவ்வாறு சிறைத்துறை டிஜிபி சசிகாந்த் கூறியுள்ளார்.

பஞ்சாப் அரசு இந்த பரித்துரைக்கு அனுமதி கொடுத்தால், இந்தியாவில் கைதிகள் செக்ஸ் அனுபவிக்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் மாநிலம் இருக்கும். இந்த திட்டத்தின்படி கைதிகள் விருப்பப்படும்போது, தன் மனைவியை ஜெயிலுக்கு வரவழைக்கலாம். ஜெயில் வளாகத்தில் கைதியும் அவர் மனைவியும் உறவு வைத்துக்கொள்ள எந்த தொந்தரவும் இல்லாத தனி இடத்தில் வீடு கட்டப்பட்டிருக்கும். அந்த வீட்டில் கைதி தன் மனைவியுடன் உல்லாசமாக இருக்கலாம்.

சிறைத்துறை அதிகாரியின் இந்த கோரிக்கை நியாயமானதா? தான் செய்த தவறால் இங்கே நமது மனைவி மக்களை இழந்து தனிமையில் வாடுகிறோமே என்று ஒரு கைதி வருந்தினால் தான் அவன் திருந்துவதற்கு வழி பிறக்கும். ஆனால் அவனுக்கு சிறையில் ஏற்கனவே சிக்கன் மட்டன் போன்ற அயிட்டங்களுடன் கூடிய வசதியான உணவுகள், சினிமா, பத்திரிக்கை என அனைத்து வசதிகளும் இருக்கும் நிலையில், அவன் அனுபவிக்கும் ஒரே தண்டனை அவனது ''தனிமை' மட்டுமே என்ற நிலையில், அந்த தனிமையையும் போக்குவதற்கு வாசலை திறந்துவிட்டு விட்டால் சிறை என்பது ''மாமியார் வீடு' என்ற விமர்சனம் உண்மையாகி விடாதா?

மேலும் இது அறிவுக்குப் பொருத்தமானதா என்றால் அதுவும் இல்லை. சிறையில் ஒருவன் தனது மனைவியை அழைத்துவந்து இன்பம் அனுபவிக்கும் நிலையில் மற்ற கைதிகளின் மனநிலையை பாதிக்காதா? சிலரை அப்பெண்ணிற்கு பாதிப்பை உண்டாக்கத் தூண்டாதா? ஒரு கைதி தனது மனைவியுடன் இருக்கும் நிலையில் அந்த மனைவிக்கு மாற்ற கைதிகள் மூலமாக பாதிப்பு வராமல் இருப்பதற்காக காவலர்கள் வாயிற்காப்பாளர்களாக நிற்கப் போகிறார்களா? மேலும், மனைவி இல்லாத கைதிகளின் நிலை என்ன? சிறைத்துறையில் உக்ள்ள கருப்பு ஆடுகள் வேண்டியதைப் பெற்றுக்கொண்டு சிறைக்குள் தடுக்கப்பட்ட பொருட்களை அனுமதிக்கும் போது, நாளை கைதியின் மனைவி என்ற பெயரில் விபச்சாரிகளை அனுப்ப மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இதனால் சிறைக்குள் ஒழுக்கக்கேடு நிகழாதா? 

இதெல்லாம் போகட்டும். ஆண்களுக்கு இருப்பது போன்ற உணர்வுகள் பெண்களுக்கும் தானே இருக்கிறது? அப்படியானால் பெண் கைதிகளின் உணர்வுக்கு வடிகாலாக அவளின் கணவனை உள்ளே அனுப்பி வைப்பார்களா? பெண்கள் சிறையில் ஆண்கள் உள்ளே நுழைந்தால் பெண் கைதிகளின் நிலை என்ன? கணவனை இழந்த, அல்லது விவாகரத்துப் பெற்ற, அல்லது திருமணமாகாத பெண்களுக்கும் உணர்வு உண்டே? அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? 

இப்படியெல்லாம் கேள்விகளை நாம் எழுப்பினால், ''சிறைக்குள் ஓரினச் சேர்க்கை குற்றங்கள் நடக்கின்றன' என்று சொல்கிறார்கள். சில ஒழுக்கக் கேடர்கள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடலாம். அதற்காக மூட்டைப் பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்திய கதையாக, பெண்ணை அனுப்புவது என்பது சரியல்ல. சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளை உள்ளே வைத்து பூட்டலாமே தவிர, வேறு வேலையை செய்ய நினைக்கக் கூடாது. எல்லாம் சரி இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? இதோ இருக்கிறது அற்புதமான இஸ்லாமிய சட்டம்.

அகிலத்தை படைத்த கடவுள் கூறுகின்றான்;
அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே![அல்குர்'ஆன் 5 ;45]

இந்த இறைச்சட்டம் பின்பற்றப்பட்டால் சிறைச்சட்டம் எதற்கு...?

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக