வெள்ளி, 8 ஜூன், 2012

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[4]

தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில், பெருந்தலைவர் என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் காமராசர் அவர்கள் மேடையில் இருக்கும் போதே ஒரு பேச்சாளர்,

"காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்" என்று பேசினார்.

அடுத்துப் பேசிய காமராஜர்,

" நடக்கிறதைச் சொல்லணும். நாங்கள் நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனுமின்னு சொல்லுறீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்து விடுவதா வச்சுக்குவோம்.

அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்லுவான்" – என்றார்''.

'உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று பேசியவரும், ஏன் கேட்டுக் கொண்டு இருந்த பொது மக்களும் அசந்து போனார்கள். 

காமராஜர் அவர்களின் இந்த பேச்சு வெற்று அரசியல் வாக்குறுதிகளுக்கு சாட்டையடியாக இருந்தாலும், மறுபக்கம் ஒருவனுக்குச் சொந்தமான ஒன்றில் இன்னொருவனுக்கு எந்த பங்குமில்லை என்ற தத்துவத்தை அழகாக உணர்த்துவதாக இருப்பதை நாம் காணலாம். 

இந்த அடிப்படையில் இன்றைக்கு பிறரின் சொத்துக்களை போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்கும் கும்பல் ஒருபுறமிருக்க, தனது சொத்தை பாதுகாக்கும் பொருட்டு, சம்மந்தப்பட்ட உரிமையாளரால் நியமிக்கப்படும் காவலாளிகள் அல்லது மேனேஜர்கள், முதலாளியின் பலவீனத்தை பயன்படுத்தி, சொத்துக்களை தனதாக்கிக் கொள்ள முயற்ச்சிப்பதையும் காண்கிறோம். அந்த வரிசையில், உசாநீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பான ஒரு வழக்கு, அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படும் பேராசைக்காரர்களுக்கு பேரிடியாய் அமைந்துள்ளதோடு, இஸ்லாமிய அடிப்படைக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தனது நிலங்களை பாதுகாக்க ஒரு காவலாளியை நியமிக்கிறார். அவரது பணிக்காக ஊதியமும் வழங்கி வருகிறார். இந்த காவலாளி தொடர்ந்து இரு தலைமுறையாக அந்த நிலத்தை பாதுகாத்து வருகையில், அவரது உள்ளத்தில் ஒரு ஊசலாட்டம். இத்தனை ஆண்டுகளாய் இந்த நிலத்தை நமது எஜமானர் விற்கவோ, வேறுவகைக்கு பயன்படுத்தவோ செய்யவில்லை. எனவே இரு தலைமுறையாக நமது பராமரிப்பில் உள்ளதை காரணம் காட்டி நிலத்தை நமதாக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் உச்சநீதிமன்றத்தை அணுகி, ''இரு தலைமுறைகளாக இந்த நிலத்தை நான் பாதுகாத்து வருவதால் இந்த நிலம் எனக்கே சொந்தம் என கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்று ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். 

இந்த மனு மீதான தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா அடங்கிய "பெஞ்ச்', ''மனைகள் அல்லது நிலங்களை வாங்கும் உரிமையாளர்கள் தங்களுடைய தொழில், வியாபாரம், வேலை காரணமாக ஒருவருடைய பராமரிப்பு அல்லது பொறுப்பில் விட்டுவைத்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சொத்து அவர்களுக்கே உரியது என்று உரிமை கோர சட்டத்தில் வழியில்லை என்றும், நிலங்களை அல்லது சொத்துகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவற்றின் உரிமையாளர் ஒப்படைக்கும்போதே அவர் திரும்பக் கேட்கும்போது அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதே இயற்கை நீதி. பராமரிப்புக்கும் இதர சேவைகளுக்கும் உரிமையாளர் அவருக்குச் செலவுக்குப் பணம் தருவதே அப்படிப் பார்த்துக் கொள்வதற்காகத்தான். அதற்குப் பிறகும் அந்தச் சொத்து தனக்கே உரியது என்று கோர எந்தவித நியாயமும் இல்லை என்றும் கூறியுள்ள நீதிபதிகள்,

இப்போதெல்லாம் தங்களுக்கு சட்டப்படி சொந்தமில்லை என்று தெரிந்தும் ஏதாவது அற்ப ஆதாரத்தை அல்லது காரணத்தைக் காட்டி இதுபோல அலைக்கழிக்கும் வழக்குகளைத் தொடுக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தனர். இத்தகைய வழக்குகளைத் தொடுப்பவர்களுக்குக் கடுமையான அபராதம் விதித்தால்தான் இனி எதிர்காலத்தில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் இந்த வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்ததாகவும் மனுதாரர் வெறும் வாட்ச்மேன்தான் என்பதால் 25,000 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த அபராதத்தை 2 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறினர். அத்துடன் அந்த நிலத்தை அதன் உரிமையாளரிடம் 2 மாதங்களுக்குள் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய இந்த அற்புதமான தீர்ப்பு பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.  (4:6)

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.  (4:10)

மேற்கண்ட இரு வசனங்களிலும் அனாதைகளின் சொத்துக்களை அவர்களின் பருவகாலம் வரை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற ஒருவர் ஏழையாக இருப்பின் அந்த சொத்துக்களில் நியாயமான அளவு [பராமரிப்புக் கூலி என்ற வகையில்] சாப்பிடலாம். ஆனால் இந்த பராமரிப்பாளர் செல்வந்தராக இருந்தால், அனாதையின் சொத்தில் இருந்து கடுகளவும் அனுபவிக்க அனுமதியில்லை என்று கூறும் இஸ்லாம், அந்த அனாதைகள் உரிய பருவத்தை அடைந்து, அவர்களது சொத்துக்களை மேலாண்மை செய்யும் தகுதியை அடைந்துவிட்டால் எவ்வித குறைவுமின்றி, அவர்களிடம் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்கிறது. இந்த வசனத்தின் அடிப்படையில். மேற்கண்ட வழக்கின் காவலாளி, சொத்துக்களை பாரமரிப்பதற்காக ஊதியம் பெற்றது சரிதான் என்றாலும், அந்த சொத்துக்களை அமுக்க நினைத்ததை இந்த வசனம் கடுமையாக கண்டிக்கிறது. இன்னும் தெளிவாக, 

''நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை [சொத்துக்களை] அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். [4:58] 
என்று கூறி, ஒருவரின் சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பேற்ற மற்றவர் ஒருபோதும் அந்த சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே அருள்மறை சொல்வதன் மூலம், தன்னைத்தானே இறைவேதம் என்று நிரூபிப்பது அதிசயமல்லவா?

தீர்ப்புகள் வரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக