சனி, 23 ஜூன், 2012

கோழி குஞ்சு பெயரில் ஆதார் அடையாள அட்டை : ஆந்திர மாநிலத்தில் அதிசயம்.


நகரி:ஆந்திராவில் கோழிக் குஞ்சு பெயரில் ஆதார் அடையாள அட்டை தயார் செய்யப்பட்டு, ஒரு கிராமத்திற்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் மக்கள் எந்த இடத்தில் வசித்தாலும், அவர்கள் அங்கு வசிக்கின்றனர் என்பதற்கு அடையாளமாக, ஆதார் என்ற பெயரில் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.இந்நிலையில், ஆந்திராவில் கோழிக் குஞ்சு பெயரில், ஆதார் அடையாள அட்டை தயார் செய்யப்பட்டு, ஒரு கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அதிசய சம்பவத்தை, சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதிக்கு உட்பட்ட, ராமசமுத்திரம் கிராம தபால் துறை அதிகாரிகள் கவனித்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆதார் அட்டை முகவரியில், கோழிக் குஞ்சு, தகப்பனார் பெயர், பெட்டைக் கோழி, ராமசமுத்திரம், சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம் - 517417 என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. கணினி மூலம் தயாரிக்கப்பட்ட ஆதார் அட்டையின் எண் க்ஊ 3175852391, N 31758523 என முத்திரையிடப்பட்டு உள்ளது.யார் பெயருக்கு ஆதார் அட்டை அனுப்பப்பட்டு உள்ளதோ, அவரிடம் மட்டுமே அதற்கான தபாலைச் சேர்க்க வேண்டுமென்ற நிபந்தனை உள்ளதால், கோழிக் குஞ்சு பெயருக்கு வந்த ஆதார் அட்டை தபாலை பிரித்துப் பார்க்க அனுமதி கேட்ட கிராம மக்களிடம், தபாலை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர் ஆதார் அட்டை வினியோக மையத்தின் பெங்களூரு முகவரிக்கு, அந்த தபாலை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

நன்றி;தினமலர்.ஜூன் 24,2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக