வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இறையச்சத்தின் அடித்தளமே நோன்பு!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .

நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?
நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, 'மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு' என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.
[அல்-குர்ஆன்2:185 ]

இந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி! வேறு என்னதான் காரணம்?

அல்லாஹ் கூறுகின்றான்;

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]

இந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி! மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும். எப்படியெனில்,
 
ஒருவன் தொழுகையாளியா-ஜகாத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான்.
 
மேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறானே  அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!
அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும் இன்ஷா அல்லாஹ். அத்தகைய இறையச்சத்தை இந்த வருட நோன்பின் மூலம் நாம் அடைவோமாக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக