புதன், 31 ஆகஸ்ட், 2011

பதவி போனதோடு மரியாதையும் போச்சு!

நாடு முழுவதும், அன்னா ஹசாரே அலை வீசிக்கொண்டிருந்த நேரம் பார்த்து, சுரங்க ஊழலில் சிக்கி, முதல்வர் பதவியை இழந்த, கர்நாடகாவின் எடியூரப்பா, தன் இமேஜை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியில் இறங்கினார்.அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, பெங்களூரில் போராட்டம் நடத்த முடிவு செய்து, கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


இது, கர்நாடகா அரசியலில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. "இவரே, ஊழலில் சிக்கித் தான், முதல்வர் பதவியை பறிகொடுத்துள்ளார். ஊழலுக்கு எதிராக, இவர் போராட்டம் நடத்துவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல் உள்ளதே' என, எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை வைத்தனர்.இதையெல்லாம் பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி போராட்டத்துக்கு கிளம்ப தயாரானார் எடியூரப்பா. ஆனால், முதல்வர் பதவியில் இருந்த போது, எடியூரப்பாவை சுற்றிச் சுற்றி வலம் வந்தவர்கள் யாருமே, போராட்டத்தில் பங்கேற்க வரவில்லை.


திடீரென, பா.ஜ., மேலிடத்திடம் இருந்து, எடியூரப்பாவுக்கு தகவல் வந்தது. "தயவு செய்து போராட்டத்துக்கு கிளம்பும் எண்ணத்தை கைவிடுங்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையில்லாமல், உங்களைப் பற்றிய, வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்து விடும்'என, கண்டிப்பு கலந்து குரலில், தகவல் தெரிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி, போராட்ட திட்டத்தை எடியூரப்பா கைவிட்டார்."பதவி இல்லாவிட்டால், சாதாரண தொண்டரிடம் இருந்து கூட, நமக்கு மரியாதை கிடைக்காது போல் தெரிகிறதே'என, கவலை கலந்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம் எடியூரப்பா.
 
நன்றி;தினமலர் ஆகஸ்ட் 31,2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக