வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

என் படத்தையும்(டேம் 999) வெளியிட அனுமதிக்க வேண்டும்; இயக்குனரின் நியாயமான கோரிக்கை!

"விஸ்வரூபம் திரைப்படத்தின் தடை நீக்கம் செய்யப்பட்டு வெளியிடப் பட்டதால் என் படத்தையும் வெளியிட வேண்டும்" என்று 'டேம் 999' பட இயக்குனர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சட்ட ஒழுங்கு காரணமாக தமிழக அரசு தடை விதித்திருந்த விஸ்வரூபம் திரைப்படம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டு நேற்று வெளியானது. இந்த நிலையில் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் முல்லைப்பெரியாறு பிரச்சனை உச்சகட்ட பதட்டத்துடன் நடந்துகொண்டிருந்த போது வெளிவந்த 'டேம் 999' படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. அப்போதும் 'சட்டம் - ஒழுங்கு' பாதிக்கப்படும் என்று காரணம் முன் வைத்து தமிழக அரசு தடை வாங்கியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேம் 999 பட இயக்குனர் சோஹன் ராய், " சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கூறி டேம் 999 படத்திற்கு தடை வாங்கினார்கள். இப்போது கமல் படத்திற்கும் அதே காரணத்தால் தடை கேட்டு பிறகு தடையை நீக்க சம்மதித்து விட்டார்கள். இப்போது என் படம் தமிழகத்தில் தடை செய்யப் பட்டதால் எனக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே என் படத்திற்கு விதிக்கப் பட்டுள்ள தடையயும் தமிழக அரசு நீக்க வேண்டும்" என்று இயக்குன சோஹன் ராய் கூறியுள்ளார்.


Read more about www.inneram.com

கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது-சாரு நிவேதிதா.

விஸ்வரூபம்


விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன்.  அதற்குப் பல காரணங்கள்.  கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.  அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.  என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம்.  ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.  தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.  விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.  நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.  அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே  கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?  அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?  இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?  அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.  ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?  கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?  ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும்  சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.  பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது.  அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.  ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.  நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும்.  அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன்.  அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.  வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.  சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.  ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.  ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.  ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.  அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்.  ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.   ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.  மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…

source;http://charuonline.com/blog/?p=167

குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்


vishwaroopam

இன்றைக்கு நாளிதழ்களில் வெளியாகி இருக்கிற இந்த உதை யாருக்கான பதிலோ?
*

விஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..

இந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதினாலும்தான்.

உள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.

மதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 5-02-2013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம்.

'இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்' என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.

நீக்கச் சொன்ன காட்சிகளை தாண்டியும் 'துடிப்போடு' இருக்கிறது விஸ்வரூபம்.

இந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே 'துடிப்போடு' நிறைந்து வழியும்.

'இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..' என்று தேசபக்தியோடு நமக்கு அருளுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் 'இந்தியனாக' இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் 'அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி' என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள் கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.

விஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6-6-2012 அன்று ''கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்'; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்?' என்று எழுதியிருந்தேன்.

என் எழுத்தை பொய்யாக்கவில்லை கமல். எவையெல்லாம், யாரெல்லாம் அமெரிக்காவிற்கு, அமெரிக்கர்களுக்கு பிடிக்கதோ அவைகளெல்லாம், அவர்களெல்லாம் படத்தில் வில்லன்கள். வில்லத்தனமான குறியீடுகள்.

ஆப்கான் நாட்டு இஸ்லாமிர்களை மட்டுமல்ல; பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா என்று பல நாட்டு முஸ்லீம்களை 'அல்கொய்தா' தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டுகிறார்.

கமலே 'காஷ்மீர் முஸ்லிம்' என்று சொல்லிதான் ஆப்கானியர்களுக்குள் ஊடுறுவுகிறார். 'காஷ்மீர் முஸ்லிம்' என்று சொன்னவுடன், ஆப்கான் இஸ்லாமியர்கள் அவரை கொண்டாடுகிறா்கள்.

அமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிபோலவே ஆப்பரிக்க கருப்பர்களின் மீதும் உண்டு. அதற்காகவே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நைஜிரியாவைச் சேர்ந்த, கருப்பின முஸ்லிமே தீவிரவாதி.

'பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இஸ்லாமியர்கள் மேல் கொலைவெறி தாக்குதல், விஸ்வரூபத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு' என்று இதுபோன்ற சம்பவங்கள் தீவிரமாக நடக்கும்போது, ஒரு பகுத்தறிவாளைனைப்போல் 'இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம், சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்' என்று தொடர்ந்து நீட்டி முழங்குகிற அல்லது அதுபோன்ற கட்டுரைகளை மட்டும் 'Like' செய்கிற இந்து அறிவாளிகளைப்போல்,

இஸ்லாமிய நாடுகள்; பெண்கள் உட்பட தனி மனிதர்களுக்கு மிக மோசமான, கொடுமையான தண்டனைகளை தருவதை, கடுமையாக கண்டிக்கிற அமெரிக்கா;

இன்னொருபுறத்தில் ஒரு நாட்டின் மீது ஈவு இரக்கம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி கொல்வதை எப்படி நியாப்படுத்துகிறதோ;

அதுபோல், இந்தப் படத்திலும் இஸ்லாமியர்கள் செய்கிற கொலைகளை, கொடுமையாகவும் பார்வையாளர்களுக்கு 'ச்சீ..இவனுங்க எல்லாம் மனுசனா..?' என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.

ஆனால், இதற்கு நேர் மாறாக, அமெரிக்க சார்பாக கமல்ஹாசனும், வெள்ளைக்காரர்களும் ஆப்கானியர்களை, இஸ்லாமியர்களை செய்கிற கொலைகள் நியாயமாகவும், 'இவர்களை கொலை செய்வதுதான் தர்மம்' என்கிற எண்ணத்தையும ஏற்படுத்துகிறது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடும் பெண்ணை; அவளின் கணவர், கத்தியால் குத்தும்போது, சிறுவனாக இருக்கிற கமல், 'குத்துங்க எஜமான்.. குத்துங்க.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..' என்பாரே அதுப்போல்;

அமெரிக்கர், அமெரிக்க காவல்துறை, கமல் இவர்கள் சகட்டுமேனிக்கு இஸ்லாமியர்களை கொலை செய்யும்போது, பார்வையாளர்களுக்கு, 'குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..' என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

கமல்ஹாசன் 'பாய்' கூட வெள்ளைக்காரப் பெண் மருத்துவர் கொலை செய்யப்படும்போது, அமெரிக்கர்கள் கொலை செய்யப்படும்போது துக்கம் தாங்காமல் குமுறுகிறார்.

இதே உணர்வுதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் 'விஸ்வரூபம் பிராமணர்களுக்கு எதிராக இருக்கிறது' என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் கமல் ஆலோசனையின் பெயரில் செய்தாரோ என்று சந்தேகிக்கும் படியாக இருக்கிறது படத்தில வரும் காட்சி.

பார்ப்பன பெண், அமெரிக்கர்களை விட பெரிய அறிவாளியாக இருக்கிறார். ஒரு நகரத்தையே அழிக்க இருக்கிற 'வெடிகுண்டை' அமெரிக்காகாரன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, அவர்தான் தன் அறிவால் தடுத்து நிறுத்துகிறார்.

**

இஸ்லாமிய வெறுப்பும் அமெரிக்க விசுவாசமாகவும் படம் நகர்கிறது. 'நகர்கிறது' என்கிற இந்த வார்த்தையை நேரடியாக புரிந்து கொள்ளுங்கள். திரைக்கதை அமைப்பு அப்படி மந்தமாக இருக்கிறது. அதுவும் பிற்பகுதி… 'பப்புள்காமில் செய்த பிலிம்ரோல்…'

ஒரு படத்தை பலமுறை பார்க்கிற சினிமா விரும்பியாக இருக்கிற கமல் ரசிகர்களுக்கே இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது; காரணம் 'இஸ்லாமிய எதிர்ப்பு' என்பதற்காக அல்ல; நான் சொன்ன அந்த 'நகர்கிறது' பிரச்சினைதான். படத் துவக்கதில் 'ஆரவாரத்தோடு படம் பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்து, போக போக.. கமல் வசனத்தைவிட, ரசிகர்கள் பேசுகிற வசனமே அதிகம் தியேட்டரில் எதிரொலித்தது.

இடைவேளையின் போது, என்னிடம் பேசிய ஒரு ரசிகர், 'தலைவரு தப்பான வேசத்துல நடிக்கிறாரு.. காதல் மன்னன்.. இன்னும் ஒரு கிஸ்கூட அடிக்கல..' என்று ஆதங்கப்பட்டார்.

நண்பர் நவினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கமல் ரசிகர்கள்,  படத்துவக்கதில் படம் பார்ப்பதற்கு இடைஞ்சலாக யாராவது கதவைத் திறந்து வெளியில் போனாலோ உள்ளே வந்தாலோ அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்கள்.

அவர்களே பாதி படத்திற்குமேல், மற்றவர்கள் படம் பார்பப்பதற்கு இடையூறாக கத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் நவினிடம் 'அண்ணே நாங்க போறோம்.. ஒன்னும் புரியல..' என்றார்.
நவின் 'இருங்க படம் முழுக்க பாருங்க.. புரியும்' என்றார். நவின் பேச்சை கேட்காமல் 30 நிமிடத்திற்கு முன்பே கிளிம்பி விட்டனர் கமல் ரசிகர்கள்.

ஆனாலும் இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள், படம் முடிந்த பிறகு, 'படம் சூப்பர், என்னங்க தமிழ்நாட்ல மட்டும்தான் முஸ்லீம் இருக்காங்களா?' என்று ஆவேசமாக பேசினார்கள். இந்தப் படத்திற்கு பிறகு இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்டவர்கள் நிறையபேர் கமல் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதையும் அங்கு பார்க்க முடிந்தது.

(தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால் மட்டுமே திரையரங்கு நிரம்பி வழிந்தது)

ஆக, விஸ்வரூபம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடுவதற்கு வாய்பில்லை. அதற்கான காரணத்தை கமல் தரப்பினர் இஸ்லாமியர்கள் மீதே போடலாம்.. 'படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் கட் பண்ணதாலே..' என்று.

ஆனால், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படம் வசூல் செய்வதாக சொல்கிறார்கள்.

காரணம், அமெரிக்க சார்பு கொண்ட கமலின் மனநிலையும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனநிலையும ஒன்றாக சங்கமிப்பதுதான்.

அமெரிக்க இந்தியர்கள் இந்தியாவில் தாங்கள் படித்த படிப்பின் தொடர்ச்சியாக அதற்கான ஆய்வு செய்வதற்கோ, அதை குறித்த தேடுதலுக்கோ போகவில்லை.

தங்களின் கல்விக்கு இந்தியாவைிட அதிகம் சம்பளம் கிடைக்கிறது, அதை ஒட்டிய சொகுசான வாழ்க்கை..' என்று காரணத்திற்காகவே சென்றிருக்கிறார்கள்.

அது அமெரிக்காவில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே அமைகிறது வாழ்க்கை. அதை பொருளாதார ரீதியாக இன்னும்  தரம் உயர்த்துவதற்கும் சில நேரங்களில் தக்கவைத்துக் கொள்வதற்குமான வாழ்க்கையாக அமைகிறது. 'இந்த வாழ்க்கை அமெரிக்காகாரனால்தான்' என்ற அந்த நன்றி அவர்களிடம் நிறைந்திருக்கிறது.

அதனால்தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு வந்தால், அமெரிக்க அரசின் பொது ஒழுங்கு, சாலைகள் பராமரிப்பு, சாலை விதிகள், ஒழுங்கு இவைகளை இந்தியாவோடு ஒப்பிட்டு அமெரிக்க புகழை பேசி பேசி வியக்கிறார்கள். (அறுக்கிறார்கள்)

மாறாக சர்வதேசிய அரசியலில், மூன்றாம் உலக நாடுகளிடமும், அரபு நாடுகளிடமும் எவ்வளவு இழிவாக மூன்றாம் தர பொறுக்கியைப் போல் அமெரிக்கா நடந்து கொள்கிறது, என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.

அதற்கு நேர் எதிராக அமெரிக்கவிற்கு எதிரான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் மேல் கடும் வெறுப்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

'இவனுங்களாலதான் அமெரிக்காவுல நிம்மதியே போச்சு..' என்று கோபப்படுகிறார்கள். இந்த மனநிலை உள்ளவர்கள் விஸ்வரூபத்தை பார்த்தால், 'இல்லாததை ஒன்னும் காட்ல.. இருக்கிறதைதான் காட்டியிருக்கார் கமல்' என்று கருத்து சுதந்திரவாதிகளாக, கருத்து சொல்கிறவர்களாக அவர்களின் அமெரிக்க வாழ்க்கை முறை உருவாக்கியிருக்கிறது.

இது அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மட்டுமல்ல; இந்தியாவிலேயே அமெரிக்க வாழ்க்கையை வாழ்கிற, 'இந்திய வாழ் அமெரிக்கர்களிடம்' அதாவது 'இன்னும் நமக்கு அமெரிக்க போவதற்கு வாய்பில்லையே..' என்று KFC சிக்கனும் கோக்கும், பிட்ஸாவும் கோக்கும், தோசையும் கோக்கும், தயிர் சாதமும் கோக்குமாக வாழ்கிற இந்திய உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் இந்தப் படம் நிறைய பிடிக்கும்.

**

படம் வெளியாவதற்கு முன் 'கருத்து சுதந்திரத்தை' தீவிரமாக வலியுறுத்தியவர்கள், இந்தப் படம் பற்றி விரிவாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.

அவர்கள் எழுதுவது போதுமானதாக இல்லை என்றால் நான் இந்தப் படத்தை பற்றி மீண்டும் எழுத வாய்ப்பிருக்கிறது..

இந்தியாவில் விஸ்வரூபம் 2  விரைவில்.. வருகிறதோ இல்லையோ என்னுடைய இன்னொரு விமர்சனம் வரும்.

source;http://mathimaran.wordpress.com/2013/02/07/613/

விஸ்வரூபம் . நிரந்தரமா தடை பண்ண வேண்டிய படம்…

விஸ்வரூபம்


வாசகர் வட்டத்தில் பாலாஜி ஜி. சேகர் என்ற நண்பர் எழுதியது:

கடைசியா விஸ்வரூபம் பார்த்தாச்சு.. ஆமாம். இனிமேல பார்க்கிறதா இல்லை..

அப்படியே பார்க்கறதா இருந்தா முதல் 40 நிமிஷம் மட்டும் பார்க்கலாம்..

அதுவரைக்கும்தான் அது கமல் என்கிற நடிகரின் படம். அதுக்குப்பிறகு அது டைரக்டர் கமலோட மத துவேஷ கைக்கு சென்றுவிடுகிறது.

தீவிர கமலின் ரசிகனாய் இருந்து இப்படி எழுத மனம் வரவில்லை.. எனக்கு வேறு வழியில்லை..

என்னடா நேத்து வந்த ரகுமான் 2 ஆஸ்கர் வாங்கிட்டார், நம்ம 50 வருஷமா குட்டிக்கரணம் அடிச்சும், குரங்கு வேஷம் போட்டும் வாங்கமுடியலையேன்னு தனியா உட்கார்ந்து கமல் யோசிச்சிருப்பார் போல..

அமெரிக்காகாரனை எது பண்ணா இம்ப்ரெஸ் ஆவான், எதுக்கு அவன் ஆஸ்கர் கொடுப்பான்…அவனுக்கு இருக்கிற ஒரே ப்ரச்னை தாலிபான் மற்றும் அதன் தீவிரவாதம்.அதுலேருந்து அவனையும் அமெரிக்காவையும் காப்பாத்தற மாதிரி படம் அடுத்தா அவன் இம்ப்ரெஸ் ஆவான். சரி அதுக்கு எப்படி கதை தயார் பண்றது.

எப்படி இந்தியாவுக்கும் தாலிபானுக்கும் முடிச்சு போடறது..? ஒரு இந்தியனா நம்ம எப்படி அமெரிக்காவை காப்பாத்த முடியும்..?

அதுக்கு ஒரு இந்தியன் தாலிபானுக்கு தற்செயலா போய் விக்ரம் பட ஸ்டைல அங்க நடக்கிறதை கண்டுபிடிச்சு உளவு சொல்ற மாதிரி வைக்கலாம்.. ஓகே. காஸ்மீர் தீவிரவாதியா போகலாம். லாஜிக்கும் செட் ஆகும்..

நடுநடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி, அவங்க பண்ற கொடும்தண்டனை முறைகளையும் அவங்ககிட்ட இருக்கிற பழமைவாததனத்தையும் காட்டலாம்.. ஓகே..

இதுக்கு நம்ம ஊர் முஸ்லிம் மக்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா?? அது யாருக்கு வேணும்.. அதான் உன்னைபோல ஒருவன்லேயே அடிச்சு துவைச்சு காயப்போட்டாச்சுல்ல.. அதே மாதிரி இதிலேயும் தப்பிச்சுக்கலாம்..

100கோடிக்கு மேல இருக்கிற நம் நாட்டில் சகோதர பாசத்தோட பழகுற நம்ம முஸ்லிம் மக்களின் கோபம் பெரிதா, இல்லை ஆஸ்கர் பெரிதா.?
எனக்கு ஆஸ்கர்தான் பெரிதென்று கமல் முடிவு பண்ணிட்டார் போல..!

சரி உலகத்தில நடக்கிறத்தான படத்தில வைக்கிறேன்.. சரி வைங்க.. அதை எதுக்கு இந்தியாவில ரிலிஸ் பண்றீங்க..

எங்கோ உலகத்தின் மூலையில சில லட்சம் சொச்சத்தில இருக்கிற ஒரு காட்டுமிராண்டி கூட்ட்த்தைப்பத்தி படம் எடுத்து 16 கோடிக்கு மேல இருக்கிற இந்தியாவில ஏன் ரிலீஸ் பண்ற..?

அமெரிக்காவில எடுத்து அங்கயே ரிலிஸ் பண்ண வேண்டியதுதான…?

படம் பார்த்துட்டு போற எல்லாருமே ஒரு நிமிஷமாவது பக்கத்துல தொப்பி வைச்சிட்டு நடந்து போறவனை பயத்தோட பார்க்கிற பயங்கரம் படத்தில இருக்கு..

போதும்.. இதுக்கு மேல நெகடிவ் விளம்பரம் பண்ண விரும்பலை..

விஸ்வரூபம் . நிரந்தரமா தடை பண்ண வேண்டிய படம்…

போங்கடா…போய் புள்ளைக்குட்டிங்களை படிக்க வைங்க..மதக்கலவரத்தை தூண்டாதீங்க..

15 வருஷமா பழகிட்டுருந்த முஸ்லிம் நண்பனை இந்த பட்த்துக்காக பகைச்சிக்கிட்ட்துதான் மிச்சம்.. ஸாரி நண்பா. மன்னிச்சுடு..

source;http://charuonline.com/blog/?p=177

வியாழன், 7 பிப்ரவரி, 2013

''அவா'' வெவரமா இருப்பால்லியோ?

செய்தி; கர்நாடக ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் எடியூரப்பாவால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் பத்மநாப பிரசன்னா கூறியுள்ளார். தான் அரசியல் புகலிடம் தேடி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பதாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறினார்.

இந்த லட்சணத்துல கமலஹாசன் தமிழகத்தைவிட்டு வெளியேறுவதாக இருந்தால் பெங்களூருக்கு வந்துருங்கன்னு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி (தேவகவுடா மகன்) மற்றும் தற்போதைய துணை முதல்வர் ஆர்.அசோக் ஆகியோர் கூப்பிடாங்க. நல்லவேளை கமல் தப்பிச்சிட்டாரு. அதெல்லாம் ''அவா'' வெவரமா இருப்பால்லியோ?

சனி, 2 பிப்ரவரி, 2013


குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பின் 3 வது கலந்தாய்வுக் கூட்டம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பின் 3 வது  கலந்தாய்வுக் கூட்டம் 3.01.2013 அன்று மிர்காப்பில் உள்ள மண்ணு சல்வா உணவகத்தின் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இயக்கங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஜமாத்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த அமர்வில் ததஜ அமைப்பின் சார்பிலும் இஸ்லாமிய தாவா செண்டர் சார்பிலும் தலா ஒரு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டமைப்பில் அலசப்பட்ட கருத்துக்களை அவதானித்த அவர்கள், தங்களின் தலைமையிடம் கலந்து பேசி, கூட்டமைப்பில் இணைவது  பற்றி தெரிவிப்பதாக கூறினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

அடுத்த அமர்வில் கூட்டமைப்பிற்கான பொது செயல்திட்டம் வரையறுக்கப்பட்டு நிரந்தர பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் போல இங்கும் வலுவான கூட்டமைப்பாக இது திகழ பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவன்;
குவைத் தமிழ் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு.

இயக்குனர் ஹரி, கமலைப் பார்த்து பாடம் படிக்கட்டும்!


சென்னை: திரைக் கலைஞர்களும், தணிக்கை குழுவும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வேண்டுகோள் விடுத்துள்ளர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம் - 2' என்ற திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு இஸ்லாமியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் 'சிங்கம் - 2' திரைப்படத்தில் இருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என தோழமையுணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், 'சிங்கம் - 2' மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தணிக்கைக்காக வரும்பொழுது மத நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு எதிராகவோ, இனங்களுக்கு எதிராகவோ சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பின் தணிக்கை குழு கவனத்துடன் செயல்பட்டு உரிய வகையில் அக்காட்சிகளை நீக்கிய பின்னரே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்.

திரைப்படம் என்பது மக்களை வெகு விரைவில் சென்று சேரும் வெகுஜன சாதனம். அதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் திரைப்படங்களை எடுக்க வேண்டிய சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் திரைக் கலைஞர்களுக்கு உண்டு. அதேபோல, தணிக்கை குழுவிற்கு இந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தாண்டிய கடமையும் உண்டு.

அதனால் தங்கள் கடமையை சரிவர செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் திரைப் படங்கள் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தணிக்கை குழு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்."

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.