சனி, 2 பிப்ரவரி, 2013

இயக்குனர் ஹரி, கமலைப் பார்த்து பாடம் படிக்கட்டும்!


சென்னை: திரைக் கலைஞர்களும், தணிக்கை குழுவும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வேண்டுகோள் விடுத்துள்ளர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம் - 2' என்ற திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு இஸ்லாமியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் 'சிங்கம் - 2' திரைப்படத்தில் இருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என தோழமையுணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், 'சிங்கம் - 2' மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தணிக்கைக்காக வரும்பொழுது மத நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு எதிராகவோ, இனங்களுக்கு எதிராகவோ சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பின் தணிக்கை குழு கவனத்துடன் செயல்பட்டு உரிய வகையில் அக்காட்சிகளை நீக்கிய பின்னரே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்.

திரைப்படம் என்பது மக்களை வெகு விரைவில் சென்று சேரும் வெகுஜன சாதனம். அதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் திரைப்படங்களை எடுக்க வேண்டிய சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் திரைக் கலைஞர்களுக்கு உண்டு. அதேபோல, தணிக்கை குழுவிற்கு இந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தாண்டிய கடமையும் உண்டு.

அதனால் தங்கள் கடமையை சரிவர செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் திரைப் படங்கள் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தணிக்கை குழு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்."

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக