சனி, 16 பிப்ரவரி, 2013

அப்சல் குருவின் மனைவிக்கு மத்திய அரசுப்பணி வழங்கவேண்டும்

அப்சல் குருவின் மனைவிக்கு மத்திய அரசுப்பணி வழங்கவேண்டும்; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!

இந்திய பாராளுமன்றத்  தாக்குதல் வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டு, அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு  மேலாக சிறையில் இருந்த அப்சல்குருவிற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாத நிலையில் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்திபடுத்துவதற்காக என்ற வகையில்  
கடந்த 2002 டிசம்பர் 18 அன்று அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். 

இதனைத்  தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் ஆகியவை அப்சலின் மரண  தண்டனையை உறுதி செய்த நிலையில், அப்சல்குருவின்  மனைவியான தபசும்   ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த பின் அப்சல்குரு மீண்டும் சட்டத்தின் உதவியை நாட வழியிருந்தும் அதற்கான வாய்ப்பை அப்சலுக்கு வழங்காமல் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த ஒரு வாரத்திற்குள் எவ்வித முன் அறிவிப்புமின்றி அவசர கதியில் கடந்த பிப் 9 அன்று ரகசியமாக அப்சல்குருவை தூக்கில் போட்டுள்ளது மத்திய அரசு.

மேலும் தூக்குத் தண்டனைக்கு  முன் பேணப்படவேண்டிய விதிமுறைகள் அப்சல் விஷயத்தில் பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சிந்தனையாளர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அப்சலின் தண்டனை நிறைவேற்றம் குறித்து அப்சலின் மனைவிக்குஅனுப்பப்பட்ட கடிதம் அவரது தண்டனை நிறைவேற்றத்திற்கு பின்பு இரு நாட்கள் கழித்து சென்றடைந்துள்ளதைக்  குறிப்பிடலாம். மேலும் தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சலின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்க முயற்சிக்காமல் ரகசியமாக சிறையிலேயே அடக்கம் செய்துள்ளது சிறை நிர்வாகம்.

எனவே அப்சல்குரு விஷயத்தில் மத்திய அரசு பேணத்தவறிய விதிமுறைகளுக்குப் பரிகாரமாகவும் கருணை அடிப்படையிலும் அப்சல் குருவின்  மனைவி தபசுமுக்குஅவரது தகுதி அடிப்படையில் மத்திய அரசுப்பணி வழங்கவேண்டும்.மேலும் அவரது  மகனின் முழு கல்விச் செலவையும் மத்திய அரசோ, அல்லது காஷ்மீர் மாநில அரசோ ஏற்கவேண்டும்.இது அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு ஆறுதலாகவாவது இருக்கும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

                                                                                  இப்படிக்கு 

                                                                                                                முஹம்மது ஷிப்லி 
                                                                                                                  மாநிலச் செயலாளர் 
                                                                                                         இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக