வெள்ளி, 29 ஜூலை, 2011

ரூ.1800 கோடி சுரங்க ஊழல்: 'எடி'யின் தலையில் இறங்கிய இடி!

ர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த காலம் முதலே பதவி நாற்காலியின் ஆட்டத்தை நிறுத்த அரும்பாடுபட்டு வருபவர் முதல்வர் எடியூரப்பா. சொந்த கட்சி உறுப்பினர்களால் குடைச்சல், ரெட்டி சகோதரர்கள் பிரச்சினை, ஆளுநருடன் மோதல், இதுபோக தன் மீது அவ்வப்போது ஊழல் குற்றசாட்டை அடுக்கும் முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் சத்த்தியம் செய்யும் நாடகங்கள் என எப்போது பார்த்தாலும் எடியூரப்பாவின் நிலை கத்தி மேல் நடப்பது போன்றே இருந்து வந்த நிலையில், அடுத்து அவர் தலையில் இடியாக இறங்கியுள்ளது சுரங்க ஊழல் குற்றச்சாட்டு. சுரங்க தொழிலை ரெட்டி சகோதரர்களுக்கு  ஏகபோக குத்தகைக்கு விட்டது போல் கண்டும் காணாமல் இருந்தார் எடியூரப்பா. இந்த சட்ட விரோத சுரங்க தொழில் குறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், லோக் ஆயுக்தா நீதிபதியுமான  சந்தோஷ் ஹெக்டே தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், 
''கடந்த 2009  மார்ச் முதல் 2010 மார்ச் வரையிலான 14 மாதங்களில் சட்ட விரோத சுரங்க தொழில் மூலம் மிகப் பெரிய அளவில் ஊழல்கள் நடந்துள்ளன. ரூ.1800 கோடிக்கு மேல் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த தொகை அரசின் கஜானாவுக்கு வர வேண்டியவை. ஆனால் அரசியல் வாதிகளின் கைகளுக்கு சென்று விட்டது. இதன் மூலம் அரசுக்கு அவர்கள் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த ஊழிலில் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மந்திரிகள் மற்றும் சுரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு தொடர்பு இருக்கின்றன. இதற்கு தேவையான வலுவான மற்றும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.இந்த முறைகேட்டுக்கு எடியூரப்பா தான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.  
இந்த செய்தி பாஜக தரப்புக்கு பேரிடியாக இருந்தது. காரணம் ஆ. ராசா, தயாநிதி மாறன் போன்ற மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சசாட்டுக்கள் எழுந்தவுடன், அவர்கள் பதவி விலகவேண்டும் என அதிகமாக குதித்தது பாஜக கட்சி. இந்நிலையில் தனது கட்சி  மாநில முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்துள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டால் எடியூரப்பாவை பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரலெழுப்பிய நிலையில், பாஜக எடியை பதவி விலக சொன்னதையொட்டி எடியூரப்பா பதவி விலகுகிறார். எடிக்கு இப்படி அறியாப் புறத்திலிருந்து  ஒரு இடி இறங்கும்; அது பலமுறை அரும்பாடுபட்டு காப்பாற்றிய பதவிக்கு வேட்டு   வைக்கும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக