வெள்ளி, 29 ஜூலை, 2011

அப்துல்கலாமின் அன்பான கவனத்திற்கு....

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு சிந்தனை சிற்பி. அவரது திறமைகள்- ஆய்வுகள்-கண்டுபிடிப்புகள் உலக அளவில் இந்தியாவுக்கு கவுரவத்தை தேடித்தந்தவையாகும். ஜனாதிபதி பதவியிலிருந்து ஒய்வு பெற்றபின், ஓய்ந்துபோய் ஒதுங்கிவிடாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து வருகிறார். அப்துல்கலாமின் சந்திப்பு மாணவ-மாணவிகள் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது. 
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இவ்வாறான சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில், ஒரு பெண் எழுந்து, 'எனக்கு எப்போதுமே ஊக்கம் அளிக்கும் மிகப்பெரிய சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் தவறாக நினைக்காவிட்டால், உங்களை நான் கட்டி அணைக்கலாமா?' என கேட்க,  அப்துல் கலாம் புன்சிரிப்புடன் ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அப்துல் கலாமை அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்தார் என்று செய்திகள் கூறுகின்றன.
இச்செய்தி உண்மையானால் இதுபோன்ற நிகழ்வுகளை அப்துல்கலாம் அவர்கள் தவிர்ப்பதே  அவரது மதிப்பிற்கும், அவர் சார்ந்த மார்க்கத்திற்கும் ஏற்றதாகும். ஏனெனில், அப்துல்கலாம் அவர்களை விட, அகிலம் அழியும் வரை எவராலும் தொடமுடியாத சாதனை படைத்த இறைத்தூதர்[ஸல்] அவர்கள் வாழ்க்கையை புரட்டினால், அங்கே அந்நியப் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு அவர்களின் ஒரு அழகிய முன்மாதிரி கிடைக்கிறது.
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், 'நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்' என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.[புகாரி]
இந்த பொன்மொழியை அப்துல்கலாம் அவர்கள் கவனத்தில் கொள்வது அவருக்கு இன்னும் நன்மதிப்பை பெற்றுத்தரும் என்பதை சகோதர வாஞ்சையுடன் சொல்லிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக