வெள்ளி, 22 ஜூலை, 2011

கட்டி கட்டியாக தங்கம்; கடவுளைக் காட்டி பயமுறுத்தும் மதவாதம்!

லக பணக்கார கடவுள்[?] என்று சொல்லப்படும் திருப்பதியாரையே திரும்பி பார்க்க வைத்தவர் பத்மநாப சுவாமி. தனது ஸ்தலத்தின் ரகசிய அறைகளில் தனது செலவுக்கு[?]கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை 
அடுக்கி வைத்தவர். ஒருவர் கோர்டில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம் தான் பத்மநாப சுவாமி கோயிலில்  பதுக்கி வைக்கப்பட்டுவைகள் பட்டவர்த்தனமாக வெளியானது.  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், மரகத ஆபரணங்கள், நாணயங்கள், சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 5 அறைகளில் இவ்வளவு பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் 6-வது கடைசி அறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதன் கதவில் பாம்பு படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆபத்து என்பதை, எச்சரிப்பதாக இந்தப் படம் இருக்கலாம் என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பின் அதனைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ரகசிய அறையைத் திறப்பது தொடர்பாக திருவாங்கூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்த ராம வர்மா, உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், அந்த பாதாள அறையைத் திறக்க வேண்டாம் என்பதைக் குறிக்கும் வகையில்தான் அதன் கதவில் பாம்பு படம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த அறையைத் திறந்தால் தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

அதனையும் மீறி திறக்க வேண்டுமென்றால், "தேச பிரசன்னம்' பார்க்க வேண்டும். அதன் பின்னரே அறையைத் திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே திறந்த ஐந்து அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ஆபரணங்கள் அரசுக்கு சொந்தமா? அல்லது குறிப்பிட்ட வம்சத்திற்கு சொந்தமா என பட்டிமன்றம் நடந்து வரும் நிலையில், ஆறாவது அறையில் எவ்வளவு கொட்டிக் கிடக்கிறதோ என உலகமே எதிர்நோக்கியுள்ள நிலையில், அந்த அறையை திறப்பதை தடுக்கும் நோக்கில்தான் மேற்கண்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். சின்ன பிள்ளைகள் எதாவது சேட்டை பண்ணினால் 'சாமி கண்ணை குத்தீரும்' என்று மாற்று மதத்தவர்கள் சொல்வதை பார்த்திருக்கிறோம். அதைபோல் அந்த அறையை திறக்காதீர்கள்; தெய்வ குற்றமாகிவிடும் என்று பயம் காட்டப்படுகிறது. அப்படி தெய்வத்திற்கு[?] கோபம் வருமென்றால் ஏற்கனவே ஐந்து அறைகள் திறக்கப்பட்டபோது வரவில்லையே ஏன்? இதிலிருந்தே தெரியவில்லையா இது மூட நம்பிக்கை என்று?

பத்மநாப சுவாமி கடவுளென்றால் அந்த கடவுளுக்கு நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் குறைவின்றி நிறைவாக  நடந்து வரும் நிலையில், உபயோகமின்றி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை சேமிக்க ஆசைப்படுவது ஏன்? அவைகளை ஏழைகளுக்கு வழங்குவதுதானே நியாயமாக  இருக்கும்? மேலும், அந்த கால அரசர்கள் அன்னியர்கள் படையெடுப்பால் தங்கள் நாட்டு செல்வங்கள் சூறையாடப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பதுக்குவதற்கு பாதுகாப்பான இடமான கோயில்களில்  பதுக்கி இருக்கலாம். இந்த பத்மநாபா  சுவாமி கோயில் ஆபரணங்களும் அந்த வகையை சார்ந்ததா என்பதை மத்திய அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து அரசு கஜானாவில் சேர்க்க முயற்சிக்க  வேண்டும். அவைகளை ஏழைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்த  வேண்டும் என்பதே பக்திக்கு அப்பாற்பட்ட நடுநிலை மக்களின் மன நிலையாக உள்ளது என்பதை அரசு புரிந்து கொள்ளுமா?  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக