வியாழன், 10 நவம்பர், 2011

கள்'ளுக்கு மல்லுக்கு நிற்கும் நல்லசாமியை விவாத களத்திற்கு அழைக்கும் குமரிஅனந்தன்!

னைத் தொழிலை பிரதானமாக செய்யும் சமுதாயத்தைச் சேர்ந்தவர் குமரிஅனந்தன். இலக்கியம்-அரசியல்-பேச்சாற்றல் ஆகிய சிறப்புகளை உடைய இவர், கடந்த திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவராகவும் இருந்தார். அந்த காலகட்டத்தில் பதநீர் போன்ற பனைப் பொருட்களை  அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்பது போன்ற பயனுள்ள பல விஷயங்களை வலியுறுத்திய இவர், ஒருபோதும் அந்த பனைமரம் மூலமாக கள் இறக்க அரசு அனுமதிக்கவேண்டும் என்று கோரியதில்லை என்பதைவிட கள்ளுக்கு ஆதரவாக கிளர்ச்சிகள் நடந்த போதெல்லாம் கள்ளுக்கு எதிரான தனது கருத்தை வலுவாக பதிவு செய்தே வந்துள்ளார்.
 
இவர் நிலை இவ்வாறிருக்க, மற்றொரு பக்கம் தமிழக மக்களை மீண்டும் கள்ளுக்கு இறையாக்க துடிக்கும் நல்லசாமி என்பவர், இந்திய அரசியல் அமைப்பு சட்டம், உச்சநீதிமன்றம், இந்திய மருத்துவ ஆய்வு மையம் கள் உணவுப் பொருள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், கள்ளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், காந்தியே கள்ளை உணவுப் பொருள் என்று ஏற்றார் என்றும் பேசியும் எழுதியும் வருகிறார். இவ்வாறு நல்லசாமி சொல்வதற்கு ஆதாரங்களை அனுப்புங்கள் என்று குமரிஅனந்தன் கடிதம் மூலமாக கோரியும் நல்லசாமி தனது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. அதற்கு மாற்றமாக தனது இயலாமையை மறைக்க,  ''கள் போதைப் பொருள் என்று நிரூபிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக நல்லசாமி அறிக்கை வெளியிட,  நல்லசாமியின் சவாலை  ஏற்ற  குமரி அனந்தன், ''நல்லசாமியின் அறைகூவலை ஏற்று நவம்பர் 23 ஆம்  தேதி கள் இயக்கம் ஏற்பாடு செய்யும் அரங்கில் காந்தி, காமராஜ் வழியில் மதுவை எதிர்த்து பலமுறை சிறை சென்ற நான் விவாதத்தில் கலந்து கொள்கிறேன்''. என்று கூறியுள்ளார்.
 
இந்த விவாதம் ஒரு வரவேற்கதத்தக்க ஒன்றாகும். இதன் மூலம் சீமைச் சரக்கு உடம்புக்கு கேடு; நாட்டுச் சரக்கு நல்லது என்று சொல்லி கள்ளுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் முகத்திரை குமரியாரால் கிழிக்கப்படும் என்பதோடு, சுய அரசியல் ஆதாயத்திற்காக கள் இறக்க அனுமதி கோரும் அரசியல்வாதிகளும் திருந்தும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகிறோம். விவாதநாளை மக்களுடன் சேர்ந்து நாமும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக