வெள்ளி, 4 நவம்பர், 2011

ஆளும்கட்சியின் வெற்றியில் சந்தேகத்தைக் கிளப்பும் அதிகாரிகளின் அலட்சியம்!

ட்டமன்றத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அசூர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த அதிமுக, அதைதொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து நின்று வெற்றிவாகை சூடியது. உள்ளாட்சியில் ஆளும்கட்சியின்  வெற்றி என்பது   கருணாநிதி பாஷையில் சொல்வதாக இருந்தால், இது ஒரு சாதனை அல்ல என்றாலும், அந்த வெற்றியிலும் சந்தேகத்தை கிளப்பும் வகையில் அதிகாரிகள் சிலரின் நடவடிக்கைகள் உள்ளது. பொதுவாக என்னதான் விழிப்புடன் கட்சிகள் இருந்தாலும், தேர்தல்  களத்தில் பணியற்றும் அதிகாரிகள் நேர்மை தவறும் பட்சத்தில் அங்கே நடந்த தேர்தலே சந்தேகத்திற்கு இடமளித்து விடும். அப்படி ஒரு அதிகாரியின் நடவடிக்கை பரபரப்பு செய்தியாகியுள்ளது.
 
ஈரோடு மாவட்டம், கோபி ஒன்றியம், நஞ்சைகோபி ஊராட்சியில்  ஆறாவது வார்டில், வடிவேல், குளவிக்கரடு அ.தி.மு.க., கிளைச் செயலர் கோபால் ஆகியோர் போட்டியிட்டனர். வடிவேல், 151 ஓட்டு, கோபால், 108 ஓட்டு பெற்றனர். வெற்றிபெற்ற வடிவேலுவுக்கு, இரவு வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. மறுநாள் காலை சான்றிதழ் வாங்க, பி.டி.ஓ., அலுவலகத்துக்கு வடிவேல் சென்றார். கோபாலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏமாற்றமடைந்த வடிவேல், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இதனிடையே, வெற்றிச்சான்றிதழ் வாங்கிச் சென்ற கோபால், மனசாட்சி உறுத்தியதால் அக்., 24ல், பி.டி.ஓ.,விடம் சான்றிதழை திருப்பி கொடுத்துள்ளார். செய்வதறியாத பி.டி.ஓ., மீண்டும் வடிவேலுவை அழைத்து, நேற்று சான்றிதழ் வாங்கினார். அவருக்கு, 21ம் தேதியிடப்பட்ட சான்றிழ் வழங்கப்பட்டது.
 
இதுபோல், கோபி ஒன்றியம் வெள்ளாளபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில், வெற்றி பெற்ற தன்னை, தோல்வியடைந்ததாக, பி.டி.ஓ., சிவபாலன் அறிவித்தார் என, சுயேச்சை வேட்பாளர் சீதாலட்சுமி, கலெக்டரிடம் புகார்
கூறியுள்ளார்.
 
கலிங்கியம் ஊராட்சி ஆறாவது வார்டில், சுயேச்சை வேட்பாளர் நஜிமுதின், 124 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனால், 116 ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., ராஜாமணி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கலிங்கியம் நான்காவது வார்டில், வெற்றிவேல், 120 ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க., பிரகாஷ் என்பவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களும் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
 
மேற்கண்ட மூன்று குளறுபடிகளும் கோபி பி.டி.ஓ., சிவபாலனால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிவபாலன் போன்ற அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், ''உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 50 சதவீதம்பேர் தோற்றவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் தோற்று இருக்கிறார்கள்''. என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதோடு, அதிமுகவின் ஒட்டுமொத்த வெற்றியும் சந்தேகப் பார்வைக்கு இலக்காகியுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து களையெடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக