வியாழன், 17 நவம்பர், 2011

அதிகாரம் அறியாத எதிர்கட்சித் தலைவர்.

''இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார் இலானும் கெடும்.,  என்ற குறளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அரசர் எனும் ஆட்சியாளர் தவறிழைக்கும் போது அவருக்கு 'இடித்துரைத்து' புரியவைப்பவர் இல்லையெனில் அரசரை தனியாக எவரும் கெடுக்கவேண்டியதில்லை. அவரே கெடுவார் என உணர்த்தும் மேற்கண்ட குறளை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி ஆட்சியாளரை செம்மைப் படுத்த வேண்டியவர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அவரது சகாக்களுமாவர்.
 
ஆனால் தமிழகத்தில் சமீபத்திய இருபது ஆண்டுகளில் அப்படி ஒரு சிறந்த எதிர்கட்சித் தலைவரை நம்மால் பார்க்கமுடியவில்லை. ஒன்று எதிர்கட்சித் தலைவர் ஆட்சியாளரின் எதிரிக்கட்சியாக நடந்துகொள்கிறார். இல்லையேல் யார் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று சட்டமன்றம் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. கருணாநிதி முதல்வரானால் எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா சட்டமன்றம் செல்வதில்லை. ஜெயலலிதா முதல்வரானால் கருணாநிதி சட்டமன்றம் செல்வதில்லை. ஆனால் இவர்களுக்கு மாற்று என்று அறியப்பட்ட தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் சட்டமன்றம் செல்வதில்லை. செல்லாமல் இருப்பது ஒரு குற்றம் என்றால், தான் அவைக்கு செல்லாமல் இருப்பதற்கு அவர் கூறும் காரணம் அதைவிட  மட்டமானது.  
 
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த், ''இன்றைக்கு நான் சட்டமன்றத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஏன் அவர்கள் மட்டும் (ஜெயலலிதா) அன்றைக்கு சட்டசபைக்கு போனார்களா? எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும்'' என்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் வகுப்புக்கு செல்லாத மகனிடம் 'ஏன்டா பள்ளிக்கு போகல'ன்னு தாய் கேட்க, 'நான் மட்டுமா போகல; போன வருஷம் எதிர்வீட்டு செல்வி பள்ளிக்கு போகலையே? அதுக்கு முந்தின வருஷம் அடுத்த வீட்டு அழகேசன் பள்ளிக்கு போகலையே? அப்பவெல்லாம் நீங்க கேட்டீங்களா? எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும்'' என்று மகன் சொன்னால் அது எப்படி 'சின்னப்பிள்ளை'த்தனமனதோ அதுபோன்றுதான் விஜயகாந்தின் பேச்சு உள்ளது. சட்டசபைக்கு செல்லும் விசயத்தில் கருணாநிதியையும்- ஜெயலலிதாவையும் உதாரணம் கூறும் விஜயகாந்த், ''அதிமுக- திமுக நாட்டை நாசமாக்கிவிட்டது. எனவே எங்களுக்கு வாய்ய்பளியுங்கள். நான் பொற்காலத்தை காட்டுகிறேன்' என்று தேர்தல் நேரத்தில் புலம்பியது ஏன்?
 
அடுத்து, சட்டமன்றத்திற்கு செல்லாதது போலவே விஜயகாந்த் தான் ஜெயித்த தொகுதிப்பக்கமும் தலைவைத்துப் படுக்கவில்லை. கடந்தமுறை வென்ற விருத்தாசலம் தொகுதியை விருத்தியடைய செய்யாத இவர், தோல்வி பயத்தால் ரிஷிவந்தியத்தில் கரையேறினார். வழக்கம் போல இந்த தொகுதி பக்கமும் இவர் செல்லாததோடு அதற்கு அவர் 'சூப்பர்' காரணமும் கூறுகிறார். ''சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு ஒதுக்கவில்லை. இதனால் 5 மாதங்களாக தொகுதி பக்கமே சட்டமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியவில்லை'' என்கிறார் விஜயகாந்த்.
 
விஜயகாந்த் தனது கூற்றில் உண்மையாளர் என்றால், தொகுதி மேம்பாட்டு நிதியை விரைந்து வழங்கவேண்டும் என்று இவர் எத்துனை முறை சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார்? இவரது கட்சியினராவது குரல் எழுப்பியதுண்டா? நாளுக்கொரு அறிக்கையை நாளிதழ்களுக்கு வழங்கும் இந்த நல்லவர், மக்கள் நலனில் அக்கறையற்ற முறையில் தொகுதி மேம்பட்டு நிதியை வழங்காததை குறித்து இந்த அரசு பற்றி வரைந்ததுண்டா? இந்த ஆட்சியை நல்லாட்சி என்று சொல்லி வந்தவர், உள்ளாட்சிக்கு பின்பு தானே ஊழலாட்சி என்று என்று முழங்க தொடங்கியிருக்கிறார். இதற்கு காரணம் கூட்டணியில் ஏற்பட்ட 'முழுக்கு' என்பது மக்களுக்குத் தெரியாதா?
 
மேலும் இப்போது ஏற்பட்டுள்ள மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விஜயகாந்த் கூறும்போது, ''மழை திடீரென்று தான் வரும். அது சொல்லிக்கொண்டு வராது. எனவே மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்'' என்கிறார். இவர் சொல்வது போல, அரசு மழைக்கால முன்னெறிச்சரிக்கை நடவடிக்கையில் மந்தமாக இருந்ததென்னவோ  உண்மைதான். ஆனால் இந்த மழைக்கால நேரத்தில் கூட இவர் தனது தொகுதி அலுவலகம் சென்றாரா என்பதுதான் கேள்வி. விஜயகாந்தின் நிலை இப்படியே செல்லுமாயின் ''உரம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அந்த துறையின் மந்திரி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை' என்று இவர் அழகிரியை பார்த்து கூறுவது போன்று, தமிழக மக்கள் எதிர்கட்சித் தலைவரை காணவில்லை என்றும், இவரது தொகுதி மக்கள் எங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்றும் தேடும் நிலை ஏற்படும். புரிந்து கொண்டால் அரசியலில் பிழைத்துக் கொள்வார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக