வெள்ளி, 4 நவம்பர், 2011

''தைரியமிருந்தால் பாதுகாப்பின்றி நடமாடத் தயாரா? ராஜ்தாக்கரேக்கு சவால் வீடும் காங்கிரஸ் எம்.பி.

'மராட்டியம் மராட்டியர்களுக்கே'  என்ற மொழிவாரி உணர்ச்சி அரசியல் நடத்தி வரும் சிவசேனை பால்தாக்கரே அவரது அரசியல் வாரிசு ராஜ்தாக்கரே, உத்தவ் தாக்ரே வகையறாக்கள், அவ்வப்போது வடமாநிலத்தவருக்கு எதிராக விஷம் கக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வேலைவாய்பு விசயமாக மும்பை வந்த வட மாநிலத்தவரை இந்த பால்தாக்கரே வகையறாக்கள் தாக்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்நிலையில் ஒரு காங்கிரஸ் எம்.பியை இந்த கும்பல் விமர்சிக்க,  ''என்னை வடமாநிலத்தவர் என விமர்சனம் செய்து வரும், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்றவர்கள், தைரியம் இருந்தால், பாதுகாப்பு இல்லாமல் எங்காவது செல்லட்டும் பார்க்கலாம்,'' என, அவர் சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.,யும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான சஞ்சய் நிருபம், ''மும்பையில் காய்கறி வியாபாரம் செய்வோர், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆகியோர், வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் ஒரு நாள் வேலை செய்யாவிட்டாலும், மும்பை ஸ்தம்பித்து விடும் என்று, நான் கூறியிருந்தேன்.இதை தவறாக புரிந்து கொண்டு, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே போன்றவர்கள் என்னை கடுமையாக விமர்சித்துள்ளனர். மும்பையில் "பந்த்' நடத்தப் போவதாக நான் கூறியதாக, அவர்கள் கூறியுள்ளனர். அதிலும் உத்தவ் தாக்கரே, என் பல்லை உடைக்கப் போவதாக கூறியுள்ளார்.

 
நான் சவால் விடுகிறேன். உத்தவ், ராஜ், ஆதித்யா போன்றவர்கள், பாதுகாப்பு இல்லாமல், எங்காவது நடமாடத் தயாரா? நான் எப்போதுமே பாதுகாப்பு கேட்டது இல்லை. போலீஸ் கமிஷனரை சந்தித்து, எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
 
இந்தியா ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் சொந்தம். நாமறிந்தவரை காஷ்மீர் நீங்கலாக வேறு எந்த மாநிலத்திலும், எந்த மாநிலத்தவரும் வசிக்கவோ, சொத்து வாங்கவோ, பணியாற்றவோ, தொழில் தொடங்கவோ எந்த தடையுமில்லை. அதனால் தான் எல்லா மாநிலங்களிலும் அடுத்த மாநிலத்தவர் வசிப்பதை காணலாம். ஆனால்  மகாராஷ்டிரம் என்பது மராட்டியர்களுக்கு மாத்திரம் என்று விஷம் கக்கும் பால்தாக்கரே வகையறாக்கள் இந்திய அரசியல் சாசனம் வழங்கிய இந்தியர்களுக்கான உரிமையை அவமதிக்கிறார்கள். ஆனாலும் அரசு இயந்திரங்கள் அவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனாலும் இத்தகைய பிர்வினைவாதிக்ளுக்கு சொரணை வரும் அளவுக்கு சஞ்சய் நிருபம் சவால் விட்டுள்ளார். சவாலை ராஜ்தாக்கரே ஏற்பாரா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக