வெள்ளி, 16 டிசம்பர், 2011

கைதியை விடுதலை செய்த பாகிஸ்தான்; கண்டுகொள்ளாத இந்தியா!

னிதர்களைத் திருத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான், சிறைச்​சாலை. ஆனால், இன்று அது மனித துவேஷத்தைக் காட்டும் அகங்காரச் சின்னமாகிவிட்டது என்று மனித உரிமையாளர்கள் சொல்கிறார்கள். தங்கள் நாட்டுச் சிறையில் அடைபட்டவர்கள், என்றாவது ஒரு நாள் விடுதலைக் காற்றை சுவாசிக்கலாம். ஆனால் அன்னிய நாட்டுச் சிறையில் அடைப்பட்டவர்கள்?
 
போர்க் குற்றவாளிகள் மட்டுமின்றி, நூற்றுக்​கணக்கான அப்பாவிகள் அன்னிய நாட்டுச் சிறை​களில் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உள்ளேயே கிடந்து சாகிறார்கள். ஏனென்றால் சாதாரணக் குடிமகன்கள், அன்னிய நாட்டுச் சிறைக்குள் போய்விட்டால், அவர்களைக் காப்பாற்ற எந்த ஓர் அரசும் தீவிர முயற்சிகள் எடுப்பது இல்லை. நம் இந்தியாவும் இந்த விஷயத்தில் இரும்பு இதயம் படைத்ததுதான் என்பதற்கு ஓர் உதாரணம், டாக்டர் கலீல் சிஸ்டி.
சமீபத்தில் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்ற முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். ''அஜ்மிர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கும் கலீல் சிஸ்டிக்கு தள்ளாத வயதாகிவிட்டது. அவரால் நடக்க இயலாது. இதய நோய், சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் இருக்கின்றன. கராச்சியில் மருத்துவப் படிப்பை முடித்த அவர், ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நச்சு நுண்மவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கராச்சி பல்கலைக்கழகத்தில் மைக்ரோபயாலஜி துறைத் தலைவர். தலைசிறந்த மருத்துவர். அவர் நீண்ட நாட்கள் வாழப்போவது இல்லை. அவரது இறுதிக் காலத்தை அவருடைய மனைவி மற்றும் மகளுடன் நிம்மதி​யாகக் கழிக்கட்டும். அவர் இந்திய சிறையில் இறந்துபோனால், தீராத அவப் பெயர் நமக்கு ஏற்படும். அதனால் அவரை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்...'' என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.
 
இவர் இப்படிக் கேட்பது முதல் முறை அல்ல. பல மாதங்களுக்கு முன்பே பிரதமர், உள்துறை அமைச்சர், ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஆகியோருக்கு கலீல் சிஸ்டியை கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அரசிடம் இருந்து எந்த சலனமும் இல்லை.
பாகிஸ்தான் மருத்துவரான கலீல் சிஸ்டி, தனது சகோதரருடன் இந்தியாவில் வசிக்கும் தாயைப் பார்க்க, கடந்த 92-ம் ஆண்டு அஜ்மிர் வந்தார். அப்போது அவரது சகோதரரின் மருமகன்களுக்கும், அவரது விரோதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் மரு​மகன் ஒருவர் துப்பாக்கியால் சுட முற்பட்டார். கலீல் சிஸ்டி அதைத் தடுக்க முயற்சிக்கும்போது, கை தவறிக் குண்டு பாய்ந்து ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கலீல் சிஸ்டி, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, கலீல் சிஸ்டி மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த்து நீதிமன்றம். வயோதிகம் காரணமாக நடக்க முடியாத இவர், சமீபத்தில் தவறி விழுந்ததில் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டது. இப்போது அவர் அஜ்மிர் சிறையின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் இறங்கி வரவில்லை மத்திய அரசு.
 
பாகிஸ்தான் மருத்துவருக்கு இந்திய அரசு இப்படி இன்னல் கொடுத்துக்கொண்டு இருக்க, பாகிஸ்தானோ இந்தியர் ஒருவருக்கு நன்னயம் செய்து இருக்கிறது. மார்கண்டேய கட்ஜு, கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் பிரதமரிடம் பாகிஸ்தான் சிறையில் 27 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருக்கும் இந்தியரான கோபால்தாஸ் என்பவரைக் கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி கோரி இருந்தார். அதனை ஏற்று, பாகிஸ்தான் அரசு கடந்த ஏப்ரல் மாதம் அவரை விடுவித்தது. பஞ்சாப்பைச் சேர்ந்த கோபால்தாஸ் தனது உறவினரைப் பார்க்க ஜம்மு காஷ்மீர் சென்றபோது, தெரியாமல் எல்லைக் கோட்டைத் தாண்டியதற்காக பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டவர்!
தற்போது ராஜஸ்தான் கவர்னரின் மேஜையில் கண்டுகொள்ளப்படாமல் காத்திருப்பது கலீல் சிஸ்டியின் கருணை மனு மட்டும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டு இருக்கும் அவரது உயிரும்கூட!
இப்போது 848 பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 793 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். இவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் மட்டுமே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். மற்றவர்கள் எல்லாம் தெரியாமல் கடலில் எல்லைத் தாண்டிய மீனவர்கள்.
டி.எல்.சஞ்சீவிகுமார். நன்றி;ஜு.வி.                                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக