வியாழன், 1 டிசம்பர், 2011

ஜூலையா? நவம்பரா? முதல்வரே எது உண்மை..?

ண்மையில் தமிழக அரசு பேருந்துக்கட்டணம் மற்றும் பால்விலையை உயர்த்தியது.  மத்திய அரசு போதிய நிதி உதவி தரவில்லை என்பதால்தான் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.  ஆனால் கடந்த 7.7.2011 அன்று வெளிவந்த நாளிதழ்களில் முந்தைய திமுக அரசை விட கூடுதல் நிதிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவும் பத்திரிக்கையளர்கள் சந்திப்பில் கூறிய செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த செய்தி இதுதான்;
 
''முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று [6 .7.2011 ]மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.
தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பாராட்டு தெரிவித்த அலுவாலியா வளர்ச்சி விகிதத்தையும் பாராட்டினார். கூட்டத்தின் இறுதியில் அலுவாலியாவும்,ஜெயலலிதாவும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அலுவாலியா கூறுகையில், தமிழக திட்டப் பணிகளுக்குரூ. 23,535 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் ஜெயலலிதா கோரிய நிதியை விட ரூ. 535 கோடி அதிகம். மேலும் கடந்த ஆண்டு[திமுக ஆட்சி] திட்ட ஒதுக்கீட்டை விட ரூ. 3467 கோடி அதிகம் என்று தெரிவித்தார்.இதைத் தொடர்நது தமிழக அரசு கோரியதை விட கூடுதலாக நிதி ஒதுக்கிய திட்டக் கமிஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.
 
மேற்கண்ட செய்தியை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் உறுதிப்படுத்தும் வகையில் நவம்பர் 19 அன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துதாக முதல்வர் ஜெயலலிதா கூறியது தவறான தகவல்.கடந்த 2011-12 ம் ஆண்டில், தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 23 ஆயிரத்து 636 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2010 -11 ம் ஆண்டைக் காட்டிலும் ரூ. 3467 கோடி அதிகம். இதில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு ஒரே மாதிரியே நடத்துவதை அறியலாம்'' என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவோ மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்கிறார். மத்திய அரசு ஒத்துக்கொண்ட நிதியை ஒதுக்கவில்லை என்று ஜெயலலிதா கூறுவாரானால், அந்த நிதியைப் பெற மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் முயற்ச்சிகள் மேற்கொள்வதை விடுத்து, மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது போல விலைவாசியை உயர்த்துவது நியாயமா? அல்லது மத்திய அரசு உண்மையில்  நிதியே ஒதுக்கவில்லை என்றால், முதல்வர் முன்னிலையில் மத்திய திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா சொன்ன செய்தி பொய் என்று சொல்லப்போகிறாரா? அப்படியும் சொல்லமுடியாதே! ஏனென்றால் ஜெயலலிதாவின் கட்சிப் பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டு, அம்மாவின் சாதுர்யத்தால் கூடுதல் நிதியை மத்திய அரசில் பெற்றுள்ளதாக புகழ் பாடியுள்ளதே! எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறித்து ஜூலையில் முதல்வர் சொன்னது உண்மையா? அல்லது மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று நவம்பரில் சொன்னது உண்மையா? முதல்வர் தெளிவுபடுத்துவரா?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக