வெள்ளி, 16 டிசம்பர், 2011

புறக்கனிக்கப்பட வேண்டியது தினமலரா? மூட நம்பிக்கையா?

றைத்தூதரும் அவர் தம் தோழர்களும் இஸ்லாத்திற்காக நாடு துறந்த நிகழ்வையும், இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமும், இறைத்தூதரும் இறைவனுடன் உரையாடிய சிறப்பை பெற்றவருமான நபி மூஸா[அலை] அவர்களை கொடியவன் ஃபிரவ்னின் கொடுமையிலிருந்து இறைவன் காத்த வரலாற்று செய்தியும் நினைவு கூறும் முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்களில் ஒரு சாரார் அறியாமையின் காரணமாக செய்யும் செயல்கள் மற்றாரை முஸ்லிம்களை பார்த்து எள்ளி நகையாட வழிவகுத்து விடுகிறது.
 
முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் நாள் நோன்பு நோற்க வேண்டும் என்ற மார்க்க கட்டளையை பேணாத முஸ்லிம்களில் சிலர், அன்றைய தினம் தீ  மிதிப்பது, சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் கொள்வது, தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக் கொள்வது இவ்வாறான மூடத்தனமான செயல்களை இஸ்லாத்தின் பெயரால் செய்கின்றனர். இந்த மூடத்தனத்தை செய்தியாக்கும் போர்வையில் சில காவி பத்திரிகைகள்  இஸ்லாத்திற்கு சம்மந்தமில்லாத, இஸ்லாத்திற்கு இழிவைத் தரும் செய்தியை வெளியிட்டு நம்மை நோகடிக்கின்றனர். அந்தவகையில் சமீபத்திய மொகரம் பண்டிகை[!]யின்  போது, முஸ்லிம்களின்[!] தீ மிதி திருவிழா செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ், ''பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார். அவர் நினைவாக இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம் பள்ளி வாசல் முன் நடந்த தீமிதி நிகழ்ச்சியில் இந்துக்களும் கலந்து கொண்டனர்'' என்று செய்தியை வெளியிட்டுள்ளது.
 
இந்த செய்தியை படித்த மாத்திரமே முஸ்லிம்களில் பெரும்பாலோர் தினமலரை புறக்கணிக்கக் வேண்டும் என்ற கருத்தை இணையதளங்களில் பதிவு செய்தனர். தினமலர் அவ்வப்போது வேண்டுமென்றே இதுபோன்ற கற்பனை செய்திகளை இஸ்லாத்திற்கு எதிராக காலம் இறக்குவது வாடிக்கை தான். சமீபத்தில் கூட இளையான்குடியின் முஸ்லிமான பேரூராட்சித் தலைவர், கோயிலில் கிடா வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றியதாக ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு, சம்மந்தப்பட்டவர் தினமலருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் இந்த பாத்திமா நாச்சியாரின் தற்கொலை கற்பனைக் கதையை தினமலர் வேண்டுமென்றே புனைந்ததா? அல்லது முஸ்லிம்களில்[!] எவரேனும் தினமலருக்கு இத்தகைய செய்தியை தந்தார்களா? என்று தெரியவில்லை. தினமலர் வேண்டுமென்றே புனைந்திருந்தால் தினமலரை அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து கண்டிக்கவேண்டும். தினமலர் அலுவலத்திற்கு சென்று அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்து மறுப்பு வெளியிடச் செய்யவேண்டும். மறுத்தால் போராட்டம் நடத்தவேண்டும். அதே நேரத்தில் இந்த செய்தி ஒரு பெயர் தாங்கி முஸ்லிமால் தரப்பட்டிருக்குமாயின் நாம் தினமலரை நோவதில் அர்த்தமில்லை. மேலும் தினமலர் போன்றவற்றை புறக்கணிப்பதை விட அவைகளையும் படித்தால் தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான  செய்தி வெளியிட்டால் நம்மால் மறுத்து விளக்கமளிக்க முடியும். எனவே எந்த ஊடகத்தையும் புறக்கணிப்போம் என்பதை விட, அனைத்தையும் படிப்போம்; நல்லதை எடுப்போம்; அல்லதை[தீயதை] புறந்தள்ளுவோம். தவறான செய்திகளை வெளியிட்டால் விளக்கமளித்து அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்தியம்புவோம் என்பதுதான் ஒரு முஸ்லிமின் நோக்கமாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட இத்தகைய தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட காரணமாக அமைந்துள்ள தீமிதி உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை ஒழிக்க முழு மூச்சாக களமிறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.  
 
குறிப்பு; தினமலர் தனது செய்திக்கு மறுப்பு வெளியிட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக