வியாழன், 1 டிசம்பர், 2011

சரத்பவார் தாக்குதலின் பின்னணியில் சங்பரிவார்...?

த்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மத்திய விவசாய மந்திரி சரத்பவார்தான் காரணம் என்று கூறி அவரை வாலிபர் ஒருவர் தாக்கியுள்ளார். டெல்லியில் நடந்த ஒரு விழாவில் இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரத்பவார் தாக்கப்பட்ட சம்பவத்தை அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன. பாரதீய ஜனதாக்கட்சியும் கூட வெளிப்படையாக கண்டித்துள்ளது. ஆனாலும் தாக்குதலுக்கு பாரதீய ஜனதா மீது காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி குற்றம் சாட்டி உள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க தவறினால் மக்களின் கோபம் வன்முறையாக வெடிக்கும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியதாகவும், அதன் எதிரொலியாகத்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்து உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ரஷித் ஆல்வியின் கருத்திலும் உண்மையில்லாமல் இல்லை. ஏனெனில் வன்முறையை எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் தூண்டுபவர்கள் சங் பரிவாரத்தினர். மும்பையில் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைக்கு சாம்னா பத்திரிக்கையில் பால்தாக்கரே எழுதிய தலையங்கமே பிரதான காரணியாக அமைந்தது என்பது மக்களுக்கு நினைவிருக்கலாம். அந்தவகையில் பாஜகவின் யஸ்வந்த் சிங்கா'வின் பேச்சு இந்த தாக்குதலுக்கு அடிப்படையாக இருக்கலாம் என காங்கிரசின் சந்தேகம் அர்த்தமுள்ளதாகவே மக்கள் கருதுகிறார்கள். 
 
மேலும், சரத்பவாரை தாக்கிய  அந்த வாலிபர், ''அன்னா ஹசாரே கூறுவது போல் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா தேவை என்றும் கத்தியுடன் கத்தியுள்ளார். இதன் மூலம் இவர் அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் என்பதும் புலப்படுகிறது. மேலும், சரத்பவார் தாக்கப்பட்டது பற்றி, அன்னா ஹசாரேயிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தபோது, அதைக் கேட்ட அவர், என்ன... சரத்பவார் தாக்கப்பட்டாரா? ஒரே ஒரு அடிதானா? என்று  கேட்டுள்ளார். இதன் மூலம்  இப்படிப்பட்ட  வன்முறையை ஹசாரே ஆதரிகிறாரோ எனக் கருத வேண்டியுள்ளது. ஹசாரேயின் இந்தப் பேச்சைக் கணடித்து ஆங்காங்கே சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபடுவதைக் கண்டு பயந்த ஹசாரே, விளக்கம் என்ற பெயரில் மீண்டும் தனது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,  ''சரத்பவார் தாக்கப்பட்டதாக சிலர் வந்து என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம், அவரை அடிக்க மட்டுமே செய்தார்களா? அல்லது வேறு எதுவும் நடந்ததா? என்று தான் அவர்களிடம் கேட்டேன். சரத்பவார் மீது இருந்த அக்கறை காரணமாக எனது கவலையை தெரிவித்தேன். மற்றபடி உள்நோக்கம் எதுவும் கிடையாது'' என்று கூறியுள்ளார்.
 
உண்மையில் சரத்பவார் மீது இவர் அக்கறை கொண்டவராக இருந்தால் தாக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் துடித்துப்போய், 'அப்படியா! அவரை தாக்கி விட்டார்களா? அவருக்கு ஒன்றும் பாதிப்பில்லையே? இப்போது நலமாக உள்ளாரா? என்று கேட்பதற்கு பதிலாக, அடிக்க மட்டும் தான் செய்தார்களா? வேறு எதுவும் நடந்ததா? என்று கேட்பதன் மூலம் வேறு ஏதோ நடக்க வேண்டும் என்று ஹசாரே விரும்பினாரோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுகிறது. யஸ்வந்த் சின்காவின் பேச்சு, அதையொட்டி நடந்த சரத்பவார்  தாக்குதல், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அன்னா ஹசாரேயின்  அலட்சியமான கருத்து இவைகளுக்கு மத்தியில் ஏதோ ஒரு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். ஆயினும் ஒரு தனி மனிதனுக்கு எதிரானதாக இருந்தாலும், அரசுக்கு எதிரானதாக இருந்தாலும் எதிர்ப்பு என்பது ஆரோக்கியமான ஜனநாயக வழியில் அமையவேண்டுமேயன்றி வன்முறை வழியில் இருக்ககூடாது என்பதை அனைவரும் உணர்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக