வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஜெயலலிதாவின் விளையாட்டுப் பொம்மைகளா மந்திரிகள்?

மிழக அமைச்சர்களும், ஆளுங்ககட்சி மாவட்டச் செயலாளர்களும் தாங்கள் பதவியில் இருக்கிறோமா இல்லையா என்பதை மணிக்கொருமுறை ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் நிலைதான் உள்ளது. ஆட்சி அமைந்து முழுசாக ஆறுமாசம் முடிந்ததோ இல்லையோ மந்திரி சபை மாற்றம் மட்டும் மாதம் தவறாமல் நடக்கிறது. தமிழக அமைச்சரவை மீண்டும் அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எம்.பரஞ்சோதி, செல்வி ராமஜெயம் ஆகிய 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, பா.வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
 
முதல்வர் ஜெயலலிதா ஒருவரை ஏன் மந்திரியாக்குறார் என்றும் யாருக்கும் தெரிவதில்லை. அதே மந்திரியை ஏன் நீக்குகிறார் என்றும் யாருக்கும் சொல்வதில்லை. இதே நிலையில் சென்றால் ஜெயலலிதாவின் ஆட்சி முடிவில் முன்னாள் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை விட முன்னாள் மந்திரிகளின் எண்ணிக்கை அதிகமானாலும் ஆச்சர்யமில்லை. சரி செயல்படாத மந்திரிகளை வைத்து என்ன செய்வது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனாலும் சில நாட்களில் சில வாரங்களில் மந்திரிகள் பதவி பறிப்பு என்பது, உண்மையில் செயல்படும் மந்திரிகளுக்கும் பலவீனத்தையே தரும் என்பதையும், பதவி எந்த நொடியில் போகுமோ அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 'தேற்றி' விடுவோம் என்ற சிந்தனையும் சில மந்திரிகளுக்கு வருவதற்கும் வாய்ப்புண்டு என்பதை   முதல்வர் ஜெயலலிதா உணர்ந்து கொள்ளவேண்டும்.
 
இப்போது நீக்கப்பட்ட இரு மந்திரிகளில் மு. பரஞ்ஜோதி மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, தன்னிடமிருந்த சொத்துகளை பறித்து ‌மோசடி செய்து விட்டார் என்று பெண் டாக்டர் ராணி, போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து கோர்ட் உத்தரவுப்படி, திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனையடுத்து தான் பரஞ்ஜோதி தனது பதவியை இழந்தார் என்றும் அரசியல் அரங்கில் பரவலாக  பேசப்படுகிறது. பரஞ்ஜோதியின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது அரசியல் நோக்கர்களின் கூற்றை வலுப்படுத்துவதாக உள்ளது. ஒருபுறம் திமுக மந்திரிசபையிலோ லிமிடெட் கம்பெனி போல சிலர் தான் மந்திரிகள் என்ற நிலை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இன்றைய சாமன்யன் நாளைய மந்திரியாக முடியும். இன்றைய மந்திரி நாளை முன்னாள்'களாக மூளையில் முடக்கப்படுவதும் வாடிக்கையே. எது எப்படியோ எத்துனை மந்திரிகள் வந்தாலும், போனாலும் மக்கள் நலம் பெற்றால் சரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக